508 புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம், கேசவன்புத்தன்துறை


புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம்

இடம் : கேசவன்புத்தன்துறை, 629501

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : முட்டம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. C. ஜெகன்

Email : kesavanputhenthuraiparish@gmail.com

Ph: 04652 251049

குடும்பங்கள் : 547
அன்பியங்கள் : 14

திருவழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 06.30 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி காலை 06.00 மணிக்கு திருப்பலி.

புதன் மாலை 06.00 மணிக்கு சகாயமாதா நவநாள் திருப்பலி

சனி காலை 06.00 மணிக்கு சிறார் திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு இறைஇரக்க செபமாலை, திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆசீர்

இரண்டாம் வெள்ளி காலை திருப்பலி நிறைவு பெற்றதும் நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும் நற்கருணை இல்லங்களில் வழங்கப்படும்.

இரண்டாம் சனி : மாலை 06.00 மணிக்கு செபமாலை, லூர்து மாதா நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர் (லூர்து மாதா கெபியில்)

நினைவுத் திருப்பலி : திங்கள், செவ்வாய், வியாழன் & வெள்ளி காலை 11.00 மணி மற்றும் மாலை 04.00 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மாதாவின் விண்ணேற்பு பெருவிழாவுக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 11 நாட்கள். இறுதி நாள் மேதகு ஆயர் அலாய்சியஸ் மரிய பென்சிகர் விழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்பணியாளர்கள்:
1. அருட்பணி. சேவியர் ராஜா, Kottar diocese
2. அருட்பணி. ஆஷ்லி வினோத், SAC
3. அருட்பணி. ரவீண்டன், MMI
4. அருட்பணி. ஜெகன், MMI

அருட்சகோதரர்கள்:
1. அருட்சகோதரர். சகாய மகேஷ், (இறையியல், கிளரீசியன் சபை)
2. அருட்சகோதரர். ஆன்றோ ஜெராபின் (இறையியல், கோட்டார் மறைமாவட்டம்)
3. அருட்சகோதரர். சபீன் (இறையியல், போபால் மறைமாவட்டம்)

அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. மேரி கிறிஸ்டி (ஜெபமாலை கன்னியர்)
2. அருட்சகோதரி. ஆரோக்கிய டெற்சிற்றா (இதோ ஆண்டவரின் அடிமை)
3. அருட்சகோதரி. நிஷா (St. Anne's, Bangalore)
4. அருட்சகோதரி. ஜெமிலா (St. Anne's, Bangalore)
5. அருட்சகோதரி. புஷ்பா பெர்லின், (St. Anne's, Bangalore)

வழித்தடம் :
நாகர்கோவில்- கடற்கரைசாலை- சூரன்குடி -சுண்டப்பற்றிவிளை -புதூர் -கேசவன்புத்தன்துறை.

Bus route: 38, 38C, 38M,38N, 302 Neerodi Colony

Location map : Immaculate Heart of Mary https://maps.google.com/?cid=14734430694642306213

வரலாறு :

குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை ஊர் தான் கேசவன்புத்தன்துறை. இவ்வூரில் உள்ள, நாடிவந்தோரை நலன்களால் நிரப்பும், மரியாயின் மாசற்ற திருஇருதய அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்...

முற்காலத்தில் பஞ்சத்தில் வாடிய ஒரு கூட்டம் மக்கள் இங்கு வந்து தங்கி தங்களது பஞ்சம் போக்கிக் கொண்டார்கள் என்றும், அதனால் இவ்வூருக்கு 'பஞ்சம் தவிர்த்த நாடு' என்று ஒரு சிறப்பு பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அப்பெயர் மருவி பஞ்சங்காடு என்று ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊரை ஸ்ரீபத்மநாபன் புத்தன்துறை என்ற மன்னன் ஆண்டு வந்ததாகவும், அவரது மகன் கேசவன் தாம் விரும்பிய பெண்ணை மணந்து கொள்ள தடைகூறியதாலும், அதனால் அரண்மனையைத் துறந்து இவ்வூரில் வந்து வாழ்ந்துள்ளார் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசர் கேசவன். பின்னர் மகனைத் தேடியலைந்த அரசன், அவனைக்கண்டு சமாதானம் செய்து, அவனது விருப்பத்தையும் நிறைவேற்றி இவ்வூருக்கு கேசவன் புத்தன்துறை என்று பெயரிட்டு அழைத்ததாகவும், முன்னோர்கள் கூறியுள்ளனர்.

