462 புனித மகிமை மாதா திருத்தலம், பழவேற்காடு

       

புனித மகிமை மாதா திருத்தலம்

இடம் : பழவேற்காடு

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை மயிலை உயர்மறைமாவட்டம்
மறைவட்டம் : மீஞ்சூர்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : உலக மாதா ஆலயம், பாக்கம்

பங்குத்தந்தை : அருட்பணி. கபிரியேல் ஆரோக்கியராஜ் SFX (Society of St Francis Xavier, Goa)

குடும்பங்கள் : 500
அன்பியங்கள் : 12

ஞாயிற்றுக்கிழமை

காலை 07.00 மணி மற்றும் நண்பகல் 12.00 மணிக்கும் திருப்பலி.

திங்கள் முதல் வியாழன் வரை திருப்பலி : காலை 05.00 மணி மற்றும் மாலை 06.30 மணி.

வெள்ளி மற்றும் சனி திருப்பலி : காலை 05.00 மணி, காலை 06.30 மணி மற்றும் மாலை 06.30 மணி.

மாதத்தின் முதல் சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி மற்றும் மாலை 06.30 மணி திருப்பலி, தேர்பவனி, நோயாளிகளுக்கு திரு எண்ணெய் பூசுதல்.

திருவிழா : உயிர்ப்பு பெருவிழாவை தொடர்ந்து இரண்டாவது சனி ஞாயிறு.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. பெரியநாயகம்
2. அருட்பணி. டைசன் ராஜ ரத்தினம்

3. அருட்சகோதரி. ஜாக்குலின்
4. அருட்சகோதரி. சிறியபுஷ்பம்
5. அருட்சகோதரி. தெரசா.

வழித்தடம் :
பேருந்து எண்கள்
பொன்னேரி to பழவேற்காடு
528
595
T28
ரெடிஹில்ஸ் to பழவேற்காடு
558B
🚌டோல்கேட் to பழவேற்காடு
595.

Train : Chennai central to Gummidipundi or Sulurpettai. Get down in Ponneri

Location map : https://maps.app.goo.gl/pD4HJQ2mn9KBN8Sj9

பழவேற்காடு வரலாறு :

சென்னையிலிருந்து வடக்கே சுமார் 50கிமீ தொலைவில் பழவேற்காட்டில் புனித மகிமை மாதா திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கி.பி 1515 இல் போர்ச்சுக்கீசியர்களால் தமிழகத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட ஆலயம் ஆகும். அப்போது கோவா உயர் மறை மாவட்டத்தோடு இணைந்திருந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் சென்னை உயர் மறை மாவட்டத்தோடு இணைக்கப் பட்டது.

கி.பி 1952 ல் சென்னையுடன் மயிலாப்பூர் இணைக்கப் பட்டவுடன் இவ்வாலயம் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட ஆலயமானது.

புனித மகிமை மாதா :

அக்காலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் கடல் பயணம் செய்யும் போது, கப்பலில் மாதா சுரூபம் ஒன்றை வைத்துத் தான் பயணம் மேற்கொள்வார்கள். 1500 ம் ஆண்டில் வங்காள விரிகுடா வழியாக இங்கு வந்த போது கப்பலில் இருந்த மாதா சுரூபம் கடலில் தவறி விழுந்தது.

தங்கள் வலையில் கிடைத்த மகிமை மாதா சுரூபத்தை மரக்கட்டை என எண்ணி மீனவர்கள் கரையில் இட்டுச் சென்றனர். இதனை விறகு என்றெண்ணி விறகுவெட்டி கோடாரியால் வெட்டடிய போது, இரத்தம் பீறிட்டு விறகு வெட்டியின் கண்ணில் பட்டு, அவர் கண்கள் குருடானது. இதனைக் கண்ட விறகுவெட்டியின் மனைவி கண்ணீருடன் மாதாவிடம் ஜெபித்து, அந்த இரத்தத்தை விறகுவெட்டியின் கண்ணில் பூச மீண்டும் பார்வை கிடைத்தது.

இதனை அறிந்த ஊர் மக்கள் மகிமை மாதாவின் சுரூபத்தை ஒரு ஓலைக்குடிலில் வைத்து வணங்கினர். அந்த சுரூபத்தில் விறகுவெட்டி கோடாரியால் வெட்டிய அடையாளம் இன்றும் உள்ளது.

அப்போது அப்பகுதியில் இருந்த குருவின் கனவில் மாதா தோன்றி தமக்கு ஆலயம் கட்ட வேண்டும் என தெரிவித்த இவ்வேளையில், ஆற்காடு வந்த போர்ச்சுக்கீசியர்கள் தாங்கள் கடலில் தொலைத்த மாதா சுரூபம் குடிசை ஆலயத்தில் இருப்பதைக் கண்டு, மகிச்சியடைந்து, கி.பி 1515 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் சிற்றாலயம் கட்டப் பட்டு சந்தோஷ மாதா என்று பெயர் சூட்டினர்.

1606 இல் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த போது, தங்கள் ஆன்மீகத் தேவைகளுக்கு போர்ச்சுக்கீசியர்கள் கட்டிய இந்த ஆலயத்தையே பயன்படுத்திக் கொண்டனர்.

டச்சுக்காரர்களுக்கு தட்பவெப்பநிலை ஒத்துக் கொள்ளாததால் பலர் மடிந்து போயினர். அவ்வாறு இறந்த பலரது உடலை ஒரே இடத்தில் அடக்கம் செய்து நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.

