581 புனித யூதா ததேயு ஆலயம், குட்டைக்காடு

       

புனித யூதா ததேயு ஆலயம்

புனித யூதா ததேயு ஆலயம்

இடம் : குட்டைக்காடு (குட்டைகுழி) 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம் : முளகுமூடு

கிளைப்பங்கு : கிறிஸ்து அரசர் ஆலயம், சாய்க்கோடு ( நல்லவிளை) 

குடும்பங்கள் : 172

அன்பியங்கள் : 7

பங்குத்தந்தை : அருள்பணி. G. கிறிஸ்து ராஜ் 

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணி

திங்கள் காலை 06.30 மணி திருப்பலி (கன்னியர் இல்லம், குட்டைகாடு) 

செவ்வாய், புதன், வியாழன் மாலை 06.30 மணி ஜெபமாலையை தொடர்ந்து திருப்பலி.

வியாழன் திருப்பலியோடு புனித யூதா ததேயு நவநாள்.

வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.30 மணி.

திருவிழா : பொங்கல் விடுமுறையை மையப்படுத்தி 10 நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்சகோதரி. Y. அல்போன்சாள், இம்மாகுலேட் சபை

2. அருள்சகோதரி. Y. ஜெசிந்தாள், கிளாரம்மாள் சபை, பெல்லாரி 

3. அருள்சகோதரி. Y. லிற்றில் பிளவர், நிர்மலா கான்வென்ட், மணிப்பூர் 

4. அருள்சகோதரி. Y. மேரி பிரான்சிஸ்காள், கிளாரம்மாள் சபை, பிரான்ஸ்.

வழித்தடம் : கன்னியாகுமரி திருவனந்தபுரம் முக்கிய சாலையில், புலிப்பனத்திலிருந்து ஆற்றூர் செல்லும் வழியில் 1.5 கி.மீ தொலைவில் குட்டைக்காடு அமைந்துள்ளது . 

Location Map : St. Judes Church kuttaikadu, Attoor, Tamil Nadu 629179

https://maps.google.com/?cid=9001026868755858679

வரலாறு :

குட்டைக்காடு புனித யூதா ததேயு ஆலயமானது வடக்கே காட்டுவிளை-யையும், தெற்கே மாடப்பன்விளை-யையும், கிழக்கே காராட்டுவிளை-யையும், மேற்கே புதுக்குளத்தையும் எல்கைகளாக கொண்டுள்ளது. 

குட்டைக்காடு பங்கானது 1984 -ஆம் ஆண்டு வரையில் பள்ளியாடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. அக்காலத்தில் ஒருசில குடும்பங்களைத் தவிர, மற்ற அனைவரும் பிறசமயத்தை சார்ந்தவர்கள். கிறிஸ்தவ மக்கள் வழிபட சரியான ஆலயமும் இல்லை. 

ஆன்மீக வாழ்வில் ஆர்வமும், பற்றுதலும் கொண்ட ஐரோப்பாவைப் சேர்ந்த அருள்பணி. பீட்டர் தாமஸ், OCD அவர்கள் பள்ளியாடி பங்கின் பங்குத்தந்தையாக இருந்த போது, குட்டைக்காடு வந்து பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டார். மக்கள் அறியாமையில் வாழ்வதை கண்ணுற்ற அருள்தந்தை அவர்கள் 1933 -இல் துவக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார்.

அவரது நற்செய்திப் பணியால் பலரும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ மறையில் இணைந்தனர்.  அவ்வப்போது இப்பள்ளிக்கூடத்தில் ஞாயிறு திருப்பலி நடந்து வந்தது. 

