மாவட்டம் : தூத்துக்குடி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : சாத்தான்குளம்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாதாவானம்
2. புனித சூசையப்பர் ஆலயம், கந்தசாமிபுரம்
3. இயேசுவின் திருஇருதய ஆலயம், பிள்ளையன்மனை
4. புனித லூர்து அன்னை ஆலயம், உடையார்குளம்
5. புனித லூர்து அன்னை ஆலயம், தோப்பூர்
6. புனித அந்தோணியார் ஆலயம், தேமாங்குளம்
7. புனித அந்தோணியார் ஆலயம், குறிப்பன்குளம்
பங்குத்தந்தை : அருட்பணி. S. ஆரோக்கிய அமல்ராஜ்
குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 6
ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணி
நாள்தோறும் காலை 06.00 மணி அல்லது மாலை 06.30 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஆகஸ்ட் 06 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு 14, 15 தேதிகளில் திருவிழா.
பிரகாசபுரம் மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்தந்தையர்கள்:
1. Fr. S. மரிய ஜெயராஜ்
2. Fr. T. விக்டர்
3. Fr. M. மார்ட்டின் மனுவேல்
4. Fr. M. பீற்றர்
5. Fr. நிஷாந்த் அல்போன்ஸ் இருதயதாசன்
6.Fr. G. அலெக்ஸ் மரிய செல்லையா
7. Fr. A. ஒயிட் அமல் ராஜா
8. Fr. S. அருண்குமார்
அருட்சகோதரிகள்:
1. Sr. கொன்ராத் மேரி
2. Sr. ஆஞ்சலிக்கா
3. Sr. ஓலேப் ஜாண் மேரி
4. Sr. மார்த்தா மேரி
5. Sr. நீரை மேரி
6. Sr. வியாகுலமரியாள்
7. Sr. அலகோக் மேரி
8. Sr. விமலா மேரி
9. Sr. லூஸியா மெலானி
10. Sr. லூஸியா அந்தோணி டெய்சி
11. Sr. ஜஸீந்தா ஜேஸ்பின் மேரி
12. Sr. மார்த்தா மேரி
13. Sr. நினா மேரி
14. Sr. கரோலின்
15. Sr. எபனேசர்
16. Sr. அனி மேரி புனிதா
Church Facebook address: https://www.facebook.com/Our-Lady-of-Assumption-Church-113289327022924/
Follow us on Instagram: https://instagram.com/st.marys_church_official
வழித்தடம் : திருநெல்வேலி -நாசரேத், தூத்துக்குடி -நாசரேத். இறங்குமிடம்: பிரகாசபுரம்
ஆலய வரலாறு:
கிறிஸ்தவம்:
நம் இந்திய மண்ணில், ஏக அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபையானது, கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தோமையாரால் கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே வேரூன்றி விட்டது என்பது மறுக்கமுடியாத வரலாற்று உண்மை. ஆயினும் மிகப்பெரிய வளர்ச்சியானது கி.பி. 15, 16 ஆம் நூற்றாண்டில்தான் உச்சத்தை அடைந்தது எனலாம்.
நம் இந்தியத் திருநாட்டில் வேரூன்றி வேகமான வளர்ச்சி கண்ட அந்தக் காலக்கட்டத்தில்தான் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவிலும் வேகமெடுத்தது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 'முத்துக்குளித்துறை மாநகர்' என்று போற்றப்படும் 'தூத்துக்குடி மறைமாவட்டம்' முதன்மை இடத்தைப் பெற்றது என்றால் மிகையாகாது.
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஓர் அங்கமாக திகழ்ந்துள்ள பிரகாசபுரம் பங்கின் வரலாற்றை சற்று விரிவாக இங்கே காண்போம்.
