இடம் : எட்டாமடை, அழகியபாண்டிபுரம் (PO), 629851
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித செபமாலை அன்னை ஆலயம், பெருந்தலைக்காடு
பங்குத்தந்தை : அருள்பணி. S. P. லாரன்ஸ்
உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. அன்பின் தேவசகாயம்
குடும்பங்கள் : 820
அன்பியங்கள் : 16
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
வாரநாட்களில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
புதன் மாலை 07.00 மணிக்கு நவநாள் திருப்பலி.
வெள்ளி மாலை 07.00 மணிக்கு நவநாள் திருப்பலி.
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07.00 மணிக்கு நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர்.
மாதத்தின் முதல் சனி மாலை 07.00 மணிக்கு திருப்பலி (மாதா மலை திருத்தலத்தில்)
திருவிழா : ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.
மாதா மலை திருத்தலத் திருவிழா : செப்டம்பர் மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. மரிய சூசை வின்சென்ட்
2. அருள்பணி. அன்சல் ஆன்றனி
3. அருள்பணி. ஜார்ஜ் பென்சிகர்
4. அருள்சகோதரி. குருசம்மாள்
5. அருள்சகோதரி. ஜெயசீலி
6. அருள்சகோதரி. அருள்
7. அருள்சகோதரி. லூர்து மேரி
8. அருள்சகோதரி. சகாய செல்வி
9. அருள்சகோதரி. மரிய செல்வி
10. அருள்சகோதரி. மேரி லூக்கா
11. அருள்சகோதரி. அந்தோணியம்மாள்
12. அருள்சகோதரி. தங்கம்
13. அருள்சகோதரி. பிரேமலதா
14. அருள்சகோதரி. புனிதா
15. அருள்சகோதரி. சந்தணமேரி
வழித்தடம் : நாகர்கோவில் -திட்டுவிளை -தெரிசனங்கோப்பு -எட்டாமடை.
பேருந்துகள் வழித்தடம் : 4A, 4AV, 318, 330A
location map : https://g.co/kgs/6p84e4
வரலாறு
குமரி மாவட்டத்தின் வட பகுதியில் மலைகள் சூழ்ந்த, பசுமையும், செழுமையும் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் எட்டாமடை எனும் ஊரில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலய வரலாற்றைக் காண்போம்.....
முற்காலத்தில் சுமார் 1800 ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டாமடை பகுதியில் அதிக காடுகளும், காட்டு விலங்குகளும் கொண்டு பனிமூட்டமாக காணப்பட்டதால் மக்கள் அடர்த்தியாக வாழ இயலாத சூழல் இருந்தது. காலங்கள் மாறவே இயற்கையின் மாற்றத்தால் பனிச்சூழல் குறையக்குறைய கி.பி 1810 -ம் ஆண்டில் மக்களும் இப்பகுதியில் குடியேறத் துவங்கினர். 1890 ம் ஆண்டு விவசாயத்திற்காக பேச்சிப்பாறை அணை கட்டுமானப்பணிகள் மேற்கொண்ட போது, அரசு வழங்கிய வேலைக்காக பல இடங்களில் இருந்தும் வேலை செய்ய வந்த மக்கள் எட்டாமடை பகுதியில் அதிகமாக குடியேறினர். தொடக்கத்தில் இங்கு வாழ்ந்த மக்களோடு இணைந்து அவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச வாழ்வை வாழத் தொடங்கினர்.
இவ்வாறாக சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எட்டாமடை பகுதியில் தோன்றிய கிறிஸ்தவம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.
ஏறத்தாழ கி.பி 1852 ம் ஆண்டு சிறு வியாகுல மாதா ஆலயம் அமைத்து மக்கள் தங்களது விசுவாச வாழ்வை ஆழப்படுத்திக் கொண்டனர்.
தூய வியாகுல மாதா ஆலயத்தில் கேரளா மாநிலம் கொல்லம் கார்மல் சபையை சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் எட்டாமடையில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் மக்கள் திருப்பலிக்காக கோட்டார் புனித சவேரியார் பேராலயம் மற்றும் குருசடி புனித அந்தோணியார் ஆலயங்களுக்கு சென்று வந்தனர்.
