321 இயேசுவின் திருஇருதய ஆலயம், கடையல்

   

இயேசுவின் திருஇருதய ஆலயம்.

இடம் : கடையல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : புத்தன்கடை

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. இயேசு ஆண்டவர் ஆலயம், கிலாத்தூர்
2. புனித அந்தோணியார் ஆலயம், போங்கின்காலை.

பங்குத்தந்தை : அருட்பணி ஜான் D பிரிட்டோ MSFS
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பீட்டர் MSFS

குடும்பங்கள் : 1200
அன்பியங்கள் : 19

திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி மற்றும் காலை 08.30 மணி

திங்கள், வெள்ளி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

செவ்வாய், புதன், வியாழன் திருப்பலி : காலை 06.15 மணிக்கு.

சனி திருப்பலி : மாலை 05.30 மணிக்கு.

திருவிழா : ஜூன் மாதத்தில் இயேசுவின் திருஇருதய நாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
அருட்தந்தையர்கள்:
1. Fr பேட்ரிக்சன் SMA
2. Fr ஷுன் ப்ரைசல் சிங் MSFS
3. Fr மரிய செல்வன் MSFS
4. Fr எபின் கிறிஸ்டோபர்MSFS

அருட்சகோதரிகள் :
1. Sister றோஸ்மேரி
2. Sister மரிய செல்வம்
3. Sister பாத்திமா மேரி
4. Sister ஹெலன் ரூபி
5. Sister சுஜிதா ராணி
6. Sister ஷீஜா வயோலா
7. Sister ஜெயா டெல்பின்
8. Sister ஜோஸ் பபிதா மேரி

வழித்தடம் :

மார்த்தாண்டத்திலிருந்து 89A, 86,86D, 86G

தக்கலை - அழகியமண்டபம் வழித்தடத்தில் 13H.

மார்த்தாண்டம் - கோதையாறு பேருந்து 331.

வரலாறு :

ஆழிசூழ் உலகு. அதில் எங்கு நோக்கினும் இயற்கை அழகு. குறிஞ்சியும், முல்லையும், மருதமும் மாறி மாறி கலந்து குலாவி சங்கமித்த அழகிய கிராமம் தான் கடையல்.

உயர்ந்த மலைகள், தாழ்வான பள்ளத்தாக்குகள், மேட்டு நிலங்கள், சமவெளிகள் என ஏற்றத்தாழ்வான புவி அமைப்பு.

வளைந்தோடும் ஆறுகள். அதன் போக்கில் கொட்டும் சிறு சிறு அருவிகள், குதித்தோடும் நீரோடைகள், எங்கும் பச்சைக்கம்பளம் விரித்தாற் போன்று பசும் புல்வெளிகள், அடர்ந்த காடுகள், அதில் பாடும் குயில்கள், ஆடும் மயில்கள், துள்ளியோடும் மான்கள், துரத்தும் விலங்குகள்.

மா, பலா, வாழை என முக்கனித் தோட்டங்கள். செந்நெல்லும், செங்கரும்பும், செவ்வாழையும், மணமிக்க மஞ்சளும், இஞ்சியும் மலைபடுபொருட்களும் வளமாய் விளைந்து, மண் வளம் செழித்த காலம்...! எங்கு நோக்கிலும் பரந்த வயல்வெளி பரப்புகள் அவற்றை பிரித்துக் காட்டும் வரப்புகள். ஆங்காங்கே பசுமைக் குடில்களாய் ஓலைக் குடிசைகள். அதன் அருகே ஓங்கிய பனை மரங்கள். விவசாயக் கருவிகள், உடல் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் மக்கள்.

