314 தூய சவேரியார் முதன்மை ஆலயம், ஆலஞ்சி

      

அருள் தரும் தூய சவேரியார் முதன்மை ஆலயம்.

இடம் : ஆலஞ்சி

மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டார்
மறைவட்டம்: ஆலஞ்சி

நிலை: பங்குத்தளம், வட்டார முதன்மை ஆலயம்

பங்குத்தந்தை: அருட்பணி. மரிய சூசை வின்சென்ட்

ஆலய இணையதளம்: www.alanchychurch.com

ஆலய முகநூல் பக்கம்: Forane Church of St. Francis Xavier, Alanchy

குடும்பங்கள்: 1800
அன்பியங்கள் : 31

திருப்பலி.
ஞாயிறு : காலை 06:30 மணி செபமாலை, திருப்பலி மற்றும் மாலை 04:30 மணி - திருப்பலி.
திங்கள், செவ்வாய், வியாழன், சனி : காலை 06:30 மணி - செபமாலை, திருப்பலி

புதன் மாலை: 5:00 மணி - செபமாலை, புனிதரின் நவநாள் திருப்பலி

வெள்ளி: மாலை 5:00 மணி - செபமாலை, திருப்பலி

திருவிழா : ஒவ்வொரு வருடமும் திருநீற்று புதனுக்கு முன்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை முடியும் வண்ணம் 10 நாட்கள் நடைபெறும்.

தனிச்சிறப்பு : புனித சவேரியாரின் கால்தடம் பட்ட மண்.

முதல் ஆலயம்: கி.பி. 1840
தனி பங்காக அறிவிக்கப்பட்ட நாள்: 29 மே 1961
முதல் பங்குத்தந்தை. அருட்பணி. தருமநாதர்

மண்ணின் மைந்தர்கள்:
பேரருட்பணி: குரூஸ் M. ஏரோணிமுஸ்
பேரருட்பணி: S. சாலமன்
அருட்பணி: S. மரிய அருள்
அருட்பணி: S. காட்வின் செல்வ ஜஸ்டஸ்
அருட்பணி: M. சார்லஸ் பொரோமியோ

ஆலய வரலாறு:

தொடக்க காலம்:
முட்களும், புதர்களும், காடுகளும், செம்மண் மேடுகளும், உயர்ந்த பனை மரங்களும், சிறிய நீர்நிலைகளும், குறைந்த வளங்களும், மனித வாழ்விற்கு ஏற்ற வசதிகள் முற்றிலும் அற்ற நிலையில் அமைந்திருந்தது அன்றைய ஆலஞ்சி. ஆயினும் இறைவன் அருளிய கடல் காற்று தென்றலாக மாறி ஆண்டு முழுவதும் ஆலஞ்சியை வலம் வந்து கொண்டிருந்தது.

இம்மண்ணின் பூர்வக்குடிகள் என்று எடுத்துக் கொண்டால் ஆலஞ்சி தறவாட்டு நாயர்மார்களையும், அவர்களின் தயவில் வாழ்ந்து வந்த ஏதோ ஒருசில நாடார் குல மக்களையும் குறிப்பிடலாம். வறண்டு கிடந்த பூமியில் தாழ்வான வளமான பகுதிகளை எல்லாம் நாயர்மார்கள் தம்வசம் வைத்திருக்க, வறுமையையும், கடின உழைப்பையும் தம் கைவசம் கொண்டு நாடார் இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.

அக்காலகட்டத்தில் பனை ஏறுவதும், பயிரிடுவதும் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தது.

இந்த நாடார் இன மக்கள் பொத்தியான் விளை, அடப்பூர், கூடல் விளை, ஏழுவிளைபற்று போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர். நாயர் இன மக்களிடம் அடிமை கொண்ட நிலை ஒருபுறம்; வறுமையின் கொடுமை மறுபுறம்; நோய்கள் மற்றும் பேய்களின் தொல்லை ஒருபுறம் என சிக்கி திண்டாடி இவற்றிலிருந்து விடுதலை பெறும் நாள் எந்நாளோ! என ஆவலோடு காத்துக் கிடந்தனர்.

மக்களின் மனங்களில் தோன்றும் ஏக்கங்களை நிறைவேற்றுபவர் அல்லவா இறைவன்? இம்மக்களுக்காக போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து தூய சவேரியார் என்னும் இளந்துறவியை அனுப்பி வைத்தார். கோவா பகுதியில் கி.பி. 1541 ஆம் ஆண்டு வந்திறங்கிய தூய சவேரியார் அப்பகுதியில் தம் இறைபணியைச் செய்துவிட்டு தூத்துக்குடி, மணப்பாடு, வழியாக குமரி கடற்கரையோரங்களில் தம் இறை அறுவடைக்காக வந்தார்.

குமரி கடற்கரைப் பகுதிகளான குளச்சல், குறும்பனை, மிடாலம் போன்ற பகுதிகளில் இறைப்பணியை ஆற்றிவிட்டு ஒய்வு எடுப்பதற்காக அன்று தூய சவேரியார் தேர்ந்தெடுத்த ஊர் ஆலஞ்சி.

