917 வேளாங்கண்ணி மாதா திருத்தலம், கருமலை

           

வேளாங்கண்ணி மாதா திருத்தலம்

இடம்: கருமலை, வால்பாறை

மாவட்டம்: கோயம்புத்தூர்

மறைமாவட்டம்: கோயம்புத்தூர்

மறைவட்டம்: பொள்ளாச்சி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: திருஇருதய ஆலயம், வால்பாறை

பங்குத்தந்தை: அருள்பணி. ஜெகன் ஆன்றனி

உதவி பங்குத்தந்தை: அருள்பணி. விசுவாச அலெக்ஸ், MMI

குடும்பங்கள்: 15

அன்பியம்: 1

ஞாயிறு திருப்பலி நண்பகல் 12:00 மணி

மாதத்தின் முதல் வெள்ளி காலை முதல் மாலை வரை சிறப்பு உபவாசக் கூட்டம்

திருவிழா: செப்டம்பர் மாதம் இரண்டாவது சனி, ஞாயிறு 

வழித்தடம்: மதுரை -பழனி -வால்பாறை -கருமலை

பொள்ளாச்சி -வால்பாறை -கருமலை

வால்பாறையிலிருந்து 8கி.மீ தொலைவில் கருமலை அமைந்துள்ளது. 

Location Map: https://g.co/kgs/AYLoy5

வரலாறு:

மலைவளம் செரிந்த கருமலை எஸ்டேட் பகுதி கி.பி. 1942-ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிகப் பெரிய ஒரு காடாக காட்சியளித்தது. அக்காட்டில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக கேரளாவிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் அக்காட்டை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

பாம்புத் தொல்லைகள் அதிகமாக இருந்ததால், புனித வர்க்கீஸ் படம் (புனித ஜார்ஜ்) வைத்து மக்கள் அங்கு வழிபாடு நடத்தினர். பின்னர் மக்கள் ஒரு ஆலயம் அங்கு கட்ட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அந்த எண்ணம் நிறைவேற ஒரு இடம் தேவைப்பட்டது.

இக்கருத்தை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு கருமலை டாப் டிவிஷனில் பணியாற்றி வந்த, ஜார்ஜ் என்ற காட்டு இலாகா அதிகாரியிடம் கூறினார்கள். பின்னர் அவர் காங்க்ரீவ் என்ற ஆங்கிலேய துரையிடம் அவ்விடத்தில் ஆலயம் கட்டித்தருமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் இக்கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இது ஒருபுறமிருக்க காங்க்ரீவ் அவர்கள் காடுகளை மேற்பார்வையிட குதிரையுடன் அவ்வழியில் வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் குதிரை நின்றுவிட்டு நடக்க மறுத்தது. அதைக்கண்ட துரை மனம் வருந்தினார். பின்னர் காட்டு இலாகா அதிகாரியை அழைத்து, குதிரை இவ்விடத்திலிருந்து செல்ல மறுக்கிறது. இதன் காரணமென்ன என்று வினவினார். அதற்கு அக்காட்டிலாகா அதிகாரி இந்த இடத்தில்தான் புனித ஜார்ஜியாரின் ஆலயம் அமைக்க இறைவன் விரும்புகிறார். ஆகவே இறையருளைப் பரப்புவதற்கு ஆலயம் ஒன்று அமைப்பதாக வாக்குக் கொடுங்கள் குதிரை சென்றுவிடும் என்று கூறினார். துரை அவர்கள் ஆலயம் கட்டலாம் என்று வாக்குக் கொடுத்தவுடன் குதிரை அவ்விடத்திலிருந்து சென்றது. இந்நிகழ்ச்சி அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

துரையின் வாக்குறுதியை உடனடியாக செயல்படுத்தும் வண்ணம் மறுநாளே அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் வால்பாறை பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டியன் முதன் முறையாக திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின்னர் இக்கோயிலின் மூலமாக பல அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன. மக்களைத் துன்புறுத்தக் கூடிய பல இன்னல்கள் அவ்விடத்தை விட்டு நீங்கின.

இவ்வாலயத்திற்குச் சென்று நம்பிக்கையோடு வணங்குபவர்களுக்கு

அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன. குழந்தையில்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற்றனர். நோயினால் அவதியுற்ற மக்கள் தங்கள் நோய் நீங்கி சுகம் பெற்றனர். இதனால் இக்கோயிலின் மீது அதிக நம்பிக்கையும், பக்தியும் கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதமாக தங்களது குழந்தைகளுக்கு வர்க்கீஸ், வர்க்கியம்மாள் என்ற பெயர்களையே சூட்டினர்.

இவ்வாலயத்தில் வருடத்திற்கு ஒரு முறை திருவிழா நடப்பது வழக்கம். இக்கோயிலை கருமலை டாப் டிவிஷனை சேர்ந்த கனகராஜ் என்ற மேஸ்திரி கண்காணித்து வந்தார். இவ்வாறாக பழைய வர்க்கீஸ் ஆலயம் இருந்து வந்தது.