அரையாடை கட்டிக் கொண்டு உயர்குல எசமானர்களுக்கு எட்டடி எட்டி நின்று பணி செய்த எதார்த்த கூலி வேலை செய்த மக்கள். மெய்ஞான வழி காட்டுதலின்றி அஞ்ஞான வழியைப் பின்பற்றி இயற்கை வழிபாட்டில் காலம் தள்ளியவர்கள். தீண்டாமை என்னும் சமூக கொடுமைக்கு ஆளாகியும், காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்களால் துன்புற்றும், அறியாமை இருளில் அல்லலுற்ற காலம். விடியல் நமக்கு விடியாதோ..? என்று அழுது புலம்பி, விடியல் விண்மீனைத் தேடி வழிமேல் விழிவைத்து காத்திருந்த காலம்...!

இயற்கையில் இருந்த வனப்பும் களிப்பும் மக்களின் மனதில் இல்லை. தீண்டாமை என்னும் தீயசக்தி சுடுகாடுகளையும் கூறுபோட்ட காலம். "சுடுகாடு தானே வேறு, சுடு நெருப்பு ஒன்று தானே" என்று கூட இம் முன்னோர்களின் பிணங்கள் கூட நிம்மதியாக எரிக்க (உயர்ந்தவனுக்கு விறகு நெருப்பு, தாழ்ந்தவனுக்கு வரட்டி நெருப்பு) முடியாத நிலையில் வாழ்ந்த காலம். இந்து நாடார்களாக இருந்த இவர்கள் சமுதாய பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில், உயர்சாதி சமூகத்தால் மிகவும் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டு, அரையாடை அணிதல், ஓலைப்பட்டையில் தான் கஞ்சி குடித்தல், குளிப்பதற்கு வேறு குளங்கள் என்று இன்னல்கள் அனுபவித்து வந்தனர்.

ஆனால் சமுதாயப் பின்னடைவு இவர்களின் சமய நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. விடியலுக்காய் ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் விவெள்ளியாக தோன்றியவர்கள் தான் *ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்த குருக்களும், கன்னியர்களும்*. இவர்கள் *பள்ளியாடி கத்தோலிக்க திருச்சபை* பங்கிலிருந்து பல கி.மீ தூரம் நடந்து வந்து கடையல் மக்களுக்கு ஆறுதலும், ஊக்கமும், பாதுகாப்பும் அளித்து அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்தனர்.

இவர்களது மனிதநேயப் பணிகளைப் பார்த்து பெருமளவில் மக்கள், கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.

பங்குப்பேரவை, ஊர் நிர்வாகிகள் இல்லாத காலத்தில் திரு K. குட்டி பூதத்தான் என்கிற எலியாஸ் அவர்கள், ஊர் பெரியவராக (பிரதானியாக) 65 ஆண்டுகள் ஆற்றிய பணிகள் இன்றியமையாதது. இயேசுவின் கல்வாரி பலியானது திரு K. எலியாஸ் அவர்களுடைய இல்லத்தின் ஒரு பகுதியில் நிறைவேற்றப் பட்டது. பின்னர் அவரது வீட்டு முற்றத்தில் ஓலைக்கூரை அமைத்து திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

ஆலயமும், வளர்ச்சியும் :

கிறிஸ்தவர்கள் அதிகரிக்கவே, அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் OCD அவர்கள் இப்பகுதியின் பொறுப்பேற்ற பிறகு, புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொண்ட போது, திரு. முத்தன் என்பவர் 25 சென்ட் நிலத்தை 23-02-1924 ல் இலவசமாகக் கொடுக்க, கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் பென்சிகர் அவர்கள் பெயருக்கு ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. மேலும் திரு முத்தன் அவர்களிடமிருந்து 2.75 ஏக்கர் நிலம் விலைக்கு 27-09-1924 இல் வாங்கப்பட்டது.

அரசு அதிகாரிகளின் அதிகார சக்திக்கு அடிபணியாத வெள்ளைக்கார தந்தை என அன்புடன் அழைக்கப் பெற்ற, அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் OCD அவர்களின் முயற்சியாலும், இறை மக்களின் தாராள நன்கொடைகளாலும் 1925 -ஆம் ஆண்டு புதிய திரு இருதய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அருட்தந்தையின் நகம் பதிந்த கல்வெட்டு இன்றும் உள்ளது.