1762 ஆம் ஆண்டு முதல் திருமுழுக்கு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு, பதிவேடுகள் பாதுகாக்கப் படுகின்றன.

1880 ஆண்டு காலகட்டத்தில் கத்தோலிக்க குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

1882 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஆன்டனியோ பிரான்சிலோ கபிலோ பொறுப்பேற்று வழி நடத்தினார்கள்.

1888 ஆம் ஆண்டில் பழைமையான ஆலயத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டது.

மகிமை மாதாவின் புதுமைகள் :

1942 இல் மரண தண்டனை பெற்ற நான்கு கைதிகள்

புனித மகிமை மாதாவின் புதுமையால் விடுதலையடைந்து, ஆலயம் வந்து மாதாவிற்கு நன்றி செலுத்தினர். மக்கள் மாதாவின் மகிமையை உணர்ந்து தொடக்கம் முதல் சந்தோஷ மாதா என்று அழைக்கப்பட்டு வந்த மாதாவை, 02.02.1942 அன்று முதல் புனித மகிமை மாதா என்று பெயர் சூட்டினர்.

பழவேற்காடு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலின் போது புயல் வீச மகிமை மாதாவின் கருணையால் பத்திரமாக கரை திரும்பினர்.

மிகவும் பழைமையான ஆலயம் பழுதடைந்ததால் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு அருட்பணி. எல்சி ராயண்ணா அவர்களின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் இரண்டு தளங்கள் கொண்ட ஆலயத்திற்கு 2007 ஆம் ஆண்டு அடிக்கல் போடப்பட்டது. 08.10.2010 அன்று நிலவறை ஆலயம் கட்டப்பட்டு பேராயர் A. M. சின்னப்பா ஆண்டகை அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.

இந்த நிலவறை ஆலயத்தில் 1515 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைமையான ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட திருப்பீடம் உள்ளது. இந்த பீடமும் லஸ் திருத்தலத்தில் உள்ள பீடமும் ஒரே அமைப்பில் உள்ள பழைமையான திருப்பீடங்களாகும்.

இங்கு போர்ச்சுக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்றுமொரு மகிமை மாதா சுரூபம் உள்ளது. ஆண்டு திருவிழா தேர்பவனியின் போது தேரில் இந்த சுரூபம் எடுத்து வரப்படுகிறது.

மாதாவின் புதுமைகள் தொடர்ந்து கொண்டே செல்ல 29.09.2012 அன்று அப்போதைய சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு. A. M. சின்னப்பா ஆண்டகை அவர்களால் திருத்தலமாக உயர்த்தப் பட்டது.

ஆலயத்தின் 500 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் இவ்வாலயமானது பல்வேறு மாற்றங்களுடன் நவீன முறையில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்று, 07.04.2015 அன்று சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, அன்னைக்கு மணிமகுடம் சூட்டி ஆலய 500 ஆம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

500 வது ஆண்டு விழாவின் போது 40 குப்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதி, சமய, இன பாகுபாடுகளைக் களைந்து மாதாவிற்கு சீர் கொண்டு வந்து சிறப்பித்தனர்.

பெருவிழா சிறப்புக்கள் :

மகிமை மாதாவின் பெருவிழா ஆண்டுதோறும் ஈஸ்டருக்கு அடுத்த இரண்டாவது ஞாயிறு கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இதனை இங்குள்ள நாற்பது குப்பங்களின் மக்களே பொறுப்பேற்று எவ்வித வேறுபாடின்றி மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். விழாவில் மக்கள் பங்கேற்க வசதியாக சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகளும், சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இரயில் வசதியும் செய்து தரப்படுகின்றன.

எழில் கொஞ்சும் பழவேற்காடு மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்ட ஒரு தீவு. இது நாற்பது மீனவர் குப்பங்களை தன்னுள் அடக்கிய ஒரு பகுதி. இதில் ஒரே குப்பமாகிய நடுவூர் பகுதியில் மட்டுமே கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள புலிகாட் ஏரி இந்திய துணைக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய ஏரி. இத்துடன் சென்னையின் புகழ்பெற்ற பக்கிங்காம் கால்வாய், புலிகாட் ஏரியில் சேர்ந்து, அது ஆந்திரா வரை செல்கிறது. இங்கு ஏரியும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரம் உள்ளது. அதில் ஆற்று நீர் ஆறு மணி கடலுக்கும், கடல்நீர் ஆற்றுக்கும் மாறி மாறி செல்வது ஓர் அற்புத நிகழ்வாகும். இதனால் இங்குள்ள மக்கள் மக்கள் மீன்பிடிக்கும் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றனர். இங்கு தான் டச்சுக்கல்லறை நினைவுச் சின்னம் அமைந்துள்ளது.

மேலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக புலிகாட் ஏரிக்கு படகு சவாரியும், உலவுவதற்கு வசதியாக மணற்பரப்பில் சவுக்குத் தோப்பு மற்றும் பறவைகள் சரணாலயமும் அமைந்துள்ளதால் மகிமை மாதா திருத்தலம் வந்த மக்கள் இப்பகுதிளுக்கும் சென்று மகிழ்கின்றனர்.

இவ்வாறு மாதாவின் புகழ் பரவப் பரவ பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்று வருகின்றனர். வாருங்கள் மகிமை மாதாவின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. கபிரியேல் அவர்கள்.

தகவல்கள் உதவி : அருட்பணி. ஜூட் பிரகாசம் மற்றும் பழவேற்காடு மண்ணின் மைந்தர் அருட்பணி. டைசன் ராஜ ரத்தினம் ஆகியோர்.