752 புனித சூசையப்பர் ஆலயம், குரூஸ்புரம்

  
     

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: குரூஸ்புரம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. விசேந்தி சகாய உப்பர்டஸ்

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. பிளேவியன்

குடும்பங்கள்: 1400

அன்பிங்கள்: 73

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி, காலை 07:00 மணி, காலை 09:00 மணி (சிறார் திருப்பலி), மாலை 06:00 மணி

நாள்தோறும் காலை 06:00 மணி, மாலை 06:00 மணிக்கும் திருப்பலி

முதல் புதன் மாலை 06:00 மணிக்கு நவநாள் திருப்பலி

மூன்றாவது வியாழன் மாலை ஒரு மணிநேரம் ஆராதனை

திருவிழா: ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து மே மாதம் 01-ம் தேதி நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.

குரூஸ்புரம் மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. அமலதாஸ், SM

2. அருட்பணி. சார்லஸ்

3. அருட்பணி. சந்தியாகு

4. அருட்பணி. ரீகன், OMD

மற்றும் பல அருட்சகோதரிகள்

வழித்தடம்: நாகர்கோவில்  -கூடன்குளம் -உவரி -திருச்செந்தூர் -தூத்துக்குடி

மதுரை -தூத்துக்குடி

Location map: St. Joseph's Church 0461 232 1366

https://maps.app.goo.gl/9qwPsyYnJZYb61wn7

வரலாறு:

வரலாற்றில் ஏழுகடல் துறை, முத்துகுளித்துறை, திருமந்தநகர், திருமந்திரநகர், முத்துநகர் என்று பல்வேறு பெயர்களில் விளங்கிய தூத்துக்குடி மாநகரில் உள்ள சிறப்பு வாய்ந்த குரூஸ்புரம் ஊரில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்....

குரூஸ்புரம் பெயர்க்காரணம்:

1532 முதல் 1947 வரை போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியவற்றின் காலனி ஆட்சியின் கீழ் தூத்துக்குடி இருந்து வந்தது. 1790 இல் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இராமநாதபுரம் மண்டலத்தில் தான் திருநெல்வேலி, திருவைகுண்டம் இணைந்து இருந்தன. அப்போது திருவைகுண்டம் தாலுகாவோடு தூத்துக்குடி இணைந்து இருந்தது. அதன்பின் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக தூத்துக்குடி தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டு, திருவைகுண்டம் இதனுடன் இணைந்து இருந்தது. 1986 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ‌.சி. சிதம்பரம் பெயரில் புதிய மாவட்டமானது. பிற்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் என்றானது.

1866 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி நகராட்சி உருவாக்கப்பட்டது. ஐயா குரூஸ் பர்னாந்து அவர்கள் 1909 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகர்மன்ற தலைவரானார். ஐந்து முறை தலைவரான ஐயா அவர்கள் இரண்டாம் முறையாக தலைவரானபோது தான் கூட்டுறவு வங்கியை உருவாக்கி, அதன்மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்ட கடன் உதவி வழங்கியதன் காரணமாக போல்டன்புரம், மட்டக்கடை போன்ற புதிய பகுதிகள் உருவாயின. குடிசைகள் கட்டிடங்களாக மாற்றம் பெற்றன. மேலும் ஐயா அவர்கள் நிலங்களின் உரிமையை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தார். ஆகவே அவரின் நினைவாக 1926-1929 காலகட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு குரூஸ் பர்னாந்துபுரம் என அழைத்து வந்தனர். பின்னர் காலப்போக்கில் குரூஸ் பர்னாந்துபுரம் "குரூஸ்புரம்" என்று பெயர் பெற்றது.

பழைய ஆலயம்:

1926 முதல் 1929 ஆண்டு வரை குரூஸ்புரம் பகுதி உருவான போது, இப்பகுதி மக்கள் வழிபாடுகளில் பங்கேற்க சின்னகோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய கத்தீட்ரல் ஆலயத்திற்குத் தான் சென்று வரவேண்டியிருந்தது. 

ஆகவே குரூஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முன்னோர்களின் பெரும் முயற்சி மற்றும் தூய பனிமய மாதா பசிலிக்காவைச் சேர்ந்த திரு. ஜோசப் பெரைரா அவர்களின் நன்கொடையாலும் சிறிய புனித சூசையப்பர் ஆலயம் ஒன்றைக் கட்டினர். 