கோட்டார் மறைமாவட்டம், கொல்லம் மறைமாவட்டத்தோடு இணைந்திருந்த போது இவ்வூர் புத்தன்துறை பங்குடன் இணைந்திருந்தது.

பெருந்நோய் தீர்த்த பென்சிகர் ஆண்டகை:

கி.பி முதலாம் நூற்றாண்டில் திருத்தூதர் புனித தோமையார் வழியாக இந்தியாவிலும், தமிழகத்திலும் கிறிஸ்தவம் பரவியது. அவரது காலத்திற்குப் பின்னர் சுமார் 15 நூற்றாண்டுகள் இந்தியாவில் திருச்சபையின் வளர்ச்சி தடைபட்டு இருண்ட காலமாகவே இருந்தது. இந்த இருள் புனித பிரான்சிஸ் சவேரியார் வருகைக்குப் பின்னர் வெளிச்சம் பரவி விசுவாசப் பயிர் நன்கு உரமிடப்பட்டு, நீருற்றி வளர்க்கப் பட்டது.

ஆகவே புனித சவேரியாரைத் தொடர்ந்து ஐரோப்பாவிலிருந்து பல குருக்களும், கன்னியர்களும் வேதபோதகத்திற்காக இந்தியா வந்து, நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்தியதோடு சமூகப் பணிகளையும் தன்னலங்கருதாது செய்தனர். இவ்வாறு அரும் பணியாற்றியவர்களில் கேசவன்புத்தன்துறைக்கு முதல்வராக விளங்குபவர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை ஆவார்.

1864 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் கவர்னர் பென்சிகர்- ஆன் மரியா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த மேதகு பென்சிகர் ஆண்டகை OCD அவர்கள், இளமையிலேயே இறைவன்பால் நாட்டம் கொண்டு துறவறம் புகுந்தார். 1888 ஆம் ஆண்டில் குருவாக திருநிலைப் படுத்தப் பட்டார்.

வேதபோதகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராக விளங்கிய காரணத்தாலும், நல் போதகர்கள் இந்தியாவின் தென்பகுதி திருச்சபைக்கு தேவைப்பட்ட காரணத்தாலும் புனித பாப்பரசர் 13 ஆம் லியோ அவர்கள், மேதகு பென்சிகர் ஆண்டகையை 1890 ஆம் ஆண்டில் இந்தியாவின் கொல்லம் மறைமாவட்டத்திற்கு குருமடத்தில் பணியாற்ற அனுப்பி வைத்தார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை, கொல்லம் மறைமாவட்ட ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டார்.

இன்றைய கோட்டார் மறைமாவட்டம் அப்போது பிரிக்கப்படாமல் கொல்லம் மறைமாவட்டத்துடன் இணைந்திருந்தது. குமரி மாவட்டமும் கேரளா -வோடு இணைந்திருந்தது.

இந்த காலகட்டத்தில் கேசவன் புத்தன்துறையும் தனிப்பங்கு நிலைபெறாது பக்கத்து பங்குடனே இருந்து வந்தது. கேசவன்புத்தன்துறை, புத்தன்துறை, பொழிக்கரை ஆகிய மூன்று ஊர்களும் தங்களை பிரித்துப் பார்க்காது ஒரே ஊர் என்ற நினைவோடு, தங்களுக்கென்று 1910 ஆம் ஆண்டில் ஜெபமாலை அன்னை ஆலயம் ஒன்றை கேமந்துறை என்ற பகுதியில் கட்டியெழுப்பினர். கோட்டார் மறைமாவட்டத்தில் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகையால் அர்ச்சித்து, திருநிலைப்படுத்தப் பட்ட முதல் ஆலயம் இதுவே.

