340 திருச்சிலுவை திருத்தலம், மணப்பாடு


திருச்சிலுவை திருத்தலம்.

இடம் : மணப்பாடு

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலம்
பங்கு : புனித யாகப்பர் ஆலயம், மணப்பாடு

பங்குத்தந்தை : அருட்தந்தை முனைவர் லெரின் டிரோஸ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி பிரபு
ஆன்மீகத்தந்தை : அருட்பணி தெயோபிலஸ்

ஞாயிறு திருப்பலி : மாலை 05.00 மணிக்கு.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு (வெள்ளிக்கிழமை தவிர்த்து)

வெள்ளிக்கிழமை திருப்பலி : காலை 10.00 மணி மற்றும் மாலை 05.00 மணி.

மாதத்தில் முதல் வெள்ளி காலை 10.00 மணிக்கு திருப்பலி தொடர்ந்து மெய்யான சிலுவையின் ஆசிர் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் 04-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான 11 நாட்கள்.

வழித்தடம் :

தூத்துக்குடி - உவரி வழி நாகர்கோவில் செல்கின்ற பேருந்துகள். இறங்குமிடம் மணப்பாடு.

கன்னியாகுமரி - உவரி வழி - தூத்துக்குடி பேருந்துகள். இறங்குமிடம் மணப்பாடு.

குலசேகரபட்டினம் - மணப்பாடு.

உடன்குடி - மணப்பாடு.

திருத்தல வரலாறு :

கி.பி 1540-ல் போர்ச்சுகல் நாட்டு வாணிபக் கப்பல் ஒன்று கீழை நாடு நோக்கி வந்தது. பயணம் நன்னம்பிக்கை முனையை கடக்கின்ற போது கடும் புயலில் சிக்கி கப்பல் பாய்மரம் முறிந்து, மரத்திலுள்ள பாய் கிழிந்தது. கப்பல் கடலில் கவிழும் நிலையில் இருந்தது. திக்கற்று கதிகலங்கி நின்ற வேளையில் திருச்சிலுவை பக்தரான கப்பல் தலைவன், கப்பலையும் அதில் பயணிப்பவரையும் காக்குமாறு திருச்சிலுவையிடம் இறைஞ்சு மன்றாடினார். அனைவரும் நலமாக கரை சேர்ந்தால் ஒடிந்த பாய் மரப் பகுதியால் சிலுவை செய்து கரைசேரும் இடத்தில் நாட்டுவதாக பிரார்த்தனை செய்தார்.

மணப்பாட்டுக்கு மிக அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் கரை சேர்ந்தது. கல்வாரி மலையில் திருச்சிலுவையில் இயேசு உயர்த்தப்பட்டது போல, துறைமுகத்தின் தென்கோடியிலுள்ள மணப்பாட்டின் தென்பகுதியில் தீபகற்பமாய் அமைந்துள்ள மணல் மேவிய குன்றின் மீது முறிந்த பாய்மரத்தினால் செய்த சிலுவையை நாட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றினார். மேலும் சிலுவையை மையமாக வைத்து ஒரு கொட்டிலையும் அமைத்தார்.

கி.பி 1542-இல் அக்டோபர் திங்கள் புனித பிரான்சிஸ் சவேரியார் மணப்பாடு வந்தார். மணப்பாடின் இயற்கை எழில் அவரைக் கவர்ந்தது. முத்துக்குழித்துறை கடலோரமாய் உள்ள ஊர்களில் மறைப்பரப்பு பணிசெய்ய மணப்பாடு சிறந்த இடமென எண்ணினார். அங்குள்ள திருச்சிலுவை கூடாரத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார். மணப்பாட்டில் உள்ள மலைக் குகையில் தங்கி 1544 -ஆம் ஆண்டுவரை மறைப்பரப்பு பணி செய்தார். பரதவர் குல மக்கள் 1532 -ஆம் ஆண்டிலேயே திருமுழுக்கு பெற்றிருந்தனர். ஆயினும் மறை போதகர் இல்லாமையால் பெயரளவிற்கு மட்டுமே கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். புனித பிரான்சிஸ் சவேரியார் இங்கு வந்து பரதவர்களுக்கு மறையறிவை புகட்டிய பின்னரே இறைப்பற்றுதியில் உறுதி பெற்றனர்.