குரூஸ்புரம் பகுதியில் வசித்த முன்னோர்களில் பலர் கிறிஸ்தவர்களாக இருந்ததின் காரணமாகவும், மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வந்ததாலும், முன்னோர்கள் மாதாவின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்ததாலும், இப்பகுதியில் படகுகள் கட்டும் தச்சுத்தொழில் சிறப்பாக நடந்து வந்ததாலும், திருக்குடும்பத்தை பேணி பாதுகாத்த புனித சூசையப்பர் பெயரில் ஆலயம் அமைத்துள்ளனர். 

ஆலயம் அமைந்த குறுகிய காலத்திலேயே இதன் புகழ், சின்னக்கோவில் மற்றும் தூய பனிமய மாதா பேராலயம் வரைக்கும் பரவியது. புதன்கிழமை நடைபெற்று வந்த வழிபாடுகளில் காலை முதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் சென்றனர். 

குரூஸ்புரம் தனிப்பங்கு:

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் மேற்றிராசன (கத்தீட்ரல்) கோயில் என்றழைக்கப்படும் திருஇருதயங்களின் பேராலயப் பங்கில், தூத்துக்குடியின் வடபாகம் முழுவதும் இணைக்கப் பட்டிருந்தது. இப்பங்கின் எல்கை மிகவும் விரிந்து காணப்பட்டதாலும், வடபகுதியில் வாழ்ந்த மக்களின் ஆன்மீகக் காரியங்களை கவனிக்கவும், கத்தோலிக்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 02.02.1955 அன்று குரூஸ்புரம், பூபாலராயர்புரம், திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் ஆகிய பெரும்பகுதிகளை உள்ளடக்கி, தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட குரூஸ்புரம் பங்கு உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ திருக்குடும்ப தாசன் தல்மெய்தா அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஆர்.சி தொடக்கப்பள்ளியின் தாழ்வாரத்தில் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

புதிய ஆலயம்:

அருட்பணி. பவுல் அலங்காரம் பணிக்காலத்தில் 14.08.1963 அன்று அப்போது மறைமாவட்ட முதன்மைக் குருவாக இருந்த காலஞ்சென்ற பேரருட்திரு. S. மரியதாஸ் அவர்கள் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அருட்திரு. ஜான் சேவியர் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, அப்போதைய திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களால் 18.08.1971 அன்று ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

07.07.1984 அன்று குரூஸ்புரம் பங்கிலிருந்து பிரிந்து திரேஸ்புரம் தனிப் பங்கானபோது.

22.01.2001 அன்று லூர்தம்மாள்புரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள் இணைக்கப்பட்டு, லூர்தம்மாள்புரம் பங்கு உருவானது.‌ 

அருட்திரு. ஞானப்பிரகாசம் அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் முன்மண்டபம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 01.05.1994 அன்று அர்ச்சிக்கப்பட்டது. கடைகள், மண்டபம் ஆகியவற்றை அமைத்தார். புதன்கிழமை நவநாள் தொடங்கப் பட்டது.

அருட்திரு. அந்தோனி ஜெகதீசன் பணிக்காலத்தில் ஆலயம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதிய திருப்பலி பலிபீடம் அமைக்கப்பட்டு, 26.08.1996 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

2005 ஆம் ஆண்டு பங்கின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

அருட்திரு. பிரதீப் அவர்களின் முயற்சியால் 01.01.2013 முதல் "வளன் ஓசை" மாத இதழ் வெளியிடப் படுகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. மாதாசபை

3. சூசையப்பர் இளையோர் குழு

4. அமலோற்பவ மாதா இளம்பெண்கள் குழு 

5. பீடச்சிறுவர்கள்

6. திருவழிபாட்டுக் குழு

7. மறைக்கல்வி

8. பங்குப் பேரவை

9. நிதிக்குழு

10. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

11. திருக்குடும்ப சபை

12. கல்வி நிதிக்குழு

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை

14. கோல்பிங் இயக்கம்

சிறப்பு செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்:

தையல் பயிற்சி மையம்:

ஏழைகளுக்கு உணவுத் திட்டம்:

நாள்தோறும் ஏழை குடும்பங்களுக்கு  மதியம் உணவு வழங்கி வரும் திட்டம்.

ஏழைகளுக்கு உதவி திட்டம்:

கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள், ஏழைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி செய்யும் சிறந்த திட்டம். 

