969 புனித பெரியநாயகி மாதா திருத்தலம், ஆவூர்

             

புனித பெரியநாயகி மாதா திருத்தலம்

இடம்: ஆவூர்

மாவட்டம்: புதுக்கோட்டை

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: கீரனூர்

தனிச்சிறப்புகள்:

1691-ம் ஆண்டு முதல் பாஸ்கா பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

வீரமாமுனிவர், புனித அருளானந்தர் பணிபுரிந்த திருத்தலம்.

240 அடி நீளம், 40 அடி அகலமும் கொண்ட, 1747-ம் ஆண்டு கட்டப்பட்ட திருத்தலம்.

நிலை: திருத்தலம்.

கிளைப்பங்குகள்:

1‌. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஓலையூர்

2. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், சாத்திவயல்

3. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், ஆம்பூர்பட்டி

4. புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், ஒரண்டகுடி 

பங்குதந்தை அருட்பணி. A. சூசை ராஜ்

குடும்பங்கள்: 600 (கிளைப் பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 6 (பங்கு) +10 (கிளைப்பங்குகள்)

ஞாயிறு திருப்பலி காலை 08:45 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி

புதன், சனி மாலை 06:30 மணி திருப்பலி 

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11:15 மணி குணமளிக்கும் வழிபாடு, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் தொடர்ந்து ஆசீர்வாத உணவு

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி

பாஸ்கு திருவிழா:

ஈஸ்டர் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. பங்காரு, SJ

2. அருட்பணி. செல்வம், SJ

3. அருட்பணி. விசுவாசநாதர், SJ

4. அருட்பணி. மரியதாஸ், SJ

5. அருட்பணி. சவரிமுத்துநாதர், Coimbatore Diocese

6. அருட்சோதரர். விசுவாசம், SJ 

7. அருட்பணி.‌ V. A. தானியேல், Madurai Archdiocese

8. அருட்பணி. V. A. மரிய லூர்துநாதர், Thiruchi Diocese 

9. அருட்பணி. அருள், நார்பட்டயன் சபை

10. அருட்பணி. பிரேம்நாத், MMI

11. அருட்சகோதரி.  அலூஜியஸ் மேரி, வியாகுல மாதா சபை

12. அருட்சகோதரி. மேரி அடலேயிட், அடைக்கல மாதா சபை

13. அருட்சகோதரி. அன்னம்மாள்

14. அருட்சகோதரி. பெரியநாகத்தம்மாள்

வழித்தடம்:

திருச்சி -மாத்தூர் -ஆவூர்

புதுக்கோட்டை -களமாவூர் -பேராம்பூர் -ஆவூர்

மதுரை -விராலிமலை -பேராம்பூர் -ஆவூர்

திருச்சி -ஆவூர் 21கி.மீ

Location map:

https://maps.app.goo.gl/qtdTVo6noVCMUqmy5

ஆவூர் திருத்தல வரலாறு:

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'புனித பெரியநாயகி மாதாவின்' மகிமைக்காக, முதன் முதலில் தென் இந்தியாவில் கட்டப்பட்டது ஆவூரில் உள்ள தேவாலயம் ஆகும். மதுரை மிஷனைச் சேர்ந்த 12 பங்குகளில் இதுவும் ஒன்று. மறவன் தேசத்திற்கு வடக்கும், திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கும் இந்த ஒரே தேவாலயம் மட்டுமே இருந்தது. இச்சமஸ்தானத்திலிருக்கும் மற்ற கோவில்களெல்லாம் இதற்குப் பின்னால் கட்டப்பட்டவை. இதுதான் தாய் கோவில்!

இப்பங்கு அக்காலத்தில் மதுரை மிஷன் அதிசிரேஷ்டரின் (தலைமை) இருப்பிடமாக சில காலம் இருந்தது. இவ்வூரில் பத்து சேசுசபை ஐரோப்பிய குருக்களும், ஐந்து சுதேசக் குருக்களும் இறந்து அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றனர். இத்தேவாலயம் தோன்றி 12 ஆண்டுகளுக்குள்ளாக இது ஒரு புகழ்வாய்ந்த திருயாத்திரைத் திருத்தலமாயிற்று. முதன் முதலாக இவ்வூரில்தான் வீரமாமுனிவரும், நவாப் சந்தா ஸாஹிப்பும் ஒருவரை ஒருவர் சந்தித்து, நெருங்கிய நண்பர்களானார்கள். வேதசாட்சியான புனித அருளானந்தர் மிஷன் பார்வையாளராக வந்தபோது, பத்து நாட்கள் ஆவூரில் தங்கியிருந்தார். இந்த வேதசாட்சியின் பாடுபட்ட சுரூபம் இவ்வூர்வாசியாகிய சிலுவை நாயக்கர் உபதேசியாரிடத்திலும், அவருடைய சந்ததியார்களிடத்திலும் இருந்தது. கடைசியாக இப்போது ஓரியூர் பேராலய பீடத்தில் புனிதமாக வைக்கப்பட்டிருக்கிறது. வேதசாட்சியான புனித தேவசகாயத்திற்கு, வடக்கன்குளத்தில் திருமுழுக்கு கொடுத்த பெரிய பரஞ்சோதி நாதர் சுவாமி, ஆவூரில் பங்குதந்தையாக இருந்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆவூரில் கிறிஸ்தவ மறையை நாட்டிய பெரிய சஞ்சீவிநாதர் சுவாமி, ஆண்டுதோறும் பெரிய வெள்ளிக்கிழமையன்று, இரவு சுரூப பாஸ்கை ஆவூரில் ஏற்படுத்தி முதன் முதலில் மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். அது எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்டு வந்தது. புதுக்கோட்டை மகாராஜாக்கள் ஆதியிலிருந்தே இத்தேவாலயத்தின் மீது பற்றுதல் வைத்து, வேண்டிய உதவி அளித்திருக்கின்றனர்.

மதுரை மிஷன் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேசுசபையினரால் முதன் முதல் கட்டப்பட்ட மிகப் பழைமையான தேவாலயம், ஆவூர் பெரியநாயகி மாதா என்னும், மோட்ச இராக்கினி மாதா ஆலயமேயாகும். இத்தேவாலயம் கோவில் தோப்பு என்று சொல்லப்பட்ட பழைய ஆவூரில், 1697 ஆம் (ஈஸ்வர ஆண்டில்) சிறிய தேவாலயமாகக் கட்டப்பட்டு, 50 வருடங்களுக்குப் பிறகு 10.08.1747 அன்று தற்போது தேவாலயம் இருக்குமிடத்தில் அஸ்திவாரம் போடப்பட்டு, மதுரேந்திரர் (Fr. Clement Tomassini, S.J) என்னும் சேசுசபை குருவானவரால் ஒரு காரைக்கட்டு கோவில் கட்டப்பட்டது. ஆகையால் இவ்வாலயத்தின் இரண்டாம் நூற்றாண்டு 1947 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. (1747-1947).

1686 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாமன்னர் ரகுநாதராய தொண்டைமான் (Ragunatharaya Thondaimann) பட்டத்திற்கு வந்த தேதியிலிருந்து ஆவூரில் சுவாமியார் எப்போதும் தங்கியிருந்தார். (Avur be came a Mission Centre or Residence) புதுக்கோட்டை சமஸ்தானமும், ஆவூர் தேவாலயமும் ஒரே காலத்தில் ஏற்பட்டவை. 1686 ஆம் ஆண்டு (History of the Pudukkottai State, Page 156), மற்றும் 1711, 1827, 1834, 1850 ஆகிய வருடங்களில் புதுக்கோட்டை தொண்டமான் மாமன்னர்கள் இவ்வாலயத்தைச் சந்தித்து காணிக்கை செலுத்தியிருக்கின்றனர். மேலும் 1834 ஆம் ஆண்டில் சிவகங்கை இராணி நாச்சியார் இத்தேவாலயத்தைத் தரிசித்து நன்கொடை அளித்தார்கள்.

ஆவூர், சிறிய கிராமம் (A Hamlet):

ஆவூர், அக்காலத்தில் கத்தலூர் 'தேவர்' இராஜ்யத்தைச் சேர்ந்தது. இவர் மதுரை நாயக்கர் மன்னரின் கோட்டைக் கொத்தளங்களைப் பாதுகாத்து வந்த 72 பாளையக்காரர்களில் ஒருவர். கத்தலூர் கிராமம், ஆவூரிலிருந்து ஐந்து மைலுக்கு அப்பாலிருக்கிறது. 1682 ஆம் ஆண்டில் இத்தேவர் இங்கு வேதம் போதிக்க வந்த முதல் சேசுசபை குருவானவருக்கு கோவில் தோப்பில் ஒரு கூரைக்கட்டு கோவில் கட்டிக்கொண்டு வேதம் போதிக்க அனுமதி கொடுத்தார். இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். இந்த விபரம், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் வரலாற்றுப் புத்தகத்தில் காணலாம். (History of the Pudukkottai State, Page 94). 1682 ஆம் ஆண்டிலிருந்து ஒரு சேசுசபை குரு அடிக்கடி ஆவூருக்கு விசாரணை செய்ய வருவார். (Avur was a visiting station).