இந்நிலையில் கி.பி. 1974-ஆம் ஆண்டில் வர்க்கீஸ் ஆலயம் மக்கள் வாழ்ந்து வரும் பகுதியில் மாற்றி கட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி மக்களும் இத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். கம்பெனி இயக்குனர் திரு. லக்கோனி என்பவரின் உத்தரவின்படி, கருமலை டாப் டிவிஷனில் வசித்து வரும் அருமை நாயகம் என்ற மேஸ்திரியின் வீடு இருந்த இடத்தில், ஆலயம் கட்டித்தருவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அப்போது ஜெனரல் மேனேஜராக இருந்த திரு. மேயோ என்ற ஆங்கிலேயர் கருமலை டாப் டிவிஷன் காட்டு இலாகா அதிகாரி திரு. தாம்ஸன், பணிமனை பொறியாளர் திரு. ஆண்ட்ரோஸ் இவர்களால் சிறிய ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலயத்திற்கு வர்க்கீஸ் ஆலயம் என்று பெயர் வைக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர். இயற்கை அன்னை கொலு வீற்றிருக்கும் ஆனைமலைப் பகுதிகளில், வேளாங்கண்ணி மாதா ஆலயம் இல்லாத காரணத்தினால், ஜெனரல் மேனேஜர் மேயோ அவர்கள் இக்கோயிலுக்கு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் என்று பெயர் சூட்டினார். இதற்கு காரணமானவர்

பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் அடிகளார் ஆவார்.

பின்னர் 1975-ஆம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி கோவை மறைமாவட்ட மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களாலும், பங்குத்தந்தை அருள்பணி. அமல்ராஜ அவர்களாலும் இவ்வாலயம் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அருள்பணி. அமல்ராஜ் அவர்கள் இக்கோயிலை விரிவுபடுத்தி மிக நேர்த்தியாக அழகுபடுத்தினார்.

அழகிய புதிய ஆலயம்:

இவ்வாலயம் புதிதாகக் கட்ட அப்போதைய பங்குதந்தை அருட்பணி. A.T.S. கென்னடி அவர்களின் வழிகாட்டலில், 14.03.2001 அன்று ஆயர் மேதகு M. அம்புரோஸ் அவர்களால் இறைமக்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயத்திற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, ஆலயத்திற்கு 500 அடிக்கு முன்பாக இறக்கப்பட்டு, அவை தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஆலயத்தின் வழிபாடுகள் தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, பழைய ஆலயத்தை இடிக்காமல்  (புதிய ஆலயப் பணிகள் நிறைவடையும் தருவாயில் பின்னர் இடிக்கப்பட்டது) அதனைச் சுற்றி கான்கிரீட் தூண்கள் அமைத்து, பல இன்னல்களுக்கு மத்தியில் கட்டுமானப் பணிகள் இரவு பகலாக நடைபெற்றது. ஏறத்தாழ 22 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட போதிலும் கட்டுமானக் காலங்கள் 18 மாதங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆலயம் உள் அளவு மட்டும் நீளம் 60 அடி, அகலம் 36 அடி, உயரம் 25 அடியாகவும் வடிவமைக்கப்பட்டு, 15.01.2003 அன்று பங்குதந்தை அருள்பணி. கென்னடி, மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் முன்னிலையில் கோவை மறைமாவட்ட மேனாள் மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

உபவாசக் கூட்டம்:

பிரதி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமைகளில் வெளியிடங்களில் இருந்து அருட்தந்தைகள், அருட்சகோதரர்கள் வரவழைக்கப்பட்டு, உபவாசக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதுசமயம் சமய வேறுபாடு இன்றி, ஆனைமலைப் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமன்றி சென்னை, கோவை, மதுரை போன்ற பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கலந்து கொண்டு பல்வேறு வரங்களைப் பெற்றுச்செல்கின்றனர்.

இவ்வாலயத்திற்கு இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் வந்து அன்னையிடமிருந்து அருள் வளங்களைப் பெற்றுச் செல்கின்றனர். இவ்வாலயத்தின் மூலமாக பல அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருகின்றன. குழந்தையில்லாதவர்கள் குழந்தைச் செல்வம் பெறுகின்றனர். நோயினால் துன்பப்படுபவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். சமாதானமின்றி வாடுவோர் சமாதானத்தைப் பெற்றுச் செல்கின்றனர். இவ்வாலயத்தில் உள்ள அன்னையின் வழியாக நடைபெறும் அற்புத நிகழ்வுகள் மூலம் வால்பாறை பகுதியிலிருக்கும் 56 எஸ்டேட் மக்களும், பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும் வந்து வரங்கள் பல பெற்று மகிழ்கின்றனர்.

வாருங்கள்! கருமலை வேளாங்கண்ணி மாதாவிடம்!! பெற்றுச் செல்லுங்கள் அளவற்ற நன்மைகளை!!!

தகவல்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் பங்கு ஆலய உறுப்பினர் திரு. Suresh அவர்கள்.