677 தூய லூர்து அன்னை ஆலயம், இலந்தைகுளம்

         
தூய லூர்து அன்னை ஆலயம்

இடம்: இலந்தைகுளம், சிங்கம்பாறை வழி, முக்கூடல் அஞ்சல், 627601

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: அம்பாசமுத்திரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சின்னப்பர் திருத்தலம், சிங்கம்பாறை

பங்குத்தந்தை: அருள்பணி. ம. செல்வராஜ்

குடும்பங்கள் : 320

அன்பியங்கள் : 11

சனிக்கிழமை மாலை 07.30 மணிக்கு திருப்பலி

ஒவ்வொரு மாதத்தின் 11-ம் தேதி மாலை 06.30 மணிக்கு அற்புத கெபியில்: திருப்பலி, நோயாளர்களுக்கு செபம், நற்கருணை ஆசீர், மாதாநவநாள், தொடர்ந்து அசனவிருந்து

திருவிழா: பெப்ரவரி மாதம் 2-ம் தேதி கொடியேற்றம், 11-ம் தேதி திருவிழா என பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. L. சகாய சின்னப்பன், Palayamkottai Diocese

2. அருள்பணி. P. அந்தோணி செல்வம், MSFS, Gulbarga diocese, Karnataka

3. அருள்சகோதரி. P. பனி ஹெலன், FSM, France

4. அருள்சகோதரி. J. அந்தோணி பார்பராள், CIC

5. அருள்சகோதரர். A. வியாகப்பன்

வழித்தடம்:

திருநெல்வேலி -முக்கூடல் -சிங்கம்பாறை. சிங்கம்பாறையிலிருந்து 3கி.மீ தொலைவில் இலந்தைகுளம் உள்ளது.

Location map: Elanthaikulam

Our Lady of Lourdes Church, Elanthaikulam, Singamparai -p.o, 627601, Vadakku Ariyanayakipuram, Tamil Nadu 627601

078715 38340

https://maps.app.goo.gl/x3ZW5WmJoCL5FTxA7

வரலாறு:

கி.பி 1880 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவான ஊர் இலந்தைகுளம். அப்போது இங்கு விவசாயம் செய்ய இயலாமல் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டது. மேலும் வறள்நில தாவரங்களான இலந்தை, ஈச்சமரங்களும் நிறைந்து காணப்பட்டதால் மக்கள் இங்கு வசிக்கவில்லை. 

பனைபேறும் தொழில் செய்யும் சிங்கம்பாறை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிலர் பதநீர் காலம் வரை இங்கு தங்கி தொழில் செய்து வந்தனர். பின்னர் இவ்வூரின் பனைத்தொழில் வளத்தை கேள்விப்பட்ட தூத்துக்குடி, சோமநாதப்பேரி, கோட்டார், தட்டார்மடம் பகுதிகளைச் சேர்ந்த 8 குடும்பங்கள் கி.பி. 1880 ஆண்டு முதல் இலந்தைகுளத்தில் தங்கி வாழ்ந்தனர். பனைவளம் இல்லாத காலங்களில் கால்நடை மேய்ச்சலை செய்து வந்தனர். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த திரு. செட்டியார் என்பவரிடம் கருப்பட்டி விற்று இந்த நிலங்களைப் பெற்றுக் கொண்டனர். ஆலயம் அமைந்துள்ள இடம் அவர் இலவசமாகக் கொடுத்தார். பனையேறும் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்த மக்கள் பின்னர் பீடி சுற்றுதல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டிடத் தொழில் ஆகியவற்றை செய்து கொண்டே உழைப்பால் உயர்ந்து வந்தனர்.

தொடக்கத்தில் இலந்தைகுளம் மக்கள் ஒரு ஓலைக்குடில் ஆலயம் அமைத்து, அதில் தூய லூர்து அன்னை சுரூபத்தை வைத்து, இறைவனை வழிபட்டு வந்தனர். கி.பி 1931 -ஆம் ஆண்டு அருள்பணி. குத்தூரியர் அவர்களால் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டு, ஓடு வேய்ந்த ஆலயமாக மாற்றப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள அவரது தங்கையான அருள்சகோதரியின் உதவியுடன் தூய லூர்து அன்னையின் சுரூபம், அங்கிருந்து வரவழைக்கப்பட்டு ஆலயத்தில் நிறுவப்பட்டது.

கி.பி. 1964 ஆம் ஆண்டு அருள்பணி. அ. அருளப்பர் அவர்களின் முயற்சியாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பாலும் ஆலயத்திற்கு சொந்தமாக தேர் செய்யப்பட்டது.

சிங்கம்பாறை பங்கின் பத்தாவது பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்த அருள்பணி. S. L. அருளப்பன் அவர்களுக்கு, லூர்து அன்னை கனவில் தோன்றி, இலந்தைகுளத்தில் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்று கூறியதன் விளைவாக, 1986 -ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் குளம் சீரமைக்கப்பட்டது. மக்களுக்கு கோதுமை கொடுக்கப்பட்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் பங்குத்தந்தை அருள்பணி. S. L. அருளப்பன் துணைபுரிந்தார். 