ஆவூர் நாயக்கர்கள்:

1606-இல் தத்துவ போதகர் கிறிஸ்தவ மறையை மதுரை நகரில் நிறுவி வேதம் போதித்தபோது, ஏராளமான மதுரை நாயக்கர்கள் (வடுகர்கள்) கிறிஸ்துவர்களானார்கள். அவர்களில் சிலர் திருமலை நாயக்கர் மன்னரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 1623-இல் மதுரை இராஜதானிப் பட்டணம், திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்ட போது, ஏராளமான கிறிஸ்தவ நாயக்கர்கள் அரண்மனை பணியாளர்களாக திருச்சியில் வந்து குடியேறினர். 1624இல், 1627இல், இரண்டு தடவை தத்துவபோதகர் திருச்சிக்கு வந்து, கிறிஸ்தவர்களை ஏராளமாய் மனந்திருப்பினார். இவ்வாறு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1682இல் முதன் முதல் ஒரு சேசுசபை சுவாமியார் பழைய ஆவூர் கிராமத்தில் கிறிஸ்தவ வேதத்தைப் போதிக்க வந்தபோது, சில நாயக்கர் குடும்பங்களும் ஆவூருக்கு வந்து குடியேறின. வேதசாட்சியான புனித அருளானந்தரின் உபதேசியாரான சிலுவை நாயக்கர் குடும்பமும் இங்கு வந்து குடியேறின குடும்பமேயாகும்.

இதன் காரணமாகத்தான், ஆவூர் கிராமத்தில் அநேக நாயக்கர் குடும்பங்கள் ஒரு வீதியில் இரண்டரை நூற்றாண்டுகாளாக வசித்தன. அவர்களில் பேர்போன குருக்களும் உபதேசிமார்களும் விளங்கினர். ஆனால் இப்போது இவ்வூரில் ஒரு நாயக்கர் குடும்பமுமில்லை.

குருக்களின் அயராத உழைப்பு:

இரவு நேரங்களில் குருக்கள் கிறிஸ்தவர்களைக் கவனித்து, அவர்களுக்கு வேதம் போதித்து வருவார்கள். குருக்கள் ஒவ்வொருவரும் பத்து உபதேசிமார்களை நியமித்துக்கொண்டு, ஊர் ஊராய்க் கால்நடையாய்ப் பயணம் செய்து, புத்தி சொல்லி பிரசங்கித்து மக்களை மனந்திருப்பினர். இவ்வாறு கிறிஸ்தவ மறை எங்கும் பரவும்படி அயராது உழைத்தனர்.

மதுரை மிஷன் ஏற்பட்ட காலத்தில், சேசுசபை குருக்கள் இந்து மதத்தவர்களுக்கு பயந்துகொண்டு வாழ்ந்து வந்தனர். ஊர் ஆச்சாரங்களையும், மக்களின் நடை, உடை, பாவனையையும் அனுசரித்து வந்தனர். இரவு நேரங்களில் சந்தடி செய்யாமல் வெகு ஜாக்கிரதையாய் ஊருக்குள்ளே வருவதும் போவதும் உண்டு.

பழைய மதுரை மிஷன்:

17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அதாவது 1606-ம் ஆண்டில் சேசு சபையைச் சேர்ந்த Fr. D. Robert De Nobili, S.J. என்னும் தத்துவப் போதகர் மதுரைப் பட்டணத்தில் மதுரை மிஷனை முதன் முதலாக நிறுவினார்.

கடவுள் மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்தார். தத்துவ போதகர் இந்தியர்களை இரட்சிக்க இந்தியப் பிராமண குருவாய் (Brahmin Sannyasi) விளங்கினார். இந்து தேச ஆச்சாரங்களை அனுசரித்துக் கொண்டும், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளை ஐயந்திரிபரக் கற்றுக் கொண்டும், வேத போதகப் பணியைச் செய்ய ஆரம்பித்தார். முதலில் தத்துவ போதகர் பிராமணர்களையும், மற்ற மேல் ஜாதியாரையும் மனந்திருப்ப முயற்சித்தார்.

மேல் ஜாதியாரை மனத்திருப்பினால், கீழ் ஜாதியாரை எளிதில் மனம் திருப்பலாமென்று ராபர்ட் டி நொபிலி எண்ணியிருந்தார். ஆனால் அவர் எண்ணியபடி, அவரால் கீழ் ஜாதியாரை மனந்திருப்ப முடியவில்லை. 

நாளடைவில் தாழ்ந்த ஜாதியாரை மனந்திருப்ப ஒரு எளிதான வழியை இவர் ஏற்படுத்தினார். தன்னைப் போல ஒரு குருவானவரை கீழ் ஜாதியாருக்கு வேதத்தைப் போதிக்க தனியாக நியமித்து, அவர் கீழ் ஜாதியாரோடு பேசவும், பழகவும், அவர்கள் மத்தியில் வசிக்கவுமிருந்தால், அவர்களை எளிதாய் மனந்திருப்பலாம் என்று எண்ணி, இம்முறையைக் கையாளத் தொடங்கினார். இச்சிறந்த யோசனையை பால்த்தஸார் கோஸ்தா (Fr.Balthasar da Costa, S.J.) என்னும் போர்த்துக்கீசிய குருவானவரிடத்தில் சொல்ல, அந்தப் புண்ணியவான் இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்து முதல் பண்டார சுவாமியானார். (First Pandaraswami).

இவர் கீழ்ஜாதியார் அருகாமையில் வசித்தார். அவர்களது குடிசை ஒவ்வொன்றிற்கும் போய் வியாதிக்காரரை சந்திக்கவும் ஆறுதல் சொல்லவும், வைத்தியம் செய்யவும், திருமுழுக்கு கொடுக்கவும், ஞான உபதேசம் கற்பிக்கவும், புத்தி சொல்லவும் போன்ற பணிகளை மேற்கொண்டார். வழியில் இவர் ஒரு பிராமணனைக் கண்டால் தாம் அவனுக்கு மரியாதை செய்வது போல வழியைவிட்டு ஒதுங்கிப் போவார் அல்லது நிற்பார். இந்த ஏற்பாட்டினால் தாழ்ந்த ஜாதியார் ஏராளமாக மனந்திரும்பினார்கள். 

1640-ல் தத்துவபோதகர் (Fr. D. Robert De Nobili, S.J.) இரண்டு வகுப்பு குருக்களை நியமித்தார்.

A. பிராமண சந்நியாசி குரு - மேல்ஜாதி குரு - பிராமண சமையற்காரர் மரக்கறி உணவு

B. பண்டாரச் சாமி குரு - தாழ்ந்த ஜாதி குரு - தவசிப்பிள்ளை மரக்கறி உணவு

1744ல் திருத்தந்தை 14-ம் ஆசீர்வாதப்பர் காலத்தில்.. A. பிராமண சந்தியாசி குருக்கள் - மேல் ஜாதியாருந்கு மட்டும். B. பண்டாரச்சாமி குருக்கள் - கீழ் ஜாதியாருக்கு மட்டும்.

1760-ல் இந்த வித்தியாசங்கள் நின்றுபோய்விட்டன. நாளடைவில் இந்த இரண்டு வகுப்பு குருக்களுக்குப் பதிலாக, ஒரே வகுப்பு குருக்களே எல்லாக் கிறிஸ்துவர்களையும் கண்காணித்து வந்தனர்.

மதுரை மிஷன் எல்லை:

வடக்கே - சென்னைப் பட்டணம் மைலாப்பூரிலிருந்து, தெற்கே கன்னியாகுமரி வரையிலிருந்தது. இதில் 12 பங்குகள் ஏற்படுத்தப்பட்டன

காவேரி ஆற்றிற்கு வடக்கே:

1. கல்பாளையம்

2. வடுகர்பட்டி

3. ஏலாக்குரிச்சி

4. கூரைப்பட்டி

5. அய்யம்பட்டி

6. கோனாங்குப்பம்

காவேரி ஆற்றிற்குத் தெற்கே:

7. திருச்சிராப்பள்ளி -ஆவூர்

8. கூனம்பட்டி

9. மலையடிப்பட்டி

10. மதுரை

11. காமநாயக்கன்பட்டி

13. மறவா

இப்பங்குகள் செஞ்சி, வேலூர், தஞ்சாவூர், மதுரை (திருச்சிராப்பள்ளி), இராமநாதபுரம் ஆகிய ஐந்து தமிழ் இராஜ்யங்களில் பரவியிருந்தன.

இந்நாட்டின் நிலைமை:

அக்காலத்தில் திருடர் பயம் அதிகம்; கொள்ளையடிக்கிறவர்கள் ஏராளம். மகம்மதிய பட்டாளம் ஆர்காட்டிலிருந்து, தஞ்சாவூருக்கும், திருச்சிராப்பள்ளிக்கும் அடிக்கடி கப்பம் வாங்கவோ, அல்லது கொள்ளையடிக்கவோ வருவது சகஜம். பம்பாய்க்கு (Bombay) அருகாமையிலிருக்கிற மகாராஷ்டிரா தேசத்தைச் சேர்ந்த மராட்டியர்கள் இந்நாட்டில் அடிக்கடி படை எடுத்துவந்து குடிகளைக் கஷ்டப்படுத்தி, நான்கில் ஒரு பங்கு, சவுத் (Chauth) என்னும் வரியை வாங்கினர். கிறிஸ்தவக் கோவில்களை அடிக்கடி தீக்கிரையாக்கினர். அரசர்கள் நீதியாய் ஆட்சி செய்யாமலும், குடிகளைக் கவனியாமலும் இருந்தனர். கடுமையான வரி விதித்தனர். ஆட்சி நடத்தியது பிராமண மந்திரிகளே. அவர்கள் சொன்னதுதான் சட்டம். கிறிஸ்தவர்களும், குருமார்களும் பட்ட கஷ்டங்களை எடுத்துக்கூற இயலாது. அடிக்கடி யுத்தம், பஞ்சம், கொள்ளைநோய், கொள்ளையடித்தல், பரதேசம் போதல் இவைகள் யாவும் மிகச் சாதாரணமாக இருந்தன.

