686 புனித வியாகப்பர் ஆலயம், கருப்பந்துறை

    
புனித வியாகப்பர் ஆலயம்

இடம்: கருப்பந்துறை, குன்னத்தூர் அஞ்சல், 627006

மாவட்டம்: திருநேல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை. பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 206

அன்பியங்கள்: 4

ஞாயிறு மாலை 06.30 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஜூலை மாதம் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்

வழித்தடம்: 

நெல்லை டவுன் -மேலப்பாளையம் வழி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் கருப்பந்துறை அமைந்துள்ளது.

Location map: St.James Church Of Karupandurai

CN Village, Tirunelveli, Tamil Nadu 627006

087604 23363

https://maps.app.goo.gl/3Nqmc4Zgus8C7Sty5

வரலாறு

150 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் ஆயங்குளத்தை சார்ந்த கிறிஸ்தவர் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசானிடம் (கலைகளை கற்பிக்கும் குரு) சிலம்பம், களரி போன்ற கலைகளை பயிலச் சென்றார்.  கலைகளை படித்து முடித்துவிட்டு ஆயங்குளத்தார் அங்கிருந்து திரும்பும் வேளையில், அவருக்கு கலைகள் கற்றுத்தந்த ஆசான் மரணமடைந்தார். ஆகவே ஆசானின் விதவை மகளை (காரணம் அவருக்கு அவர் தந்தையை தவிர வேறு ஆதரவு இல்லை) திருமணம் செய்து கொண்டு கருப்பந்துறைக்கு அழைத்து வந்தார்.  

அப்போது இந்த கருப்பந்துறை கிராமம் முழுவதும் சலவைத் தொழிலாளர்களால் நிரம்பியிருந்தது. ஆயங்குளத்தாரின் மனைவியான அந்த பெண் மூலமாக சந்ததியினர் பெருகினர். அவருடைய வழித்தோன்றல்களே இந்த கருப்பந்துறை கிராமத்தின் பூர்வக்குடி கிறிஸ்தவர்கள். அந்தப் பெண் களரி, சிலம்பம் போன்ற கலைகளில் சிறந்தவராக இருந்ததால், தன்னுடைய குழந்தைகளுக்கும் தமது குடும்ப பாரம்பரிய கலையை கற்றுக் கொடுத்தார்.

பின்பு சில காலங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஒரு ஆலயம் வேண்டும் என்று கருப்பந்துறை இறைமக்கள் எண்ணினர். ஏனென்றால் அவர்கள் அதற்கு முன்பு சென்று வந்த ஆலயமானது, கருப்பந்துறையை அடுத்த விளாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயம் ஆகும். வீரவநல்லூர் பங்கின் கீழ் இருந்த அந்த ஆலயம் மிகவும் சிறப்புற்று இருந்தது. திருவிழா என்பது அந்த விளாகம் ஆலயத்தில் மட்டுமே நடைபெறும். 

பின்னர் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பந்துறையில் ஓலைக்குடில் ஆலயம் அமைத்தனர். ஆலயத்தில் எந்தப் புனிதரை பாதுகாவலராக தேர்ந்தெடுப்பது என ஆலோசித்த போது ஊரின் ஒருபுறம் சுடுகாடு மறுபுறம் இடுகாடு என இருந்ததால் தீயசக்திகளை அண்டவிடாமல், வெள்ளைக் குதிரைமேல் வந்து பாதுகாக்கும் புனித வியாகப்பரை (புனித சந்தியாகப்பர்) பாதுகாவலராக ஒருமனதாக தீர்மானித்தனர்‌.

புனித வியாகப்பரின் வழியாக தொழிலில், வாழ்க்கையில் கருப்பந்துறை மக்கள் சிறந்து விளங்கியதால் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய ஓடு வேய்ந்த ஆலயம் ஒன்றைக் கட்டினர்.

அருள்பணி. வி.கே.எஸ். அருள்ராஜ்  அடிகளாரின் பெரும் முயற்சியினால் பள்ளிக்கு என்று ஒரு இடம் வாங்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில்  அருள்பணி. வியாகப்பராஜ் அவர்களுடைய தலைமையில் பள்ளிக்கூடமும் கட்டப்பட்டது.

2005 ஆம் ஆண்டு முதல் நெல்லை டவுன் பங்கின் கிளைப்பங்காக கருப்பந்துறை ஆனது.

புனிதரின் பரிந்துரையால் அளவற்ற நன்மைகளை பெற்றுக் கொண்ட இறைமக்கள் இணைந்து, பழைய ஆலயத்தை இடித்து விட்டு தற்போதைய புதிய ஆலயத்தை நெல்லை டவுன் பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி சேவியர் பணிக்காலத்தில் கட்டி முடித்து, 07.06.2010 அன்று மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் DD, அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

கருப்பந்துறை கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் மகா கிருபையினால், கருப்பந்துறை வாழ்மக்கள் கீழ் நிலையிலிருந்து இப்பொழுது உயர்ந்த ஒரு பொருளாதார நிலையை அடைந்துள்ளனர்.

இறைமக்கள் பலர் இந்திய அரசாங்க பணிகளிலும், தமிழ்நாட்டு அரசு பணிகளிலும், காவல்துறையினர், வக்கீல்கள், ஆசிரியர்கள், ஆடிட்டர்கள்,  பொறியாளர்கள் என பல துறைகளிலும் உள்ளனர்.

ஒரு காலத்தில் கருப்பந்துறையில் வாழ்ந்த மக்கள் இங்கு நாடகக் கலைகள் நடத்தி மக்களை மகிழ்வித்தனர். இந்த நாடகக் கலைஞர்களையும், நாடகங்களையும் காண சுற்றுப்புறமெங்கும் உள்ள பொதுமக்கள் கருப்பந்துறை நோக்கி படையெடுத்தனர்.

அதேபோல சிலம்பம் போன்ற கலைகளை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள் கருப்பந்துறையில் வாழ்ந்து வந்தனர். இலங்கையிலிருந்து வந்த பத்திரிக்கையாளர்கள் இங்குள்ள ஆசான்களை பேட்டி கண்டு இலங்கை பத்திரிக்கைகளிலும், இலங்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தனர். இதுவும் கருப்பந்துறையின் பெயரும் புகழுக்குமான ஒரு நற்சான்று..

பின்னாட்களில் பல ஊர்களில் இருந்தும் அதாவது சிங்கம்பாறை, தாளார்குளம், தட்டார்மடம், தட்டம்பட்டி போன்ற ஊர்களிலிருந்து மக்கள் கருப்பந்துறையில் வந்து குடியேறினர். இன்றுவரை கருப்பந்துறை மக்கள் தங்களுடைய வாழ்வில் வளமையும், செழுமையும் அடைந்து பாதுகாவலர் புனித சந்தியாகப்பரின் வழிகாட்டுதலிலும் பாதுகாப்பிலும் சிறந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவருடைய பாதுகாப்பு இம் மக்களுக்கு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு நன்றி கூறி விடைபெறுகிறோம் நன்றி..

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் ஜெபக்குழு

2. ஆவேமரியா இளம்பெண்கள் இயக்கம்

3. ஜேம்ஸ் இளைஞர் இயக்கம்

4. தொன்போஸ்கோ 

சிறுவர் குழு

5. ஜேம்ஸ் மறைக்கல்வி மன்றம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை. பா. சேசுராஜ் மற்றும் ஆலய பொறுப்பாளர்கள்