காரணம் அக்காலகட்டத்தில் ஆள் நடமாட்டமற்ற அமைதியான இடமாக இந்தப் பகுதி இருந்தது என முன்னோர்கள் உரைப்பதுண்டு. இன்றும் ஊர் பஜனைப் பாடல்களில் சவேரியார் ? இளைப்பாறிய ஊர் என்று இம்மக்கள் பாடி மகிழ்வது இதற்கு ஆதாரமாகும்.

ஆலஞ்சி பகுதியில் தூய சவேரியார் ஒய்வு எடுக்க தேர்ந்து கொண்ட இடம் ஐந்து ஆலமரங்களால் சூழப்பட்ட ஒரு ஆலமரச்சோலை. இனிய தென்றல் சூழும் அந்தச் சோலையில் சவேரியார் ஒய்வு எடுத்ததால் அந்த நிகழ்ச்சியின் நினைவாக இவ்வூர் ஆலஞ்சி (ஆல் + ஐந்து, ஐந்து என்பது மருவி அஞ்சி எனவாயிற்று) என்ற பெயரைப் பெற்றது.

ஓய்வெடுக்க வந்த புனிதர் இங்கே ஓய்வெடுத்துச் செல்லவில்லை. தாழ்நிலைக் கொண்ட நாடார் இன மக்களைக் கண்டார்; மனம் வருந்தினார். மெய் தேவன் யார் எனத் தெரியாமல் மரங்களையும், கெட்ட ஆவிகளையும் வணங்கும் இழிநிலையைக் கண்டு பனை ஏறும் பாமரரை அழைத்தார். இனிய அக்கானியை (அக்கானி என்பது பனைமரத்திலிருந்து பெறப்படும் பதனீர்) இறக்கும் அவர்களுக்கும் இனிய கடவுளின் வழியைக் காண்பித்தார். வழியறியாமல் கலங்கிய இம்மக்கள், புனிதரின் ஞான உபதேசத்தைக் கேட்டு மனம் மாறினர். இறையணியில் சேர்ந்தனர். இந்த கிறிஸ்தவர்களை "போத்தி" என்ற ஒருவரின் மேற்பார்வையில் தூய சவேரியார் ஒப்படைத்தார். "போத்தி" என்றால் பெரியவர் என்பது பொருள். எனவே, அந்த போத்தி என்பவர் தலைமையில் கிறிஸ்தவர்கள் இணைந்து வாழ்ந்த இடம் "பொத்தியான்விளை" என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.

ஞானஸ்நானம் கொடுத்ததோடு, இம்மக்களை அனாதையாக விட்டுச் செல்ல தூய சவேரியாருக்கு மனம் இல்லை. எனவே, ஆலஞ்சி பகுதியில் ஆலயம் ஓன்று அமைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். பனை ஓலையால் ஒரு சிற்றாலயத்தை இப்பகுதியில் அமைத்தார். காலப்போக்கில் இச்சிற்றாலயம் அழியலாம் என நினைத்து அதன் உள்ளே கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சிலுவையை அடையாளத்திற்காக அமைத்துச் சென்றார். ஆனால் இறைப்பணிக்காக சீனா சென்ற நம் புனிதர், சான்சியான் தீவில் இறக்க நேரிட்டதால் அவரால் மேற்கொண்டு இம்மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் பராமரிப்பவர் இன்றி அவர் கட்டிய ஓலை கோயிலும் அழிந்தது. அதனுள்ளே நாட்டப்பட்ட கற்சிலுவையும் நாளடைவில் புதருக்குள் மறைந்து விட்டது.

அந்த காலத்தில் ஆலயம் அமைத்து வழிபடும் அளவிற்கு நாடார் இன மக்கள் வசதியாக இல்லை. மேலும், நாயர்மார்களிடம் அடிமை பட்டும் கிடந்தனர். சவேரியாரின் போதனையைக் கூட இந்தபகுதியில் இருந்த நாயர் இன மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் சவேரியாரால் துவக்கப்பட்ட ஒரு குட்டித் திருச்சபையை இப்பகுதியில் ஆழமாக ஊன்ற முடியாமல் போயிற்று.

மக்களிடையே பெருமளவில் ஊறிப் போயிருந்த சாதி வெறியின் காரணத்தால் கடலோர மக்களோடு சமய ரீதியாக ஆலஞ்சி மக்களை ஒன்று சேர்க்கத் தக்க தலைமைத்துவம் கொண்ட நபர்களோ, திருச்சபையின் தொடர்போ இல்லாத நிலையும் ஒரு காரணமாக இருந்தது என்பதும் உண்மையாகும்.