நாசரேத்:
கி.பி. 18ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிரகாசபுரம் ஊரானது 'சாண்பத்து' என்று அழைக்கப்பட்ட நாசரேத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. நாசரேத்திற்கு 'தெற்கு முதலூர்' என்ற மற்றொரு பெயரும் இருந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இப்பகுதியில் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
1805 ஆம் ஆண்டு முதல் 'சாண்பத்து' என்ற பெயர் இப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களால் 'நாசரேத்' என மாற்றப்பட்டு, அன்று முதல் இன்று வரை அப்பெயராலேயே அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த வேளையில் தான் 1875ல் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர் அவர்கள் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்கள். அதிலும் குறிப்பாக 1876ல் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த நாசரேத் மாநகருக்கு வருகை தந்தார்கள். அன்னாரின் வரவால் இப்பகுதி முழுவதுமே மாபெரும் வளர்ச்சி கண்டது. குறிப்பாக மாணவ மாணவியர்களுக்கென்று தனித்தனியாக கல்விச்சாலைகளை அமைத்து சாதி, மத பேதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்தார். மேலும் மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள், தொழிற்பயிற்சி கூடம் அமைத்து இப்பகுதி மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். அதுமட்டுமல்ல திருநெல்வேலி -திருச்செந்தூர் இரயில் பாதை அமைத்திட முக்கிய காரணியாகத் திகழ்ந்துள்ளார் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர் 'நாசரேத்தின் தந்தை' என்று இன்றும் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.
பிரகாசபுரம்:
பிரகாசபுரம் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் மற்றும் மூக்குப்பீறி இடையில் அமைந்துள்ள ஒரு ஊராகும். திருநெல்வேலி -திருச்செந்தூர் இரயில் பாதை நாசரேத் பிரகாசபுரத்தை இரண்டாக பிரித்துள்ளது. தமிழ்நாட்டின் பாலைவனம் என அழைக்கப்படும் குதிரைமொழி தேரியும் அருகில் உள்ளது.
பிரகாசபுரம் தொடக்கக் காலத்தில் 'புதூர்' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. நாசரேத் அருகில் இருந்ததால் 'சாண்பத்து புதூர்' என்று அழைத்து வந்துள்ளனர். 1831 ஆம் ஆண்டில் தான் 'புதூர்' என்ற பெயரை மாற்றி 'பிரகாசபுரம்' என்ற புதிய பெயரை வைத்துள்ளனர். அன்று முதல் இன்று வரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகின்றது.
பரிசுத்த பரலோக அன்னை ஆலயம்:
இம்மண்ணில் கத்தோலிக்கத்தைப் பின்பற்றிய முன்னோர்கள், இறைமகனின் தாயாம் புனித கன்னிமரியாளைப் பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டதுடன், அன்னையின் விண்ணேற்பை அகிலமே அறியும்வகையில் அன்னைக்கு பரலோக மாதா என்ற பெயரைத் தாங்கிய ஆலயங்களை எழுப்பி மாதாவை மகிமைப்படுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில்தான் வடக்கில் காமநாயக்கன்பட்டியிலும், தெற்கில் வடக்கன்குளத்திலும் இரு பெரு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவ்விரு ஊர்களுக்கும் நடுவில் நடுநாயகமாக விளங்கும் வகையில், பிரகாசபுரத்திற்கு புதியதொரு ஆலயம் அப்போதைய முன்னோரால், 18ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளது. முதலில் கூரைக்கோவிலாக நம் தாயின் ஆலயம் காட்சியளித்தது. தற்பொழுது மாதா பெயரில் நம் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு கெபிதான், அன்றைய ஓலைக்கூரை கோயில் அமைந்து இருந்த இடமாகும்.
மிகப்பழைமையான காலத்திலேயே மாதாவுக்காக ஆலயம் அமைத்த இந்த ஊரைச் சேர்ந்த 14 கத்தோலிக்கக் குடும்பங்கள், 1880 ஆம் ஆண்டு மாதாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கோவில் கூரையை அகற்றிவிட்டு, ஓடு வேய்ந்த மண் கோயிலை உருவாக்கியுள்ளனர். அக்கோவில் அதே ஆண்டு மாதாவின் விண்ணேற்ற நாளான ஆகஸ்டு 15 ஆம் நாளில் அருட்திரு. டையோனிஷியஸ் குஷன் அடிகளாரால் அர்ச்சிக்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டது. திருவிழா நாட்களில் திருப்பலிகளும், ஜெபமாலை ஜெபித்தலும் நடந்துள்ளது.
