536 திரு இருதய ஆண்டவர் ஆலயம், சூரமங்கலம்

         

திரு இருதய ஆண்டவர் ஆலயம்

இடம் : சூரமங்கலம் 

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : சேலம்


நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் : 

1. புனித அந்தோணியார் ஆலயம், ஜங்சன்

2. புனித செபஸ்தியார் ஆலயம், மாஞ்சோலை

3. அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம், கருப்பூர்

பங்குத்தந்தை : அருட்பணி. S. அருளப்பன், சேலம் மறைவட்ட முதன்மை குரு.


குடும்பங்கள் : 600

அன்பியங்கள் : 25


திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு காலை 06.00 மணி, காலை 08.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும் திருப்பலி. 

வாரநாட்களில் காலை 06.15 மணிக்கு திருப்பலி. 

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 9 நாட்கள் இறைஇரக்க நவநாளும் திருப்பலியும் நடைபெறும்.


திருவிழா : ஜூன் இரண்டாம் வாரத்தில் பத்து நாட்கள். 


மண்ணின் இறையழைத்தல்கள்:


அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. P. சேவியர் 

2. அருட்பணி. P. லியோ ஜெயராஜ்

3. அருட்பணி. D. மைக்கேல்ராஜ் செல்வம்

4. அருட்பணி. M. ஸ்டேன்லி குமார்

5. அருட்பணி. N. அருள்சுந்தர்

6. அருட்பணி. J. ஜூட் நிர்மல்தாஸ்

7. அருட்பணி. A. மரியான் ஆஸ்டி

8. அருட்பணி. T. மரிய ஜோசப்ராஜ்

9. அருட்பணி. A. டோனி ராபர்ட் 

10. அருட்பணி. A. அருள் ரொசாரியோ

11. அருட்பணி. இருதயநாதன்

12. அருட்பணி. சாம்சன்

13. அருட்பணி. அமலநாதன்


அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. நிர்மலா ஜோதி 

2. அருட்சகோதரி. ஜூலி

3. அருட்சகோதரி. சோபியா 

4. அருட்சகோதரி. ஜூலியஸ் ஆக்தா.

5. அருட்சகோதரி. ஜெயா (சிலி, தென்அமெரிக்கா)  


வழித்தடம் : சேலத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் சூரமங்கலம் உள்ளது.

ஈரோட்டிலிருந்து சங்ககிரி வழியாக 64 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் சூரமங்கலம் உள்ளது.


வரலாறு :

கி.பி 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் (1800 -க்குப் பிறகு) சூரமங்கலம் பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கிறிஸ்தவர்களுக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டையிலிருந்து குருக்கள் வந்து 50 ஆண்டுகள் ஆன்மீகப் பணியாற்றினார்கள். இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் பக்தியின் அடையாளமாகப் பொது இடத்தில் ஒரு குருசடி அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் சேலத்தில் இரயில்வே வழித்தடமும் முதல் இரயில்வே ஜங்சன் அமைக்கும் பணியும் 1856 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது உள்ள இரயில்வே ஜங்சன் 1861ம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

அந்தக் காலகட்டத்தில் சேலம் லீபஜார்- ஜங்சன் சாலையில் ஒரு சிற்றாலயம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1865 -ம் ஆண்டு சிலுவை வடிவில் ஒரு சிறு ஆலயம் கட்டப்பட்டது.1865ல் தயாரிக்கப்பட்ட கூரை ஓடுகள் இன்றும் இதற்கு சாட்சி. "சூரமங்கலம்" என்ற பெயர் முதல்முறையாக செவ்வாய்ப்பேட்டை திருமுழுக்குப் பதிவேட்டில் 10.07.1864 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 1910 ஆம் ஆண்டு அருட்தந்தை. ஜீன் புருயே அவர்கள் சேலம் (செவ்வாய்ப்பேட்டை) பங்குத்தந்தையாக இருந்தபோது, மாலை நேரங்களில் சூரமங்கலத்தில் தங்கியிருந்தார். அவரே 1925ம் ஆண்டு இரயில் நிலையத்திற்கு எதிரே மக்களின் பயன்பாட்டிற்காக 87 சென்ட் நிலம் வாங்கினார். அந்த இடத்தில்தான் இப்போதுள்ள புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இன்று அந்தப் பகுதி அந்தோணிபுரம் என்று அழைக்கப்படுகிறது.1929ம் ஆண்டு சூரமங்கலம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை. அதிரூபன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். சூரமங்கலத்தில் திருமுழுக்குப் பதிவேடு 27.07.1929 அன்று முதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அருட்தந்தை. அதிரூபன் அவர்கள் லூர்து அன்னைக்கு ஒரு கெபி எழுப்பினார்.

