760 உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

   

உலக மீட்பர் ஆலயம்

இடம்: நெடுங்குளம், நெடுங்குளம் அஞ்சல், 628704

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப் பங்குகள்:

1. புனித பரலோக மாதா ஆலயம், வெங்கட்ராயபுரம்

2. புனித அந்தோனியார் ஆலயம், வரிப்பிலான்குளம்

3. புனித பாத்திமா மாதா ஆலயம், கூவை கிணறு

4. புனித லூர்து அன்னை ஆலயம், துவர்குளம்

5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மேட்டுக்குடியிருப்பு

6. புனித சவேரியார் ஆலயம், இளயநேரி

7. புனித அந்தோனியார் ஆலயம், நெடுங்குளம்

பங்குத்தந்தை: அருட்பணி.‌ A. சேவியர் கிங்ஸ்டன் (2022)

தொடர்புக்கு: +91 95004 67776

குடும்பங்கள்: 300+ (500+ வரிகள்)

அன்பியங்கள்: 4 (கிளைப்பங்கு சேர்த்து 7)

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 05:30 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி செபமாலை, 06:30 மணி நவநாள் திருப்பலி, தொடர்ந்து அசனம் (புனித ஆரோக்கிய அன்னை கெபியில்)

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை காலை 05:30 மணிக்கு சிறப்பு திருப்பலி

திருவிழா: ஆகஸ்ட் மாதம் கடைசி ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. அந்தோணி இருதய தோமாஸ், தூத்துக்குடி மறைமாவட்டம்

2. அருட்பணி. ஆரோக்கிய அமல்ராஜ், தூத்துக்குடி மறைமாவட்டம்

3. அருட்சகோதரி. ரீட்டா, SAT (late)

4. அருட்சகோதரி.‌ ஜோஸ்பின், SAL

வழித்தடம்: சாத்தான்குளத்தில் இருந்து 5கி.மீ

பேய்க்குளத்தில் இருந்து 9கி.மீ 

Location map: https://g.co/kgs/8hcfFk

வரலாறு:

நீண்ட நெடிய குளத்தைக் கொண்ட அழகிய ஊர் 'நெடுங்குளம்'. இங்கு அமைந்துள்ள உலக மீட்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்...

கேரளா மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஐந்து கத்தோலிக்க கிறித்தவ குடும்பங்கள் பனைமரம் ஏறி தொழில் செய்வதற்காக, 1800 ஆம் ஆண்டிற்கு முன்பே நெடுங்குளம் ஊருக்கு வந்தனர். இரண்டு குடும்பங்கள் நெடுங்குளம் ஊருக்கு வெளியே குடியேறினர். மூன்று குடும்பங்கள் அருகில் இருக்கும் உடன்குடி, ஆத்தூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். 

இந்த ஊர் முன்னோர்களின் கூற்றுப்படி; கேரளாவில் இருந்து நெடுங்குளத்திற்கும், இங்கிருந்து கேரளாவிற்கும் சென்று வந்த பாதை பின்வருமாறு; 

குலசை, கொட்டாங்காடு, சொக்கன்குடியிருப்பு, சுப்பராயபுரம், சாத்தான்குளம், நெடுங்குளம், சோமநாதபேரி, பதைக்கம், கூந்தன்குளம், களக்காடு,  மேற்குத் தொடர்ச்சி மலை வழிப்பாதையாக கேரளா சென்று வந்துள்ளனர். இந்த வழித்தடத்தை மங்கம்மாசாலை, சாலப்பாதை, குலசை ரஸ்தா என்று மூன்று விதமாக மக்கள் அழைக்கின்றார்கள். கிராமக் கணக்குகளில் இன்றும் இந்தப் பாதை உள்ளது.