இவ்வாறு மாதா பக்தியில் திளைத்திருந்த இம் முன்னோர்களுக்கும், ஊருக்கும் மகிமை சேர்க்கும் வகையில் அன்றைய ஆன்மீக குருவாக இருந்த அருட்தந்தை. டையோனிஷியஸ் குஷன் அடிகளார், இந்த மக்களின் வாழ்வை உயர்த்தும் வகையில் ஓர் அழகிய பரலோக மாதா சுரூபத்தை கொடையாக வழங்கியுள்ளார்கள். 1880 ஆம் ஆண்டு இலங்கை வழியாக கப்பல் மூலம் பரலோக மாதா சுரூபம், புனித சூசையப்பர், குழந்தை இயேசு, என மொத்தம் 3 சுரூபங்கள் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்துள்ளன. அப்பொழுது பிரகாசபுரம், சாத்தான்குளத்தின் கீழ் கிளைப்பங்காக செயல்பட்டு வந்திருக்கின்றது.
1887ல் திருச்சி மறைமாவட்ட ஆயர் பார்த்தே ஆண்டகை தாய்ப்பங்கான சாத்தான்குளத்திற்கு வருகை தந்திருந்த போது, இம் மண்ணின் மக்களுடைய ஈடுபாட்டைக்கண்டு வியந்து அவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பிரகாசபுரத்தை தனிப்பங்காக செயல்பட உத்தரவிட்டார்கள். பிரகாசபுரம், சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு அருட்திரு. நிக்கோலஸ் சுவாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மறைமாவட்டம் உதயமாகும் முன்பே பிரகாசபுரம் தனிப்பங்காக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், 15 கிளைப்பங்குகள் பிரகாசபுரத்தைத் தாய் பங்காகக்கொண்டு செயல்பட்டு வந்திருக்கின்றன என்பது கூடுதல் பெருமை. அதிலும் குறிப்பாக திருவைகுண்டம், சேதுக்குவாய்த்தான், சிந்தாமணி போன்ற பெரிய பெரிய ஊர்களும் இப்பங்கில் இணைந்து செயல்பட்டு வந்திருக்கின்றன.
1895 வரை வெறும் வழிபாடுகள் மூலம் மட்டுமே நடத்தப்பட்டு வந்த திருவிழா அதன்பின்பு சப்பரத் (தேர்) திருவிழாவாக மாறி விட்டது.
ஆம்! நம் "புதுமைகளின் நாயகியாம்" பரிசுத்த பரலோக மாதாவை சப்பரத்தில் வைத்து தெருவீதிகளில் தோளில் சுமந்து மாதாவின் புகழைப் பரப்பியுள்ளனர். சப்பரம் நிலை கொள்ளும் இடத்தின் பரப்பளவு பெரிய பரப்பளவைக் கொண்டதாக இருந்தது. 3 சப்பரங்கள் நிறுத்தக்கூடிய அளவில் அதாவது தற்போதைய புனித மிக்கேல் அதிதூதரின் கெபியின் முற்றம் வரையில் அதனுடைய நீளம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
7ஆம் திருவிழா அன்று புனித மிக்கேல் அதிதூதர் தட்டு சப்பரமும், புனித அந்தோணியார் சப்பரமும், 8ஆம் திருவிழா இந்த இருசப்பரங்களோடு புனித சூசையப்பர் சப்பரமும், 9ம் திருவிழா அன்றும் 10ஆம் திருவிழா அன்றும் இச்சப்பரங்களோடு "புதுமைகளின் நாயகியாம்" பரிசுத்த பரலோக மாதா சப்பரமும் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கின்றது. அக்காலத்தில் மாதாவை பவனியாக வீதிகளில் சுமந்து சென்றதாக 'மதுரை மிஷன்' குறிப்பேடு கூறுகிறது.
