343 பனிமய அன்னை ஆலயம், கீழ் ஆசாரிபள்ளம்

 

பனிமய அன்னை ஆலயம்.

இடம் : கீழ் ஆசாரிபள்ளம், நாகர்கோவில்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம்

கிளை : புனித அந்தோணியார் ஆலயம், ஆசாரிபள்ளம்.

பங்குத்தந்தை : அருட்பணி அந்தோனி பிச்சை

குடும்பங்கள் :480
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

புதன் மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

வழித்தடம் : நாகர்கோவிலிருந்து - ஆசாரிபள்ளம் செல்லும் அனைத்து பேருந்துகளும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையின் பின்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

நாகர்கோவில் கீழ் ஆசாரிபள்ளம் ஊரில் புனித பனிமய அன்னை ஆலயம் அமைந்துள்ளது.

ஆசாரிபள்ளம் தோன்றிய விதம்:

ஆதியிலே ஆச்சாரியர் என்னும் அந்தணர் வகுப்பை சார்ந்தவர்கள் இவ்வூரில் குடியிருந்ததாகவும், அவர்கள் குடியிருந்த இடம் சுற்றிலும் உள்ள பகுதியை விட மிகத் தாழ்வாக இருந்தமையால் ஆச்சாரியார் பள்ளம் என அழைக்கப்பட்டது. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஆசாரிபள்ளம் என ஆனது.

இவ்வூரில் அருகாமையில் இருக்கும் சாஸ்தா கோயிலும், அருகில் பாழடைந்து அழிந்து போன பழங்காலத்து சிற்பங்களின் அடித்தளங்களும் இவ் உண்மையை வலியுறுத்தும் சாட்சிகளாகும். இங்கு வசித்து வந்த பழங்குடி மக்கள் தற்போது இங்கில்லை. இங்கு வாழ்ந்த மக்கள் திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற மாவட்டங்களில் இருந்தும் அங்கு ஏற்பட்ட இயற்கை மாற்றங்களாலும், சிற்றரசர்கள் திடீரென ஏற்படுத்தும் படையெடுப்புகளாலும் ஒரே இடத்தில் நிலையாக வாழ முடியாமல், குடிபெயர்ந்து 1750-ஆம் ஆண்டுவாக்கில் வந்து வாழ்ந்தவர்களாக கூறப்படுகிறது.

இவர்களில் முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள் வீரமாமுனிவரால் கிறிஸ்தவம் தழுவியதால் பிற சமய மக்களால் புறக்கணிக்கப்பட்டு, இங்கிருந்து வடக்கன்குளம், இராமநாதபுரம், கொடைக்கானல் பகுதிகளுக்கு சென்றனர். ஒருசிலர் மீண்டும் இங்கு வந்து வாழத்துவங்கினர். ஆசாரியார், பெர்னாண்டோ வகுப்பைச் சார்ந்தவர்களும் பிற்காலத்தில் இங்கு வந்து வாழத் துவங்கினர்.

கிறிஸ்தவம் தழுவக் காரணம் :

பத்மநாபபுரத்தை தலையிடமாகக் கொண்டு மார்த்தாண்ட வர்மா மன்னன் ஆண்டு வந்தான். அவரது அமைச்சரவையில் 3-ஆம் மந்திரியாக பணியாற்றி வந்தவர் நீலகண்டப் பிள்ளை. இந்நிலையில் 1741 -ல் குளச்சல் துறைமுகத்தை பிடிக்க வந்த டச்சுப் படைகளை, மார்த்தாண்ட வர்மாவின் படைகள் தோற்கடித்தன. டச்சு படைத்தலைவனான கத்தோலிக்க கிறிஸ்தவரான பெனடிக்ட் தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறை பிடிக்கப் பட்டார். பின்னர் டிலனாய் மார்த்தாண்ட வர்மாவின் படைகளுக்கு ஆலோசகராக நியமிக்கப் பட்டார்.