ஆகவே, ஆயர் அவர்களுக்கு எப்போதும் இப்பங்கின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்து வந்தது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொல்லத்திலிருந்து தரை வழியாகவும், கடல்வழியாகவும் பங்கு விசாரணைக்காக ஆயர் அவர்கள் கோட்டார் பகுதிக்கு வருவது வழக்கம். தரை வழியாக வரும் போது சுண்டப்பற்றிவிளை வரை குதிரை வண்டியிலும், அதன் பிறகு இடுவை வழியாக கால்நடையாகவும் வந்து, புத்தன்துறை மேடைக்கு (குருக்கள் இல்லம்) செல்வார். அவர் இங்கு வரும் போதும் செல்லும் போதும் இருமருங்கிலும் மக்கள் வெள்ளம் சாதி சமய பேதமின்றி நின்று கொண்டு இருகரம் கூப்பியபடி முழந்தாள்படியிட்டு நிற்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒருவரைக் கூட விடாது அன்போடு இதமாக தட்டிச் செல்வார் ஆண்டகை.

ஒருமுறை ஆயர் அவர்கள் பங்கு விசாரணைக்காக வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெபமாலை மாதா ஆலயத்தின் காணிக்கை பணம் ரூ. 52,000 திருடப்பட, அப்பாவி மக்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இந்நேரத்தில் ஆயர் அவர்கள் பங்கு விசாரணைக்காக வந்த போது, நயம்பட விசாரித்த போதும் கயவர்கள் உண்மையை ஒத்துக் கொள்ளாததால், மனவாட்டத்துடன் தமது இல்லம் நோக்கி சென்றார்.

ஆயரின் மனவாட்டத்திற்கு காரணமானவர்கள் வாழ்ந்த பகுதியில் பயங்கர நோய் (வீக்கம்) வந்து பல உயிர்களை பலிவாங்கியது. நாள்தோறும் பலர் மடிந்தனர். மடிந்தவர்களை புதைத்து விட்டு வருவதற்குள்ளாகவே அடுத்த உயிர்கள் மடிந்தன. எங்கும் அழுகுரல்.. மரணபயம்..

செய்தி கேட்டு மனம்பதறிய ஆயர். அலோசியஸ் மரிய பென்சிகர் ஆண்டகை, உடனே புறப்பட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு புத்தன்துறை மேடைக்கு (குருக்கள் இல்லம்) வந்தார். வந்தவர் ஒரு மணி நேரம் குப்புற படுத்து இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார். நள்ளிரவிலேயே தீர்த்த கலசத்தை கையிலெடுத்து மூன்று ஊர்களையும் (புத்தன்துறை, கேசவன்புத்தன்துறை, பொழிக்கரை) சுற்றி வந்து மூலை முடுக்கெல்லாம் தீர்த்தம் தெளித்து, இறுதியாக கல்லறைத் தோட்டம் வந்து இரு கைகளையும் விரித்து கண்ணீரோடு இறைவனிடம் ஜெபித்தார். கைகள் வலிக்கும் வரைக்கும் ஜெபித்தார். ஜெபித்து விட்டு வந்த சுவடு தெரியாமல் குதிரை மீதேறி கொல்லம் சென்றார்.

"மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்." -திருப்பாடல்கள் 23:4

ஆச்சரியம்...! கல்லறைக்கு செல்ல வேண்டியவர்கள் கூட நலம் பெற்று எழுந்து நடமாடினர். நோயின் தாக்கத்தினால் முடங்கியவர்கள் எல்லோரும் ஆனந்த சுகம் பெற்றனர்... இங்கு நோய் இருந்த சுவடே தெரியாமற் போனது... ஊரே மகிழ்ச்சியடைந்து ஆயரின் அன்பையும் செயலையும் வாழ்த்தியது..

இந்தப் புதுமையை நினைவுகூரும் வகையில் மூன்று ஊர்களும் பென்சிகர் ஆண்டகை பூசை நினைவு திருப்பலியை "ஊர்மெனக்கெடு" (அனைவரும் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுத்து பங்கேற்பது) ஆடம்பர முறையில் ஒப்புக் கொடுப்பார்கள். (போற்றுதலுக்குரிய ஆயர் 17.08.1942 ஆம் நாளில் இறைவனடி சேர்ந்தார்.)