பின்னர் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. N. J. ஜார்ஜ் அவர்கள் பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்துவதற்கும், மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்துவதற்காகவும், முட்டம் -புனித அன்னாள் சபை அருள்சகோதரிகளை இங்கு வந்து செல்ல ஏற்பாடு செய்தார். 1965 -ஆம் ஆண்டு பள்ளியின் நிர்வாகத்தை அருள்சகோதரிகளிடம் ஒப்படைத்தார். அருட்பணியாளர் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோரது அயராத நற்செய்திப் பணியால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆகவே கேரளாவைச் சேர்ந்த  திரு. மொராயிஸ் அவர்கள் ஆலயத்திற்கு தானமாகக் கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தின் வடக்குப் பகுதியில் சிறு ஆலயம் கட்ட 02.07.1963 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 29.08.1965 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

முட்டத்திலிருந்து இங்கு வந்து செல்ல போதிய வசதியில்லாமல் அருள்சகோதரிகள் சிரமப்படுவதை கண்ணுற்ற அருள்பணி. N. J. ஜார்ஜ் அவர்கள், அருள்சகோதரிகள் இல்லம் கட்டும் பணியை 29.08.1965 இல் தொடங்கினார். 21.04.1969 இல் பணிகள் நிறைவு பெற்றது. புனித அன்னாள் சபை அருள்சகோதரிகளும் நிரந்தரமாக இங்கேயே தங்கி பள்ளிக்கூடத்தை கவனித்துக் கொண்டே, பங்கின் ஆன்மீகப் பணியிலும், மறைப்பரப்புப் பணியிலும் ஈடுபட்டு வந்தனர். 21.09.1967 இல் பள்ளியானது நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது. 

கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கையும், இறை நம்பிக்கையும் அதிகரித்து வருவதைக் கண்ணுற்ற அருள்பணி. N. J. ஜார்ஜ் அவர்கள் ஆலய முன்பகுதியில் 1966 ஆம் ஆண்டு புனித யூதா ததேயு குருசடியை அமைத்தார்.

படிப்படியாக குட்டைக்காடு திருச்சபை வளர்ச்சியடைந்து, காட்டுவிளை, சாய்க்கோடு ஆகியவற்றை கிளைப்பங்குகளாக கொண்டு 19.10.1984 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. A. M. ஹிலரி அவர்கள் பொறுப்பேற்று, பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் தரிசு நிலமாக இருந்ததை பண்படுத்தி இரப்பர் மரங்களை நடச் செய்து, பங்கின் வருமானத்திற்கு வழிவகை செய்தார். மேலும் பங்குத்தந்தை இல்லத்தை சீரமைத்தார். 

தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அருள்பணி. G. அல்போன்ஸ் அவர்களும், 1990 ஆம் ஆண்டு அருள்பணி.‌ V. M. ஜார்ஜ் அவர்களும் பங்குப்பணியாளர்களாக பொறுப்பேற்று நற்செய்தி பணியாற்றினர்.

1993 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட அருள்பணி. மெல்கியாஸ் பணிக்காலத்தில் ஆலய மணிக்கோபுரம் கட்டப்பட்டது. மேலும் குட்டைக்காடு மற்றும் சாய்க்கோடு பங்கு ஏழை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, தனது மறைவிற்கு முன்பு மூன்று இலட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைத்துச் சென்றார்.

28.10.1995 அன்று அருள்பணி. ஜான் அமலநாதன் அவர்களால் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு அருள்பணி. ஜோசபாத் மரியா அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. குருசடி புனரமைக்கப் பட்டது. 

பங்கு மக்களின் ஆன்மீகத் தேவையை கருத்தில் கொண்டு குட்டைகாட்டில் நடைபெற்று வந்த 8 அன்பியங்களில் 4 அன்பியங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, செறுகோல் கரும்புத்தோட்டம்  கிளைப் பங்காக 13.08.1999 அன்று உருவாக்கப்பட்டது.  

2001 ஆம் ஆண்டு அருள்பணி.‌ A. ஜோசப் ராஜ் அவர்கள் பொறுப்பேற்று நற்செய்திப் பணியாற்றினார்.