ஆலய மணி பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் பள்ளியாடி பங்கின் பொறுப்பிலிருந்த கடையல் தலத்திருச்சபை, பின்னர் புத்தன்கடை பங்கின் பொறுப்பிலும், பின்னர் குலசேகரம் தனிப்பங்கான போது அதன் பொறுப்பிலும் இருந்து வந்தது.

அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் 1952 -ஆம் ஆண்டு குலசேகரம் பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப்பட்டது.

அப்போதைய குலசேகரம் பங்குத்தந்தை அருட்தந்தை லாசர் அவர்களின் பணி சிறப்புக்குரியது. அவர் பல கி.மீ கடந்தும், ஆற்றில் இறங்கி நனைந்தும் வந்து அருட்பணியாற்றி மக்களின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றியது போற்றுதலுக்குரியது.

குலசேகரம் பங்குத்தந்தையர்கள் அருட்தந்தையர் சுவாமிநாதர், அந்தோணிமுத்து ஆகியோரும் கடையல் பங்கின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டனர்.

எமின் தாயார் :

கடையல் பங்கின் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் ஒருநபர் ஐரோப்பிய அருட்சகோதரி மரிய எமின். இவர் சாதி, மத பேதமின்றி அனைவராலும் 'தாயார்', 'கூனித்தாயார்' என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

குலசேகரம் பங்கில் உள்ள புனித ஊர்சுலாள் கன்னியர் இல்லத்திலிருந்து (கான்வென்ட்) நடந்து வந்து, கடையல் மக்களுக்கு பல உதவிகளையும், நன்மைகளையும் செய்து வந்தார்.

அப்போது அவர்கள் கோதையாற்றைக் கடந்து வர வேண்டும். தற்போது காணப்படும் பாலம் அப்போது கிடையாது. ஆகவே இவர்கள் கோதையாற்றில் "தெப்பம்" என்ற படகில் சவாரி செய்து ஆற்றைக் கடந்து வருவார்கள். தெப்பம் என்பது மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு பரந்த படகு ஆகும்.

மருத்துவப்பணி செய்வதில் சிறந்து விளங்கினார் எமின் தாயார். இவரது காலத்தில் இப்பகுதியில் மருத்துவ வசதிகள் கிடையாது. ஆகவே ஏழைகளான இவர்கள் மீது அக்கறை கொண்டு, அவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, மலைப்பனி(காய்ச்சல்), மலேரியா, காலரா போன்ற நோய்களுக்கு மருந்து கொடுத்து நடமாடும் மருத்துவமனையாகத் திகழ்ந்தார்.

கால்களில் ஏற்படும் சேற்றுப்புண் மற்றும் தொழுநோய் புண்களையும் தன்னுடைய கைகளால் கழுவி சிகிட்சை மேற்கொள்வார்கள்.

கான்வென்டில் தமக்கு வழங்கப்படும் உணவை, தான் உண்ணாமல், வெளியே கொண்டு வந்து பசியால் வாடும் மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தவர்.

கான்வென்டில் அவரை காணச் சென்றால் கோழி, புறாக்களுக்கு, குனிந்து தானியம் கொடுத்துக் கொண்டிருப்பார். குலசேகரம், கடையல், மாஞ்சக்கோணம் மற்றும் ஆலஞ்சோலை -யிலும் இவர் இன்முகத்தோடு செய்து வந்த பணிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இப்பகுதி இறைமக்கள் அருட்சகோதரி மரிய எமின் அவர்களின் உருவப்படத்தை தங்கள் வீடுகளில் வைத்து மரியாதை செலுத்துவதைக் காணலாம். கடையல் பங்கின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு இந்த அன்பு கூனித்தாயார் (முதுகு வளைந்து காணப்படுவார்) அவர்களே என்பது குறிப்பிடத் தக்கது.

