295 புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ஆதிச்சவிளாகம்


புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்.

இடம் : ஆதிச்சவிளாகம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்

நிலை : பங்குத்தளம்
கிளை: புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு

பங்குத்தந்தை : அருட்தந்தை அஜீஸ்

குடும்பங்கள் : 215
அருள்வாழ்வியங்கள் (அன்பியம்) : 6

ஞாயிறு : காலை 06.00 மணிக்கு காலை ஜெபம், காலை 06.30 மணிக்கு திருப்பலி.

நாள்தோறும் : காலை 06.00 மணிக்கு காலை ஜெபம், காலை 06.15 மணிக்கு திருப்பலி.

வியாழன் : மாலை 06.00 மணிக்கு ஜெபம், 0615 மணிக்கு திருப்பலி, இரவு 07.00 மணிக்கு புனித யூதா ததேயு நவநாள்.

திருவிழா : அக்டோபர் மாதம் 28-ஆம் தேதியை உள்ளடக்கிய ஏழு நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்தந்தை Josephine Raj.
2. அருட்தந்தை Johny Alfred

பேருந்துகள் : மார்த்தாண்டத்திலிருந்து 83 A வள்ளவிளை மற்றும் 83 செம்மான்விளை.

வரலாறு :

பசும் புல்வெளிகளையும், காய் கனி தரும் மரங்களையும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர் தான் ஆதிச்சவிளாகம். ஆதி ஈசன்வளாகம் (ஆதி+ஈஸ்வரன்+வளாகம்) என்ற பெயர் மருவி ஆதிச்சவிளாகம் என்று ஆனதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அழகிய ஊரில் கம்பீரமாக ஒளி வீசி நிற்கிறது பொன்விழா கண்ட புனித யூதா ததேயூஸ் ஆலயம்.

இவ்வாலயம் உருவாவதற்கு முன் இவ்வூர் மக்கள் பகுத்தறிவோ, எழுத்தறிவோ இன்றி அறியாமை இருளில் மங்கிக் கிடந்தனர். ஒரு சில ஓட்டு வீடுகளும், தாழ்தள கூரை வீடுகளுமாக இருந்தன. இம்மக்களுக்கு வேலைகளோ அல்லது வேலை செய்தால் போதுமான கூலி (ஊதியம்) இன்றியும், இருப்பதைக் கொண்டு அன்றாடங்காட்சிகளாக அலகையின் அதிகாரத்தின் கீழ் அடங்கிக் கிடந்தனர்.

இவ்வேளையில் தான் விடிவெள்ளி தோன்றியதைப் போன்று இப்பகுதியில் 27-08-1961 அன்று பெருமதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய பேராயர் மேதகு பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகையால் இவ்வாலயம் துவங்கப்பட்டது. அன்றைய நாளில் 190 நபர்கள் திருமுழுக்கு பெற்று இறைவனை வழிபடத் தொடங்கினர்.

தொடக்கநிலையில் Franciscan அருட்சகோதரிகள் மறைப்பரப்பில் ஈடுபட்டு, பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். மேலும் நீர் வளமும் நில வளமும் நிறைந்த சுண்டவிளை என்ற ஊரில் பெரும் சிறப்பு பெற்ற திரு சுந்தரன் நாடார் அவர்கள் இறைவனுக்காக மக்கள் அனைவரும் கூடி ஜெபிக்க தனது சொந்த நிலத்தை மனமுவந்து கொடுத்தார்.

இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜோஸ்வா குன்னேத்தில் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.