09.08.2001 அன்று பொறுப்பேற்றுள்ளார் அருள்பணி. D. பெஞ்சமின் பணிக்காலத்தில் பங்கின் இளைஞர்கள், அன்பியங்கள் மற்றும் பங்கின் நிதியுதவியுடன் புனித யூதா ததேயு கலையரங்கம் கட்டப்பட்டு 06.04.2003 அன்று வட்டார முதன்மைப் பணியாளர் அருள்பணி. இயேசு ரத்தினம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

10.07.2005 அன்று பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, அருள்பணி. பெஞ்சமின் அவர்களின் முயற்சியால், மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 26.08.2007 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அருள்பணி. விமல் ராஜ் பணிக்காலத்தில் பங்கின் வெள்ளிவிழா நினைவாக ஆலய கொடிமரம் நிறுவப்பட்டு 19.04.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

குட்டைக்காடு பங்கின் கிளைப்பங்கான செறுகோல் கரும்புத்தோட்டம் 16.05.2009 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.

2011 ஆம் ஆண்டு அருட்பணி. M. டேவிட் மைக்கிள் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் சிறப்புற பணிபுரிந்தார்.

2013 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட அருள்பணி.‌ P. K. செல்லையன் அவர்களின் பணிக்காலத்தில், பங்கு மக்களின் அயரா முயற்சியோடும், தன்னிறைவுத் திட்ட நிதியுதவியோடும் 2014 ஆம் ஆண்டு கல்லறைத் தோட்டத்திற்கு 15 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. ஏழாம் அன்பியம் தூய காணிக்கை மாதா அன்பிய பகுதியில், அவ்வன்பிய மக்களின் முயற்சியால் நிலம் வாங்கப்பட்டு, குருசடி கட்டப்பட்டது.

27.05.2017 அன்று அருள்பணி. G.  கிறிஸ்துராஜ் அவர்கள் பங்கின் பொறுபேற்றுக் கொண்டு, குட்டைக்காடு இறைசமூகத்தை சிறப்புடன் வழிநடத்தி வருகின்றார்.

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள் :

1. பங்கு பேரவை

2.  அன்பிய ஒருங்கிணையம்

3. அடித்தள முழு வளர்ச்சி சங்கம்

4. மரியாயின் சேனை

5. கத்தோலிக்க சேவா சங்கம் 

6. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் 

7. பாலர் சபை 

8. சிறுவழி இயக்கம்

9. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம்

10. இளையோர் இயக்கம் 

11. மறைக்கல்வி மன்றம்.

பங்கில் உள்ள குருசடிகள்:

தூய யூதா ததேயு

தூய பதுவை அந்தோணியார்

அன்னை மரியாள் (மூன்றும் ஒரே இடத்தில்) 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. ஹில்லரி (19.05.1984 -1989 மே) 

2. அருள்பணி. அ. அல்போன்ஸ் (1989 மே -1990 மே) 

3. அருள்பணி. V. M. ஜார்ஜ் (1990 மே -1993 மே) 

4. அருள்பணி. மெல்கியாஸ் (1993 மே -27.06.1995)

5. அருள்பணி. ஜான் அமலநாதன் (16.08.1995 -18.05.2001)

6. அருள்பணி. அருள்பணி. ஜோசப்ராஜ் (18.05.2001 -09.08.2001)

7. அருள்பணி. பெஞ்சமின் (09.08.2001 -20.05.2008)

8. அருள்பணி. A. விமல்ராஜ் (20.05.2008 -14.05.2011)

9. அருள்பணி. M. டேவிட் மைக்கேல் (15.05.2011 -2013 மே) 

10. அருள்பணி. P. K. செல்லையன் (2013 மே -26.05.2017)

11. அருள்பணி. G. கிறிஸ்து ராஜ் (27.05.2017 முதல் தற்போது வரை..)

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. G. கிறிஸ்துராஜ் அவர்கள்.