தொடக்கத்தில் ஓலைக்குடிசை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். இதுவே நெடுங்குளத்தின் முதல் ஆலயமாக இவ்வாலயம் விளங்கியது. மக்கள் வழிபாடுகளில் பங்கேற்க சோமநாதபேரி ஆலயத்திற்கு சென்று வந்தனர். சொக்கன்குடியிருப்பிலிருந்து அவ்வப்போது அருட்பணியாளர்கள் நெடுங்குளம் வந்து சென்றனர். குறிப்பாக சொக்கன்குடியிருப்பில் இருந்து மிக்கேல் நாதர் சுவாமிகள் அவ்வப்போது சந்தித்தார் என்று ஊர் பெரியவர்கள் கூறியுள்ளனர்.

கத்தோலிக்க இறைமக்களுக்கு பிறகு நெடுங்குளத்தில் குடியேறிய சில குடும்பங்கள், 1824 ஆம் ஆண்டு தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவர்களாக (சி.எஸ்.ஐ) மதம் மாறினர். இவ்வாறு மாறிய தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த சில குடும்பங்கள் 1828 ஆம் ஆண்டில் கத்தோலிக்க கிறித்தவர்களாக மாறினர். இவ்வாறு நெடுங்குளத்தில் கத்தோலிக்க கிறித்தவ குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

காலரா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களின் காரணமாக, கத்தோலிக்க கிறித்தவ மக்கள் நெடுங்குளம் ஊருக்கு உள்ளே வந்து மண்சுவரால் ஆலயம் எழுப்பி ஓலைக்கூரை வேயப்பட்டது. 

1861 ஆம் ஆண்டு அருட்பணி. டேனிஷ் குஷன், SJ (பரஞ்சோதி நாதர்) அவர்கள் சாத்தான்குளம் பங்கின் பொறுப்பு தந்தையாகவும், 1863 ஆம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலம் முதல் நெடுங்குளம் ஆலயம், சாத்தான்குளம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

சாத்தான்குளம் பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. டேனிஷ் குஷன் (பரஞ்சோதி நாதர்) அவர்களால் 1880 ஆம் ஆண்டில் ஓடு வேயப்பட்ட சிலுவை வடிவிலான பெரிய ஆலயம் கட்டப்பட்டு, உலக மீட்பர் ஆலயம் எனப் பெயரிட்டு அர்ச்சிக்கப்பட்டது.

1920 -களில் நெடுங்குளத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக, மலேஷியா, இலங்கை சிங்கப்பூர் பர்மா போன்ற நாடுகளுக்கு தங்களது வாழ்வாதரத்திற்காக குடிபெயரக்கூடிய சூழல் ஏற்பட்டது.

1924 ஆம் ஆண்டு சோமநாதபேரி தனிப்பங்கான போது, நெடுங்குளம் அதன் கிளைப் பங்காக மாறியது. 

மீண்டும் 1960 -களில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக சென்னை, கோயம்புத்தூர், மும்பை போன்ற இடங்களுக்கு பலர் குடிபெயரக்கூடிய சூழல் ஏற்பட்டது. 

அருட்பணி. ஆர்தர் ஜேம்ஸ் (1972-77) பணிக்காலத்தில் ஆலயம் சீரமைக்கப்பட்டது.

அருட்பணி. குரூஸ் அந்தோணி பணிக்காலத்தில் 1979 ஆம் ஆண்டில் தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த 12 குடும்பங்கள் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து, திருமுழுக்கு பெற்றனர். இந்த நிகழ்வில் அன்றைய ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

நெடுங்குளம் 1984 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.‌ வெங்கட்ராயபுரம், துவர்குளம், இளயநேரி, வரிப்பிலான்குளம், கூவை கிணறு, மடத்துவிளை, பிரண்டாகுளம், மேட்டுக் குடியிருப்பு, வடக்கு நெடுங்குளம் ஆகிய ஊர்கள் நெடுங்குளத்தின் கிளைப்பங்குகளாயின.முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. இருதயராஜா அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டு ஆலய ஓட்டுக்கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட் போடப் பட்டது.‌ இளயநேரி (1985) மற்றும் பிரண்டாகுளம் (1987) ஆகிய கிளைப்பங்குகளில் தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அருட்பணி. இருதயராஜா மற்றும் அருட்பணி. அமலதாஸ் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்ல மதிற்சுவர் மற்றும் பள்ளிகளின் மதிற்சுவர்கள் கட்டியெழுப்பப் பட்டன.