தொடர்ந்து...
அருட்தந்தை ஜான் குந்தேத்,
அருட்தந்தை தானியேல்,
அருட்தந்தை ஐய்யநேத்,
அருட்தந்தை ஆபிரகாம் வாலுபிறம்பில்,
அருட்தந்தை ஜார்ஜ் உம்மன்,
அருட்தந்தை சக்கரியாஸ் குழிப்பறம்பில்,
அருட்தந்தை மாத்யூ பள்ளத்து முறியில்,
அருட்தந்தை ஜேக்கப் விளையில்,
அருட்தந்தை G. வர்க்கீஸ்,
அருட்தந்தை வின்சென்ட்,
அருட்தந்தை ஜான்சன் கைமலயில்,
அருட்தந்தை ஆப்ரகாம் வாவேலி மேம்பறத்து,
அருட்தந்தை ஸ்கரியா கொச்சு முருப்பேல்,
அருட்தந்தை பிறேம் குமார்,
அருட்தந்தை மைக்கேல் முக்கம்பாலத்,
அருட்தந்தை S. வர்க்கீஸ்,
அருட்தந்தை மரிய ஜான்,
அருட்தந்தை ஜோஸ்,
அருட்தந்தை பிராங்ளின் ஜோஸ்,
அருட்தந்தை ஜிபு மேத்யூ,
அருட்தந்தை வில்பிரைட் என அனைத்து அருட்தந்தையர்களும் இப்பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்டனர்.

மேலும் தற்போது அருட்தந்தை அஜீஸ் அவர்கள் இப்பங்கு மக்களை ஒருங்கிணைத்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தி சிறப்பாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கானாவூரில் நடைபெற்ற விருந்திலே பங்கு பெற இயேசுவும் அவரது தாயார் அன்னை மரியாவும் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே அறுசுவை உணவுடன் திராட்சை ரசம் பரிமாறப்பட்டது. இறுதிப் பந்தியில் பரிமாற திராட்சை ரசம் இல்லாததை அறிந்த அன்னை மரியாள் அதனை இயேசுவிடம் எடுத்துரைக்க, அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி பரிமாறச் செய்தார். அதுபோல இப்பங்கு மக்களும் அன்னை மரியாள் தங்களுடன் குடியிருந்தால் நிறையாசியுடன் வாழ வழிமுறைகளை வகுத்திடுவார் என்ற நோக்கில் ஆலயத்தின் வெள்ளிவிழா நினைவாக தற்போதுள்ள ஒளிரும் வேளாங்கண்ணி மாதா குருசடி கட்டப்பட்டு அருட்தந்தை பிரேம் குமார் அடிகளாரால் அர்ச்சிக்கப்பட்டது. தற்போது இக்குருசடியில் பல்வேறு மக்களும் நாள்தோறும் வந்து ஜெபித்து அருளும் அமைதியும் பெற்றுச் செல்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடத்தப்படுகிறது. 8-ம் தேதி ஜெபமாலை பவனியும் சிறப்பாக நடத்தப் படுகிறது.

அழைக்கும் இறைவனின் குரல் எல்லா மக்களின் காதுகளிலும் சென்றிட ஆலயத்தை ஒட்டி தனியாக மணிமேடை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

ஆலயத்தின் சுற்றுப்புறம் இடவசதி குறைவாக இருந்ததால், தெற்குப் பகுதியில் உள்ள இடம் அன்றைய பங்குத்தந்தையும் தற்போதைய ஆயருமான மேதகு வின்சென்ட் அடிகளாரால் வாங்கப்பட்டது. இந்த இடத்தில் தான் தற்போது விழாக்கள், நற்செய்தி கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

மகா ஜூபிலி 2000-ம் ஆண்டு அருட்பணி G. வர்க்கீஸ் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த போது, 20-03-2000 அன்று விரிவாக்கம் செய்யப்பட்ட மத்பஹா (பலிபீடம்) மேதகு ஆயர் யூகான்னோன் மார் கிறிஸ்டோஸ்டம் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது.

2001 ல் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்படது.