பொன்விழா ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:

நாளடைவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தது. ஆகவே, பழையக் கோயிலில் இடம் போதாமையால் புதிய கோயில் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, அப்போதையப் பங்குத்தந்தை அருட்பணி. அமல்ராஜ் அவர்கள் எடுத்த முயற்சியால் மேதகு ஆயர் வெண்மணி செல்வநாதர் அவர்களால் 17.09.1967ல் புதியக் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. புதியக் கோயில் கட்டும் பணி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. பொன்விழாக் காணும் புதியக் கோயில் 14.12.1969ல் மேதகு. ஆயர். வெண்மணி செல்வநாதர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் கட்டிட வரைபட நகல், சேலம் நகராட்சியால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. புதிய ஆலயம் கட்டியப் பிறகு பழைய ஆலயம், பங்குத்தந்தையின் இல்லமாகவும், வின்சென்ட் தே பவுல் சபையின் அலுவலகமாகவும், தையல் தொழிற்பயிற்சிக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது.

பங்கு ஆலயத் திருத்தூயகம்:

பொன்விழா ஆலயத்தின் அடிக்கல் நாட்டியதின் 50 ஆம் ஆண்டின் நினைவாக அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள் நற்கருணைப் பேழை, திருப்பலி பீடம் மற்றும் அதன் பின்புலம் ஆகியவற்றை 2017 ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் அழகுற அமைத்தார். இயேசுவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பு முதலியவற்றை உயிருள்ள காட்சிகளாக வடிவமைத்தார்.

கல்லறைத் தோட்டங்கள் :

ஆலய வளாகக் கல்லறைத் தோட்டம் :

1913 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரும், பொதுமக்களும் ஆலய வளாகத்தில் உள்ள கல்லறையில் இறந்தவர்களை அடக்கம் செய்தனர். இந்த கல்லறைகளின் மத்தியில் அருட்பணி. ஜீன் புருயே அவர்களுக்காக நினைவுத்தூண் எழுப்பப் பட்டுள்ளது. 

அந்தோணிபுரம் கல்லறைத் தோட்டம் :

தற்போது ஜங்சன் அருகிலுள்ள அந்தோணிபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டம், பங்கு கல்லறைத் தோட்டமாக பயன்படுத்தப் படுகிறது. இந்த கல்லறைத் தோட்டத்திற்கு அருட்பணி. S. இருதய செல்வம் அவர்கள் சுற்றுச்சுவர் எழுப்பி, கல்லறைக் காவலருக்கு வீடும் கட்டி, திருப்பலி நிறைவேற்றுவதற்கு அழகு பீடமும், கல்லறைத் தோட்ட முகப்பில் வியாகுல அன்னை சுரூபமும் அமைத்துள்ளார்.

பங்கு மன்றம்:

அருட்பணி. செபாஸ்டியன் அவர்கள் பங்கு மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக ஆலயத்தின் வலப்புறம் பங்குமன்றம் கட்டினார்.13.01.1991 அன்று மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் இம்மன்றத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். இந்தக் கட்டிடம் பழுதான நிலையில் இருந்ததால் அருட்பணி. அருளப்பன் அவர்கள் அதைப் புனரமைத்தார். 17.02.2019 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் இம்மன்றத்தை ஆசீர்வதித்து மக்களுக்கு வழங்கினார்.

இறை இரக்கத்தின் இல்லம் :

அருட்பணி. ஞானப்பிரகாசம் அவர்கள் பணிக்காலத்தில் பங்குத்தந்தை தங்கும் "இறை இரக்கத்தின் இல்ல"த்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அருட்பணி. ஜான் ஜோசப் அவர்கள் பணிக்காலத்தில் இந்த இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.16.01.2005 ல் சேலம் ஆயர் மேதகு. சிங்கராயன் அவர்கள் இந்த இல்லத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

நற்கருணை ஆராதனை ஆலயம்:

அருட்பணி. அந்தோணி மரிய ஜோசப் அவர்கள் பணியாற்றியபோது "நற்கருணை ஆண்டின்" நினைவாகப் போர்த்துக்கீசிய கட்டிட வடிவமைப்பிலேயே பழையக் கோயில் புதுப்பிக்கப்பட்டு "நற்கருணை ஆராதனை ஆலய"மாக மாற்றப்பட்டது.12.12.2012 அன்று மேதகு. ஆயர்.செ. சிங்கராயன் அவர்கள் இவ்வாலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். பேரருட்பணி. பிலவேந்திரம் அவர்கள் நற்கருணையை ஸ்தாபகம் செய்து வைத்தார்.சேலம் மறைமாவட்டத்தில் இது இரண்டாவது நற்கருணை ஆராதனை ஆலயமாகும். தினமும் காலை 05.00 மணிமுதல் இரவு 09.00 மணிவரை மக்கள் ஆராதனைக்காக சிற்றாலயம் திறந்து வைக்கப்படுகிறது.