கொல்லத்தை சேர்ந்த அருள்பணியாளர் மக்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுப்பதும், ஜெபமாலை சொல்லி கற்றுக் கொடுப்பதும், வீடுகள் சந்தித்தும் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியும் மறைப்பணியாற்றி வந்தார். அக்காலகட்டத்திலே மாதாமலை பகுதியிலே மாதாமலை பாதம் வரை, இயேசு கிறிஸ்துவின் பாடுகளை சித்தரிக்கும் 14 நிலைகள் கட்டப்பட்டது. பின்னர் இது முற்றிலும் அழிந்து போனது. இந்த வேளையில் கொல்லம் கார்மல் சபை குருவானவர் முதுமை காரணமாக கொல்லத்திற்கு சென்று விடவே, அதிகமாக வாழும் கத்தோலிக்க மக்களுக்காக எட்டாமடையில் ஆலயம் அமைக்க இடவசதி தேவை என்பதை உணர்ந்து, இதன் தலையிடமாக விளங்கிய குருசடி பங்குத்தந்தை அருள்பணி. பெர்னாண்டின் தலைமையில் அப்போதைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள் பெயருக்கு 12 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
இந்த வேளையில் மறைப்பரப்பு பணிக்கு வசதியாக 1936 -ம் ஆண்டு மார்த்தால் பங்கு உருவானது. எட்டாமடை அதன் கிளைப் பங்காக ஆனது. மார்த்தால் பங்கின் முதல் பங்குத்தந்தை அருள்பணி. ஜோசப் அவர்கள் நெடுந்தொலைவு சென்று வழிபாடுகள் நடத்தி மக்களுக்கு மறையறிவை ஊட்டினார்.
வாங்கப்பட்ட நிலத்தில் இப்போது இருக்கும் ஆலயத்தின் வடக்கு பக்கமாக, மக்களின் முயற்சியால்
ண் மற்றும் கருங்கற்களால் சுவர் எழுப்பி ஓலைக்கூரை வேய்ந்த சிற்றாலயமானது கட்டப்பட்டு, 21.06.1945 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. தூய வியாகுல மாதா ஆலயமானது திருக்குடும்ப ஆலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
அந்த காலத்தில் மின்சாரம் இல்லாததால், மக்களுக்கு வெளிச்சம் பகர மண்ணெண்ணெய் விளக்கு ஒன்றை தினமும் எரிய வைத்து, அது மழையிலும் அணையாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வந்த இடம் இன்றும் நினைவிடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கி.பி 1971 ஆம் ஆண்டில் மார்த்தால் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு எட்டாமடை தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. அப்போது தடிக்காரன்கோணம், பெருந்தலைக்காடு, கீரிப்பாறை, வீரப்புலி ஆகியன இதன் கிளைப் பங்காக இருந்தன. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மாசிலாமணி அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். அப்போது 350 குடும்பங்கள் இருந்தன.
அருள்தந்தை மற்றும் பங்கில் செயல்பட்டு வந்த கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் விடாமுயற்சி, பல கி.மீ தூரம் நடந்து சென்று இரவு பகல் பாராமல் மக்களுக்கு திருவிவிலியத்தை வாசித்து, விளக்க உரைகள் கொடுத்து, ஜெபமாலை ஜெபித்து, நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி தேற்றியதன் பயனாக தடிக்காரன்கோணம் -தூய பனிமய மாதா ஆலயம், வீரப்புலி -கிறிஸ்து அரசர் ஆலயம், சுருளக்கோடு -புனித அந்தோனியார் ஆலயம், செக்கடி -தூய சகாய அன்னை ஆலயம், நைனார்பொத்தை (கிளாரட் மௌண்ட்) -புனித அந்தோணி மரிய கிளாரட் ஆலயம், பெருந்தலைக்காடு -தூய ஜெபமாலை அன்னை ஆலயம், வாழையத்து வயல் -தூய ஆரோக்கிய மாதா ஆலயம், பரளியாறு -தூய அந்தோனியார் ஆலயம், கீரிப்பாறை -தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், காளிகேசம் -அன்னை மாமரியை பாதுகாவலியாகக் கொண்ட ஆலயம் எனப் பத்து கிளைப் பங்குகளைக் கொண்டு பரந்து விரிந்த மறைப்பரப்பு தளமாக எட்டாமடை விளங்கியது.
மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பழைய சிறு ஆலயம் மாற்றப்பட்டு, 1980 -ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. கிளரீசியன் சபை குருக்களால் மக்களின் ஒத்துழைப்புடன் அழகிய ஆலயம் கட்டப்பட்டு பேரருள்பணி. F. X. Dirnberger C.M.F Provincial மற்றும் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் M. ஆரோக்கியசாமி ஆகியோரால் 08.05.1988 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
கிளாரட் சபை குருக்கள் (CMF):
1987 ஆம் ஆண்டு முதல் கிளாரட் சபை குருக்களின் பொறுப்பில் எட்டாமடை இருந்து வந்தது. ஆறு பங்குத்தந்தையர்களும், 25 உதவிப் பங்குத்தந்தையர்களும் சிறப்பாக பணியாற்றி, பங்கின் வளர்ச்சிக்கு வித்திட்டனர். 2003 ஆம் ஆண்டில் மீண்டும் மறைமாவட்ட பொறுப்பில் எட்டாமடை வந்தது.