மறைக்கல்விப் பணி :

ஒரு பங்கின் வளர்ச்சிக்கு அடிப்படையானது மறைக்கல்வி. அருட்சகோதரி மரிய எமின், அவரது உடன்பிறந்த சகோதரி மற்றும் குலசேகரம் கான்வென்ட் (கன்னியர் இல்லம்) -ல் பணியாளராக இருந்த மரியம்மா அவர்களும் கடையல் பங்கில் மறைக்கல்வி பணியாற்றினர்.

அருட்சகோதரி மரிய எமின் அவர்கள் சிறுவர்களுக்கு மறைக்கல்வியின் போது சொல்லிக் கொடுத்த பாடலானது இன்றும் அனைவர் மனதிலும் உள்ளது. அப்பாடல்...

இரண்டு சின்ன கண்கள்
தேவனைப் பார்க்க..!
இரண்டு சின்ன காது
அவர் வார்த்தை கேட்க..!
இரண்டு சின்ன கைகள்
அவர் சேவை செய்ய..!
இரண்டு சின்ன கால்கள்
அவர் பாதை நடக்க..!
ஒரு சின்ன நாவு
அவர் வார்த்தை பேச..!
ஒரு சின்ன இதயம்
அவருக்குக் கொடுக்க..!

அவர் கொடுத்த மறைக்கல்வி மக்களின் விசுவாசத்தில் ஆணிவேராக உள்ளது. அந்த விசுவாசத்தின் பயனாக வேகமாக தனிப்பங்காகும் அளவிற்கு வளர்ந்தது. நன்றி அருட்சகோதரி மரிய எமின் அவர்களே..! உங்கள் பணி மகத்தானது, தூய்மையானது, இறைவனின் அன்புக்குரியது.

குலசேகரம் பங்கிலிருந்து, தனிப்பங்காக கடையல் திருஇருதய ஆலயம் 1965 -இல் உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி M. மத்தியாஸ் அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்.

இவரது பணிக்காலத்தில் மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் 1965-இல் திருஇருதய தொடக்கப்பள்ளி ஆலய வளாகத்திலேயே தொடங்கப்பட்டது.

ஆலஞ்சோலையில் 1969 -இல் பழைய ஓலைக்குடில் ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணியாளர்கள்:

1969 -இல் அருட்பணி பீட்டர்: புனித இராயப்பர் துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

1970 முதல் அருட்பணி அருள்சுவாமி: மக்களை ஆன்மீகத்தில் ஆழப்படுத்தி திடப்படுத்தினார்.

1973 முதல் அருட்தந்தை பிரான்சிஸ் M வின்சென்ட். தாய் சேய் நலத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

1974- ஆம் ஆண்டு திருஇருதய தொடக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளியானது. இவ்வாண்டு முதல் கோவை காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகள் பங்கில் பணியாற்ற துவங்கினர்.

1977 முதல் அருட்தந்தை பீட்டர் ஜான்.

1979 முதல் அருட்தந்தை I. கார்மல் பொறுப்பேற்று 9 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றினார். ஏழை எளிய மக்களின் ஓலைக்கூரை வீடுகளை மாற்றி புது வீடு கட்ட உதவினார். பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆலயத்தை சிலுவை வடிவில் விரிவுபடுத்தினார். கார்மல் கலையரங்கம் கட்டப்பட்டது செயல்பாட்டில் இருந்த குடும்ப சந்தா (வரி) நிறுத்தப்பட்டது. கதர் கிராம நூற்பு நிலையம், தையல் பயிற்சி நிலையம், வாழைநார் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிலையம் நிறுவப்பட்டன.

1988 முதல் அருட்தந்தை அந்தோணி முத்து : பங்கு அருட்பணிப்பேரவை ஏற்படுத்தப் பட்டது. ஆலஞ்சோலை, மாஞ்சக்கோணம், போங்கின்காலை, கிலாத்தூர் மற்றும் சிற்றார் ஆகிய கிளைப் பங்குகளைக் கொண்டு சிறப்பாக வழி நடத்தப்பட்டது.

1991 முதல் அருட்பணி K. ஜார்ஜ்: அன்பியங்கள் தொடங்கப்பட்டது.