2005 ல் மேரி மக்கள் மாகாணத் தலைவி மதர் விஜயா தலைமையில் mobile sisters பல குழுக்களாக பிரிந்து, பங்கின் அனைத்து குடும்பங்களுக்கும் சென்று யார் யாருக்கு என்னென்ன திருவருட்சாதனங்கள் தேவை என்பதை அறிந்து ஞானஸ்நானம், புதுநன்மை, உறுதிபூசுதல், முறைப்படுத்தாத திருமணங்களை முறைப்படுத்தல் என அனைவரும் அருளடையாளங்களைப் பெற உதவியதுடன், ஆலயங்களுக்கு வராத மக்களை சந்தித்து அவர்களின் மனதில் இறைவனின் அன்பை விதைத்து திருச்சபையில் ஒன்றித்திருக்க செய்தனர்.

அருட்பணி மரியஜான் அவர்களும் அருட்சகோதரி மேரி ஆனந்த் அவர்களும் இப்பங்கை சிறப்பாக வழிநடத்தி வந்த காலத்தில், மண்ணின் மைந்தராக குருத்துவ பணிக்கு அனுப்பப்பட்ட அருட்தந்தை ஜோஸ்பின் ராஜ் அவர்களுக்கும், நடைக்காவு பங்கை சார்ந்த அருட்தந்தை ஆல்பின் அவர்களுக்கும் 29-12-2005 அன்று இவ்வாலயத்தில் வைத்து மேதகு ஆயர் யூகான்னோன் மார் கிறிஸ்டோஸ்டம் ஆண்டகையால் குருப்பட்டம் (குருத்துவ அருட்பொழிவு) வழங்கப்பட்டது.

அருட்தந்தை ஜோஸ் அடிகளார் காலத்தில் குருசடி புதுப்பிக்கப்பட்டு 1-09-2009 ல் மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 30-11-2009 அன்று ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1989 ல் பாலர்பள்ளி துவக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆதிச்சவிளாகம் பங்கில் தமது குருத்துவ பணியை ஆரம்பித்த அருட்தந்தை வின்சென்ட் அடிகளார் அவர்களை திருத்தந்தை அவர்கள் ஆயராக அறிவித்த போது இப்பங்கு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். 13-03-2010 அன்று புதிய ஆயராக மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களின் ஆயர் திருநிலைப்பாடு நிகழ்வு மார்த்தாண்டம் பேராலயத்தில் நடந்த போது இப்பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை ஆதிச்சவிளாகம் இறைசமூகம் என்றென்றும் நினைவில் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

பக்த சபைகள் :

பங்கின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பது பக்த சபைகள். பக்தசபைகள் பலவும் இங்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மறைக்கல்வி :

மறை என்பது வேதம். மறைக்கல்வி தான் குழந்தைகளை பண்படுத்தி நல்ல கிறிஸ்தவர்களாக வளரச் செய்கின்றது.

ஒவ்வொரு வருடமும் மறைக்கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இரண்டு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை உள்ளது.

மரியாயின்சேனை:

இப்பங்கில் 1980 முதல் மரியாயின் சேனை அருட்தந்தை மாத்யூ பள்ளத்து முறியில் காலத்தில் துவக்கப்பட்டது. இரட்சகருடைய மாதா பிரச்சீடியம், ஞானத்தின் மாதா பிரசீடியம் என இரண்டு பிரசீடியங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.

வின்சென்ட் தே பவுல் சபை,
பாலர்சபை,
மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (MCYM),
கோல்பிங் குடும்பம்,
MCA,
போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.

ஆலயத்தின் பொன்விழா 29-08-2010 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

08-09-2013 அன்று அருட்தந்தை ஸ்டீபன் செண்பகத்தோப்பு முன்னிலையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு, நன்கொடைகள், உள்ளூர் வெளியூர் நன்கொடைகள் இவற்றுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் இவர்களின் வழிகாட்டுதலில் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 09-09-2017 அன்று அருட்தந்தை வர்க்கீஸ் அவர்கள் முன்னிலையில் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் இந்த எழில் மிகுந்த இறைவனின் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வாலயத்தின் அழகினைக் காணவும், புனித யூதா ததேயுவின் வழியாக இறைவனின் அருள் வளங்களையும் பெற்றிட நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து, மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.