இவ்வாறு நம் "புதுமைகளின் நாயகியாம்" பரிசுத்த பரலோக மாதாவின் புகழும், அருளும் பிரகாசபுரம் ஊர் மற்றும் ஊரைச்சுற்றியுள்ள கிராமங்களில் வேகமாகப்பரவியது. இந்நிலையில் தான் 1907ல் 'நாசரேத்தின் தந்தை' என அழைக்கப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தபோது, தனது ஜெபஅறையில் வைத்து வணங்கிய இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபம், பரிசுத்த தேவ அன்னையின் சொரூபம் மற்றும் உயிர்த்த ஆண்டவரின் சுரூபம் என 3 சொரூபங்களையும் பவனியாக எடுத்து வந்து, ஆலயத்திற்கு வழங்கி மாதாவுக்குப் புகழ் சேர்த்துள்ளார்கள்.
1887ல் திருச்சி மறைமாவட்ட ஆயரால் தனி பங்காக அறிவிக்கப்பட்டிருந்தாலும், 1909ல் ஜனவரி மாத இறுதியில் இருந்துதான் முறைப்படி செயல்படத் துவங்கியுள்ளது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை. E. மாஸ் என்ற சேசு சபைகுரு நியமிக்கப்பட்டிருந்தார். திருவிழாவிற்காக அந்த காலகட்டத்தில் சவுக்கு மரத்தில் குருத்து ஓலை மற்றும் மா இலைகளைக் கட்டி கொடிமரமாக்கி ஆர்.சி. காம்பவுண்டின் நடுவில் (தற்பொழுது கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடம்) குழி தோண்டி அதில் மரத்தை நிலை நிறுத்துவது வழக்கமாக இருந்திருக்கின்றது. பிரகாசபுரம் ஊர் மட்டுமல்ல அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் மிகப்பெரிய விழாவாக ஆலயத்திருவிழா திகழ்ந்திருக்கின்றது; இன்றும் திகழ்கிறது என்பது நம் பரலோக தாயின் வல்லமைக்கு சாட்சி என்பதில் ஐயமில்லை.
1913ல் அருட்தந்தை. T. மிக்கேல் அடிகளார் பங்குத்தந்தையாக பணியாற்றிய காலத்தில்தான் முதன்முதலாக ஆலயத்தில் 'அசனம்' என்ற அன்னதானம் ஆரம்பமானது. அக்காலக்கட்டத்தில் மக்களின் வறுமையைக் கணக்கில் கொண்டும், தானங்களில் சிறந்தது அன்னதானம் என்ற கூற்றிற்கிணங்கவும் இந்நிகழ்வு ஆலயத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் அதே ஆண்டில்தான் அருட்தந்தை. T. மிக்கேல் அடிகளாரால் புதிய ஆலயத்திற்கு (இப்போது உள்ள பரலோக மாதா ஆலயம்) அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ஆலயம் எழுப்பப்படும்வரை பழைய கோயிலிலேயே வழிபாடுகள் நடந்தேறின.
இப்பகுதி மாணவச்செல்வங்களின் அறிவுப்பசியைப் போக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1929ஆம் ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் வகையில் ஓர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு அதற்கு மாதாவின் பெயரால் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டது. 1939-ல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டு 1-8ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளியானது. தற்பொழுது St. மேரீஸ் மஹால் இருக்கின்ற இடத்தில்தான் பள்ளியானது செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் பிரகாசபுரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள் கல்வியைப் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளனர்.