புனிதர் பாதம் பட்ட மண் புனிதமானது என்ற கருத்திற்கேற்ப, தூய சவேரியாரின் பாதம் பட்ட இந்த மண், திருச்சபையை மீண்டும் வளரச் செய்ய இயற்கையாகவே வழி வகுத்தது. புதருக்குள் மறைந்த கற்சிலுவை உள்ள பகுதியில் புற்பூண்டுகள் மிகுந்து கிடந்தன. இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆடு, மாடுகளின் உணவுக்காகவும், பதனீர் காய்ப்பதற்காகவும் முட்புதர்களை அறுப்பது வழக்கம். அதேப் போன்று ஒரு நபர் புதர்களை அறுக்கும் போது சவேரியார் நாட்டிய கற்சிலுவை அரிவாளில் தட்டுப்பட, உடனே இப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து புதர்களை அகற்றினர். இறையன்பின் ஆற்றலைக் கண்டு தங்களின் விசுவாசத்தினைப் புதுப்பித்துக் கொண்டனர். உடனே அந்த இடத்தில் ஓலைக்கீற்றால் ஆலயம் அமைத்தனர். வடக்கன் குளத்தோடும் பின்பு காரங்காட்டோடும் தங்களை தொடர்பு படுத்திக் கொண்டனர்.

காரங்காட்டுப் பங்கிற்கு உட்பட்ட பகுதியாக ஆலஞ்சி ஆன பின்பு இதன் வளர்ச்சி அதிவேகத்தில் சென்றது. மக்களும் இறைப்பற்றிலும், கிறிஸ்தவ நம்பிக்கையிலும் மிகவும் வளர்ச்சியுற்றனர்.
கி.பி. 1840 ஆம் ஆண்டு காரங்காட்டு பங்குப் பணியாளராக கார்மல் சபையைச் சார்ந்த அருட்தந்தை எலியாஸ் என்பவர் இருந்தார். இவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்தவர். குதிரை மீது ஏறிவந்து ஆலஞ்சி மக்களைச் சந்திப்பார். ஆலஞ்சியில் ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தால் சுமார் 140 ஏக்கருக்கும் அதிகமான சொத்தை ஆலஞ்சி ஊருக்காக வாங்கினார்.

இது ஒரு பெரிய மண்மேடும், சில பெரிய படுகால்களும்(பள்ளங்கள்), மரங்களும், மிகக் குறைவான வளமற்ற செம்மண் நிலமாகும். இந்தச் சொத்து மிகப்பெரிய நிலப்பரப்பை உடையது. இதன் தெற்கு எல்லை குறும்பனைக் கடலும், வடக்கு எல்லை பெரியவிளை, புதுக்காடு வெட்டிவிளை, வண்ணான்விளையும், கிழக்கு எல்லை இன்றைய கருங்கல், குறும்பனை சாலையைத் தொட்டு உள்ள குளச்சல் வருவாய் கிராமத்திற்கான எல்லையும், மேற்கு எல்லை பாரியகல்லுமாக இருந்தன.

இந்த சொத்து ஆலஞ்சி தறவாடு நாயர்குல காரணவரிடம் இருந்து வாங்கப்பட்டது. தறவாடு என்பதற்கு நாயர்மார்களின் பெரிய குடும்பம் என்பது பொருள்.

இந்த நாயர்மார்களின் சொத்து, நாயர் சட்டப்படி குடும்பத்திலுள்ள வாரிசுகள் அனைவருக்கும் உரிமைப்பட்டதாகும். ஆனால், ஒரு நபரிடம் இருந்து மட்டும் இந்த சொத்தை வாங்கியதால், அந்த தறவாட்டிலுள்ள வேறு ஒரு நபர் இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அருட்தந்தை எலியாஸ் சிறிதும் அஞ்சாமல் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று இந்த சொத்து ஆலயம் அமைப்பதற்காகவும், அருட்பணியாளர் இல்லம் கட்டுவதற்காகவும் வாங்கப்பட்டது என்று சாட்சியம் கூறினார். இறுதியில் அவ்வழக்கில் அருட்தந்தை எலியாஸ் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

அருட்தந்தை எலியாஸ் ஆலயத்தை நாயர் தறவாட்டில் இருந்து வாங்கிய சொத்தின் வடமேற்கு மூலைப்பகுதியும், தூய சவேரியார் நட்டுச்சென்ற கற்சிலுவை கண்டெடுக்கப்பட்ட இடமுமான இன்றைய ஆலயத்தின் பீடம் அமைந்துள்ள இந்த தாழ்வான பகுதியில் அமைத்தார்.

