புனித அந்தோணியார் ஆலயம்
இடம் : கருத்தப்பிள்ளையூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
நிலை : பங்குதளம்
குடும்பங்கள் : சுமார் 800
அன்பியங்கள் : 37
பங்குத்தந்தை : அருட்தந்தை அந்தோணி வியாகப்பன்
ஞாயிறு திருப்பலி : காலை 07.45 மணிக்கு
செவ்வாய் மதியம் 12.00 மணிக்கும் மாலை 06.30 மணிக்கும் திருப்பலி
நாள்தோறும் : காலை 05.45 மணிக்கு திருப்பலி
திருவிழா : ஜனவரி மாதக் கடைசியில் 13 நாட்கள் நடைபெறும்.
(17-01-2019 முதல் 29-01-2019 வரை இவ்வாலய திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பங்கு மக்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குத்தந்தைக்கும் திருவிழா நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் திருவிழாவில் கலந்து கொண்டு கருணை வீரன் புனித அந்தோணியார் வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்றுச் செல்ல வருகை தருகின்ற அனைத்து மக்களையும் கருத்தப்பிள்ளையூர் இறை சமுகம் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.💐🌺💐)
கருத்தப்பிள்ளையூர் ஆலய வரலாறு :
நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அழகிய எழில் நிறைந்த கிராமம் தான் கருத்தப்பிள்ளையூர். இக் கிராமத்திற்கு மேற்கே கடனா அணை, கிழக்கே குளங்கள், தெற்கே பாபநாசம் அகஸ்தியர் அருவி, வடக்கே கருணை ஆறு என திரும்பிய பக்கமெல்லாம் நீர் நிலைகள் உள்ளதால் பச்சைப் பசேலென இதமான காலநிலை கொண்ட இவ்வூர் காண்போரை கவர்ந்திழுக்கும்.
கருணை ஆற்றங்கரையில் கருத்தப்பிள்ளையூரில் அமர்ந்து மக்களை காத்து வருவதால் கோடி அற்புதர் புனித அந்தோணியாரை, "கருணை வீரன் புனித அந்தோணியார்" என்று இம் மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
19-ம் நூற்றாண்டு முதல் இந்நாள் வரை கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி, இயேசுவுக்கு சாட்சியாக கடவுளின் கிராமம் கருத்தப்பிள்ளையூரில் தொடக்கத்தில் மக்கள், பனை ஓலையால் வேயப்பட்ட குருசடியில் புனித அந்தோணியாரின் அற்புத சுரூபத்தை வைத்து வழிபட்டு வந்தனர். 1900 ஆண்டில் காரைக் கோவிலாக மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டது.
1903 -ம் ஆண்டு வீரவநல்லூர் பங்குத்தந்தை அருட்தந்தை மரிய லூயிஸ் அடிகளாரால் RC தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது.
1929 ம் ஆண்டு முதல் மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் இல்லம் தொடங்கப்பட்டு, நற்செய்தி பணி நடந்து வந்தது. தற்போது பங்கு நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளியில் பணியாற்றிக் கொண்டு மாணவியர் விடுதியை கவனித்து வருகின்றனர்.
1932- ம் ஆண்டு தென்காசி பங்குத்தந்தை அருட்பணி பாப்பையா அடிகளாரால் பெண்கள் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது.
1939- ல் அருட்பணி அல்போன்ஸ் டியூர் அடிகளாரால் இருபாலரும் கற்கும் நடுநிலைப் பள்ளியாக மாற்றி அமைக்கப் பட்டது.
1944 ம் ஆண்டு கருத்தப்பிள்ளையூர், தென்காசி பங்கிலிருந்து பிரிந்து தனிப் பங்காக உயர்ந்தது. பின்னர் கருத்தப்பிள்ளையூரிலிருந்து கடையம் தனிப் பங்காக பிரிக்கப்பட்டது.
இப்பங்கில் பணி செய்த ஒவ்வொரு பங்குத்தந்தையர்களின் பணிக்காலத்திலும் ஆலயத்திற்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன.
10-06-2014 ல் அருட்பணி சா. அந்தோணி வியாகப்பன் அவர்கள் இப்பங்கின் 21-வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மக்களின் ஒத்துழைப்புடன் கடந்த ஜூனில் 2015 - ம் கல்வியாண்டு முதல் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியானது, மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பங்கின் கிளை சபையான சம்பன்குளத்தில் புனித யூதா ததேயு பெரிய யாக்கோபு ஆலயமும், தொடக்கப் பள்ளிக்கான புதுக் கட்டிடமும் சுற்றுச் சுவரும் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் 13-01-2018 அன்று திறந்து வைக்கப் பட்டது.
கருத்தப்பிள்ளையூர் பங்கின் மக்கள் குடியிருக்கும் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள சேர்த்தோட்டம் மாதா கெபி அழகு மிகுந்த பொக்கிஷமாகும். இந்த சேர்த்தோட்டம் ஒரு காலத்தில் 'சேவியர் தோட்டம்' ஆக சேசு சபை குருக்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். சேவியர் தோட்டம் மருவி காலப்போக்கில் சேர்த்தோட்டமாக மாறி விட்டது.
ரைஸ் மில் பாலம் அருகே தூய மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டுள்ளது.
2015- ம் ஆண்டு முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மதியம் 12.00 மணிக்கு திருப்பலி தொடங்கப்பட்டது.
2016 -ல் வெண்கலம் மற்றும் வெள்ளியாலான புதிய கொடிமரம் வைக்கப் பட்டது.
இவ்வாலயத்தின் கிளைகளாக
புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், செட்டிகுளம்
புனித செபஸ்தியார் ஆலயம், கோவன்குளம்
புனித யூதா ததேயு பெரிய யாக்கோபு ஆலயம், சம்பர்குளம்
ஆரோக்கிய அன்னை கெபி, நீலமேகபுரம்
அமல அன்னை கெபி, பெத்தான் பிள்ளைகுடியிருப்பு
அற்புத குழந்தை இயேசு ஆலயம், பங்களாகுடியிருப்பு
தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சப்புளி காலனி
ஆகியன உள்ளன.
திருவிழா காலங்களில் குடும்பத்தோடு மக்கள் பங்கேற்கும் முறை, சப்பரங்களை மக்கள் தங்கள் தோள்களில் சுமந்து விடிய விடிய கண் விழித்து பயணிக்கும் பக்தி முயற்சி ஆகியன சிறப்பு வாய்ந்தது.
விவிலியத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருக்காட்சி பெருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகிறது.
மே மாதத்தை மாதாவின் மாதமாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். சேர்த்தோட்டம் மாதா கெபியில் மாலையில் ஒவ்வொரு நாளும் திருப்பலியும், திருப்பலியில் மாதாவின் புகழ் கூறும் சிறப்பு மறையுரையும் மக்களின் மனம் கவர்ந்த வழிபாட்டு நிகழ்வுகளாகும். மே மாதத்தின் இறுதி மூன்று நாட்கள் நற்செய்தி பெருவிழாவாகவும், கடைசி நாள் மாதா எலிசபெத்தம்மாளை சந்தித்த பெருநாளை மாதா திருநாளாகவும் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்த வழிபாட்டு நிகழ்வுகளாகும்.
தற்போது அருட்தந்தை அந்தோணி வியாகப்பன் அவர்களின் வழிகாட்டுதலில் கருத்தப்பிள்ளையூர் தலத்திருச்சபை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது.
பாபநாசம், அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் இவ்வூருக்கு உள்ளது.
மேலும் கடனா அணைக்கு அருகே இவ்வூர் அமைந்துள்ளதால் அங்கிருந்தும் வரலாம்.