MSFS குருக்களின் வருகை :

1993 -ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் சலேசியார் வேத போதக சபை (MSFS) இங்கு காலடி எடுத்து வைத்தது. முதல் Msfs குருவாக அருட்பணி S. ஜோசப் ஹென்றி அவர்கள் பொறுப்பேற்றார். ஆலஞ்சோலையில் ஓட்டுக்கூரை ஆலயம் இடிக்கப்பட்டு, தற்போது காணப்படும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 03-06-1995 அன்று மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மற்றொரு கிளைப்பங்கான மாஞ்சகோணம் ஆலயத்தின் முன்புற கோபுரம் தவிர அனைத்து பகுதிகளும் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு 03-06-1996 அன்று அர்ச்சிக்கப்பட்டது. கடையலில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. கல்லறைத் தோட்டம் அமைக்கப்பட்டது.

1996 முதல் அருட்தந்தை D. ராபர்ட். திரு இருதய திருமண மண்டபம் (SH Auditorium)கட்டினார்.

2000-ம் ஆண்டில் பங்கின் பவளவிழா, திருமண மண்டப திறப்பு விழா, பங்கின் முதல் குருவாக அருட்தந்தை பேட்ரிக்சன் திருநிலைப்படுத்தல் என முப்பெரும் விழாவாக மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்கள் தலைமையில் கொண்டாடப் பட்டது.

2001 முதல் அருட்தந்தை A. மைக்கேல் : மக்களை ஆன்மீக வழியில் நடத்திச் சென்றார்.

2002 முதல் அருட்தந்தை S. அலெக்ஸாண்டர்: புனித ஜார்ஜியார் குருசடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்போதைய வடிவத்தைக் கொடுத்தார்.

2005 முதல் அருட்தந்தை A. மரிய ஜான் போஸ்கோ : 28-06-2006 அன்று மாஞ்சக்கோணம் தனிப்பங்கானது. Msfs சபையை சார்ந்த நான்கு திருத்தொண்டர்கள், பாளையங்கோட்டை ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் திருநிலைப் படுத்தப் பட்டனர்.. மேலும் சானல்கரையில் நிலம் வாங்கப்பட்டு 25-12-2007 முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

கடையல் தலத்திருச்சபை வளர்ச்சியடைந்து வந்ததால், ஆலயத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஆகவே பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் 30-05-2008 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போட தீர்மானிக்கப் பட்டது. கடையல் சந்திப்பில் நுழைவாயில் கட்டப்பட்டது.

எதிர்பாராத விதமாக அருட்பணி மரிய ஜான் போஸ்கோ அவர்கள் கோர விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில், இணைப் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகநாதன் அவர்கள் வழி நடத்தினார். ஒரு வருடத்திற்கு பின்னர் அருட்தந்தை மரிய ஜான் போஸ்கோ அவர்கள் உயிரிழந்தார்.

20-05-2008 அன்று அருட்பணி பவுல்சாமி அவர்கள் பொறுப்பேற்று, 30-05-2008 அன்று Msfs சபையின் தென்கிழக்கு மாகாண அதிபர் அருட்பணி லாரன்ஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது.

2009 -இல் ஆலஞ்சோலை தனிப்பங்கானது. சானல்கரையில் சிறியதொரு ஆலயம் கட்டப்பட்டு புனித சலேசியார் பெயருக்கு அர்ப்பணிக்கப் பட்டு, ஆலஞ்சோலையின் கிளையாக்கப் பட்டது.

2012 முதல் அருட்தந்தை சகாய வில்சன் : ஆலயப் பணியையும் ஆன்மீகப் பணியையும் சிறப்பாக கொண்டு சென்றார். புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 24-05-2013 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2015 முதல் அருட்தந்தை சூசைராஜ் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார்.

தற்போது அருட்தந்தை ஜான் D. பிரிட்டோ அவர்கள் பங்குத்தந்தையாக இருந்து சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

புனித ஜார்ஜியார் குருசடி :

1925 -இல் ஆலயத்தின் அருகிலேயே கட்டப் பட்டது. பல்வேறு புதுமைகள் இக்குருசடியில் நாள்தோறும் நடந்து வருகிறது.