ஆவூரில் உழைத்த முக்கிய குருக்கள்:

ஆவூரில் பத்து சேசுசபை ஐரோப்பிய குருக்களும் ஐந்து சுதேச குருக்களும் மரித்து அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இங்கு உழைத்த முக்கியமான குருக்களின் வரலாறு பின்வருமாறு :

I. Fr. Louis de Mello, S.J. (1683-1691)

லூயிஸ் தெ மெல்லோ என்னும் சேசுசபை குருவானவர் மதுரை மிஷனில் சேர்ந்தது முதல், Fr. John de Britto, S.J என்னும் அருளானந்தர் சுவாமி கண்காணிப்பிலிருந்து கொண்டு, காந்தலூர், திருச்சிராப்பள்ளி, கோலுப்பட்டி, சத்தியமங்கலம், தஞ்சாவூர் முதல் மறவன் தேசத்து எல்லை வரையில் வெகு உற்சாகத்தோடு 1663 முதல் 1667ஆம் ஆண்டு வரையில் சத்திய வேதத்தைப் போதித்து வந்தார். ஆரம்பத்தில் மறவன் தேசத்தில் சத்திய வேதம் பரவியது. அதன் பின்னர், வேதகலாபனை திடீரென்று மூண்டபோது, அங்குள்ள கிறிஸ்துவர்கள்

இருபது வருடங்களாக (1668-1686) குருக்களில்லாமல், ஆயனில்லாத ஆடுகளைப்போல் தயங்கி நின்றார்கள்.

பார்த்தார் அருளானந்தர் சுவாமி, புறப்பட்டார் உடனே அங்கே. 'ஆவூர்வாசியாகிய சிலுவை நாயக்கர் உபதேசியாரைத்' தம்முடன் அழைத்துச் சென்றார். இரண்டு மாதங்களில் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் மனந்திருப்பினார். இதையறிந்த மறவன் தேச மந்திரி குமாரப்பிள்ளை என்பவன் அவர்களிருவரையும் பிடித்துச் சொல்லொண்ணா வேதனைப்படுத்தினான். உபதேசி சிலுவை நாயக்கரை மூர்க்கமாய்க் கன்னத்தில் அறைந்தான். அவரது ஒரு கண் தெறித்து கீழே விழுந்தது. அருளானந்தர் சுவாமி அதை எடுத்து கண் குழியில் வைத்து, அதன் மேல் சிலுவை அடையாளம் வரைந்தவுடனே புதுமையாகக் கண் சுகமடைந்தது. இதைக்கண்ட மாற்று அணியினர் இது மாந்திரீகமென்று பிதற்றினர். அங்கு கிறிஸ்தவ வேதத்தை போதிக்கக்கூடாதென்று அவர்கள் இருவரையும் அந்த அதிகாரி ஊருக்கு வெளியே துரத்திவிட்டான்.

1687மாவது ஆண்டில் அருளானந்தர் சுவாமி போர்த்துக்கல் நாட்டிற்குச் சென்று குருக்களைக் கூட்டிவரப் போன பொழுது அவரது வேதபோதக வேலையை, மேலே குறிப்பிட்ட லூயிஸ்-தெ-மெல்லோ என்னும் குரு தொடர்ந்து நடத்திக்கொண்டு வந்தார். அப்போது மறவன் நாட்டு மன்னனின் அதிகாரிகளில் ஒருவன் இவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தான். அங்கு சிறையில் இவர் மூன்று வருடங்களாகப்பட்ட கஷ்டங்களினால் நோய்வாய்ப்பட்டார். இதையறிந்த மதுரை மிஷன் தலைவர், இக்குருவானவரை இராணி மங்கம்மாளின் சிபாரிசுனால் சேதுபதி மன்னர் கையிலிருந்து மீட்டு, ஆவூருக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். ஒரு வருடம் வரையில் இந்த நல்ல குரு வியாதியால் துன்பப்பட்டு, மூன்று குருக்கள் பக்கத்திலிருக்க 1691 ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் உயிர் துறந்தார்.

பழைய ஆவூரிலிருக்கும் 'ஐந்து குருமார் கல்லறைகளில் இவர் கல்லறையும் ஒன்று. இங்கு அடக்கம் செய்யப்பட்ட மீதி நான்கு குருக்களின் பெயர்கள் என்னவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த ஐந்து குருக்கள் பேரில் ஆவூர் பங்கு கிறிஸ்தவர்கள் விசேச பக்தி கொண்டவர்களென்பது சொல்லாமலே விளங்கும். 

II. Fr. Venantius Bouchet, S.J. (1691-1702)

வி. புஷே என்பவர் பிரஞ்சுக்காரர். முதலில் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். இவர் முதன் முதல் சுதேச கிறிஸ்தவர்களை விசாரித்து கொண்டு வந்தார். அதற்குப்பின் மதுரை மிஷனில் சேர்ந்து திருச்சிராப்பள்ளி கிறிஸ்துவர்களுக்குப் பங்கு சுவாமியாராய் நியமிக்கப்பட்டார். இவர் வேதம் போதிக்கத் தொடங்கியது முதல், மக்கள் இவரை மதிக்கவும், உபசரனை செய்யவும் ஆரம்பித்தனர்.

அருட்தந்தை. லூயிஸ் தெ மெல்லோ'  ஆவூரில் மரித்ததும், அருட்தந்தை வி. புஜே அவர்கள், ஆவூர் பங்குத்தந்தையாக சுமார், 1691 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதியில் நியமிக்கப்பட்டார். இத்தேதியிலிருந்து கிறிஸ்தவ மறை ஆவூர் பங்கில் வெகு சீக்கிரம் பரவியது. பெரிய சஞ்சீவிநாதர் சுவாமி என்று சொல்லப்பட்ட இந்த வி. புஷே அவர்கள் ஆவூர் கிராமத்திலிருந்த சிறிய கூரைக்கட்டு கோவிலை இடித்துவிட்டு, ஒரு அழகான கோவிலை சுண்ணாம்பினாலும், கருங்கற்களாலும் கோவில்தோப்பு என்னுமிடத்தில் 1697-ஆம் ஆண்டில் (ஈஸ்வர ஆண்டு) கட்டுவித்தார். பழைய ஆவூரிலும் அதைச் சுற்றிலுமுள்ள முப்பது கிராமங்களிலும், கிறிஸ்தவ மறையை போதித்துப் பன்னிரண்டு வருடங்களுக்குள் முப்பதாயிரம் மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். தமக்குத் துணையாகப் பத்து உபதேசிமார்களை நியமித்துக் கொண்டு, அவர்களின் உதவியால் இத்தனை ஆயிரம் மக்களை மனந்திருப்பினார். ஆவூரைச் சுற்றியுள்ள 30 கிராமங்களுக்கு அடிக்கடி கால்நடையாய்ப் பயணம் செய்து வேதத்தைப் போதித்து வருவார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறு கூரைக்கட்டு கோவிலைக் கட்டுவித்தார். இவர் திருச்சிராப் பள்ளியிலுள்ள மதுரை நாயக்கர் மன்னரின் பெரிய மந்திரியான Dalawai (தளவாய்) என்பவருடன் நெருங்கிய நட்புப் பாராட்டினார். மேலும் இராணி மங்கம்மாளும் இக்குருவானவருக்கு பல சமயங்களில் உதவி புரிந்திருக்கிறாள்.

இந்தப் "பெரிய சஞ்சீவிநாதர் சுவாமிதான் இந்நாட்டில், முதன் முதலாக புனித வெள்ளிக்கிழமையில், நமது ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சிகளை வெகு பக்திப் பற்றுதலுடன், சுரூபங்களைக்கொண்டு பாஸ்கு காண்பிக்க ஏற்பாடு செய்தவர்." இதனால் கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் கிறிஸ்தவ வேத சத்தியங்களை நன்றாக அறிந்து, ஏராளமாய் மனந்திரும்பினார்கள் என்று திரிங்கால் (Fr. Jahin Baptist Trincal, SJ) (1815- 1892) என்னும் சேசுசபை குருவானவர் கூறுகிறார்.

வி. புஜே சுவாமியாரும், அருளானந்தரும் ஒரே காலத்தில் இந்நாட்டில் வேதம் போதித்தவர்கள். அருளானந்தரைப்பற்றி வி.ஜே. சுவாமியார் பின்வருமாறு கூறுகிறார். 'எந்தக் குருவானவரும் அருளானந்தரைப் போல், அத்தனை ஆயிரம் கிறிஸ்துவர்களை மனந்திருப்பியிருக்க மாட்டார்கள்' என்கிறார். வி.புஜே சுவாமியார் ஆவூரில் பங்கு சுவாமியாராயிருந்த காலத்தில், அருளானந்தர் மதுரை மிஷன் தரிசிகராக பழைய ஆவூருக்கு வந்து, 1691 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்து நாட்கள் தங்கியிருந்து விட்டு, இவ்விடம் வியாதியாயிருந்த சேவியர் ஜிடென் ஆவன் (Fr Xavier Shieden Often, S.J) என்னும் சேசுசபை ஜெர்மன் குருவானவரை புதுச்சேரிக்கு மருத்துவ சிகிக்சைக்காக கூட்டிக்கொண்டு போனார். பரிதாபம்! சிலநாள் சென்று இக்குருவானவர் புதுச்சேரியில் இறந்துபோனார்.