பங்கின் சமூக சூழல் :
எட்டாமடை பல சமய மற்றும் பல சபை மக்களும் இணைந்து வாழக்கூடிய ஊர். ஆகவே சமய ஒற்றுமைக்கும், பல்சமய உரையாடல்களுக்கும், ஐக்கிய சபை வளர்ச்சிக்கும் இப்பங்கு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
திருவிழாவினை வேற்றுமை பாராது அனைவரும் இணைந்து கொண்டாடுவது போற்றுதலுக்குரியது. அருள்பணி. ஆன்றோ வினோத் குமார் பணிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மாதாமலையில்
திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றளவும் செப்டம்பர் மாதம் 6,7,8 தேதிகளில் சிறப்பாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதாமலை திருத்தலம் :
"மாதா மலை சென்று மடிப்பிச்சை ஏந்தி நின்றால் தீராத துயரம் எல்லாம் தீர்த்து வைப்பாள் அன்னை" என்று இங்கு வந்து ஜெபிக்கும் மக்கள் ஆயிரமாயிரம்....
மாதா மலைக்கு படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் அருள்பணி. தேவதாஸ், CMF அவர்கள் பணிக்காலத்தில் 1990 -91 ம் ஆண்டு காலகட்டத்தில் ஆரம்பமாயின. பாறைகள் உடைக்கப் பட்டு படிக்கட்டுகளாக உருப்பெற்றன. ஞாயிறு திருப்பலி முடிந்ததும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அன்னையின் செபத்தை சொல்லிக் கொண்டே உடைத்து போட்ட கற்களையும், கட்டுவதற்கான மணலையும் பங்குத்தந்தையோடு இணைந்து செய்தது என்றும் நினைவு கூறத் தக்கது. 1992 ம் ஆண்டு பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது.
அருள்பணி. எட்மண்ட் பணிக்காலத்தில் 2018 ம் ஆண்டு இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
மாதாமலை அற்புதங்கள் :
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் திவ்யா என்பவருக்கு திருமணம் நடந்து, குழந்தை பாக்கியம் கிடைக்குமோ என்ற ஏக்கத்தில் தினமும் மாதாமலை வந்து செபிக்க, அழகிய பெண் குழந்தை பிறந்தது.
தாயின் கருவில் இருந்த 5மாத சிசுவிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, குழந்தைக்கு மூளைவளர்ச்சி இல்லை எனக் கூறி கருவை கலைத்து விட மருத்துவர்கள் தெரிவிக்க, மாதா மலையில் வந்து கண்ணீருடன் மன்றாடி வேண்டினர். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்களே ஆச்சரிப்பட்டு போயினர்.. ஆரோக்கியத்துடன் கூடிய குழந்தையும் பிறந்தது.
"அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்."
திருப்பாடல்கள் 40:2
எட்டாமடை சுற்றுப் பகுதியைச் சேர்ந்த முசுலிம் சகோதரரின் கால்கள் திடீரென நடக்க முடியாமல் முடங்கிப் போனது. மருத்துவங்கள் பல பார்த்த பின்னரும் அவரால் நடக்க இயலவில்லை. இவரை மாதாமலை மேலே தூக்கி செல்வது சிரமமாக இருக்கும் எனக்கருதியதால், (அப்போது மாதாமலைக்கு சரியான படிக்கட்டு வசதிகள் இல்லை) ஆகவே அன்னையின் திருமுகம் பார்க்கும் வகையில் கீழ்ப்பகுதியில் ஒரு மர நிழலில் தங்கினர். ஒருநாள் அதிகாலையில் தாமாகவே எழுந்து நடந்து செல்வதைக் கண்ட அவரது மனைவி ஆனந்தக் கண்ணீர் விட்டார். இருவரும் அன்னைக்கு நன்றி செலுத்தி மகிழ்வுடன் இல்லம் சென்றனர்.
ராஜா -மேரி விஜயா தம்பதியர், திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில் மாதா மலை வந்து ஜெபித்து குழந்தை செல்வம் பெற்றனர்.
இவ்வாறு மாதா மலையில் நாள்தோறும் எண்ணற்ற அதிசயங்கள் அற்புதங்கள் நடந்து வருவதால், பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் வருகின்றனர்.
எட்டாமடை மாதா மலை திருத்தலத்தின் பெருமைகள்....
1. அரவணைக்கும் கரங்களில் அற்புத நீரை சுரந்துகொண்டிருக்கும் பிரமாண்டமான வியாகுல மாதா சுரூபம்.
2. இயேசுவின் சிலுவைப் பாடுகளை தத்துரூபமாக எடுத்தியம்பும் 14 பிரமிப்பூட்டும் சிலுவைப் பாதை தலங்கள்.
3. இயேசுவின் 33 ஆண்டுகால உலக வாழ்வை பறைசாற்றும் விதமாய் மலையின் உச்சியில் அமைந்துள்ள 33 அடியில் கட்டப்பட்டுள்ள உலக இரட்சகர் சுரூபம்.