இந்தத் திருப்பலியில் வைத்து மந்திரிக்கப்பட்ட ரோஜா மலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும். அதனை நோய்வாய்ப்படும் போதோ, மீன்பாடுகள் குறையும் போதும் மக்கள் இறைபக்தியோடு தொட்டு இறைவனிடம் ஜெபிக்க வேண்டுதல்கள் நிறைவேறும். இந்த புண்ணியவான் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இம் மக்கள் என்றும் இறைவனிடம் ஜெபித்து வருகின்றனர்....

மரியாயின் மாசற்ற இருதய அன்னை ஆலயத் தோற்றம் :

புனித பேதுரு குருசடி ஒன்று கேசவன்புத்தன்துறையில் இருந்ததால் இம் மக்கள் இங்கு வந்து ஜெபித்து வந்தனர். ஊரில் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பெரிதான ஆலயத் தேவை உணரப்பட்டது. ஆகவே இந்த குருசடியை ஆலயமாக மாற்றலாம் என்றும், நாமோ ஏழை நம்மால் புதிய ஆலயம் கட்ட தேவையான நிதியை திரட்ட இயலுமா? என்று பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதும், மக்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியுடன், ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் மரியாயின் மாசற்ற திருஇருதய அன்னை ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

கடல் அலை பகுதியில் இருந்து சுமார் 500 அடி தொலைவில், நெடுஞ்சாலைக்கு வடக்கில், தென்னந்தோப்புகளின் நடுவில் ஆலயம் கட்ட இடம் தீர்மானிக்கப் பட்டது. 01.11.1954 அன்று அப்போதைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டு, எத்தனையோ சோதனைகள், இடர்பாடுகள், நிதிநெருக்கடி ஏற்பட்ட போதும், ஏழை எளியவர்களான இம் மக்கள் தங்களது உணவில் பாதியை குறைக்க முன் வந்தார்கள். தங்களது வருவாயில் ஒருபகுதியை ஆலயத்திற்கு கொடுத்தார்கள். இவ்வாறு மக்களின் கடின உழைப்பால் 9 ஆண்டுகளாக ஆலயம் கட்டப்பட்டு, 22.08.1964 அன்று அழகிய அன்னையின் ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. மக்கள் ஆனந்தக் கண்ணீருடன் இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

இந்த ஆலய கட்டுமானப் பணியின் போதும் அதனைத் தொடர்ந்த காலகட்டத்திலும் கணக்கப்பிள்ளை அவர்கள் செய்த பணிகள் சிறப்பானதாகும். மேலும் அவரது நிலத்தையே ஆலய கல்லறைத் தோட்டத்திற்கு கொடுத்தார்கள்.

கேசவன்புத்தன்துறை 29.05.1970 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி. மார்ட்டின் S. அலங்காரம் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

15.08.1972 முதல் 14.081973 வரை இந்தியாவின் சுதந்திர வெள்ளிவிழா ஆண்டாக நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நினைவாக ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு ஊர் தேர்ந்தெடுக்கப்பட்டு "சீர்ஊர் " ஆக தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் ஆணை பிறப்பித்ததன் காரணமாக, இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் கேசவன்புத்தன்துறை தேர்வு செய்யப்பட்டு, புனித மரியன்னை பள்ளிக்கூடத்தின் அருகே இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பொறிக்கப்பட்ட கற்றூண் வைக்கப் பட்டுள்ளது பெருமைக்குரியது ஆகும்.

ஆலயமணி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இதற்கு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. சிறில் பெர்னாண்டோ அவர்களால் ஆவே மரியா என பெயர் சூட்டப்பட்டது.

அருட்பணி. பிரான்சிஸ் போர்ஜியா பணிக்காலத்தில் ஆலய முன்புற சுவரில் நினைவுக்கல் பதிக்கப் பட்டது. கலையரங்கம் கட்டப்பட்டது. மாதா பவனி வரும் உருள் தேர் உருவாக்கப் பட்டது. 18.10.1989 அன்று ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

அருட்பணி. ஜான் பெல்லார்மின் பணிக்காலத்தில் வங்கிக்கட்டிடம், ஆயர் பென்சிகர் சமூகநலக்கூடம் ஆகியன கட்டப்பட்டன. கருங்கல் கொடிமரம் வைக்கப்பட்டது.