1949 வரை அஸ்திவாரத்தோடு தடைபட்டு நின்றிருந்த புதிய ஆலயப்பணியானது மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. இலங்கையில் இருந்து வந்த கோதுமை, அவல், பால்மாவு போன்றவற்றை விற்று, அதில் வந்த வருமானத்தில் ஆலயக்கட்டுமானப் பணியானது நடைபெற்றது. ஆலய கட்டுமானப்பணியில் முன்னோர்களின் உடல் உழைப்பு மிக உன்னதமானது. கோவிலின் வடபுறத்தில் அமைக்கப்பட்டிருந்த செக்கில் சுண்ணாம்புக்கல் மற்றும் மண்ணைக் குழைத்து உருவாக்கிய கலவையைக் கொண்டுதான் ஆலயம் கம்பீரமாக உயர்ந்து நின்று, இம் முன்னோர்களின் உழைப்பை இன்றும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றது. அந்த செக்கானது இன்றும் ஆலய வளாகத்தில் இருப்பதை நாம் காணலாம்.
மேலும் அன்றைய காலக்கட்டத்தில் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. லூர்து அடிகளாரின் சீரிய முயற்சியால், ஆலயத்தின் வெளிப்புற மற்றும் உட்புறச் சுவர்கள் 1954க்குள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு தந்தை அவர்கள் உடல்நலம் குன்றியதால் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டன. ஆலயத்தின் மேற்கூரைக்கும், பலிபீடத்திற்கும் மேல் அமைந்துள்ள குவிந்த கூரை (Dome) வடிவிலான கான்கிரீட் அமைக்க வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இப்பகுதிகளில் நிலவிய பஞ்சம் மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.
மீண்டும் சுமார் 10 ஆண்டுகள் கழித்து, விரைவில் ஆலயப் பணிகளை முடித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், கான்கிரீட்டுக்குப் பதிலாக ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போடப்பட்டு ஆலயப்பணிகள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டன.
புதிய ஆலயமானது 1967 நவம்பர் 21 ஆம் தேதியன்று முன்னோர்களின் சுமார் 54 ஆண்டுகால கடின உழைப்பாலும், முன்னாள் பங்குத்தந்தையர்களின் ஜெபங்கள் மற்றும் ஒத்துழைப்பாலும் அருட்தந்தை. G. பிரான்சிஸ் அடிகளாரின் முன்னிலையில், தூத்துக்குடி ஆயர் மேதகு தாமஸ் பர்னாந்து அவர்களின் திருக்கரங்களினால் அர்ச்சிக்கப்பட்டது. இதுவே தற்போது "புதுமைகளின் நாயகியாம்" பரிசுத்த பரலோக மாதா கம்பீரமாக வீற்றிருக்கும், நாம் வழிபட்டு வரும் புதிய ஆலயம் ஆகும்.
பங்குத்தந்தை அருட்தந்தை. குரூஸ்மரியான் அடிகளாரின் முயற்சியினால் பெரிய தேர் செய்ய முடிவெடுத்து 1978, ஆகஸ்ட் 15-ல் புதிய தேரானது அர்ச்சிக்கப்பட்டது. அதன்பின்புதான் ஒரே தேரின் நடுவில் பாதுகாவலியும், இருபுறங்களிலும் புனித சூசையப்பர், புனித அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டு மக்கள் வடம் பிடித்து இழுக்கும் தேர்ப்பவனி உதயமானது.