முதல் ஆலயம் (கி. பி. 1840):

ஆலஞ்சியின் முதல் ஆலயம் போர்த்துக்கீசியக் கட்டடக் கலைஞர்களால் கட்டப்பட்டது. காரணம், அந்தக் காலத்தில் கட்டட வேலை தெரிந்தவர்கள் ஆலஞ்சியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கிடையாது. இந்த ஆலயம் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டதாக இருந்தது. இது தற்போதைய ஆலய பலிபீடம் அமைந்துள்ள இடத்தில் பள்ளத்தில் அமைந்திருந்தது. ஐந்து படிகளில் இறங்கித் தான் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த ஆலயத்தின் கூரை "கோத்திக்" முறையில் (ஐரோப்பிய கட்டடக்கலை) அழகிய ஆர்ச் வடிவில் அமைந்திருந்தது. ஆலய பீடத்தில் தேவ மாதா, தூய சவேரியார், தூய இஞ்ஞாசியார் என மூன்று சுரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பழைய ஆலயத்தில் இருந்த மாதா சுரூபமும், தூய சவேரியார் சுரூபமும் தற்போது புதிய ஆலயத்தில் உள்ளன. இவை மரத்தால் கலை எழிலுடன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பீடத்தின் பக்கத்தில் உள்ள சுவற்றில் ஆபிரகாம் ஈசாக்கை பலி கொடுக்க முயன்ற காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. மேலும் ஆலயத்தின் உட்பகுதிகளில் சிற்ப வேலைப்பாடுகளும், ஓவியக் காட்சிகளும் மனத்தைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு புதிய ஆலயம் அமைக்கப்பட்ட பின்பு களிமார், கண்டர்விளாகம், பனவிளை, றாவிளை, சலேட் நகர், செந்தறை, எழுவிளைப்பற்று, அடப்பூர், நீர்வக்குழி, கடமாங்குழி, பொத்தியான்விளை, பரவிளை, பெரியவிளை மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள மக்களுக்கு பங்கு அருட்பணியாளர் ஒருவரின் தேவை ஏற்பட்டது. ஆதலால் அருட்பணியாளர் இங்கே தங்கி பணியாற்றுவதற்கு தேவையான அருட்பணியாளர் இல்லம் ஓன்று ஆலயத்தைத் தொட்டு தெற்கே மேடான பகுதியில் கட்டப்பட்டது.

இந்த அருட்பணியாளர் இல்லம் மர வேலைப்பாடுகள் நிறைந்த இரண்டு மாடி கட்டடம் ஆகும். இந்த இல்லத்தில் அருட்பணியாளர்கள் அவ்வப்போது வந்து தங்கி மக்களுக்கு இறைப்பணி ஆற்றினர்.

அந்த காலக்கட்டத்தில் பங்கு விசாரணைக்காக ஆலஞ்சி வந்த கொல்லம் ஆயர் ஆலயத்தை விட அருட்பணியாளர் இல்லம் உயரமாக இருப்பதைக் கண்டு, அந்த அருட்பணியாளர் இல்லத்தில் நுழைய மறுத்துவிட்டார். அதைக் கண்ட ஊர் பெரியவர்கள் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் பெரிய, விரிவான, உயரமான ஆலயத்தை விரைவில் கட்டுவோம் என்று உறுதிமொழி அளித்தனர். அதன் பின்புதான் ஆயர் அருட்பணியாளர் இல்லத்தினுள் அடி எடுத்து வைத்தார்.

அன்று கோட்டாறு மறைமாவட்டம் கொல்லம் மறைமாவட்டத்தின் ஒரு மறைவட்டமாக இருந்தது. கொல்லம் மறைமாவட்டம் அப்போதைய திருத்தந்தையின் ஆணைப்படி கார்மல் துறவறச் சபையினரின் கண்காணிப்பில் இருந்தது. கொல்லம் ஆயரும் அவருடன் இருந்த அனைத்து பணியாளர்களும் கார்மல் துறவியர் ஆவர். இந்நிலையில் ஆலஞ்சி ஆலயத்திற்கு சொத்து 140 ஏக்கருக்கும் அதிகமாக இருந்ததால் அங்கு துறவற சபை அருட்பணியாளர்களுக்கானப் பயிற்சி இல்லம் அமைக்க கி.பி. 1890 இல் அப்போதைய கொல்லம் ஆயர் பெர்டினார்டு ஓசி, கார்மல் சபையினருக்கு அனுமதி அளித்தார். எனவே ஆலஞ்சி காடு என்று அழைக்கப்பட்ட இந்த பகுதியில் கார்மல் சபையின் மேல்மட்ட ஆணைக்குழு அருட்பணியாளர் பயிற்சி இல்லம் அமைக்க முடியுமா என ஆய்வு செய்தது. அச்சமயத்தில் தான் ஆலஞ்சியில் தண்ணீர் பஞ்சம் இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. எனவே கார்மல் சபையினர் இங்கே பயிற்சி இல்லம் அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். அந்த பயிற்சி இல்லத்தை திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள பாங்கோட்டில் அமைத்தனர். இந்த இல்லம் கார்மல் சபையினரின் தலைமை இல்லமாக தற்போது உள்ளது.