இதன் காரணமாக நீலகண்ட பிள்ளைக்கு, டிலனாய் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, டிலனாயின் கிறிஸ்தவ போதனையில் கிறிஸ்துவை ஊணர்ந்து கிறிஸ்தவம் தழுவினார் நீலகண்டபிள்ளை. வடக்கன்குளம் சென்று தேவசகாயம் பிள்ளை என்ற பெயரில் திருமுழுக்குப் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக அந்தணர்கள் கொடுக்கும் பிற சமய ஆலய பொருட்களை (பிரசாதம் போன்றவற்றை) ஏற்க மறுத்தார். இதனைக் குறித்து அந்தணர்கள் அரசனிடம் புகார் செய்தனர். கோபம் கொண்ட அரசன் தேவசகாயம் பிள்ளையை சிறையிலடைத்தான். அவரை பல இன்னல்களளுக்கு ஆளாக்கி மீண்டும் பழைய மதத்தை ஏற்கப் பணித்தான். தேவசகாயம் பிள்ளை இறைமகன் இயேசுவை தெய்வமாகவும், குருவாகவும் ஏற்றுக்கொண்டு தண்டனைகளை பொறுமையாக ஏற்றுக் கொண்டார்.
இறுதியில் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து கொல்லப்பட்டு மறை சாட்சியானார்.

தேவசகாயம் பிள்ளையை கொல்வதற்கு முன்பு எருமை மாட்டின் மீது ஏற்றி ஊர்வலமாக பல ஊர்களுக்கும் கொண்டு சென்றனர். இவ்வேளையில் இவரைக் காண மக்கள் திரளாக கூடி ஆசி பெற்றனர். இதன் பின்னர் நாடெங்கும் திரளான மக்கள் கிறிஸ்தவம் தழுவினர்.

மேலும் பத்மநாபசுவாமி கோயிலுக்கு பணிவிடை செய்ய மறுத்த இவ்வூர் வைசிக வணிகர்களைக் குறித்து அந்தணர்கள் அரசனிடம் புகார் செய்தனர்.
கடும் கோபம் கொண்ட அரசன் வணிகர்களை கடுமையாகத் தண்டித்தான். கிறிஸ்தவம் தழுவிய வணிகர்கள், அரச அதிகாரிகள் தங்களை ஆலயம் செல்லவும் அனுமதிக்கமாட்டார்கள் என்பதையுணர்ந்து வடக்கன்குளம் சென்று கிறிஸ்தவர்களாக வாழலாயினர். சக்தியை வழிபட்ட பிற சமயத்தவராக வாழ்ந்தாலும், பரலோக அன்னையின் பாதச்சுவட்டில் திருமுழுக்கு பெற்றதால் பரிசுத்த அன்னையையே தங்கள் பாதுகாவலாக கொண்டனர்.

வடக்கன்குளத்தில் இப்போதிருக்கும் ஆலயத்திற்கருகில் ஒரு சிறு ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை வடக்கன்குளத்தை தங்கள் தாயகமாக கொண்டுள்ளனர். நாளடைவில் திருவனந்தபுரம், பாலராமபுரம், விளிஞ்ஞம், பாங்கோடு, மாங்குழி, கோட்டார், பெருவிளை, பழவூர், ஆரல்வாய்மொழி மற்றும் பல இடங்களில் உள்ள பிற சமய வணிகர்கள் ஆசாரிபள்ளம் வந்து சேர்ந்து, கிறிஸ்துவை உணர்ந்து கிறிஸ்தவர்களாகி இணைந்து வாழ்ந்தனர். பரிசுத்த பனிமய அன்னை இவர்களை பல்கி பெருகச் செய்து பல துறைகளில் சிறந்து விளங்கச் செய்து வருகின்றார்.

கோட்டார் மறை மாவட்டம் :

கோட்டார், கொல்லம் மறை மாவட்டத்தோடு இணைந்திருந்த காலத்தில் கீழ் ஆசாரிபள்ளம், மேல் ஆசாரிபள்ளமும் ஒரே பங்காக இணைந்து இருந்தது. அப்போது பங்குத்தந்தையாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் ஐரோப்பியர அருட்தந்தையான பயஸ், மற்றும் ஆன்றனி, பிரான்சிஸ் ஆகியோர் ஆவர். இவர்கள் காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில், முன்பிருந்த பழைய ஆலயம் இரு கட்டங்களாக கட்டப்பட்டது. ஐரோப்பிய அகஸ்டின் சபையை சார்ந்த கன்னியர் மடமும் கட்டப்பட்டது.
ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே ஆரம்பப் பள்ளி துவக்கப் பட்டது. அன்னைக்கு தேர் உருவாக்கப் பட்டது.