ஆலயத்தின் நூற்றாண்டை (1880-1980) பின்வரும் சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், கோவிலுக்கு மகிமை ஏற்படுத்தும் வகையிலும் பழைய ஆலயம் அமைந்திருந்த இடத்தில் ஓர் கெபியைக்கட்ட வேண்டும் என, அப்போதைய பங்குத்தந்தை பங்கிராஸ் M. ராஜா அடிகளார் முடிவெடுத்தார். அதனடிப்படையில் மக்களின் பேராதரவுடன் பழைய ஆலயத்தின் நினைவாக நூற்றாண்டு கெபி கட்டப்பட்டது. அக்கெபி இன்றும் நூற்றாண்டு கெபி என்றே அழைக்கப்படுகிறது. இந்நூற்றாண்டு கெபியானது 11.08.1983ல் அன்றைய பங்குத்தந்தை பங்கிராஸ் M. ராஜா அடிகளாரின் திருக்கரங்களால் அர்ச்சிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு புதிய ஆலயத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிறைவையொட்டி மாதா பீடம் மற்றும் சூசையப்பர் பீடம் புதுப்பிக்கப்பட்டது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டுக் கொண்டிருந்த மரியன்னை நடுநிலைப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட அப்போதைய பங்குத்தந்தை எட்வர்ட் ஜே. அடிகளாரால் பங்குத்தந்தை இல்லத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, 17.06.1995 இல் பள்ளியானது கட்டி முடிக்கப்பட்டு, தூத்துக்குடி மறை மாவட்டத்தின் அப்போதைய ஆயர் பதிலாள் மேன்மைமிகு. பீற்றர் ஆண்டகை தலைமையில் திறக்கப்பட்டு கல்வி பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது. உயர்நிலைப்பள்ளிக்கு நிகரான கட்டிட தோற்றத்துடன் இன்றளவும் கல்விப்பணியை தொடர்ந்து ஆற்றி வருகிறது.
ஆர்.சி. காம்பவுண்டின் மையப்பகுதியில், கொடி மரத்தின் எதிரில் தேர்ப்பறையின் அருகில் மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டு, 14.08.1999ல் அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. M. தாமஸ் அடிகளாரால் மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதே ஆண்டில் புனித மிக்கேல் அதிதூதர் நாளான செப்டம்பர் 29ல் மக்களுக்கு கெபியில் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதுமுதல் தற்பொழுதுவரை ஒவ்வொரு ஆண்டும் அசன வைபவமாக தொடந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பங்கு ஆன்மீகத்திலும், வழிபாடுகளிலும் வளர்ச்சி அடைந்து தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஓர் சிறப்பிடத்தை பெற்றது. இதன் விளைவாகவும் அப்போதைய பங்குதந்தை அருட்தந்தை. ஜாக்சன் அடிகளாரின் சீரிய முயற்சியாலும் பிரகாசபுரம் ஊருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் ஒரு மாபெரும் கல்யாண மண்டபம் கட்ட அனுமதி கிடைத்தது. St. மேரீஸ் மஹால் என்ற பெயரில் அம்மண்டபம் அஸ்திவாரத்துடன் ஆரம்பமானது. வேகமாக வளர்ந்து வந்த இம்மண்டப உருவாக்கம் சில பல காரணங்களினால் தொய்வு அடைந்தது.
இந்நிலையில் அருட்திரு. ஜாக்சன் அடிகளாரின் கவனம் புதிய ஆலயம் பக்கம் திரும்பியது. ஆம்! ஆலயத்தின் தரைப்பகுதி முழுவதும் மார்பிள் கற்களால் புதுப்பிக்கப்பட்டது. இது ஒருபுறம் நடக்க மறுபுறம் பலிபீடமும், திருச்சிலுவையைத் தாங்கியிருக்கும் பகுதியும், ஆலய மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு அடைந்தன. அது மட்டுமல்ல ஆலயத்தின் முன்புறம் பிரதான சாலையின் ஓரத்தில் ஆரோக்கிய அன்னைக்கு அழகியதோர் கெபி எழுப்பப்பட்டது. இவையனைத்தும் 14.08.2004 அன்று அர்ச்சிக்கப்பட்டன.
பங்குத்தந்தை ஜாக்சன் அடிகளார் முயற்சியில் இறைமக்கள் சார்பாக புதியதொரு கம்பீரமான இரும்பாலான நிலைத்த கொடிமரம் உருவாக்கப்பட்டது. இன்றுவரை அம்மரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றது. இக்கொடிமரத்தில் 06.08.2006 கொடியேற்றப்பட்டது. முதன்முறையாக அன்றிலிருந்து இன்று வரை அதே மரத்தில்தான் கொடியேற்றப்பட்டு வருகிறது.