தொடர்ந்து வந்த காலக்கட்டத்தில் வைசூரி, காலரா ஆகிய நோய்கள் மக்களை வாட்டி வதைத்தது. இதன் காரணமாக எண்ணிலடங்கா மக்கள் மாண்டு போயினர். இந்த கொடிய நோய்களின் தீவிரம் குறைய கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிறிஸ்தவ இளைஞர்கள் பஜனைப் பாடி ஊரை வலம் வந்தனர். மக்களும் மிக உறுதியாக இறைவனை நோக்கி வேண்டினர். தூய சவேரியாரின் மன்றாட்டால் மக்கள் கொடிய காலரா, மற்றும் வைசூரி வியாதிகளிலிருந்து ஓரளவு மீண்டனர். ஆனால் இந்த நோய்களின் கொடுமையைக் கண்ட நாயர் இன மக்கள் இந்த ஊரில் இருக்க விரும்பவில்லை. தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ஊரைக் காலி செய்து பத்தறை, சாஸ்தான்கரை போன்ற பகுதிகளில் குடியேறினர்.
இந்த நிகழ்வுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாடார் குல கிறிஸ்தவ மக்கள் ஆலஞ்சி பகுதியில் குடியேறினர். ஆலஞ்சி பங்குத்தளம் விரிவானது.

கற்கோயில் கட்டுதல்:

பழைய ஆலயம் மிகச்சிறியதாக இருந்ததாலும், மக்கள் தொகை அதிகரித்ததன் காரணமாகவும், முன்பு ஆயரிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் புதிய ஆலயம் கட்ட மக்கள் தீர்மானித்தனர்.
அழகிய தோற்றத்துடன் பொலிவோடு நின்ற தூய சவேரியாரின் புனிதம் நிறைந்த பழைய ஆலயத்தை இழக்க மனமின்றி, அதனை அப்படியே உள்ளே வைத்து அதனை சுற்றி அழகிய கருங்கல்லாலான புதிய ஆலயத்தை அமைத்தனர்.

இந்த அழகிய பழைய ஆலயம் இன்றளவும் தற்போதைய ஆலயத்தின் பீடத்தின் அடியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சிலுவை வடிவிலான ஆலயம் கட்டப்பட்ட போது மிக ஆழமான அஸ்திவாரக் குழி தோண்டி அதனுள் பெரிய கருங்கற்களை இட்டு பல நபர்கள் ஒன்றிணைந்து பனந்தடியால் இடித்து அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தினர். இந்த ஆலயம் இவ்வூரில் இருந்த முன்னோர் அனைவரின் கூட்டு முயற்சி ஆகும். பனை ஏறும் தொழில் செய்வோர் பதனீரை கலவை குழைக்க ஆலயத்திற்கு வழங்கினர். ஆலயத்திற்கான மரப்பணிகளும் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவையாகும்.

ஆலயத்தின் அருகாமையில் கருங்கல் பாறைகள் எதுவும் இல்லாமையால் சுமார் 1 கீ.மீ. மேற்கில் உள்ள துண்டம், தம்மம் (பாரியக்கல்) ஆகிய இடங்களிலிருந்து பாறைகளை உடைத்து தலையில் சுமந்து கொண்டு வந்திருக்கின்றனர். காரணம் அக்காலத்தில் தற்போது இருப்பது போன்று வாகன வசதியோ, சாலை வசதியோ எதுவும் இல்லை. அதுபோல கட்டிடம் கட்ட தேவையான மணல் ஆலஞ்சி மற்றும் குளச்சல் பாம்பூரி வாய்க்கால்களிலிருந்து தலைச்சுமையாக கடவத்தில் (கடவம் என்பது பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டி) கொண்டு வரப்பட்டது ஆகும்.

சுண்ணாம்பு, மணல், பதனீர் போன்றவற்றை செக்கில் இட்டு ஆட்டி மிருதுவான கலவையாக்கி ஆலயம் கட்டப் பயன்படுத்தினர். இந்த ஆலய வேலை நடைபெறும் போது ஆலஞ்சி ஊரில் ஒருசில கொத்தவேலை தெரிந்த நபர்களே இருந்தனர். எனவே குளச்சல், ரீத்தாபுரம் பகுதிகளிலிருந்தே கொத்தனார்கள் அதிகமாக வந்து இந்த ஆலய வேலைகளில் ஈடுபட்டனர். ஊர் மக்களும் மனமுவந்து தங்கள் உழைப்பை ஆலயத்திற்கு நன்கொடையாக அளித்தனர்.

இவ்வாறு கடுமையான சிரமங்களுக்கு இடையே இந்த சிலுவை வடிவிலான கருங்கல்லாலாகிய ஆலயத்தைக் கட்டினர். எனினும் ஆலயப்பணி தொடர்ச்சியாக செய்யப்படவில்லை. காரணம் மக்களின் வறுமை நிலைதான். இதனால் ஆலயப்பணிகள் ஜன்னல் மட்டத்தில் நிறுத்தப்பட்டன.

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அருட்தந்தை டோமினிக் என்பவர் பங்கு பணியேற்றார். அவர் ஆலயப்பணிகளை நிறைவு செய்வதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வேலை தொடர்ந்து நடக்க உதவினார். இவருக்கு பின் அருட்தந்தை லூக்காஸ் என்பவர் பங்கு பணியாளராக வந்தார்.

