புனித காணிக்கை அன்னை ஆலயம்
இடம்: வடக்கன்குளம்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: சிற்றாலயம்
பங்கு: பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம், வடக்கன்குளம்
பங்குத்தந்தை பேரருள்பணி. மார்ட்டின் மனுவேல்
உதவி பங்குத்தந்தை அருள்பணி. G. பிரதாப்
திருப்பலி: மாதத்தின் கடைசி வியாழன் மாலை 05:30 மணி
திருவிழா: ஜனவரி 31, பிப்ரவரி 01&02 வரையிலான மூன்று நாட்கள்
வழித்தடம்: திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம்.
வரலாறு:
வடக்கன்குளத்தின் தென்மேற்கு எல்லையில் காணிக்கை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. புனித வின்சென்ட் தே பவுல் சபையினர், பல சமூகப்பணிகளை தன்னலங்கருதாது சிறப்புற செய்து வருகின்றனர். அவற்றுள் ஒன்று 1978ம் ஆண்டு வீடு இல்லா ஏழைகளுக்கு, லூத்தரன் ஆலயத்தின் பின்புறம் நிலம் வாங்கி, அதில் வீடு கட்டி ஏழைகளைக் குடியமர்த்தினர். அவ்விடத்திற்கு ஓசானாம் காலனி எனப் பெயரிட்டனர்.
அப்பகுதி மக்களின் ஆன்மீகத்தை வளர்க்கும் விதமாக, ஓசானாம் காலனியின் ஓர் மூலையில் கெபி ஒன்றை அருட்பணி. மரியதாஸ் அடிகளாரின் முயற்சியாலும், உபகாரிகளின் உதவியாலும் 1996ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மாதா, இந்த நிலத்தை ஏழைகளுக்குச் சபை வாயிலாகக் காணிக்கை அளித்ததாக எண்ணிய வின்சென்ட் தே பவுல் சபையினர், காணிக்கை மாதாவுக்கு நேர்ந்தளிக்க விரும்பி அவ்வாறே காணிக்கை மாதா சுரூபம் நிறுவி அர்ச்சிக்கப்பட்டது. காலம் கடந்த நிலையில் அப்பகுதியில் மேலும் பல வீடுகள் தோன்றவே, இம்மக்கள் கத்தோலிக்கத்தில் மேலும் தழைக்க, பேரருட்பணி. ஜாண் பிரிட்டோ அடிகளாரின் முயற்சியால் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர், பங்குப் பேரவை மற்றும் இறைமக்களின் ஒத்துழைப்புடன் கெபி கோவிலாகக் கட்டப்பட்டு, 06.12.2020 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
திருக்குடும்ப ஆலயத்தின் பழைய கொடி மரத்தின் பிள்ளை கொடி மரத்தைக் காணிக்கை மாதா ஆலயத்தின் கொடிமரமாக நடப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் மட்டும் திருவிழா கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் திருவிழா 10 நாட்கள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் மூன்று நாட்கள் மட்டும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
''சின்ன ரோமாபுரி'' வடக்கன்குளம் புனிதவின்சென்ட் தே பவுல் திருக்குடும்ப கிளைச்சபை 50ஆம் ஆண்டு பொன்விழா (1974-2024) கொண்டாடும் இந்த பொன்னான நாளில் (22.09.2024) ஆலயம் அறிவோம் வரிசையில் புனிதவின்சென்ட் தே பவுல் சபையால் உருவாக்கப்பட்ட ஆலயமாம், புனித காணிக்கை அன்னை ஆலயத்தை பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். சபையினருக்கு பொன்விழா நல் வாழ்த்துகள்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு : வடவை கத்தோலிக்க கூட்டமைப்பு, வடக்கன்குளம்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. பென்கர் கட்டளை, வடக்கன்குளம்.