ஊருக்கு பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்த்த St. மேரீஸ் மஹால் பணிநடைபெறாமல் நின்றிருந்த சூழலில், அப்போது பங்குத்தந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை A.S. ராஜா அடிகளார் மஹாலில் முதல் மாடி வரை கட்டிடத்தை வெகு சிரமங்களுக்கு மத்தியில் உயர்த்தினார்கள்.
இம்மண்டபம் கட்டுவதற்காக பழைய கோவில் மற்றும் கெபி அகற்றப்பட்டன. பழைய கோவிலுக்கு சொந்தமான மணிக்கூண்டும், பள்ளிக்கட்டிடமும் அகற்றப்பட்டன. பழைய கோவிலின் புராதன சின்னமாக விளங்கிய கெபியையும் அகற்றியிருந்ததால் மீண்டும் அதே இடத்தில் அற்புத கெபி ஒன்று கட்டாயம் எழுப்பியே தீர வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. எனவே மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையிலும், நூற்றாண்டு கெபி கட்டப்பட்டதன் 25வது ஆண்டை நினைவுகூறும் வகையிலும் புதிய நூற்றாண்டு கெபி எழுப்பப்பட்டு,
14.08.2007 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருட்திரு. A.S. ராஜா அடிகளாரால் மந்திரிக்கப்பட்டது.
அருட்தந்தை P. K. அந்தோணி டக்ளஸ் அடிகளாரின் அயராத உழைப்பால் St. மேரீஸ் மஹால் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு நம் பரலோகத்தாயின் பெருநாளான 15.08.2013ல் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. இவான் அம்புரோஸ் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அதன்பின்னர் பழைய கோவில் இருந்த இடத்தில் மறைந்த அருட்தந்தையும், மண்ணின் மைந்தருமான அருட்பணி ம. பீற்றர் அடிகளாரால் 04.11.2012 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட புனித அந்தோணியார் கெபி கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தையாக இருந்த அருட்திரு. அருள் பிரபாகர் அடிகளாரால் 21.11.2016ல் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
மேலும் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 50 ஆண்டு நிறைவையும் (1967-2017), ஊரின் தேர் வடிவமைக்கப்பட்ட 40 ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக நம் பரலோகத்தாயின் அற்புதத்தேரின் உயரம் உயர்த்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. அந்தோணி இருதய தோமாஸ் அடிகளாரால் அர்ச்சிக்கப்பட்டு, பவனியாக இழுத்து வரப்பட்டது.
புதிய பங்குத்தந்தையர்களின் இல்லம் கட்டப்பட தீர்மானிக்கப்பட்டு, அப்போதைய பங்குத் தந்தை அருட்தந்தை. அந்தோணி இருதய தோமாஸ் அடிகளாரின் முயற்சியினால், 17.06.2018 அன்று அருட்தந்தை. பங்கிராஸ் M. ராஜா அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டது. வாயில் நிலையானது மேனாள் ஆயர் மேதகு இவோன் அம்புரோஸ் ஆண்டகையால் 15.08.2018 அன்று அர்ச்சிக்கப்பட்டு, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு அ. ஸ்டீபன் ஆண்டகையால் தூய மரியின் மாசற்ற இருதய விழாவான 29.06.2019 அன்று ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
அருட்திரு. தா. சலேட் ஜெரால்டு அவர்களால் ஜெபமாலை தோட்டம் 02.10.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 15.08.2024 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 முதல் 14 -ம் தேதி வரை நடைபெறுகின்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது சிறப்பாகும். ஜாதி மத பாகுபாடின்றி இந்து சகோதரர்கள், முஸ்லீம் சகோதரர்கள், கிறிஸ்தவ பிறசபை சகோதரர்கள் அனைவரும் அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்வது இதன் சிறப்பாகும்.