ஆவூரில் அருளானந்தர் தங்கியிருந்த போது, 'நான் என் தலையையும், தாடியையும், மறவன் நாட்டு மன்னனுக்கு கையளிக்க வைத்திருக்கிறேன்' என்று அநேகம் தடவைகளில் அவர் கூறியதை, வி. புஜே சுவாமியார் தாமே நேரில் கேட்டுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார். இதனால் அருளானந்தர் தாம் வேதசாட்சியாக உயிர் கொடுக்கவேண்டுமென்று எவ்வளவு அவாக்கொண்டிருந்தாரென்று நன்கு விளங்குகிறதல்லவா? அச்சமயத்தில் அருளானந்தர், உடல்நலமின்றி இருந்த தமது பிரமாணிக்கமுள்ள உபதேசி சிலுவை நாயக்கரரை, ஆவூரில் சந்தித்துப் பேசி அவருக்கு வேண்டிய ஆறுதல் சொல்லிவிட்டு, கடைசியாக மறவன் நாட்டிற்கு வேதம் போதிக்கச் சென்றார். அப்போதுதான் அவர் வேத சாட்சியாக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓரியூரில் 1693 ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி தன் உயிரைத் தன் தேவனுக்குப் பலியாகத் தத்தம் பண்ணினார். 1947-ல் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

1703 ஆம் ஆண்டில் ஆவூரிலிருந்த வி. புஜே சுவாமியார் புதுச்சேரிக்கு மாற்றப்பட, அங்கு புதிதாய் ஏற்படுத்திய பிரெஞ்ச் கர்நாட்டிக் மிஷனின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டு, அதை பல ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வந்தார். அநேக சேசுசபை பிரெஞ்ச் குருக்கள் வேதபோதக அலுவலில் ஈடுபட்டு இவருக்குக் கீழே உழைத்து வந்தார்கள். இறுதியில் இவர் 1732 ஆண்டில் தலைமைக்குருவாக பதவிலிலிருக்கும் பொழுது, புதுச்சேரியில் மரணமடைந்தார். தென் இந்தியாவின் தமிழ்க் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மறையில் சேர்ந்தது மதுரை மிஷன் (பழைய, புதிய) சேசுசபைக் குருக்களாலும், பிரஞ்ச் கர்நாடிக் சேசுசபைக் குருக்களாலும், பாரிஸ் மிஷன் அந்நிய வேதபோதக சபை (Foreign Mission of Paris) குருக்களாலுமே தான்.

இந்திய மிஷன்:

1703 ஆம் ஆண்டில் திருத்தந்தையின் செயலரான, (Mgr. Toumon) மோன்சிஞ்ஞோர் டூர்னன் என்பவர், தென் இந்தியாவிலுள்ள ஜாதி ஆசாரங்களைப்பற்றி (Malabar Rites) விடுத்த உத்திரவினால் இங்கு திருச்சபைக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. ஆகையால் கோவா பேராயரும், மயிலாப்பூர் ஆயரும் சேசுசபை குருக்களும், திருத்தந்தைக்கு இது விசயமாக உடனே ஒரு மனு செய்து கொண்டனர். 1704 ஆண்டில் 'பிரான்சிஸ் லேயினஸ்' என்னும் சேசுசபை மதுரை மிஷன் தலைவரும், புதுச்சேரியிலிருந்த பிரஞ்சு கர்னாட்டிக் மிஷன் தலைவர் வி. புஜே என்ற பெரிய சஞ்சீவிநாதரும், உடனே ரோமாபுரிக்குச் சென்றனர். தென் இந்தியாவில் மதுரை மிஷனில் - தத்துவ போதகர், இந்து தேச சடங்காச்சாரங்களை கடைப்பிடித்துக் கொண்டு, வேத போதக அலுவலைச் செய்துகொண்டு வந்தார். இதுதான் உபசரனைமுறை என்பது. இதைப்பற்றி திருத்தந்தை முன்னிலையில் பிரான்சிஸ் லேயினஸ் என்னும் தலைமைக் குரு ஒரு சிறந்த சொற்பொழிவு இலத்தீன் மொழியில் ஆற்றினார். அதன் பயனாக, இம்முறையை திருத்தந்தை கருணை கூர்ந்து அங்கீகரித்தார்.

பின்னர் பிரான்சிஸ் லேயினஸ் (Fr. Francis Laynez, S.J.) தமது சொந்த ஊராகிய போர்த்துக்கல் இராஜதானிப் பட்டணமாகிய லிஸ்பன் நகரில் சில காலம் தங்கியிருந்தபோது, 1708 ஆம் ஆண்டில் மயிலாப்பூர் உதவி ஆயராக நியமிக்கப்பட்டு, அபிசேகம் செய்யப்பட்டார். 1710 ஆண்டில் இந்த ஆயர் அநேக வாலிபக் குருக்களைக் கூட்டிக்கொண்டு போர்த்துகீசிய கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து இறங்கினார். அதே வருடத்தில் வி. புஜே பிரஞ்சு கப்பல் மார்க்கமாய் புதுச்சேரியில் வந்து இறங்கினார்.

III. Dom Francis Laynez, S.J.

பிரான்சிஸ் லேயினஸ் சுவாமியார்

ஆயராக நியமிக்கப்படுமுன், அருட்தந்தை பிரான்சிஸ் லேயினஸ் மதுரை மிஷனில் புகழ்வாய்ந்த வேதபோதகராக விளங்கினார். ஏராளமான மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து அவர்களைச் சத்திய மறையில் சேர்த்திருக்கிறார். ஏற்கனவே கூறியதுபோல முத்திப்பேறு பெற்ற அருளானந்தர் வேதசாட்சியாகத் தலைவெட்டுண்ட அன்று இவர்தான் மதுரை மிஷன் முதன்மை குரு பதவியிலிருந்தார். இவர் தான் ஆயர் மதுரேந்திரர் என்று அழைக்கப்பட்டவர்.

1711 ஆம் ஆண்டில் ஆயர் பிரான்சிஸ் லேயினஸ் ஆண்டகை முதன்முதல் மதுரை மிஷனில் பங்கு விசாரணை செய்ய எழுந்தருளி வந்து, ஐந்து மாதகாலம் பழைய ஆவூரில் தங்கியிருந்து உறுதிப் பூசுதல் கொடுத்து வந்தார். இந்த ஐந்து மாதங்களும் கிறிஸ்தவர்கள் சுற்றுக் கிராமங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக இங்கு வந்து உறுதிப்பூசுதலையும், மற்ற திருவருட்சாதனங்களையும் பெற்றுப் போனார்கள். நான்கு திசையிலுமிருந்து குருக்களும், கிறிஸ்துவர்களும் எந்நேரமும் இங்கு வந்து கொண்டிருந்தபடியால், ஆவூர் கிராமம் ஐந்து மாதங்களாக திருநாளாகவும், பெருநாளாகவும் விளங்கிற்று. உறுதிப் பூசுதல் பெற்றவர்கள் 22 ஆயிரம் பேர்கள். இவர் 1715 ஆம்ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி வங்காளத்துக்கு (Bengal) பங்கு விசாரணை செய்யப் போன போது திடீரென்று நோய்வாய்ப்பட்டு சந்திரநாகூரில் (Chandemagore) இறந்து போனார். இவருடைய உடலை கல்கத்தாவிலுள்ள (Calcutta) St. Paul's College, Bandel கோவிலில் மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்தார்கள். 

Fr. Charles Michael Bertoldi, S.J. தோல்டி சுவாமியார் ஆவூர் பங்குக்கு வருமுன் தஞ்சாவூரில் கிறிஸ்துவர் களை விசாரித்து வந்தார். அப்போது இவரும், ஜோசப் கர்வாலோ (Fr. Joseph Carvallo) சுவாமியாரும், பல மாதங்களாக தஞ்சாவூர் சிறைச் சாலையில் அடைபட்டிருந்தார்கள். அதன்பின், இவர் விடுதலை செய்யப் பட்டார். ஆனால் பரிதாபம் சில மாதங்கள் சென்று ஜோசப் கர்வாலோ சுவாமி தாம் பட்ட கஷ்டத்தினால், தமது 42-ம் வயதில், 10 நவம்பர், 1701 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் உயிர் துறந்தார். இந்த சம்பவங்கள் தஞ்சாவூர் இராஜா ஸாஜி என்பவன் காலத்தில் நடந்தன. இவன் ஒரு கொடுங்கோலன் (தஞ்சாவூர் நீரோ) (Nero)

IV. Fr. Charles Michael Bertoldi, S.J. (1703-1740)

சார்லஸ் மைக்கில் பெர்த்தோல்டி என்னும் ஆவூர் ஞானப்பிரகாசியார் சுவாமி 38 ஆண்டுகளாக ஆவூர் பங்கிலிருந்து கொண்டு அநேக ஆயிரம் மக்களை மனந்திருப்பினார். இவருக்கு உதவியாக ஒரு குருவானவர் (Coadjutor) ஆவூரில் எப்போதுமிருப்பார். ஏனெனில் இது ஆவூரும், திருச்சியும் சேர்ந்த ஒரு பெரிய பங்கு. இவர் ஏலாக்குறிச்சி அல்லது திருச்சியிலிருந்து வீரமாமுனிவரைத் தமக்கு உதவி செய்யுமாறு அடிக்கடி ஆவூருக்கு வரவழைப்பார். சேசு சபையை ஸ்தாபித்த அர்ச். இஞ்ஞாசியார் எழுதிய 'ஞானமுயற்சிகள் என்னும் தியானங்களை, ஆவூர் ஞானப்பிரகாசியார் தமிழ் கிறிஸ்தவர் களுக்கு முதன் முதல் அக்காலத்தில் எடுத்துரைக்கத் தொடங்கினார். இம்மகத்தான அலுவலில் இவருக்குப் பக்கத் துணையாயிருந்தவர் கொன்ஸ் தாந்தின் ஜோசேப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் சுவாமியே இராமனாதபுரம், மணப்பாடு, புன்னைக்காயல், தூத்துக்குடி முதலிய பங்குகளில் கிறிஸ்தவர்களுக்கும் உபதேசிமார்களுக்கும் தியானம் கொடுக்க ஆவூர் ஞானப்பிரகாசியார் அவ்வளவு தூரம் கால்நடையாகப் பயணம் செய்திருக்கிறார்.