அருட்பணி. J. செல்வராஜ் பணிக்காலல்தில் பழுதுபட்ட ஆலய கூரை மாற்றி அமைக்கப் பட்டது. ஆலய சிமென்ட் தரையானது மார்பிள் தளமாக மாற்றப்பட்டது. மேலும் ஆலயபீடம் அழகுற புதுப்பிக்கப் பட்டது.

அருட்பணி. ஸ்டான்லி சகாயம் அவர்களின் முயற்சியால் நவீன வசதிகளுடன் பங்குப் பணியாளர் இல்லம் புதுப்பிக்கப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. பென்னி அவர்கள் ஆலய பொன்விழாவை சிறப்புற நடத்தினார்.

அருட்பணி. சேம் மேத்யூ அவர்களின் பணிக்காலத்தில் லூர்து அன்னை கெபி கட்டப் பட்டது. திருச்சிலுவைநாதர் குருசடி புதுப்பிக்கப் பட்டது.

06.05.2018 அன்று பங்கின் பொறுப்பேற்ற அருட்பணி. C. ஜெகன் அவர்கள், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தை பழுது பார்க்கும் வேலையை செய்தார்கள். தொடர்ந்து பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக ஆன்மீகப் பாதையில் வழி நடத்தி வருகிறார்கள்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப்பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளம் கிறிஸ்தவ மாணவர்கள் இயக்கம் (YCS)
4. மறைக்கல்வி
5. நல்ல சமாரியன் இயக்கம்
6. திருஇருதய சபை
7. கார்மல் மாதா சபை
8. நற்செய்தி பணிக்குழு
9. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆண்கள் & பெண்கள்)
10. சிறுவழி இயக்கம்
11. பாலர் சபை
12. புனித டோமினிக் சாவியோ பீடச்சிறார்
13. இளைஞர் இயக்கம் (ஆண்கள் & பெண்கள்)
14.CPD (ஆண்கள் & பெண்கள்)
15. கோல்பிங் இயக்கம்
16. மரியாயின் சேனை
17. அன்பிய ஒருங்கிணையம்
18. திருத்தூது கழக ஒருங்கிணையம்
19. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் (CLC)
20. பாடகற்குழு.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. மார்ட்டின் S. அலங்காரம் (late) (1970-1972)
2. அருட்பணி. சிறில் S. பெர்னாண்டோ (late) (1972-1980)
3. அருட்பணி. P. ஜோசபாத் மரியா (late) (1980-1985)
4. அருட்பணி. J. R. பெனடிக்ட் அலெக்சாண்டர் (late) (1985)
5. அருட்பணி. R. பெல்லார்மின் ஜியோ (late) (1985-1986)
6. அருட்பணி. ஜோசப் பிதேலிஸ் (late) (1986-1988)
7. அருட்பணி. பிரான்சிஸ் M. போர்ஜியா (1988-1993)
8. அருட்பணி. A. ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் (1993-1994)
9. அருட்பணி. M. தேவசகாயம் (1994-1998)
10. அருட்பணி. R. ஆன்றனி (1998-2000)
11. அருட்பணி. G. மெல்கியாஸ் (late) (2000-2002)
12. அருட்பணி. J. ஜான் பெல்லார்மின் (2002-2004)
13. அருட்பணி. G. கிளாட்ஸன் (2004-2005)
14. அருட்பணி. J. G. ஜேசுதாஸ் (late) (2005-2006)
15. அருட்பணி. J. செல்வராஜ் (2006-2012)
16. அருட்பணி. T. ஸ்டான்லி சகாயம் (2012-2014)
17. அருட்பணி. L. பென்னி (2014-2015)
18. அருட்பணி. சேம் மேத்யூ (2015-2018)
19. அருட்பணி. C. ஜெகன் (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஜெகன் அவர்கள் மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் பங்கின் இளையோர்.