சமபந்தி அசனம் :
பிரகாசபுரம் பங்கின் சார்பாக வருடத்திற்கு மூன்று முறை சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
1. மே முதல் சனி
2. செப்டம்பர் 29
3. ஆகஸ்ட் 16.
பங்கின் கெபிகள் :
1. பரலோக மாதா அற்புத கெபி -திருவிழா ஆகஸ்ட் 16 ம் தேதி.
2. புனித மிக்கேல் அதிதூதர் கெபி -திருவிழா செப்டம்பர் 20 முதல் 29 வரை.
3. புனித அந்தோனியார் கெபி
4. புனித ஆரோக்கிய அன்னை கெபி -செப்டம்பர் 8 -ம் தேதி.
பங்கின் நிறுவனங்கள் :
St. Mary Midddle School, Pragasapuram
St. Mary's Mahal, Pragasapuram
Servite Convent.
St. Joseph Primary School, Kandasamipuram
R.C. Primary School, Thoppur
R.C. Primary School, Udayarkulam.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
தனிப்பங்காக உருவெடுப்பதற்கு முன்:
1. Fr. டையோனிஷியஸ் குஷன் (1880-1887)
தனிப்பங்காக உருவெடுத்த பின்:
2. Fr. நிக்கோலாஸ் (1887-முதல்..)
குருக்கள் பற்றாக்குறையினால் பிரகாசபுரம் பங்கு தளத்தில் தங்கி பணியாற்றவில்லை.
அவ்வப்போது வந்து பங்குப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குருக்கள் பங்கு தளத்தில் தங்கி பணியாற்ற தொடங்கியது முதல்:
3. Fr. E. மாஸ் (1909-1911)
4. Fr. T. மிக்கேல் (1911-1919)
5. Fr. சிக்காது (1919-1921)
6. Fr. A. அடைக்கலம் (1921-1931)
7. Fr. M. சந்தன மரியான் (1931-1940)
8. Fr. சேவியர் மெல் (1940-1945)
9. Fr. மத்தேயு பர்னாந்து (1945-1947)
10. Fr. J. X. பூபால்ராயர் (1947-19-49)
11. Fr. லூர்து மரியநாதர் (1949-1954)
12. Fr. F. X. சிங்கராயர் (1954-1955)
13. Fr. ரொசாரியோ கொரேரா (1956-1959)
14. Fr. டிவோட்டா கபிரியேல் (1959-1961)
15. Fr. D. பங்ராஸ் (1961-1965)
16. Fr. D. J. C. அமிர்தம் (1965-1966)
17. Fr. G. பிரான்சிஸ் (1966-1972)
18. Fr. குரூஸ் மரியான் (1972-1978)
19. Fr. பங்கிராஸ் M. ராஜா (1978-1982)
20. Fr. ஜோசப் ரத்தினராஜ் (1982-1984)
21. Fr. ஜெரோசின் A. காற்றார் (1984-1985)
22. Fr. I. ஜோசப் லடிஸ்லாஸ் (1985-1986)
23. Fr. ஜோசப் அமல்ராஜ் (1986-1990)
24. Fr. J. எட்வர்ட் (1990-1995)
25. Fr. M. ஜெயநாதன் (1995-1997)
26. Fr. M. தாமஸ் (1997-2002)
27. Fr. ஜாக்சன் M. அருள் (2002-2007)
28. Fr. A. சூசை ராஜா (2007-2012)
29. Fr. P. K. அந்தோணி டக்ளஸ் (2012-2016)
30. Fr. S. அருள் பிரபாகர் (2016-2017)
31. Fr. A. அந்தோணி இருதய தோமாஸ் (2017-2022)
32. Fr. T. சலேட் ஜெரால்ட் (2022-2025)
33. Fr. S. ஆரோக்கிய அமல்ராஜ் (2025…)
மன்றாடுங்கள் மகிழ்வடைவீர்! நம்புங்கள் நலம் பெறுவீர்…
வரலாறு : ஆலய வரலாற்று மலரிலிருந்து எடுக்கப் பட்டது.









