362 புனித சவேரியார் ஆலயம், சோகனூர்

     

புனித சவேரியார் ஆலயம்.

இடம் : சோகனூர், குருவராஜ் பேட்டை அஞ்சல், 631101.

மாவட்டம் : வேலூர்
மறை மாவட்டம் : வேலூர்
மறை வட்டம் : அரக்கோணம்

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் :
1. அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்
2. புனித சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்
3. அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்.

பங்குத்தந்தை : அருட்பணி A. தேவசகாயம் BA BL

குடும்பங்கள் : 56 (கிளைகள் சேர்த்து 150)
அன்பியங்கள் : 3 (கிளைகள் சேர்த்து 11)

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு (பங்கு ஆலயத்தில்)
காலை 07.00 மணிக்கு (சோளிங்கர்)
மாலை 04.00 மணிக்கு (ஜானகாபுரம்)
மாலை 06.00 மணிக்கு (நந்தி வேடந்தாங்கல்)

திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

புதன், வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : ஜூன் மாதம் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 13 ம் தேதி புனித அந்தோணியாரின் பெருவிழா தேர்பவனி என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி M. I. ராஜ்
2. அருட்சகோதரர் ராகுல்

1. அருட்சகோதரி கல்பனா
2. அருட்சகோதரி கலைச்செல்வி.

வழித்தடம் :
சோளிங்கர் - சாலை -சோகனூர் 16 கி.மீ.
அரக்கோணம் - சாலை - சோகனூர் 12 கி.மீ.
திருத்தணி - குருவராஜ் பேட்டை - சோகனூர் 11 கி.மீ.

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சோகனூர் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய புனித அந்தோனியார் ஆலயம் கட்டப்பட்டு, அரக்கோணம் பங்கின் கிளையாக செயல்பட்டு வந்தது.

பின்னர் 2004 ம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி Dr G மத்தியாஸ் (1999-2010) அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று இப்பங்கை சிறப்பாக வழி நடத்தினார்கள்.

அருட்பணி G. மத்தியாஸ் அவர்களின் பணிக்காலத்தில் 15-01-2006 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் பணிகள் நிறைவு பெற்று 16-12-2006 அன்று வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு சௌந்தர்ராஜ் SDB அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, புனித சவேரியார் ஐ பாதுகாவலராகக் கொண்டு சிறப்பு பெற்று விளங்குகிறது. மேலும் அருட்பணி G. மத்தியாஸ் அவர்கள் பங்குத்தந்தை இல்லம் கட்டி, அதனை அப்போதைய வேலூர் மறை மாவட்ட ஆயர் மேதகு A. M சின்னப்பா அவர்களால் 03-07-2001 அன்று திறந்து வைக்கப் பட்டது. மற்றும் ஆலய மதிற்சுவர், பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் கட்டினார்.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி பவுல் வேளாங்கண்ணி (2010-2011)அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை இம் மக்களுக்கு உணர்த்தினார். அன்பியங்கள், பங்குப்பேரவை துவக்கினார். இளையோர்களை சிறப்பாக கட்டமைத்து வழி நடத்தினார்கள்.

அருட்பணி செபாஸ்டின் (2011-2013) அவர்கள் சிறப்பாக வயலின் இசை மீட்டக்கூடியவர். அனைவரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்கள்.

தொடர்ந்து பணி பொறுப்பேற்ற தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி தேவசகாயம் (2013 முதல் தற்போது வரை) அவர்கள் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

அன்பியங்களை சீர்படுத்தி, திருவழிபாட்டின் ஒவ்வொரு முறைகளையும் அதன் ஆழமான அர்த்தத்தையும் புரிதலையும் மக்களுக்கு கொடுத்ததுடன், திருவிவிலியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்து மக்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தியுள்ளார்.

புனித அந்தோணியார் கெபி கட்டி மக்களின் செபிக்கும் முயற்சிக்கு உதவி புரிந்துள்ளார்.

மேலும் இளைஞர்கள், இளம் பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற சமூக ஆர்வலர்களைக் கொண்டு அவ்வப்போது பயிற்சிகள் கொடுப்பதுடன், மூன்று மாதத்திற்கொரு முறை பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக பல்வேறு நிலைகளில் இப்பங்கை தமது சிறந்த திட்டமிடல்களால் இறைவனின் விருப்பத்திற்கிணங்க சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

புனித தொமினிக்கன் சபையும், அருட்சகோதரிகளும் :

சோகனூர் மற்றும் அதன் கிளைப்பங்குகளில் தொமினிக்கன் சபை அருட்சகோதரிகளின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது. 2002 ல் அருட்சகோதரி ஷைபி, அருட்சகோதரி ஆனியம்மா (superior), மற்றும் அருட்சகோதரி அனுலா ஆகிய மூவரைக் கொண்டு சபை இங்கு ஆரம்பமானது. அருட்சகோதரி அனுலா அவர்கள், இப்பகுதி மக்கள் கிறிஸ்தவம் தழுவ முக்கிய காரணமாக இருந்ததுடன் கல்விப்பணியையும் சிறப்பாக செய்தார்கள்.

இங்கு ஆறாண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அருட்சகோதரி ஜோஸபின் அவர்களது பணி போற்றுதலுக்குரியது.

2013 முதல் அருட்சகோதரி அனுபா பள்ளியின் தலைமையாசிரியையாக இருந்து, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பத்தாம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி பெற உழைத்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அருட்சகோதரி ஷீனா பால் அவர்கள் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு ஏழை எளிய மக்களின் வாழ்விற்காக உழைத்தவர்கள். இவர்களோடு இணைந்து அருட்சகோதரி பிறேமா, அருட்சகோதரி லிசியு ஆகியோரும் சோகனூர் மக்களுக்காக உழைத்தவர்கள் என்பது என்றும் நினைவு கூறத் தக்கது.

தற்போது இச்சபையில் அருட்சகோதரிகள் புனிதா (தலைமை அருட்சகோதரி), ஜெனிபர், அல்போன்சா, ஜோஸ்மேரி, சரோஜ் என ஐந்து அருட்சகோதரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் கல்விப் பணியிலும் நற்செய்தி அறிவிப்பு பணியிலும் தங்களை முழுமையாக ஒப்புவித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

சோகனூர் மக்களுக்காக தங்களையே அர்ப்பணம் செய்த புனித தொமினிக்கன் சபை அருட்சகோதரிகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சோகனூர் மக்கள் பதுவை புனித அந்தோணியார் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள். ஆகவே புனிதரின் நாளில் இவ்வாலய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.