தனிப்பங்கு :

கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து கோட்டார் மறை மாவட்டம் தனியாக பிரித்து முதல் ஆயராக மேதகு லாரன்ஸ் பெரைரா பொறுப்பேற்ற காலத்தில், கீழ் ஆசாரிபள்ளம் தனிப்பங்காக உருவாக்கப்பட்டு அருட்தந்தை அம்புறோஸ், அருட்தந்தை பால் செபாஸ்டின் ஆகியோர் பங்குத்தந்தையர்களாக பொறுப்பேற்றனர்.

பின்னர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள் ஆயரான போது அருட்பணி ஹென்றி பெரைரா பங்குத்தந்தையானார். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் துவக்கப்பட்டது.

அருட்தந்தை தனிஸ்லாஸ் மரியா காலத்தில் பள்ளிக்கூட கட்டடங்கள் கட்டப் பட்டன. 1961-இல் எண்ணெய் சொசைட்டியும், அருட்தந்தை ஜோசப் காலத்தில் பால் சொசைட்டியும் உருவாக்கப் பட்டது.

அகஸ்தின் சபை கன்னியர்களிடமிருந்து, புனித அன்னம்மாள் சபை கன்னியர் மடத்தின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டனர்.

மேதகு ஆரோக்கிய சாமி ஆண்டகை 1970 -ல் ஆயராகி, மறை மாவட்டம் மறை வாழ்விலும், சமுதாய வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தார். அருட்தந்தை யூஜின் குழந்தை பணிக்காலத்தில் அவருக்கு உதவியாக பங்கை நிர்வகிக்க நிர்வாகக்குழு உருவாக்கப் பட்டது.

அருட்பணி யூஜின் குழந்தை காலத்தில் 27-04-1974 இல் புதிய ஆலயம் கட்ட மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி கார்மல் அடிகள் காலத்தில் ஆலயத்தின் பெரும்பகுதி கட்டப் பட்டது.

அருட்தந்தை எ. எம். செபஸ்தியான் காலத்தில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 22-12-1985 அன்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கீழ் ஆசாரிபள்ளம் ஆலயத்தில் காணப்படும் தூய பனிமய அன்னையின் அழகிய அருள் நிறைந்த சுரூபமானது மிகவும் பழமையானதாகும். அக்காலத்தில் கப்பலில் மூன்று சுரூபங்கள் வந்ததாகவும்; அதில் ஒன்று தூத்துக்குடி தூய பனிமய அன்னை ஆலயத்திலும், மற்றொன்று வடக்கன்குளத்திலும், மூன்றாவது கீழ் ஆசாரிபள்ளம் ஆலயத்திலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவிழா தேர்பவனி :

திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 8-ம் திருவிழா இரவு மற்றும் 9-ம் திருவிழா காலையில் நடக்கும் தேர்பவனியில் திருச்சிலுவை, புனித வளனார் தேர்களும்; 9-ம் திருவிழா இரவு மற்றும் 10-ம் திருவிழா காலையில் திருச்சிலுவை, புனித வளனார், பனிமய மாதா ஆகிய தேர்கள் வலம் வந்து இறை மக்களுக்கு ஆசி வளங்குகின்றன.
தேர்பவனிக்கு உள்ளூர் வெளியூரில் வாழும் பங்கு மக்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள். சாதி சமய பேதமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக வந்து இவ்விழாவை சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இவ்வாலய 9-ஆம் திருவிழா நாளைய தினம் ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் தேர்பவனியுடன் இனிதே நிறைவு பெறுகின்றது. இத் திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருள் வளங்களை பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்..!