1708 ஆம் ஆண்டில் மிகக் கனமழை பொழிந்தது. காவேரி ஆற்றின் இருகரைகளிலும் வெள்ளம் ஏராளமாய்ப் புரண்டோட, பயிர் பச்சைகளெல்லாம் வெள்ளத்தில் அழிந்து போயின. அடுத்த வருடத்தில் 1709-இல் மழையில்லாத காரணத்தினால் எல்லாம் வறண்டு போக.க்ஷ, உணவுகள் கிடைக்காமல் கடும்பஞ்சம் ஏற்பட்டு, பசி, பட்டினி, பலவித பிணிகளால் மக்கள் பீடிக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளியிலும், புதுக்கோட்டை தொண்டைமான் நாட்டிலும், அதற்குத் தெற்கேயும் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். ஊரை விட்டோடிப்போய் பல திசைகளிலும் சென்று வயிறு பிழைக்கப் போனவர்களில் உயிர் தப்பினவர்கள் சொற்பப் பேர் மட்டுமே. 

இக்கொடிய பஞ்சத்தில் அல்லல் பட்டவர்களுக்கு ஆவூர் ஞானப்பிரகாசியார் சுவாமி தம்மால் ஆன மட்டும் உதவி புரிந்தார்.

1726 ஆம் அண்டு பவானிசங்கர், தஞ்சைநகர் இராஜாவின் உதவியால் மறவன் தேசத்தை ஜெயித்துக்கொண்டார். தோல்வியடைந்த மாறன் தேசத்து ராஜா கட்டத்தேவர், திருச்சி நாயக்கர் இராஜாவின் உதவியை தேடி இங்கு வந்தார். திருச்சியில் சில காலம் தங்கியிருந்தபோது, ஆவூர் ஞானப்பிரகாசியார் திருச்சிச் சென்று கட்டத்தேவரைக் கண்டு பேசி அவருக்கு வேண்டிய ஆறுதல் கூறினார். அவருக்கு சொந்தமான மறவன் தேசம் கடவுளின் கிருபையால் அவருக்குத் திரும்பி கிடைக்காமல் போகதென்று தீர்க்கத்தரிசனம் போல் உறுதியாகச் சொன்னார். இவ்வாறே நான்கு வருடம் சென்று 1730-இல் கட்டத்தேவர் வெற்றியடைந்து மறவன் தேசத்திற்கு அதிபதியானார். இச்சுபசெய்தியை ஆவூர் ஞானப்பிரகாசி யாருக்கு அவர் தெரியப்படுத்தி, சங்கைக்குரிய சுவாமியாரை மறவன் தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு வினயமாய்க் கேட்டுக்கொண்டார். அவரது அழைப்பை ஏற்று சுவாமியார் மறவன் தேசத்திற்கு 1730 ஆம் ஆண்டில் சென்றபோது, அவருக்கு வெகு ஆடம்பரமாய் நல்வரவு கூறி, இராஜதானிப்பட்டணத்தில் மூன்று மாதம் அவரை உபசரணை செய்தார். சிவகங்கை இராஜாவும் அவருக்கு தகுந்த மரியாதை செய்தார். இந்த நெருங்கிய சிநேகத்தால் கிறிஸ்தவ வேதம் மறவன் தேசத்தில் மென்மேலும் பரவியதென்றால் அது மிகையாகாது.

1730-ஆம் ஆண்டில் அதாவது 22 வருடங்கள் கழித்து, (1708+22= 1730) மேலே கூறியது போல ஆவூர் ஞானப்பிரகாசியார் கால் நடையாய் மறவன் தேசத்திற்குக் கட்டத்தேவர் வேண்டுகோளுக்கிணங்கி பயணம் செய்தார்.

கோவில்தோப்பு என்னும் பழைய ஆவூரின் சமீபத்தில் போகிற ஒரு காட்டாற்றில் (கோரை ஆற்றின் கிளை நதி) மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ளம் உண்டாகி, பழைய ஆவூரிலிருக்கும் கோவிலுக்கும், குடிகளுக்கும் இடைஞ்சல்கள் ஏற்பட்டு வந்ததினால், 'புதிய ஆவூர்' வேறிடத்தில் கட்டும்படி திட்டம் செய்தவர் இந்த ஆவூர் ஞானப்பிரகாசியாரே ஆவார். கடைசியாக, 1740ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 10ஆம் தேதி இவர் தமது 80-வது வயதில் கிறிஸ்துவில் இளைப்பாறினார். இக்குரு வானவர் இங்கு 40 வருடங்களாக வேதம் போதித்த வேளையில், இவருடைய தியாகம் சொல்லுந்தன்மையல்ல. ஆவூர் ஞானப்பிரகாசியார் கல்லறை, ஆவூர் நந்தவனத்தில் முதல் கல்லறையாகும். 

V. Fr. Constant Joseph Beschi, S.J.

கொன்ஸ்தாந்தின் ஜோசப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் (1710-1747)

1710ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வீரமாமுனிவர் இந்தியாவுக்கு வந்திறங்கினார். 1711-ல் மதுரை மிஷனில் சேர்ந்து வேதபோதக வேலையை ஆரம்பித்தார். பின்னர் இவர் ஆவூரில் மூன்று வருடங்களுக்கு மேல் (1726-29) பங்கு குருவாயிருந்தார்.

1732-33-ல் உள்நாட்டு யுத்தம் (Civil War) இராணி மீனாட்சிக்கும், பங்காரு திருமலைநாயக்கருக்கும் திருச்சியில் நிகழ்ந்தது. அதே சமயத்தில் ஆற்காட்டு நவாபின் சேனை கப்பம் வாங்குவதற்கு திருச்சி, தஞ்சாவூர், இராஜ்யங்களுக்கு வந்தது. இச்சேனை இச்சண்டையில் கலந்து கொண்டது. ஆவூர் ஞானப்பிரகாசியார் தமக்கு உதவியாக ஏலாக்குரிச்சியிலிருந்த வீரமாமுனிவரை இப்போது ஆவூருக்கு வரவழைத்திருந்தார். 

பழைய ஆவூரில் வைத்து வீரமாமுனிவர், சந்தாசாஹிப்பை 1733 ஆம் ஆண்டில் சந்தித்தார். வீரமாமுனிவர் கல்வி கேள்விகளில் திறமை வாய்ந்தவரென்றும், பெரிய துறவியென்றும் அறிந்து, அவருக்கு குஸ்மத்தி சன்னியாசி (Chaste Ascetic) யென்ற சிறந்த பட்டத்தை சந்தாசாஹிப் அளித்தார். இது முதல் கிறிஸ்தவ வேதபோதகருக்கும் குருமார்களுக்கும், தமது படை யாதொரு தீங்கும் செய்யக்கூடாதென்றும், அவர்கள் எங்கும் சென்று வேதம் போதிக்கலாமென்றும் ஆணை பிறப்பித்தார். கிறிஸ்தவக் கோவில்களைக் காப்பாற்றும் படியாக சந்தாசாஹிப் தன் கொடிகளை ஒவ்வொரு கோவிலுக்கும் அனுப்பி வைத்தார். அவ்வாறே ஆவூர் கோவிலுக்கும் தன் கொடியை அனுப்பிவைத்து அக்கோவிலைக் காப்பாற்றினார். ஆவூர் கோவில் முகப்பையடுத்த பெரிய புளியமரத்தின் உச்சியில் அக்கொடி எந்நேரமும் பறந்து கொண்டிருப்பது வழக்கம். அம்மரம் 200 வருடங்களாக இதுநாள் வரைக்கும் இருக்கிறது. மேலும் தினம் இரண்டு வேளை காலை, மாலை ஆவூர் கோவிலில் நகரா என்னும் மேளம் அடிக்கப்படும். அதன் சத்தம் எவ்வளவு தூரம் கேட்குமோ அவ்வளவு தூரத்திலிருந்து ஒருவரும் கொள்ளையடிக்க வரமாட்டார்கள்

தத்துவப் போதகர் மதுரை மிஷனில் முதன் முதல் தாம் ஏற்படுத்திய சிறந்த ஒழுங்குகளினால் கிறிஸ்தவ மறையை நிறுவினார். அர்ச். அருளானந்தர் தாம் வேதசாட்சியாக மரித்து சிந்திய இரத்தத்தினால் மதுரை மிஷனை அர்ச்சித்து வளமுள்ள பூமியாக ஆக்கினார். வீரமாமுனிவரோ, தாம் எழுதிய மேலான பிரபந்தங்களினால் இன்னும் மறு உலகிலிருந்து கொண்டு ஏராளமான மக்களை திருச்சபையில் சேரும்படி தூண்டிக் கொண்டு வருகிறார்.

1740 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மராட்டியர்கள் கர்நாடகத்தின் மேல் படையெடுத்து வருமுன் வீரமாமுனிவர் மறவன் தேசமார்க்கமாய்த் தெற்கே சென்று, தூத்துக்குடி, பெரியதாழை, மணப்பாடு இவ்விடங்களில் உழைத்து வந்தார். கடைசியாய் இவர் அம்பலக்காடு குருமடத்திலிருக்கும் போது, தமது 67-ம் வயதில் 1747 ஆண்டில் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உயிர் துறந்தார். 