அருட்பணி பிரான்சிஸ் M. வின்சென்ட் பணிக்காலத்தில் 14-10-1973 முதல் நவநாள் துவக்கப்பட்டது. அருட்தந்தை I. கார்மல் பணிக்காலத்தில் புதிய குருசடி கட்டப்பட்டது.

புனித ஜார்ஜியார் வழியாக நடந்த புதுமைகளில் சில:

1. மருத்துவமனையிலிருந்து திருப்பி விடப்பட்ட காசநோயாளி புனித ஜார்ஜியாரின் பரிந்துரையால் இறைவன் வழியாக நலம் பெற்றார்.

2. குறைப்பிரசவத்தில் பிறந்த சிறுவன், இரண்டு வயதான பிறகும் நடக்க இயலாது, பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றும் நலம் பெற முடியாமல் கால்களில் கம்பிகளும், ஆணிகளும் பொருத்தப் பட்டு அல்லலுற்றான். சிறுவனுக்கு வயது 5 ஆன போது புனிதரிடம் சரணடைந்தனர்.

தவக்காலத்தில் புனித ஜார்ஜியாரின் குருசடியில் நற்செய்தி கூட்டம் நடைபெறும். அன்று அச்சிறுவன் தன் தந்தையிடம் என் கால்களில் பொருத்தியிருக்கும் கம்பிகளை எடுத்து விடுங்கள்...! நான் நடக்க வேண்டும்..! என்று கூற, உடனே தந்தையும் கம்பிகளை அகற்றினார். சிறுவன் ஒன்றிரண்டு அடிகளாக எடுத்து வைத்து நடந்தான். இப்போது தானாகவே நடந்து கொண்டிருக்கின்றான். இறைவனுக்கு நன்றி..!

3. புற்றுநோயாலும், சாத்தானின் சோதனையாலும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பல்வேறு பிற சபைகள், பிற சமய கோயில்கள், புற்று நோய் சிகிட்சையளிக்கும் மருத்துவமனைகள் என்று பல இடங்களில் சென்றும் நோய் குணமாகாததால் மனம் நொந்தார். இறுதியாக புனித ஜார்ஜியாரிடம் சரணடைந்தார்..! தினமும் புனிதரிடம்ஜெபித்து வந்தார். 2013 -இல் திருவனந்தபுரம் RCC மருத்துவமனை சென்று பரிசோதித்த போது, மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்...!புற்று நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. இயேசுவே உமக்கு நன்றி..

4. பசாசின் தொல்லைகளினால் 17 வயது இளைஞன் பெரிதும் பாதிக்கப்பட்டு எப்போதும் ஊழையிட்டு, பிறரை தாக்குவது போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால், பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், பல ஆலயங்கள், தியான மையங்கள் சென்ற பின்னரும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. இறுதியில் புனித ஜார்ஜியார் குருசடியில் குடும்பத்தோடு வந்து தங்கி ஜெபித்தனர். புனிதரின் பரிந்துரையால் அற்புத சுகம் பெற்று நலமுடன் வாழ்கிறார்கள்.

5. துபாய் சென்று வேலை செய்து கொண்டிருந்த குடும்பத் தலைவர் ஒருவர், மனநோயினால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து ஊருக்கு திருப்பி அனுப்பப் பட்டார். மருத்துவரை நாடி நோய் சிறிது குணமாகியது. 2013 -இல் மீண்டும் மனநிலை பாதிக்கப்பட்டார் உறவினர்கள் கலங்கினர். இறுதியாக புனித ஜார்ஜியார் குருசடி வந்து தவக்கால நற்செய்தி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெபித்தனர். இறைவனின் கரங்களால் நோய்நீங்கி நலமுடன் வீடு சென்று, தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமாக வாழ்கின்றனர்.