கற்கோயிலின் ஆலய பீடமானது கலைநுட்பத்துடன் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நடுவில் தூய சவேரியார் சுரூபமும், வலது புறம் இஞ்ஞாசியார் சுரூபமும், இடது புறம் தூய மிக்கேல் அதிதூதர் சுரூபமும் இருந்தன. தூய சவேரியாரின் சுரூபத்திற்கு கீழே பாடுபட்ட இயேசு கிறிஸ்துவின் சுரூபம் இருந்தது.

கருங்கல்லாலான ஆலயம் மக்களின் உழைப்புக்கும், ஒற்றுமையுணர்வுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். இந்த ஆலயம் முழுக்க முழுக்க அன்றைய ஆலஞ்சி வாழ் மக்களின் உழைப்பால் கட்டப்பட்டது. ஆலயம் கட்டி முடியும் தருவாயில் ஆலயத்திற்கு வருகை தந்த கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு பென்சிகர் ஆலயத்தைக் கண்டு அகமகிழ்ந்து, பெல்ஜியம் நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆலயமணியை கொல்லம் ஆயர் இல்லத்திலிருந்து எடுத்து வந்து அளித்தார். இந்த ஆலயமணியில் BVG - 1928 என பொறிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஆலயத்தின் முகப்பில் காணப்படுவதும் இன்றுவரை ஆலயத்த்தில் பயன்படுத்தப்பட்டு வருவதும் இந்த மணிதான். இதன் ஓசை மனதை கவரும் வண்ணம் ரம்மியமாக சுமார் மூன்று கிமீ தூரம் வரை கேட்கின்றது.

அழகிய கருங்கல்லாலான ஆலயம் தமிழ் ஆண்டான 1104 ஆம் ஆண்டு அதாவது கி.பி. 1928 ஆம் ஆண்டு அருட்தந்தை டோமினிக் பங்குத்தந்தையாக இருந்த போது மேதகு ஆயர் அலோசியஸ் பென்சிகரால் திருநிலைப்படுத்தப்பட்டது.

1930 ஆம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் ஒரு சிறு மறைவட்டமாக இருந்த கோட்டாறு மறைவட்டம், ஒரு மறைமாவட்டமாக உருவெடுத்தது. இதன் முதல் ஆயர் மேதகு லாரன்ஸ் பெரேரா. இவர் உடல்நலக் குறைவாக இருந்த போது 1932 - 33 ஆம் ஆண்டில் இரண்டு மாத காலம் ஆலஞ்சியில் அன்று இருந்த இரண்டு மாடி அருட்பணியாளர் இல்லத்தில் ஓய்வெடுத்தார். அப்போது ஆயரின் மறைமாவட்ட செயல்பாடுகள் அனைத்தும் ஆலஞ்சியில் இருந்து செயல்படுத்தப்பட்டன.

1937 ஆம் ஆண்டு ஆலஞ்சி காரங்காட்டிலிருந்து பிரிந்து குறும்பனை பங்கின் கிளைப்பங்காகியது. எனவே மேலும் ஆன்மீக வளர்ச்சியில் ஆலஞ்சி முன்னேற்றம் அடைந்தது. கி.பி.1950 ஆம் ஆண்டு முதல் அமைத்திருந்த இரண்டு மாடி அருட்பணியாளர் இல்லம் பழுதுபட்டதால், அதன் மேல்மாடி இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய அருட்பணியாளர் இல்லம் அமைக்கப்பட்டது.

ஆலயக் கொடி மரம்:

கி.பி.1945 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு முன்புறமுள்ள கொடிமரமானது நிறுவப்பட்டது. இது கடைவிளாகம் (தற்போதைய குறும்பனை ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதி) என்னுமிடத்தில் வசித்து வந்த சலவை தொழில் செய்யும் ஒரு தாயாரால் தூய சவேரியாருக்கு நேர்ச்சையாக வழங்கப்பட்டதாகும்.

இக்கொடிமரம் மிகவும் நேர்த்தியாக கல்குறிச்சியில் செய்யப்பட்டு, நான்கு மாட்டு வண்டிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி அதன்மீது ஏற்றப்பட்டு மக்களால் இழுத்து வரப்பட்டது. சரியான சாலை வசதிகள் இல்லாத நிலையில் மேடு பள்ளமான வழித்தடங்களில் மக்களின் எழுச்சிமிகு கூட்டு முயற்சியில் கொண்டு வரப்பட்டது. வழியில் பனவிளை ஏற்றத்தில் இழுத்து வர முடியாமல் நின்றது. உடனே அங்கிருந்து ஊருக்கு தகவல் வர, காத்திருந்த மக்களும், குறும்பனை, மிடாலம் பகுதிகளைச் சார்ந்த தூய சவேரியாரின் விசுவாசிகளும் வேகமாகச் சென்று அன்பரின் கொடிமரத்தினை ஆலஞ்சிக்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட கொடிமரமானது பட்டை வடிவில் செதுக்கப்பட்டது. செதுக்கும் போது மூன்று அடி அளவில் தனியாக உடைந்தது. உடைந்த பாகத்தைத் தவிர மீதமுள்ள கல் கொடிமரமாக வடிவமைக்கப்பட்டது. உடைந்த பாகமானது ஆட்டுரல் வடிவில் செதுக்கப்பட்டு கொடி மரக்கல்லுக்கு அடித்தளமானது. அன்று கொடிமரம் கொண்டு வந்த பாதையானது பிற்காலத்தில் சாலையாக உருவானது.