ஆவூரில் வீரமாமுனிவர் எவ்வளவு காலம் தங்கியிருந்தார். இந்த கேள்விக்கு பதில் எளிதாய் சொல்ல முடியாது ( Protestant Bishop of Tinnevelly Dt.Dr. Caldwell) ប់ សំលេស់ ឈប់ យ சொல்லுவதாவது: "சேசுசபை வருடாந்திர கடிதங்கள் (Annual Letter from 1720 to1729) அழிந்துபோய்விட்டன. ஆனால் 1729-ல் பெஸ்கி சுவாமியார் திருச்சிராபள்ளியை அடுத்த ஆவூரில் சாதாரணமாக யிருந்ததாகத் தெரிய வருகிறது" என்கிறார். (Vide 'His History of Tinnevelly Dt.')

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில்..

1. (1726-29)-ல் முனிவர் ஆவூரிலிருந்திருக்க வேண்டும்.

2 பிறகு இவர், திருச்சிக்கும். ஏலாக்குரிச்சிக்கும் போயிருந்திருக்க வேண்டும். அங்கிருந்து அடிக்கடி ஆவூர் ஞானப்பிரகாசியார் வேண்டுகோளுக்கு இணங்கி ஆவூருக்கு வந்திருக்க வேண்டும். (1729-33)

3. இறுதியில், 1733இல் முனிவரும் சந்தாசாஹிப்பும் முதல்தடவை சந்தித்திருக்க வேண்டும். இந்த முதல் பழக்கம் நாளடைவில் நெருங்கிய சிநேகமாக மாறினது

VI. Fr. Francis Homem, S.J. (1740-45)

ஆவூர் ஞானப்பிரகாசியாருக்குப்பின், பிரான்சிஸ் ஓமம் என்னும் சேசுசபை அருளானந்தர் ஆவூர் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார், காலஞ்சென்ற ஆவூர் ஞானப்பிரகாசியாரின் கோரிக்கைப்படி இவர் பழைய ஆவூருக்கு சற்று தொலைவில் புதிய ஆவூர் என்னும் ஊருக்கு அடித்தளமிட்டு, அதில் கூரைக்கட்டு வீடுகளைக் கட்டுவித்து கிறிஸ்துவர்களைக் குடி வைத்தார். இதில் ஒரு கூரைக்கட்டுக் கோவிலும் எழுப்புவித்து புனித பெரியநாயகி மாதாவின் சுரூபத்தை நிறுவினார். புதிய ஆவூர் என்னும் இச்சிறிய கிராமம் இந்த அருளானந்தர் சுவாமியின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

இவர் 1745 முதல் 1752 வரையில் தள்ளாத பிராயமாயிருந்து, அதற்கு பிந்தைய வருடத்தில் இறந்து போனதாக Rev. Fr. Besse, S.J. என்னும் சிரேஷ்டர் அபிப்பிராயப்படுகிறார். ஆவூர் ஞானப்பிரகாசியாரின் சுல்லறைக்குப் பக்கத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

VII. Fr. Francis Clement Thomassini, S.J. (1745-1751)

மதுரேந்திரர் சுவாமி என்னும் இவர் 1745 ஆம் ஆண்டில் ஆவூர் பங்கு குருவாய் நியமிக்கப்பட்டார். இவர் காலத்தில்தான் "புதுக்கோட்டை தொண்டைமான் இராஜா பட்டத்திற்கு வந்த 60-ம் வருடத்தின் வைர ஜூபிலி 1746 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

மதுரேந்திரர் பங்குக்கு வந்த கொஞ்ச காலத்தில் வழக்க போல், மராட்டியர்கள் இப்பக்கங்களில் கொள்ளயடிக்க வந்தவர்கள் ஆவூர் கோவிலுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டார்கள். ஆகையால் இந்த நல்ல மேய்ப்பன் உடனே ஒரு காறைக்கட்டுக் கோவிலில் கருங்கற்களினாலும், சுண்ணாம்பு சாந்தினாலும் கட்டும்படி தீர்மானித்து 1747 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி ஆவூர் கோவிலுக்கு அஸ்திவாரம் போட்டு சிலுவைத்தாக்காய் ஒரு சிறிய தேவாலயத்தைக் கட்டினார். அன்று வேகசாட்சியான அர்ச் லவுரேஞ்சியார் திருநாள், ஆனால் கிறிஸ்தவர்கள் உட்காருவதற்கு இடம் போதாததினால், தற்காலிகமாக இந்த தேவாலயத்திற்கு முன் ஒரு கொட்டகை போடப்பட்டது. ஏறக்குறைய 55 வருடங்களுக்குப் பிறகுதான் கொட்டகைக்குப் பதிலாக பெரிய மண்டபங்கள் பெரிய யாகப்பர் காலத்தில் கட்டப்பட்டன 175 ஆம் ஆண்டு மத்தியில் ஆவூரிலிருந்த மதுரேந்திரர் சுவாமி வடக்கன்குளத்து பங்குக்கும். வடக்கன் குளத் திலிருந்த பெரிய பரஞ்ஜோதிநாதர் ஆவூர் பங்குக்கும் மாற்றிக்கொண்டார் (Mutual transfer) பெரிய பரஞ்சோதிநாதர் 1751 ஆண்டில் ஆவூருக்கு பங்கு சுவாமியாராக வந்த பொழுது திருச்சி மலைக்கோட்டை முற்றுகை (1751-52) மும்முரமாய் நடந்தது.

VIII. Fr. John Baptist Buttari, S.J.

ஜான் பேப்டிஸ்ட் பட்டாரி என்னும் பெரிய பரஞ்சோதிநாதர் முதன் முதல் 1737-ஆம் ஆண்டில் சருகணியில் வேதபோதக வேலையில் ஈடுபட்டார். 3 மாதங்கள் சென்று ஆவூருக்கு வந்து தள்ளாத வயோதிகராய் இருந்த ஆவூர் ஞானப்பிரகாசியாருக்கு அந்திமக் காலத்தில் உதவி புரிந்தார். இவர் கரங்களில் ஆவூர் ஞானப்பிரகாசியார் உயிர்விட்டார். (அதாவது 1740-ஆண்டு மார்ச்சு மாதம் 10-ம் தேதி) பிறகு, பெரிய பரஞ் சோதிநாதர் ஆவூர் பங்கை மூன்று மாதகாலம் விசாரித்து வந்தபின் திண்டுக்கல் பங்குக்குருவாக மாற்றப்பட்டு, அங்கு ஒன்பது மாதங்கள் பங்கு சுவாமியாராயிருந்தார். (1740-41) அதன் பிறகு இவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நேமம் என்ற பங்குக்கு மாற்றப்பட்டு அவ்விடம் பத்து ஆண்டுகளாக 11741-51) பங்கு விசாரனை செய்து அரிய சேவை புரிந்து ஒரு பெரும் தேவலாயத்தை கருங்கற்களால் கட்டுவித்தார். இந்த நேமம் பங்கு வடக்கன்குளத்திற்குச் சமீபத்திலிருக்கிறது.

இந்த நல்ல மேய்ப்பன் 1745-ஆண்டில் வடக்கன்குளத்தில் நீலகண்டம்பிள்ளைக்கு திருமுழுக்கு கொடுத்து, அவருக்கு தேவசாகயம் (Lazanus) என்ற பெயரிட்டார். 1752-ஆண்டு ஜனவரி 14ஆம் மாதம் தேதி கோட்டாருக்குச் சமீபத்திலுள்ள ஆரல்வாய்மொழி கணவாய் அருகில் தமது உயிரைச் சத்திய வேதத்திற்காகத் துறந்தார் தேவசகாயம். 

இதற்குப் பின், 1751 ஆம் ஆண்டு மத்தியில் பெரிய பரஞ்சோதிநாதர் (Nemam) நேமம் என்ற பங்கிலிருந்து ஆவூர் பங்குக்கு மாற்றப்பட்டு இங்கு ஆறு ஆண்டுகளாக (1751 -1757) பங்குதந்தையாக இருந்து அரிய சேவை புரிந்தார். திரளான மக்களை மனந்திருப்பினார். 

1757ஆம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி வியாழக்கிழமை ஆண்டவரின் விண்ணேற்ற திருநாளன்று, பெரிய பரஞ்சோதிநாதர் மரணமடைந்தார். அவரது கல்லறை ஆவூரிலிருக்கிறது. 

IX. Fr. Francis Clement Thomassini, S.J. (1751-1775)

1751 ஆம்ஆண்டு மத்தியில் ஆவூரிலிருந்த மதுரேந்திரர் சுவாமி வடக்கன்குளத்திற்கு மாற்றப்பட்டு, அவ்விடத்தில் 24 ஆண்டுகளாக வேதம் போதித்து, மக்களை ஏராளமாய் மனந்திருப்பினார். இவர் இரகசியமாய் சிறைச்சாலைக்குப் போய் தேவசகாயத்திற்கு ஆறுதல் சொல்லி, பாவ சங்கீர்த்தனம் கொடுத்து திவ்விய நன்மை வழங்கினார். அவர் பெரியதாளை பங்கையும் சேர்த்துப் பார்த்துக்கொண்டு வந்தார். அங்கு 1775-இல் இவர் கிறிஸ்துநாதரில் இளைப்பாறினார். அக்கோவிலில் இவரை நல்லடக்கம் செய்தனர். இவர் வடக்கன் குளத்தில் புரிந்த அரிய ஆத்தும சேவைக்காக அவ்வூர்வாசிகள் தங்கள் மத்தியில் இவருக்கு ஒரு ஞாபகச்சின்னம் (Cenotaph) எழுப்பியிருக்கின்றனர். சேசுசபை

கலைக்கப்பட்டபின் (1775), இவர்தான் வடக்கன்குளத்தில் கடைசி சேச சபைக் குருவானவர். இவருக்குப் பின் அங்கே வேத போதக அலுவல் முன்னேற்றமின்றி இருந்து வந்தது.