கப்பல் தலைவனால் அமைக்கப்பட்ட சிலுவையோடு கூடிய கொட்டகையில் புனித பிரான்சிஸ் சவேரியார் வழிபாடு நடத்தி வந்ததால் புகழ் பெற்று விளங்கியது. நாளடைவில் இங்கு பல புதுமைகள் இங்கு நடந்து வந்ததால், இதனை பெரிய ஆலயமாக்க மக்கள் ஆவல் கொண்டனர். மணவை மக்களின் பெரும் பொருளுதவியுடன் சிலுவையை தன்னகத்தே கொண்ட ஆலயம் 1581 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காலப்போக்கில் திறமை வாய்ந்த பல அருட்தந்தையர்களின் பெரும் முயற்சியால் இவ்வாலயம் உருவிலும், தோற்றப் பொலிவிலும் உயர்வு கண்டது. 2007-2008 ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டு தற்போதைய பொலிவைப் பெற்றது.

இவ்வாலயம் ஆரம்பத்தில் கட்டப்பட்ட போது மணவையில் பணிபுரிந்த அருட்தந்தை ஜான் தே சலனோவா அவர்கள், திருச்சிலுவை ஆலயத்திற்கு இயேசு சுமந்த உண்மையான திருச்சிலுவை திருப்பண்டம் பெற விரும்பி உரோமைக்கு விண்ணப்பித்தார். அப்போதைய திருத்தந்தை 13-ம் கிரகோரி அவர்கள் இவ் விண்ணப்பத்தையேற்று இயேசு சுமந்த திருச்சிலுவையின் ஒரு சிறு பகுதியை அனுப்பி வைத்தார். 1583 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருப்பண்டம் கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.

கொச்சி உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு மத்தேயு தே மெதினா திருப்பண்டத்தை பெற்றுக் கொண்டு மூன்று நாட்கள் இறைமக்களின் வணக்கத்திற்காக பேராலயத்தினுள் வைத்தார். பின்னர் அங்கிருந்து, கடற்கரை ஊர்களின் வழியாக பக்தி சிறப்புடன் பவனியாக எடுத்து வரப்பட்டு அதே ஆண்டில் திருச்சிலுவை மகிமைத் திருநாளுக்கு சில நாட்கள் முன்பாக மணப்பாடு வந்தடைந்தது.

இப் பவனியில் கேரளா மாநில மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுவே கேரளாவிலிருந்து திரளாக மக்கள் மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்திற்கு, குறிப்பாக செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவிற்கு இன்றும் வர மரபு வழிக் காரணம்.

ஆலயத்தின் நடுப்பீடத்தில் உள்ள திருச்சிலுவை சுரூபமானது வந்தது பற்றி பல தகவல்கள் உள்ளன. பிலிப்பைன்ஸ் மணிலா நகர கன்னியர் மடத்தில் பக்தி பரவசமூட்டூம் இயேசுவின் சுரூபம் இருப்பதையறிந்த அருட்பணி ஜான் தே சலனோவா அவர்கள் அதனை மணவை ஆலயத்திற்கு கேட்க, இயேசுவின் திருச்சிலுவை புனிதப்பண்டம் இவ்வாலயத்திற்கு கிடைத்ததையறிந்த மடத்து தலைவி இயேசுவின் பாடுபட்ட சுரூபத்தை மணப்பாடு ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார். சுரூபம் 1585-இல் ஆலயம் வந்தடைந்தது .