ஆலஞ்சி தனிப் பங்காதல்:

29.05.1961 அன்று ஆலஞ்சி தனி தாய் பங்காகியது. இதன் முதல் பங்குத்தந்தை அருட்திரு தருமநாதர் ஆவார். அப்போது கண்டர்விளாகம் ஆலஞ்சியின் கிளைப்பங்காக இருந்தது. பின்னர் கண்டர்விளாகம் ஆலஞ்சியை விட்டு பிரிய, மாத்திரவிளையின் கிளைப்பங்குகளில் ஒன்றான மிடாலக்காடு ஆலஞ்சியின் கிளைப்பங்காகியது.

அன்றைய காலக்கட்டத்தில் வழிபாடுகள் அனைத்தும் இலத்தீன் மொழியிலேயே இருந்தது. திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையும், மக்களும் பீடத்தைப் பார்த்துக் கொண்டு நின்றே வழிபாட்டில் பங்கேற்றனர். இவ்வாறு வழிபாடு இலத்தீனில் நடைபெற்றதால் மக்கள் மிகவும் பக்தியாக அதில் பங்கேற்றனர். இலத்தீனில் அருட்தந்தை செய்யும் திருப்பலிக்கு பதிலுரைப்பவர்கள் "மூஸ்க்" (பாடுபவர்கள்) என்று அழைக்கப்பட்டனர்.

பின்னர் ஆலய வழிபாடுகள் அனைத்தும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கி.பி.1973 ஆம் ஆண்டு தமிழில் வந்தது.

தூய சவேரியார் நாட்டிச் சென்ற சிலுவையானது, ஆலயத்தின் முன்புறம் அமைந்திருந்த மண்டபத்தின் பின்புறம் அதாவது, தற்போதுள்ள கொடிமரத்தின் அருகில் நாட்டப்பட்டிருந்தது. அதில் மக்கள் தேங்காய் பால் கொண்டு அபிஷேகம் செய்து வந்தனர். ஆனால் அருட்தந்தை A. பீட்டர் பங்குத்தந்தையாக இருந்தபோது அந்த மண்டபம் இடிக்கப் பட்டது. மண்டபத்தில் இருந்த தூய சவேரியார் நாட்டிய குருசு, மண்டபம் இருந்த இடத்தில் புதைக்கப்பட்டது.

தற்போதுள்ள புதிய ஆலயம் அமைக்கப்பட்டபோது அருட்தந்தை மத்தியாஸ் அவர்களால் அந்த கற்சிலுவை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஆலயத்தின் இடப்பக்கத்தை அலங்கரிக்கிறது.

தூய சவேரியார் பாதுகாவலின் மேன்மைகள்:

ஆலஞ்சியில் அமைந்திருந்த பழைய இரண்டு ஆலயங்களிலும் இரவு தூய சவேரியார் திரு உடையில் வந்து திருப்பலி நிறைவேற்றும் அதிசயத்தை இந்த ஊரில் உள்ள மூதாதையர்கள் சொல்லிப் பெருமை படுவார்கள்.

அதுமட்டுமல்ல காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோய்களால் இந்த ஊர் பீடிக்கப்பட்டிருந்தபோது குருசின் துணை கொண்டு தூய சவேரியார் அந்த நோயிலிருந்து விடுதலை அளித்ததாக மக்கள் நம்பினர்.

அன்று ஆலஞ்சியில் எத்தனையோ வைத்தியர்கள் இருந்தாலும், திக்கற்ற மற்றும் ஏழை மக்களின் மருத்துவராய் இருந்தது தூய சவேரியார் தான். அவருடைய மருத்துவமனையாக இருந்தது இந்த ஆலயத்தின் சப்பரக்கூடம் என்றால் அது மிகையாகாது. நோயுற்றோரையும், பேய் பிடித்தவர்களையும் புனிதரின் அருள் தேடி அந்த சப்பரக்கூடத்தில் கொண்டு கிடத்துவர். தூய சவேரியாரின் இறைவேண்டுதலால் பலரும் நோய்களிலிருந்து விடுதலை பெற்று முழு சுகத்தோடு திரும்பி சென்றனர்.

அன்று முதல் இன்று வரை புனிதரை வேண்டி இறைவனிடம் இருந்து அருளாசி பெற்றோர் சிரித்த முகமாய் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அண்டி வந்தோருக்கு அடைக்கலமும், ஆசிகளும் வழங்குபவர் அருள் தரும் ஆலஞ்சி தூய சவேரியார். இதனால் தான் தூய சவேரியார் பாதுகாவல் பெருவிழவிற்கு மக்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருகின்றது. இத்திருக்கூட்டமானது, தூய சவேரியாரிடம் இருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூற வரும் கூட்டமாகும்.

