92 அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை


தூய அமலோற்பவ அன்னை ஆலயம்

இடம் : மாங்கரை (அமலோற்பவபுரம்)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி கில்பர்ட் லிங்சன்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கினாவிளை.

குடும்பங்கள் : 120
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு.

திருவிழா : டிசம்பர் 08 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

வரலாறு :

1952 ம் ஆண்டு முள்ளங்கினாவிளை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி M. லாசர் அடிகளார் 16-09-1952 ல் மாலை வேளையில் முள்ளங்கினாவிளை தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய திரு செல்வமணி ஆசிரியருடன், கரிக்கட்டான்விளை தென்னந்தோப்பைப் பார்வையிட வந்துள்ளார்கள். தோப்பை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார்கள். அங்குள்ள மக்கள் கல்வி அறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ள நிலையைக் கண்டார். இங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் இருந்தால் மக்களுடைய முன்னேற்றத்திற்கு வாய்ப்பாக இருக்கும் என்ற கருத்தை ஆசிரியரிடமும் ஊர் மக்களிடமும் எடுத்துக் கூற, ஊர் மக்கள் மனதார இதனை ஏற்றுக் கொண்டனர்.

மக்கள் ஞானத்தில் சிறந்து விளங்க மறைக்கல்வி கற்பிக்க உபதேசியார்கள் அனுப்பி வைக்கப் பட்டனர். பின் ஆலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு 67 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அதில் தற்காலிக கூடாரம் அமைத்து திருப்பலி நிறைவேற்றி வந்தனர். கோயில் கட்ட மாட்டுவண்டி யில் வைத்து கல் மற்றும் பிற கட்டுமானப் பொருட்கள் கொண்டு வந்து பெரும் உதவி செய்தவர் திரு முத்தையன் ஆவார். ஆலயம் கட்ட அப்போது கோட்டார் மறை மாவட்டத்திலிருந்து கிடைத்த ரூ 5000 மற்றும் பலரிடம் பெற்ற நன்கொடைகள் பங்கு மக்களின் அயராத உடலுழைப்பு மற்றும் நன்கொடைகளால் ஆலயம் கட்டி முடிக்கப் பட்டு 11-10-1955 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1952 ம் ஆண்டு மூன்று குடும்பங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட தலத்திருச்சபையில் இன்று சுமார் 120 குடும்பங்கள் இருக்கின்றன. விளாத்திக்கோட்டவிளை என்று அழைக்கப் பட்ட ஊருக்கு அமல அன்னையின் பெயரால் 'அமலோற்பவபுரம்' என்ற பெயர் சூட்டி சிறப்பித்துள்ளார்கள். முள்ளங்கினாவிளை பங்கின் முதல் கிளைப்பங்கும் இந்த ஆலயம் தான்.

பின்னர் அருட்பணி டைனீசியஸ் பணிக்காலத்தில் கரிக்கட்டான்விளை - கோழி நாடாக்குளம் சாலை ஊர் மக்களால் வெட்டப்பட்டது. அருட்பணி ஸ்தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் பங்கில் பல சீரிய மாற்றங்களைக் கொண்டு வந்து வளர்ச்சிக்கு வித்திட்டார். அருட்பணி ஜார்ஜ் பணிக்காலத்தில் விவிலியம் வாங்கவும், இறையரசு இயக்கம், கிராம முன்னேற்ற சங்கம், அருட்பணிப்பேரவை போன்றவற்றை துவக்கி வைத்தார்கள். பின்னர் வந்த அருட்பணி மரிய அற்புதம் பணிக்காலத்தில் ஆலய வளாகத்தை சுற்றி கிடந்த நிலமும் வீடும் வாங்கப்பட்டு ஆலய வளாகம் முழுமைப் படுத்தப் பட்டது.

2006 ம் ஆண்டு ஆலயத்தின் பொன்விழா ஆண்டில், பழமையான இந்த ஆலயம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பொன்விழா ஆண்டின் நினைவாக புதிய ஆலயம் கட்டும் பணியை அருட்பணி விக்டர் அவர்கள் துவக்கி வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து வந்த அருட்பணி லியோ அலக்ஸ் அவர்களின் முயற்சியால் புதிய ஆலயத் தூண்கள் எழுப்பப் பட்டு மேல் தளமும் கான்கிரீட் போடப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் தொடர இயலாத நிலையில் இருந்த வேளையில் பின்னர் வந்த அருட்பணி பென்னி அவர்களின் இடைவிடா முயற்சியில் பலரிடம் நன்கொடை பெற்றும் பங்கு மக்களின் நன்கொடைகளாலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேதகு ஆயர் பீட்டர் ரெமீஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தொடர்ந்து வந்த அருட்பணி கலிஸ்டஸ் பணிக்காலத்தில் ஆலய கோபுரங்கள் கட்டப் பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டதுடன் பங்கு மக்களின் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி புது மலர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன் அவர்கள் ஆலயத்திற்கு புதிய கொடிமரம் வைத்தும், மேலும் தற்போது கலையரங்கம் மற்றும் பங்கு மக்களின் திருமணம் போன்ற தேவைகளுக்கு பயன்படும் வகையில் அழகிய கூடாரம் (டென்ட்) வைலையையும் துவக்கி வருகிற டிசம்பர் மாதத்தில் பணிகளை நிறைவு செய்ய பங்கு மக்களோடு இணைந்து திட்டமிட்டு கட்டுமானப் பணிகளை நேர்த்தியாக முன்னெடுத்து செல்வது இப் பங்கின் வளர்ச்சிக்கு சான்றாகும்.