6. தீராத இருமல் நோயால் பாதிக்கப்பட்ட 42 வயதானவர், பல மருத்துவமனை சென்றும், பல்வேறு சிகிட்சைகள் பெற்றும் நோய் குணமாகாததால், புனித ஜார்ஜியார் குருசடியிலேயே குடும்பத்துடன் வந்து தங்கி ஜெபிக்க, தீராத இருமல் முற்றிலும் தீர்ந்து நலம் பெற்றார்.

7. பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்த 67 வயது பிற சமய தாயானவரை, மருத்துவர்கள் கைவிட, இறுதியாக புனிதரின் குருசடிக்கு கொண்டு வந்து கண்ணீருடன் ஜெபித்தனர். புனிதரின் பரிந்துரையால் நோய்களிலிருந்து முற்றிலும் நலம் பெற்று ,தற்போது நாள்தோறும் மாலையில் நடைபெறும் ஜெபத்திலும், சனிக்கிழமை மாலையில் நடைபெறும் நவநாளிலும் தவறாமல் பங்கேற்கின்றனர்.

8. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 55 வயது குடும்பத் தலைவர் புனிதரின் பரிந்துரையால் நலம் பெற்றார்.

இவ்வாறு பலர், புனித ஜார்ஜியார் குருசடி வந்து ஜெபித்து நலம் பெற்று செல்வதால், இக்குருசடியை "குமரியின் எடத்துவா" என்று போற்றுகின்றனர்.

புனித அந்தோணியார் குருசடி :

குமரிக் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு முன்னால், குலசேகரம் சாலையின் இடதுபுறம் புனித அந்தோணியார் குருசடி உள்ளது.

விழாக்காலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குலசேகரம், மாஞ்சக்கோணம், திற்பரப்பு போன்ற பகுதிகளில் உள்ள இறைமக்கள் திரு இருதய ஆலயம் கடையலுக்கு வரும் போது, வழிமாறிச் செல்லாமலிருக்க அருட்சகோதரி மரிய எமின் (கூனித்தாயார்) அவர்களின் ஆலோசனையின்படி, அருட்தந்தை லாசர் அவர்கள், சாலை ஓரத்தில் தூண் ஒன்று கட்டி புனித அந்தோணியார் சொரூபத்தை நிறுவினார். அருட்பணி மத்தியாஸ் அவர்களின் பணிக்காலத்தில் குருசடியாக கட்டப்பட்டது. பின்னர் அருட்தந்தை கார்மல் அவர்கள் இரண்டடுக்கு குருசடியாக மாற்றினார். தற்போது மாஞ்சக்கோணம் பங்கின் கட்டுப்பாட்டில் இந்த குருசடி உள்ளது.

கிறிஸ்து அரசர் குருசடி :

அருட்தந்தை மரிய ஜான் போஸ்கோ பணிக்காலத்தில் இந்த குருசடி கட்டப்பட்டு 29-01-2006 அன்று அர்ச்சிக்கப்பட்டது. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் "இறை இரக்க நவநாள் செபம் " நடைபெற்று வருகிறது.

தனிச்சிறப்பு :

இயேசுவின் திருஇருதய ஆலய பீடத்தில் புனிதர்கள் நசாரியுஸ் மற்றும் செல்சுஸின் உலர்ந்த எலும்புகள் புனதப் பண்டமாக வைக்கப்பட்டுள்ளது.

தூய காணிக்கை அன்னை கன்னியர் சபை, கோவை. F.S.P.M :

1974 முதல் இச்சபை அருட்சகோதரிகள் கடையலில் தங்கள் பணியைத் துவங்கினர். இப்பகுதி மக்களின் ஆன்மீக மற்றும் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இவ்வாறாக சிறந்த ஒரு வரலாறு மற்றும் இறைவனின் அருளால் நிரம்பப் பெற்ற தலத்திருச்சபையாக விளங்கும் இயேசுவின் திருஇருதய ஆலயம் கடையால் குறித்த தகவல்களை பதிவு செய்ததை மிகுந்த பாக்கியமாகக் கருதி இப்பதிவை முழு மனநிறைவுடன் இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்..!