815 வேளாங்கண்ணி மாதா திருத்தலம், சுந்தரராஜபுரம்

   

வேளாங்கண்ணி மாதா திருத்தலம்

இடம்: சுந்தரராஜபுரம், மதுரை

முகவரி: 14/27 நியூ ரைஸ் மில் 3வது தெரு, சுந்தரராஜபுரம், மதுரை 625011

மாவட்டம்: மதுரை

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: மதுரை தெற்கு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், ஆர்.சி தெரு, பழங்காநத்தம்

பங்குத்தந்தை: அருட்பணி. ஜோசப் செல்வராஜ்

குடும்பங்கள்: 2

திருவிழா: செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதிக்கு பின்னர் வருகிற வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள்

வரலாறு:

தூத்துக்குடி நகரைச் சேர்ந்த திரு. தர்மராஜ் -பாலம்மாள் தம்பதியினரின் மகன் திரு. S.T. வேல்முருகன் அவர்கள், தொழில் நிமித்தமாக மதுரை சுந்தரராஜபுரம் வந்து, திரு. கதிர்வேல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். இதே இடத்திலேயே கட்டிட பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். 

இந்த நிலையில் தேவமாதா, திரு. S.T. வேல்முருகன் அவர்களுக்கு மூன்று முறை காட்சி கொடுத்துள்ளார். முதல் காட்சி கொடுத்த அன்றைய தினமே குடும்பத்தில் புதுமை நிகழ்ந்தது‌. நடந்தது என்னவென்று கூட தெரியாத நிலையில் தனது நண்பர்களிடம் நடந்தவற்றைக் கூறிய போது, காட்சி கொடுத்தவர் அன்னை மரியாள் என்று புரிந்து கொண்டனர். 

தீவிரமான இந்து சமயத்தை சார்ந்த திரு. S.T. வேல்முருகன் அவர்கள் மனந்திரும்பியதுடன், அருகில் வசித்த 3 குடும்பங்களையும் மனந்திரும்பச் செய்து, மதுரை புனித செபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி. திவ்யானந்தம் அவர்களின் வழிகாட்டலில், அப்போதைய மதுரை பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களிடம் 1977 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றனர். திரு. S.T. வேல்முருகன் தமது திருமுழுக்கு பெயராக S.T. தாமஸ் என்று பெயர் மாற்றம் பெற்றார். 

1977 ஆம் ஆண்டிலேயே வசிக்கும் இடத்தின் உரிமையாளர் அனுமதியுடன் சிறிய குருசடி ஒன்றை அமைத்து, செப்டம்பர் மாதத்தில் திருவிழா நிறைவேற்றி வந்தனர். 

1987 ஆம் ஆண்டு அருட்பணி. தம்புராஜ் வழிகாட்டலில், புனித பூமி திருப்பயணம் சென்ற போது, இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் இருந்து இங்கு ஆலயம் அமைக்க புனித மண் எடுத்து வந்தார்.

இந்த இடத்தின் உரிமையாளர் திரு. கதிர்வேல் அவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தநிலையில், மாதாவின் அருளால், அவரது மனைவி பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தைக்கு கன்னிகா என்று பெயர் சூட்டப்பட்டது.

1992 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாளில் இந்த இடத்தில் ஆலயம் அமைக்க மதுரை பேராயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி D.D., அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. சில காரணங்களால் ஆலய கட்டுமானப் பணிகள் தாமதமானது. 

திரு. S. T. தாமஸ் அவர்கள் தமக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை, ஆலயம் அமைக்க தானமாக மதுரை உயர் மறை மாவட்டத்திற்கு 24.02.1999 அன்று எழுதிக் கொடுத்தார். 2000 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது.‌ ஆலய பீடத்தில் பெத்லகேமில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் வைத்து கட்டப்பட்டது. 

23.06.2002 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி, D.D., அவர்களால் வேளாங்கண்ணி மாதா திருத்தலம் அர்ச்சிக்கப்பட்டது. 

மாதா காட்சியளித்த இடமானது ஆலயத்தின் பின்புறம் அடித்தளம் அமைத்து, மக்களின் வழிபாட்டிற்காக பயன்படுத்தப் படுகிறது. இதனை அப்போதைய மதுரை மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி D.D., அவர்கள் 23.06.2002 அன்று புனிதப்படுத்தி திறந்து வைத்தார்.

தற்போது பழங்காநத்தம் பங்கின் கீழ், பங்குப்பணியாளரின் வழிகாட்டலில் இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது.

இன்றளவும் இந்த ஆலயத்தில் பல்வேறு புதுமைகள் நடந்து வருகிறது. ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள பிற சமய சகோதரர்களும், ஆலயம் வந்து ஜெபித்து ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.

புனித ஆரோக்கிய மாதா கெபி உள்ளது.

வழித்தடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, திருப்பரங்குன்றம் சாலையில் சுமார் 1கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பேருந்து நிறுத்தும்: ‌மெஜிரா கல்லூரி, ‌2-வது பாலம் தென்புறம்.

Location map:

Our Lady of Good Health Church

https://maps.app.goo.gl/EiNLDcfTfVt8yy8T6

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்