ஆலயத்தின் நுழைவுவாயில் மற்றும் சுற்றுச்சுவர்:

ஆலயத்தின் முன்புறம் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இருந்ததினால் அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள் புதிதாக சுற்றுச்சுவர் எழுப்பி நுழைவு வாயிலை அமைத்தார். மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் 24.11.2013 அன்று இந்து நுழைவு வாயிலையும் சுற்றுச்சுவரையும் ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.

நற்கருணை ஆராதனை ஆலயத்தின் நுழைவாயில்:

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015 முதல் 2016 வரை உள்ள ஆண்டை "இறை இரக்கத்தின் ஆண்டாக" அறிவித்தார்.இரண்டாம் வத்திக்கான் சங்கம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இதனை இறை இரக்கத்தின் பொன்விழா ஆண்டாக ஒவ்வொரு மறைமாவட்டமும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். அதன் நினைவாக அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள், நற்கருணை ஆராதனை ஆலயத்தின் முன்பு இரக்கத்தின் நுழைவாயிலை அமைத்தார். அதன் வலதுபுறம் இறை இரக்க ஆண்டவர் சுரூபமும் இடதுபுறம் மிக்கேல் சம்மனசு சுரூபமும் உள்ளன. இறை இரக்க ஆண்டவர் சுரூபத்தின் பின்புறம் அன்னை தெரசாவின் சுரூபமும் உள்ளது. மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் இந்த நுழைவாயிலை ஆசீர்வதித்து இனி இது "இறை இரக்கத் திருத்தலம்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேய்ப்புப் பணி மையம்:

அருட்பணி. இருதயசெல்வம் அடிகள் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் பின்புறத்தில் 6 அறைகளைக்கட்டி, ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறச் செய்தார். அருட்பணி. S. அருளப்பன் அடிகள் மேற்கண்ட அறைகளில் பங்கு மேய்ப்புப்பணிக்கான பல்வேறு குழுக்கள் கூட்டங்களை நடத்திக்கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.

திருஇருதய ஆண்டவர் குருசடி:

சாலையில் செல்லும் பயணிகள் ஆலயத்தின் முன்புறம் நின்று செபித்துவிட்டு செல்வதைக் கண்ட அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள் சுற்றுச்சுவர் அருகில் திருஇருதய ஆண்டவர் குருசடி அமைக்பட்டு,  16.02.2014 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் ஆசீர்வதிக்கப் பட்டது.

புனித பிரான்சிஸ் அசிசியார் செபத்தோட்டம்:

அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள் பங்குமன்றத்தின் முன்புறம் பங்கு இளையோரைக் கொண்டு பல வகை மரங்களையும் செடிகளையும் வளர்த்து வந்தார். அவ்விடத்தில் அருட்பணி. S. அருளப்பன் அவர்கள் புனித அசிசியார் சுரூபத்தை நிறுவி ஒரு செபத்தோட்டத்தை உருவாக்கினார். திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வாக மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் இயற்கைச் சூழலில் அமைந்த இத்தோட்டத்தை 01.09.2019 அன்று ஆசீர்வதித்தார். மக்கள் தனியாகவும் குடும்பமாகவும் செபித்துவர இத்தோட்டம் பெரிதும் பயன்படுகிறது.

லூர்து மாதா கெபி:

அருட்பணி. அதிரூபன் அவர்கள் 1929ம் ஆண்டு லீபஜார்- ஜங்சன் சாலையைப் பார்த்தபடி லூர்து மாதா கெபியை அமைத்தார். அருட்பணி. அமல்ராஜ் அவர்கள் 1970ம் ஆண்டு ஆலயத்தின் இடதுபுறம் இருந்த பழையக்கிணறு அருகில் மலையின் மேல் உள்ள குகையில் அன்னையின் சுரூபத்தையும் அருகில் சென்று தரிசிக்க நடைபாதையையும் அமைத்தார்.