இந்த மதுரேந்திரர் சுவாமியைப்பற்றி ஆவூரில் ஒரு நினைவுச் சின்னமில்லாது போனாலும், இவரின் நாமம் என்றும் மறக்கப்பட மாட்டாது. அதெப்படியெனில், இவர் 1747ஆம் ஆண்டில் ஆவூரில் முதன் முதல் எழுப்பிய காரைக்கட்டு கோவில் சிறியதாயினும், சிலுவைத் தாக்காய்க் கட்டுவித்தார். இந்தக் கோவிலின் 200-வது ஆண்டு விழாவின் நினைவாகத் தான் ஆவூர் இறைமக்கள் (1747-1947) இரண்டாவது நூற்றாண்டு ஜூபிலி விழாக் கொண்டாடினர்.

X. Fr. Francis Paes, S.J. (1757 மே- 1757ஆகஸ்ட்)

பெரிய பரஞ்சோதிநாதருக்கு இறுதிக்காலத்தில் (1757) உதவிபுரிந்த சத்தியநாதபுரத்து பிரான்சிஸ் பயஸ் சுவாமியார், பழுத்த பழமான கிழவர் ஆனார். அவருக்குப்பின் இவர் மூன்று மாதங்களாக ஆவூர் பங்கு சுவாமியாராக இருக்கும்போது, இவரும் மறைந்தார். இவரும் ஆவூரில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

XI. Fr. Peter Machado, S.J. (1757 - 1789)

Fr. Peter Machado, S.J.என்னும் தர்மநாதர்சுவாமி, திருச்சி ஆவூர் இவ்விரண்டு பங்குகளையும் 32 வருடங்களாகச் சேர்த்து விசாரித்துக்கொண்டு வந்தார். இவர் சிலகாலம் திருச்சியிலும், சிலகாலம் ஆவூரிலுமிருப்பார். இவர் நினைவாகத்தான் திருச்சி பழைய கோவிலிருக்குமிடத்திற்கு தர்மநாதபுரம் என்று பெயர் வந்தது. இவர் 1789-ம் ஆண்டு சூன் மாதம் 25-ம் தேதி திருச்சியில் மரணமானார். அடுத்த நாள் ஆவூரில் இவரை நல்லடக்கம் செய்தனர்.

தர்மநாதர் காலத்தில் திருச்சி பழைய கோவில் முதலில் கட்டப்பட்டது அதற்குப்பிறகுதான் அதாவது, பெரிய யாகப்பர் காலத்தில் ஆவூர் பழைய கோயில் அதே மாதிரி கட்டப்பட்டது. 1766 ஆம் ஆண்டில் தர்மநாதர் சுவாமி, 50 அடி உயரமுள்ள ஒரு பெரிய தேரை, மூங்கில் மரங்களினால் செய்து ஆவூர் பாஸ்குத் திருவிழாவில் சுற்றுப்பிரகாரம் நடத்தினார். அது முதல் பெரிய தேர் சுற்றுப்பிரகாரம் ஆண்டுதோறும் பெரிய ஞாயிற்றுக்கிழமை சுமார் மூன்று மணிக்கு ஆவூரில் நடைபெற்று வருகின்றது. 1802 ஆம் ஆண்டில் பெரிய யாகப்பர் என்ற கத்தனார் சுவாமி மூங்கில் தேரை உடைத்துவிட்டு, நல்ல வைரம் பாய்ந்த கெட்டியான மரத்தினால் புதிய தேர் ஒன்றைச் செய்யத் தொடங்கினார். 1820ஆம் ஆண்டில் இத்தேர் வேலை, பவுல் என்னும் கத்தனார் சுவாமியார் காலத்தில் முடிவுபெற்று அதே வருடத்தில் பாஸ்குத் திருநாளன்று பெரிய ஞாயிற்றுக்கிழமை புதுத்தேர் பவணி வெகு ஆடம்பரமாய் நடந்தது.

தர்மநாதர் சுவாமி ஆவூர் -திருச்சி பங்கிலிருந்த காலத்தில் (1757 -1789) ஐரோப்பாக் கண்டத்தில் அநேக குழப்பங்களும், கத்தோலிக்க நாடுகளில் ஆண்டு வந்த இராயர்களிடத்தில் விபரீதமான நோக்கங் களும் இருந்து வந்தன. அப்போதுதான் மேல்நாட்டில் சேசுசபையாரை மக்கள் பெரும்பாலும் வெறுத்தனர். அவர்களது மிஷன்களில் உலக மெங்கும் இன்னல்கள் ஏற்பட்டன. வேதப்பரம்புதலுக்காக ஐரோப்பாவிலிருந்து இதுவரையில் இந்நாட்டிற்கு வந்த பண உதவி நின்றுவிட்டது. 1759-ல் அதாவது (1747+12) வீரமாமுனிவர் இறந்து பன்னிரண்டு வருடங்களுக்குப்பின் இந்தியாவிலிருந்த சத்திய திருச்சபை பெரும்பாலும் பெரிய ஆபத்திலிருந்து வந்தது.

18வது நூற்றாண்டில் போர்த்துக்கல் (1759), பிரான்ஸ் (1784), இஸ்பெயின் (1767), நேப்பிள்ஸ் (1769) போன்ற நாடுகளில் இருந்த கிறிஸ்தவ அரசர்கள், வேத விரோதிகளான தங்கள் மந்திரிகளின் துர் ஆலோசனைகளுக்கு இணங்கி, தங்கள் நாடுகளிலிருந்த சேசுசபை குருக்களையும், சன்னியாசிகளையும் ஊரைவிட்டு வெளியே துரத்தினர் அல்லது சுரங்கள்களிலும், இருட்டறைகளிலும் கைதிகளாக அநேக வருடங்கள் அடைத்து வைத்திருந்தனர். இதன் பின்னர் 1773-ல் திருத்தந்தை கிளமெண்ட் XIV அவர்கள் சேசுசபையை உலகமெங்கும் கலைத்துவிட்டார் இவ்வாறு இவர் செய்தது சேசு சபையைக் கண்டனம் செய்ய ஏனெனில் சேசுசபையின் மேல் குற்றம் ஒன்றுமே ஏற்படவில்லை. ஆனால் சேசுசபையின் எதிரிகளை அடக்கவும், திருச்சபையின் நன்மைக்காகவும் எங்கும் நீடித்த சமாதானம் நிலவவுமே இவ்விதம் செய்தார்.

1774-இல் பாரிஸ் (Paris) நகரிலுள்ள பிரஞ்சு அன்னிய வேத போதக சபை, புதுச்சேரியில் ஒரு குருமடத்தை ஸ்தாபித்து, அதில் உள்ள குருக்கள் சேசு சபையார் விட்டுப்போன போர்த்துக்கீஸ் மதுரை மிஷனிலும், பிரஞ்சு கர்னாட்டிக் மிஷனிலும், வேதம் போதித்து வரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

1773-இல் திருத்தந்தை ஏற்கனவே உலகமெங்கும் சேசு சபையைக் கலைத்திருந்தார் அல்லவா? இதற்குமுன் இந்தியாவில் வேதம் போதித்து வந்த சேசுசபை குருக்களில் ஏழு சேசுசபை குருக்கள் மட்டுமே, இப்போது உயிரோடிருந்தனர். இவர்களில் ஒன்று இரண்டு பேர்களைத் தவிர, மற்ற சேசுசபை குருக்கள் எல்லோரும் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இறந்து போயினர். 1785-ல் திருத்தந்தை அவர்கள், அன்னிய வேதபோதக சபையைச் சேர்ந்த புதுச்சேரியிலிருந்த பிரஞ்சுக் குருக்களிடம், மதுரை மிஷனையும் மீன்பிடிக்கரையையும் ஒப்படைத்தார். 1788-இல் திருத்தந்தை 6-ஆம் பத்திநாதர் (Pius VI) எழுதித் தந்த Bull என்னும் நிருபத்தில் இந்த ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் திருத்தந்தை செய்த இந்த ஏற்பாட்டிற்கு விரோதமாய், போர்த்துக்கல் இராஜாவின் தூண்டுதலின் பேரில், கோவா ஆயர், கோவா குருக்களை மதுரை மிஷனிலும், மீன்பிடிக்கரையிலும் போய் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். இதன் காரணமாக அன்னிய வேத போதக சபையைச் சேர்ந்த பிரஞ்சு குருக்களுக்கும், கோவா குருக்களுக்கும் ஞான அதிகாரத்தைப் பற்றிய தகராறு (Jurisdiction dispute) பல ஆண்டுகளாக நீடித்தது. (1788-1860). (Propaganda versus Padroado.)

1789- The Great French Revolution, பிரெஞ்சு புரட்சி என்று சொல்லப்பட்ட ஒரு பெரிய புரட்சி பிரான்ஸ் தேசத்தில் நிகழ்ந்தது. இப்பயங்கரமான காலத்தில் வேதம் பரம்புதலைப்பற்றி நினைப்பார் ஒருவருமில்லை. நாடுகள் தள்ளாடிக்கொண்டு நின்றது. போதுமான குருக்களில்லாததால் மக்களை மனந்திருப்ப தகுந்த ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை. பாரிஸ் (Paris) நகரிலுள்ள அன்னிய வேத போதக சபைக் குருமடம் அழிந்துபோய்விட்டது. ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் நாத்திகமும் இராஜாங்க கலகமும், கொலையும், திகிலும், எங்குமே குடிகொண்டிருந்தன.