ஒருபிடி அரிசித் திட்டம்:

இறைமக்கள் ஒவ்வொரு நாளும் ஒருகைப்பிடி அரிசியை சேமித்து வைத்து மொத்தமாக, மாதாமாதம் ஆலயத்தில் வந்து கொடுப்பார்கள். அதனை ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் பசி போக்கி வருகின்றனர்.

AE திட்டம்:

குடிநோயாளிகளின் மறுவாழ்வு திட்டம். மேலும் குடிநோயிலிருந்து விடுபட்டவர்கள் இணைந்து இங்கு வந்து, அவர்களுக்குள் மனம்விட்டு உரையாடும் உன்னதத் திட்டம். 

புனித ஜோசப் நூலகம்:

பங்கில் உள்ள திருத்தலம்:

புனித சிந்தாத்திரை மாதா திருத்தலம், குரூஸ்புரம்

பங்கில் உள்ள கெபிகள்:

1. புனித பாத்திமா மாதா கெபி

2. புனித சூசையப்பர் கெபி

3. கடற்கரை கிறிஸ்து அரசர் கெபி: வருடந்தோறும் மீனவர் தினத்தில் திருப்பலி நடைபெறும்.

பங்கில் உள்ள கான்வென்ட்:

1. புனித அன்னாள் சபை கான்வென்ட் (தொடக்கப்பள்ளி)

2. புனித அன்னாள் சபை கான்வென்ட் (உயர்நிலைப் பள்ளி)

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. ஆர்.சி தொடக்கப்பள்ளி

1929 ஆம் ஆண்டு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு திருச்சி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் இல்லம் அமைத்து, கல்விப் பணியை சிறப்புற செய்து வந்தனர். பங்குத்தந்தை அருட்பணி. தோம்னிக் அருள் வளன் அவர்கள் பணிக்காலத்தில் 2006 ஆம் ஆண்டு பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 24.01.2007 அன்று மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2. புனித வளன் மேல்நிலைப் பள்ளி:

1966 ஆம் ஆண்டு புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் மேல்நிலைப் பள்ளியின் கல்விப்பணிக்காக குரூஸ்புரம் வந்தனர். 06.07.1966 அன்று மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து அவர்களால் பள்ளிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 01.07.1971 அன்று பள்ளிக்கூட வளாகத்தில் அருட்சகோதரிகள் புதிய இல்லம் கட்டப்பட்டது. 

ஏழை எளிய மாணவிகள் தங்கிப் படிக்க கருணை இல்லம் 28.10.1971 அன்று தொடங்கப்பட்டது.

10.07.1979 முதல் மேல்நிலைப் பள்ளியாக (11 மற்றும் 12 ஆம் வகுப்புகள்) அரசு அங்கீகாரம் பெற்று தொடங்கப் பட்டது.

01.06.2009 முதல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்திரு.‌ தாசன் தல்மேய்தா (1955-1960)

2. அருட்திரு.‌ பவுல் அலங்காரம் (1960-1968)

3. அருட்திரு.‌ ஜான் சேவியர் (1968-1974)

4. அருட்திரு.‌ அமிர்தம் (1974-1976)

5. அருட்திரு. அருளப்பா (1976-1980)

6. அருட்திரு.‌ அல்போன்ஸ் (1980-1981)

7. அருட்திரு. ஜோப் டி ரோஸ் (1981-1984)

8. அருட்திரு. ஜோசப் பென்சிகர் (1984-1987)

9. அருட்திரு.‌ ஹெர்மன் மொடுதகம் (1987)

10. அருட்திரு. கபிரியேல் (1987-1988)

11. அருட்திரு. ஆல்வின் வில்வராயர் (1988-1989)

12. அருட்திரு.‌ ஞானப்பிரகாசம் (1989-1994)

13. அருட்திரு. அந்தோனி ஜெகதீசன் (1994-1999)

14. அருட்திரு. ரெய்னால்டு மிஸியர் (1999-2004)

15. அருட்திரு. லொயோலா டி ரோஸ் (2004-2005)

16. அருட்திரு.‌ தோமினிக் அருள் வளன் (2005-2008)

17. அருட்திரு. கருணையா சேவியர். அ (2008-2012)

18. அருட்திரு. பிரதீப் (2012-2017)

19. அருட்திரு. லெ. ராஜா ரொட்ரிகோ (2017-2018)

20. அருட்திரு. விசேந்தி சகாய உப்பர்டஸ் (2018 முதல்.....)

ஆலய வரலாறு: ஆலய வைரவிழா மலர் 2015

தகவல்கள்: உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. பிளேவியன்

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்