தற்போதைய புதிய அழகிய ஆலயமானது பங்குத்தந்தை அருள்பணி. ம. செல்வராஜ் பணிக்காலத்தில், 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, மக்களின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 10.02.2019 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D, அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

53 அடி உயர கொடிமரம் 02.02.2020 அன்று வைக்கப்பட்டு, மண்ணின் மைந்தர் அருள்பணி. L. சகாய சின்னப்பன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

சிலுவைப்பாதை நிலைகள்:

பேருந்து நிலையத்திற்கருகில் இருந்து தொடங்கி, ஆலயத்தின் வடக்குத்தெரு வழியாக ஆலயம் வரைக்கும், மக்களின் நன்கொடையில் அருள்பணி. அ. செயபாலன் பணிகாகாலத்தில், இயேசுவின் சிலுவைப்பாடுகளின் 14 நிலைகளும் பெரிய அளவில் உயிரோட்டமாக அழகுற அமைக்கப்பட்டு 05.04.2014 அன்று மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D, மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்பணி. ஜோமிக்ஸ் ஆகியோரால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மாதாவின் புதுமைகள்:

ஒருநாள் இரவில் தனது வீட்டில் பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்ணின் காதில் அணிந்திருந்த காதணி -யை (பாம்படம்) திருடன் அறுத்தெடுத்து சென்று விட்டான். பின்னர் மிகுந்த நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இலந்தைகுளத்திற்கு எவரும் திருடச் செல்ல வேண்டாம். காரணம் அங்கே மகிமை நிறைந்த தூய லூர்து மாதா பாதுகாவலியாக உள்ளார் என காதணியைத் திருடியவர் சாட்சி கூறினார். 

1983 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ம் தேதியன்று, எட்டாம் திருவிழாவை முடித்து விட்டு பங்கு ஆலயமான சிங்கம்பாறைக்கு புல்லட் வண்டியில் செல்ல இருந்த பங்குத்தந்தை அருள்பணி. S. L. அருளப்பன் அவர்களை, மிகப் பெரிய தாக்குதலில் இருந்து மாதா காத்துக் கொண்டார்.

ஆலயத்தில் தங்கியிருந்த பேய் பிடித்த நபர், ஒருநாள் திடீரென்று கத்தியால் தனது வயிற்றைக் கீறி குடல்களை வெளியே எடுத்துப் போட்டார், கூடியிருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். பின்னர் நலம் பெற்று ஆலயத்தில் சாட்சி பகிர்ந்தார். இந்த நிகழ்வை நேரில் கண்ட மண்ணின் மைந்தர் அருள்பணி. சகாய சின்னப்பன் அவர்களே சாட்சி...

அற்புத கெபிக்கு அருகே மிகப் பழைமையான வற்றாத புதுமைக்கிணறு ஒன்றும் உள்ளது. இந்தக் கிணறு ஆலயம் தொடங்கிய காலத்திலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மாதாவின் வழியாக பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் நடந்து வருவதால் கெபி கட்ட முடிவு செய்து, 2002 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன்புறத்தில் 100 அடி தொலைவில் ஆழ்துளை கிணறு தோண்டிய போது 6 அடி ஆழத்திலேயே தண்ணீர் பீறிட்டு வந்தது. அன்று முதல் இன்றுவரை வற்றாத சுனையாய், நோய் தீர்க்கும் அருமருந்தாய் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் தூய லூர்து அன்னையின் அற்புத கெபி கட்டப்பட்டு, 17.08.2002 அன்று மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D, அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப் பட்டது. 

பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கெபியில் மாதா கண்திறந்த அதிசயம் நடந்தது. சில நாட்களுக்குப்பின் 13.02.2011 அன்று ஆலய பீடத்தில் உள்ள மாதா கண் திறந்து பார்த்த அதிசயம் நடந்தது. 

திருவிழா:

ஆலயத்தில் திருவிழாவின் போது ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் தேர்பவனி மிகச் சிறப்பாக நடைபெறுகிறு. தேர்பவனியானது ஆரம்பித்து நடுத்தெருவில் வரும் போது நிறுத்தி வைக்கப்பட்டு, சிங்கம்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வருகிற மக்கள் காணிக்கை செலுத்தி, மாதாவிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். இந்த நாட்களில் கிராமிய கலை நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்படுகிறது.

மேலும் திருவிழாவின் போது ஊரின் ஒவ்வொரு தெருவின் எல்லையிலும் பந்தல் அமைக்கப்பட்டு கலை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. திருவிழாவிற்கு உற்றார் உறவினர்கள், பங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிமக்கள் என ஏராளமாக வருகை தருகின்றனர். இவ்வாறாக இலந்தைகுளம் ஊர்த் திருவிழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறாக பழைமையான வரலாற்றை தன்னகத்தே கொண்டு, அற்புதங்கள், அதிசயங்கள் பலபுரியும் இலந்தைகுளம் தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு வாருங்கள்.. இறை ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள்: மண்ணின் மைந்தர் அருள்பணி. L. சகாய சின்னப்பன் மற்றும் ஆலய உபதேசியார்

புகைப்படங்கள்: சிங்கம்பாறை பங்கு உறுப்பினர்