அன்று வறண்ட நிலமும், புதர்க் காடுகளையும் கொண்ட ஆலஞ்சி, இன்று தூய சவேரியாரின் அருளாசியாலும், மக்களின் கடின உழைப்பாலும் நோய்கள் ஒழிந்து; பசி பட்டினிகள் மறைந்து; மக்களிடையே செல்வம் பெருகி; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து ஆலஞ்சி ஊர் ஒரு "குட்டி பெர்சியா" (சின்ன வெளிநாடு) என்று பிற ஊர்மக்கள் புகழும் வண்ணம் உயர்ந்திருக்கிறது.

புதிய ஆலயம் :

1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் புதிய ஆலயத்திற்காக மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் தலைமையில் இறைமக்கள் அனைவரும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

உடனே பழைய ஆலயத்தை இடித்து மாற்றி புதிய ஆலயம் அமைக்க வேண்டிய ஆயத்தப் பணிகளை செய்தனர். இடிக்கப்பட்ட பழைய ஆலயத்திலுள்ள கருங்கற்கள், கூரை மற்றும் ஓடு இவைகளை பயன்படுத்தி உயர்நிலைப்பள்ளியில் ஒருக் கட்டிடம் கட்டப்பட்டது.

மிகப் பெரிய ஆலயமாக இந்த ஆலயம் கட்டப்பட்டதால் அதிக பணச்செலவு ஏற்பட்டது. அத்தனை பணச்செலவையும் ஆலஞ்சி ஊரைச்சார்ந்த கொத்தனார்கள், அரசு ஊழியர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் மற்றும் பிற தொழில் புரிவோர் அனைவரும் இணைந்து தங்களின் தியாக மனநிலையால் தாங்கினார். எனவே, இவர்களின் தியாக மனநிலையின் சின்னமாக இன்றைய ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாது.

இந்த புதிய ஆலயம் இறைமகன் இயேசுவின் சிலுவை வடிவினை உடையது. இதனுடைய பீடம் நவீன கட்டிடக் கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பீட முகப்பில் மார்பிள் பதிக்கப்பட்டு அதில் மிகப்பெரிய இயேசுவின் பாடுபட்ட சுரூபம் பொருத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் உள்பக்கம் மேல்நிலை மட்டம் ஓன்று உள்ளது. ஆலயத்தின் கூரை கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) தகடுகளாலும், தரை மொசைக்காலும் இடப்பட்டுள்ளன. ஆலயத்தின் முன்புறம் அழகான மண்டபம் ஓன்று உள்ளது. இந்த மண்டபத்தில் தூய சவேரியார் சுரூபமும், தூய சவேரியார் நாட்டிச்சென்ற புனித குருசும் இடம்பெற்றுள்ளன.

ஆலயத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பெரிய கோபுரம் 121 அடி உயரமாக விண்ணை முட்டும் அளவுக்கு கலை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனோடு இணைந்த முகப்பு சிறந்த ஐரோப்பிய கட்டிடக் கலையினை நினைவுபடுத்தும் அளவுக்கு அழகாக உள்ளது. அதனோடு இணைந்துள்ள சிறிய கோபுரம் மேற்கத்தியக் கலாச்சாரமும் இணைந்த ஒரு கட்டிடக் கலைக்கு சான்றாக உள்ளது. இவ்வாறு கலை வளத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் முன்புற முகப்புக் கோபுரங்கள் காண்போரைக் கவர்கின்றன. அதுமட்டுமல்ல, ஆலயத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் அமைந்த சிறிய கோபுரங்களும் கலை அழகை வெளிக்காட்டுகின்றன. மொத்தத்தில் இந்த புதிய ஆலயம் நவீன கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலைக்கு ஒரு நற்சான்று ஆகும்.

வேண்டுதலாலும், ஊர் மக்களின் தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட இந்த புதிய ஆலயம் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் தேதி கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. தற்பொழுது ஆலய புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தூய சவேரியார் ஆலஞ்சி ஊர்மக்களை மட்டுமல்லாது தன்னை நாடி வருகின்ற அன்பர்கள் அனைவரையும் தமது இரு திருக்கரங்களால் அரவணைத்து அவர்கள் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் வழங்கி ஒருவருக்கொருவர் அன்பு செய்து ஒற்றுமையோடும், அமைதியோடும் வாழ வழிவகை செய்கிறார். ஆலஞ்சிக்கு வருகை தந்து அருள் தரும் ஆலஞ்சி தூய சவேரியாரின் அருள் வளங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று செல்ல அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்...!

இந்த பதிவை சிறப்பாக தொகுத்து தட்டச்சு செய்து தந்த ஆலஞ்சி இறைசமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கின்றோம்.!