4. லூர்து நகரில் காட்சி தந்து அனேக அற்புதங்களை செய்து கொண்டிருப்பது போல, மாதா மலை நடுவில் அமர்ந்து எண்ணில்லா அற்புதங்களை இடைவிடாது செய்து கொண்டிருக்கும் அற்புத மாதா மலை தாயின் சுரூபம்.
5. வியாகுலத் தாயின் அருகில் உள்ள திமிங்கல வடிவில் அமைந்துள்ள பாறை.
6. மலையின் உச்சியில் அமைந்துள்ள வண்ண மலர் பூந்தோட்டம்.
7. மலையில் மண்டிகிடக்கும் பச்சை நிற வயல் வெளிகள் மற்றும் பசுமைநிற காடுகள்.
இவை அனைத்தும் மாதா மலை திருத்தலத்தின் சிறப்பினை சுமந்து நிற்கும் அளப்பெரிய அடையாளங்கள்.
இந்த கண்கொள்ளாக் காட்சியினை கண்டிட வாரீர் ! மாதா மலையின் வனப்பினைப் பாரீர் !. அன்னையின் வல்லமையை அள்ளிப் பருகிட அனைவரும் வாரீர்.....
மக்களின் ஜெப தேவைகளுக்காக ஆலயத்தின் முன்புறம் தூய சகாய மாதா குருசடி கட்டப்பட்டுள்ளது. இந்த வழியில் வாகனங்களில் செல்லும் மக்கள் இக்குருசடியில் வந்து ஜெபித்து தங்கள் பயணங்களை தொடர்கின்றனர்.
மலைமீது அமைந்துள்ள சிலுவை குருசடியானது 1893 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். தற்போது வெளிநாட்டில் பணிபுரியும் எட்டாமடை மக்களின் உதவியுடன் 29.10.2020 அன்று புதுப்பிக்கப் பட்டது.
திருக்குடும்ப பாலர்பள்ளி
திருக்குடும்ப நடுநிலைப் பள்ளி -ஆகியன மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கி வருகின்றன.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. கத்தோலிக்க சேவா சங்கம்
4. மரியாயின் சேனை (3)
5. திருவழிபாட்டுக்குழு
6. பாடகற்குழு (2)
7. மறைக்கல்வி மன்றம்
8. இளைஞர் இயக்கங்கள் (2)
9. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்
10. திருக்குடும்ப நற்பணி மன்றம்
11. கோல்பிங் இயக்கம்
12. கைகள் இயக்கம்
13. தொழிலாளர் நலப்பணிக்குழு
14. குடும்ப நலப்பணிக்குழு
15. கல்விக்குழு
16. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
17. பாலர் சபை
18. பீடச் சிறுவர்கள்
19. அன்பிய ஒருங்கிணையம்
20. பக்தசபைகள் ஒருங்கிணையம்.
பங்கில் பணியாற்றிய அருள்பணியாளர்கள்:
1. அருள்பணி. மாசிலாமணி (1971-1977)
2. அருள்பணி. பால்மார்க் (1977-1979)
3. அருள்பணி. தேவசகாயம் (1979-1981)
4. அருள்பணி. சேசுமரியான் (1981-1985)
5. அருள்பணி. அகஸ்டின் (1985-1986)
6. அருள்பணி. ஜோக்கிம் (1986-1987)
(1987 முதல் 2005 வரை கிளரீசியன் சபையின் பொறுப்பில் பணியாற்றிய அருள்பணியாளர்கள்)
7. அருள்பணி. ஆன்சல்மூஸ்
8. அருள்பணி. தேவதாஸ்
9. அருள்பணி. சிங்கராயன்
10. அருள்பணி. சந்தனசாமி
11. அருள்பணி. அமலதாஸ்
12. அருள்பணி. இன்னாசிமுத்து
13. அருள்பணி. ஜான் போஸ்கோ
14. அருள்பணி. தேவதாஸ்
(2005 முதல் கோட்டார் மறைமாவட்ட பொறுப்பில்)
15. அருள்பணி. அலோசியஸ் பென்சிகர்
16. அருள்பணி. ஆன்றோ வினோத் குமார்
17. அருள்பணி. மைக்கேல் ஏஞ்சலூஸ்
18. அருள்பணி. எட்மண்ட்
19. அருள்பணி. S. P. லாரன்ஸ்.
இணைப் பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. கிங்ஸ்லி ஜோண்ஸ்
2. அருள்பணி. கிறிஸ்டோ டாபின்
3. அருள்பணி. ஜோக்கின்ஸ்
4. அருள்பணி. சகாய பெலிக்ஸ்
5. அருள்பணி. செல்வன்
6. அருள்பணி. அன்பின் தேவசகாயம்.
தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. S. P. லாரன்ஸ்