அருட்பணி. இருதயசெல்வம் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபோது மலைக் குகையில் லூர்து அன்னை பெர்னதெத் சிறுமிக்கு காட்சி அளிப்பது போல ஒரு சுரூபம் அமைத்து குகையினுள் திருப்பலி மேடையையும் அமைத்துக் கொடுத்தார். மேலும் கெபியின் வலதுபுறம் பழையக்கிணறு இருந்த இடத்தில் கேரள கைவினைஞர்களால் திறந்தவெளி மேடை அமைக்கப்பட்டது. இதனை மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்கள் ஆசீர்வதித்தார். திரு. லியோ சார்லஸ் அவர்கள் திறந்தவெளி மேடையையும் லூர்து அன்னை கெபியையும் அழகுடன் அமைத்து ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். தற்போது அருட்பணி. அருளப்பன் அவர்கள் ஆலோசனையின் பேரில் கெபிக்கு மேலும் அழகூட்டி நீர்வீழ்ச்சி ஒன்றை திரு. லியோ சார்லஸ் அவர்கள் நன்கொடையாக அமைத்துக் கொடுத்தார்.

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

*புனித சூசையப்பர் மெட்ரிக் பள்ளி

*புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி

*புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி.

இல்லங்கள்:

*புனித சூசையப்பர் கன்னியர் இல்லம்

*புனித சூசையப்பர் மாணவியர் இல்லம்.

*கொன்சாகா கன்னியர் விடுதி.

*மேய்ப்புப் பணி மையம்

*பங்குத்தந்தையர் இல்லம்

*பங்கு மன்றம்

*புனித அசிசியார் செபத்தோட்டம்.

பங்கில் உள்ள பக்தசபைகள்:

*பங்குப்பேரவை

*வின்சென்ட் தே பவுல் சபை

*தூய வளனார் ஆன்றோர் பேரவை

*மரியாயின் சேனை

*மறைக்கல்வி ஆசிரியர்கள் & இயேசுவின் கண்மணிகள்

*பீடச்சிறுவர்கள்

*வெரோணிக்கா பெண்கள் பணிக்குழு

*திருவழிபாட்டுக் குழு

*இறைஇரக்க பாடகற்குழு

*பசுமைப்படை

*இதய ஒலி ஆசிரியர்குழு

*அருங்கொடைப்பணிக்குழு

*அன்பிய ஒருங்கிணைப்புக் குழு

*இளையோர் குழு.


சூரமங்கலம் பங்கின் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. அதிரூபன் (1929-1930)

2. அருட்பணி. தெல்தூர் (1930)

3. அருட்பணி. லேப்லஸ் (1931-1932)

4. அருட்பணி. டெபிங்னி (1932- 11 மாதங்கள்)

5. அருட்பணி. மார்டின் (1933-1935)

6. அருட்பணி. தெல்தூர் (1935-1938)

7. அருட்பணி. தலச்சிரா (1938-1939)

8. அருட்பணி. பீட்டர் அட்டிபட்டி (1939-1942)

9. அருட்பணி. ஹீர்மாண்ட் (1942-1947)

10. அருட்பணி. குவிங்கெனல் (1947- 8 மாதங்கள்)

11. விடுமுறை காலப் பதிலிகள் (1948-1949)

12. அருட்பணி. மத்தேயு தெக்கடம் (1950-1960)

13. அருட்பணி. குரியகோஸ் குரிசிங்கல் (1960-1963)

14. அருட்பணி. S. அமல்ராஜ் (1963-1975)

15. அருட்பணி. S. C. செபாஸ்டியன் (1975-1983)

16. அருட்பணி. N. S. இருதயம் (1983-1984)

17. அருட்பணி. S.புஷ்பநாதன் (1984-1986)

18. அருட்பணி. A.செபாஸ்டியன் (1986-1995)

19. அருட்பணி. R.சேவியர் (1995-1998)

20. அருட்பணி. M. ஞானப்பிரகாசம் (1998-2003)

21. அருட்பணி. S. ஜான் ஜோசப் (2003-2008)

22. அருட்பணி. அந்தோணி மரிய ஜோசப் (2008-2013)

23. அருட்பணி. S. இருதய செல்வம் (2013-2018)

24. அருட்பணி. S. அருளப்பன் (2018 முதல் தற்போது வரை...)


இணை மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. M. ஆரோக்கியம்

2. அருட்பணி. K. குழந்தையரசு

3. அருட்பணி. A. L இருதயம்

4. அருட்பணி. I. கிரகோரி ராஜன்

5. அருட்பணி. D. குருசடி சகாயராஜ்

6. அருட்பணி. S. லூர்துசாமி

7. அருட்பணி. அமிர்தராஜ்.

8. அருட்பணி. A. ஜான்போஸ்கோ பால்

9. அருட்பணி. S. ஜோசப் பால்ராஜ்

10. அருட்பணி. T. ஜான் கென்னடி

11. அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர்.


தகவல்கள்: பங்குத்தந்தை S. அருளப்பன் அவர்கள். 

வரலாறு : பங்கின் பொன்விழா மலர்.

புகைப்படங்கள் : பங்கின் இளையோர் மற்றும் செவ்வாய்பேட்டை பங்கு உறுப்பினர்.