1998 ஆம் ஆண்டில் சிந்தாமணி பங்கிலிருந்து பிரிந்து சி. சவேரியார்புரம் தனிப் பங்கான போது, பிரண்டாகுளம் மற்றும் மடத்துவிளை ஆகிய இரு கிளை ஊர்களும், சி. சவேரியார்புரம் பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி. அகஸ்டின் பணிக்காலத்தில் பள்ளிக்கூட கீழ்த்தளம் கட்டப்பட்டு 25.09.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி.‌ அமல்ராஜ் பணிக்காலத்தில் (2001-2004) பள்ளிக்கூட மேல் தளம் மற்றும் கலையரங்கம் கட்டப்பட்டது. கத்தோலிக்க இறைமக்கள், தென்னிந்திய திருச்சபை இறை மக்களுக்கு இடையே இருந்த சமாதானமற்ற சூழலை மாற்றி, நீதிமன்றத்தில் இருந்த வழக்கை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்து, இவர்கள் ஒற்றுமையுடன் வாழ வழிவகை செய்தார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அருட்பணி. ஜோசப் ஸ்டாலின் பணிக்காலத்தில் 2008 ஆகஸ்ட் மாதம் பங்கு திருவிழாவின் போது புனித ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டு மந்திரிக்கப்பட்டது.

அருட்பணி.‌ ஸ்தனிஸ் ஜோசப் மைக்கேல் பணிக்காலத்தில், 2016 ஆம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய பீடம் அமைக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டது. பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி கட்டப்பட்டு, மாணவர்களின் நலன் கருதி அதிகமாக கணிணிகள் வாங்கிக் கொடுத்து, தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஒரு முன்மாதிரி நடுநிலைப்பள்ளியாக மாற்றினார்.

அருட்பணி. லாசர் பணிக்காலத்தில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலயத்தின் முன்புறம் நிலம் வாங்கப்பட்டு, அதில் புதிய வெண்கல கொடிமரம் வைக்கப்பட்டது.

பங்கில் உள்ள சபைகள், இயக்கங்கள்:

1. உலக மீட்பர் ஆண்கள் சபை

2. திருக்குடும்ப சபை (பெண்கள்)

3. விடிவெள்ளி இளைஞர் இயக்கம்

4. புனித அமலோற்பவ மாதா சபை

5. நற்கருணை வீரர் சபை

6. பாலர் சபை

7. மரியாயின் சேனை

பங்கில் உள்ள கெபிகள்:

புனித ஆரோக்கிய மாதா கெபி, நெடுங்குளம்

புனித மிக்கேல் அதிதூதர் கெபி, இளயநேரி

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. ஆர்.சி நடுநிலைப்பள்ளி, நெடுங்குளம் (1940)

2. ஆர்.சி தொடக்கப் பள்ளி, துவர்குளம்(1964)

3. புனித சவேரியார் தொடக்கப் பள்ளி, இளயநேரி (1985)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. M. இருதயராஜா (1984-1988)

2. அருட்பணி. U. அமலதாஸ் (1988-1993)

3. அருட்பணி. R. அந்தோணி தாஸ் (1993-1994)

4. அருட்பணி. A. J. ரெக்ஸ் (1994-1997)

5. அருட்பணி. A. அகஸ்டின் (1997-2001)

6. அருட்பணி. அமல்ராஜ் (2001-2004)

7. அருட்பணி. ஜோசப் ஸ்டாலின் (2004-2009)

8. அருட்பணி. ரஞ்சித் குமார் கர்டோசா (2009-2011)

9. அருட்பணி. ஸ்தனிஸ் ஜோசப் மைக்கேல் (2011-2016)

10. அருட்பணி. லாசர் (2016-2019)

11. அருட்பணி. ஜான்சன் ராஜ் (2019-2020)

12. அருட்பணி. A. சேவியர் கிங்ஸ்டன் (2020 முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை அருட்பணி. A. சேவியர் கிங்ஸ்டன் அவர்கள்