1885 -இல் இயேசுவின் ஐந்து திருக்காய சபை ஏற்படுத்தப்பட்டு, இயேசு சபை குருக்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தது.

புனித சவேரியாருக்குப் பின் 1775-ஆம் ஆண்டு வரை இயேசு சபை குருக்கள் மணப்பாட்டில் மேய்ப்புப் பணி செய்தனர். அப்போது தமிழ் மொழி பயில்வதற்காக தேம்பாவணி காவியம் எழுதிய வீரமாமுனிவர் மணப்பாடு வந்து தங்கினார். இங்கு அவர் தங்கியிருந்த காலத்தில் (1710-1711) திருச்சிலுவை ஆலயத்தில் பலமுறை திருப்பலி நிறைவேற்றியுள்ளார்.

ஆண்டுதோறும் திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் இருந்தும், கேரளாவிலிருந்தும், பல கடலோர ஊர்களிலிருந்தும் வருகை தருகின்றனர். நீண்டு கிடக்கும் மலைக்குன்றிலே அமைக்கப்பட்டுள்ள கல்வாரியில், இயேசுவின் சிலுவை பயணத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை தலங்கள் ஜெபிக்கும் உணர்வை தூண்டுகிறது. இத் திருத்தலத்தின் சிறப்பை உணர்ந்த திருத்தந்தை 13-ம் லியோ 05-04-1889 எழுதிய நிரூபத்தில் மணவையை "சின்ன எருசலேம்" என குறிப்பிட்டுள்ளார்.

திருச்சிலுவையின் மகிமை வரலாறு :

உலகெங்கிலும் முக்கியமாய் ஜெருசலேமிலும் இயேசுவின் திருச்சிலுவை வணங்கப்படுவதையும், ஆராதிக்கப்படுவதையும் கண்டு பொறாமை கொண்ட திருச்சிலுவையின் விரோதி சாத்தானின் சூழ்ச்சியில், கி.பி 614 -இல் பெர்சியர்களின் படையெழுச்சியில் இயேசு குடியிருந்த ஆலயங்கள் தரைமட்டமாக்கப் பட்டன. துறவற மடங்கள் புனித இல்லங்கள் இடிகாகப்பட்டன. இலட்சம் பகிறிஸ்தவர்கள் கொல்லப் பட்டனர். மகிமைக்குரிய புனித சிலுவையின் ஒருபாகம் பெர்சியாவிற்கு கவர்ந்து செல்லப்பட்டது.

பேரரசர் வெராக்கியுஸ் கி.பி 629 -இல் பெர்சியாவின் மீது படையெடுத்து, அவர்களை வென்று மகிமைக்குரிய திருச்சிலுவையை மீட்டு வந்தார்.

திருச்சிலுவையை வெற்றியுடன் சுமந்து "திருச்சிலுவை மரமிதோ இதிலே தான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம்" என்று பக்தியுடன் பாட, அனைவரும் "வருவீர் ஆராதிப்போம்" என்று பதிலுரைத்து தரையில் விழுந்து வணங்கினர்.

இவ்வாறு புனித திருச்சிலுவையை மீட்டு இத்தனை மகிமை வணக்கத்துடன் ஜெருசலேமில் கொண்டு வரப்பட்டதன் நினைவாக, வெற்றியின் சின்னமாக செப்டம்பர் 14-ஆம் தேதி திருச்சிலுவை மகிமைத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

மணப்பாட்டில் முதன்முதலில் 1580 -இல் செப்டம்பர் 14-ஆம் நாளில் வெகு சிறப்புடன் மகிமைத் திருவிழா கொண்டாடப் பட்டது சிறப்பு வாய்ந்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிலுவை நாயகராம் கிறிஸ்து இயேசுவின், திருச்சிலுவை திருத்தலங்கள் வாருங்கள்..! ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..!

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்.

மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2472627046305273&id=2287910631443583&__tn__=K-R