இந்த காலகட்டத்தில் தான். Fr. Peter Machado, S.J. என்னும் தர்மநாதர் சுவாமி 1789-ம் ஆண்டில் திருச்சியில் மரித்து, மறுநாள் ஆவூரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

1790-லும் அதன் பின்னும் சில காலம், இந்நாட்டில் குருக்கள் மிகச் சிலர் மட்டுமே இருந்ததினால் பின்வரும் ஏற்பாடு செய்யப் பட்டன. கிறிஸ்துமஸ் திருநாளுக்கு ஆவூர் சுவாமியார் முதல் திருப்பலி நள்ளிரவில் வைத்துவிட்டு, உடனே பல்லக்கில் ஏறி திருச்சிக்கு விடியற்காலம் வந்து சேர்ந்து,  6 மணிக்கு 2வது திருப்பலி செய்வார். இந்த திருப்பலி முடியவும், பல்லக்கில் ஏறி புரத்தாக்குடிக்குப்போய் மத்தியானம் 12 மணிக்கு 3ஆம் திருப்பலி செய்வார். மூன்று மணிக்கு மேல்தான், சுவாமியார் எதாவது உணவு சாப்பிட நினைப்பார்.

இவ்வாறு உத்தரிக்கிற ஆத்துமாக்கள் திருவிழாவுக்கும் 3 திருப்பலிகள் மூன்று இடங்களில் நடைபெறும். இதற்காக ஆவூரில் 8 பல்லக்கு போகிகள் எப்போதும் தயாராயிருப்பார்கள். சில சமயங்களில் சுவாமியார் குதிரைமேல் சவாரி செய்வார். 

இதன் பின்னர், 1790 ஆம் ஆண்டில், புதுச்சேரி ஆயரின் அதிகாரத்திலிருந்து கொண்டு, Fr. Jean Ferreira, S.J. . Fr. Xavier de Andrea, S.J. என்பவரும் புதுச்சேரியிலிருந்து ஆவூருக்கு வந்து, ஆவூர் பங்கை மூன்று, நான்கு வருடங்களாக விசாரித்து வந்தனர் (1790- 1793).  1794-இல் அன்னிய வேதபோதக சபையைச் சேர்ந்த Fr. Mottet என்னும் குருவானவர் புதுச்சேரியிலிருந்து ஆவூருக்கு வந்து பங்கு விசாரித்தார். 1795-ல் ஜனவரி மாதம் பிரஞ்சு அன்னிய வேத போதக சபையைச் சேர்ந்த Mgr. Nicholas champenois என்னும் மேதகு ஆயரும், ஐந்து குருக்களும் புதுச்சேரியிலிருந்து திருச்சி, ஆவூர், புறத்தாக்குடி இந்த மூன்று ஊர்களுக்கும் வந்து வேதம் போதித்தனர். 

ஆனால் மலையாள தேசத்திலிருந்து வந்த கத்தனூர் (Catenar) என்கிற மலையாள சிரியன் குருக்கள் அல்லது கோவா குருக்கள், மேற்படி பிரஞ்சு ஆயரையும், குருக்களையும் எதிர்த்ததினால் அவர்கள் புதுச்சேரிக்குத் திரும்பிப் போகவேண்டியதாயிற்று. (1798) இது முதல் (1798 -1838) மலையாள தேசத்திலிருந்து வந்த கத்தனார் என்கிற மலையாள சிரியன் குருக்களையும், அல்லது கோவா குருக்களையும், ஆங்கிலேய அரசும், திருச்சி நவாபுவின் கோர்ட்டாரும் அங்கீகரித்ததினால், புதுக்கோட்டை தொண்டைமான் உத்தரவின் பேரிலும், மதுரை பொலிடிக்கல் ஏஜண்டு (Collector) அனுமதியின் பேரிலும், இவர்கள் ஆவூர் பங்குக்கும் அதையடுத்த மற்ற மூன்று பங்குகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

கோவா - சிரியன் குருக்களுக்கும், புதுச்சேரி அன்னிய வேதபோதக பிரஞ்சுக் குருக்களுக்கும் ஞான அதிகாரத்தைப் பற்றிய தகராறு வெகுகாலம் ஏற்பட்டிருந்தது. அதனால் மதுரை மிஷனில் குருக்கள் வெகு சொற்பப்பேர் மட்டுமே உழைத்தனர். இவர்கள் கிறிஸ்தவர்களெல்லோரையும் சரிவர கவனிக்க முடியவில்லை. ஆகையால் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை இழக்கும் ஆபத்துக்குள்ளானார்கள். சிலர் மற்ற மதங்களுக்குப் போனார்கள். வேறு சிலர் புரோட்டஸ்டாண்டர்களாய்ப் போனார்கள். இந்த அவல நிலையைக் கண்டு சில நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், புதுச்சேரி ஆயருக்கு விண்ணப்பம் செய்து கொள்ள, உரோமையிலிருந்த திருத்தந்தை, சேசுசபை தலைவருக்கும் தெரிவித்து, சேசுசபை குருமார்களை இங்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறே புதுப்பிக்கப்பட்ட சேசுபையைச் சார்ந்த 4 சேசுசபை குருக்கள் மதுரை மிஷனுக்கு அனுப்பப் பட்டனர். 40 பேர் அத்தியாவசியமாயிருந்த காலத்தில் 4 பேர் மட்டுமே இங்கு வாந்தார்களென்றால், அக்காலத்தில் குருக்களில்லாத பெருங் குறையை எடுத்துக்காட்டுகிறதல்லவா?

XII. Fr. Periya Yagappar (1798-1818)

இந்த பெரிய யாகப்பர் சுவாமி மலையாள தேசத்திலிருந்து வந்தவர். இவர் ஒரு கத்தனார். ஆவூர், திருச்சி, மலையடிப்பட்டி இம்மூன்று பங்குகளையும் விசாரித்து வந்ததோடுகூட, மற்ற மூன்று கத்தனார் குருக்களுக்கு இவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

1774 ஆம் ஆண்டில் ஆவூரில் Fr. Clement Thomassini, S.J. என்னும் மதுரேந்திரர் சுவாமி ஒரு சிறிய காறைக் கட்டுக் கோவில் கட்டியிருந்தார். அதன்பின் 1801-ஆண்டில் பெரிய யாகப்பர் சுவாமி ஆவூர் கோவிலைப் பெரியதாக்கிக் கட்டிமுடித்தார். முதன் முதல் தெற்கு மண்டபம் கட்டினார். அதற்குப் பக்கத்தில் புனித மிக்கேல் சம்மனசு மண்டபமும், தோம்பும் (Dome) எழுப்பினார். 1807-இல் இதற்கு வடக்கில் மண்டபமும், கிழக்கில் மண்டபமும் அரைகுறையாய்க் கட்டி முடித்தார். பிறகு வடக்கு மண்டபத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் தெற்கு மண்டபம் தேவையில்லை என்று எண்ணி அதை அப்படியே நிறுத்திவிட்டார். ஆவூர் பாஸ்குத் திருவிழாவுக்கு வரும் ஏழைகளுக்கும் திருயாத்திரைக்காரருக்கும் உதவும்படியாக எட்டுத் தண்ணீர் பந்தல்களையும், சாப்பாடு போடுவதற்குச் சத்திரங்களையும் இவர் ஏற்படுத்தினார்.

இப்பங்கின் கிறிஸ்துவர்களையும், வெளியூர் தர்மசீலர்களையும் தூண்டி பாஸ்குத் திருவிழா காலத்தில் மூன்று நாட்களும் மக்கள் தங்குவதற்கு வசதியும், சாப்பிடுவதற்கு அன்னதானமும் இலவசமாய் அளிக்கும்படி ஏற்பாடு செய்தவர் இவரேயாகும். அன்று தொடங்கி இன்று வரையிலும் இப்புண்ணியச் செயல்கள் குறைவில்லாமல், பொது மக்களுக்கு நடந்து வருகின்றன. இறுதியில் இந்தப் பெரிய யாகப்பர் சுவாமி 1818 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு இறந்து போனார். அடுத்த நாள் மாலை 6 மணிக்கு கோவில் நந்தவனத்தில் ஆடம்பரமாய் அடக்கம் செய்யப்பட்டார்.

XIII. Fr. Joseph Sebastian Rodrigues (1827-1844)

ரோத்திரிக்ஸ் என்ற குருவானவர் கோவா (Goa) விலிருந்து தென்னாட்டிற்கு வந்தவர். இவரே இப்போதிருக்கும் பெரிய பீடமும். தோம்பும், (Dome) சக்கிறீஸ்தும் இரண்டு இறக்கைகளும் (right and left wings), கோயில் முகப்பும் கட்டுவித்தார். பெரிய யாகப்பர் அரைகுறையாய் விட்டுப் போன வடக்கு மண்டபத்தை இவர் பூர்த்தி செய்தார். கிழக்கு மண்டபம் தேவையில்லையென்று அதை நிறுத்திவிட்டார். 1831 ஆம் ஆண்டில் மிக்கேல் மண்டபத்தை மூடி, அதன்மேல் ஒரு சாதாரண வில் மண்டபம் கட்டினார். 1832 இல் வடக்கில் கோவில் முகப்பு கட்டினார். 1833-1834 ஆண்டுகளில் தெற்கே இருந்த நடுப்பீடத்தைப் பெரியதாக்கி, அதன் மரப்பலகைப் பீடத்திற்கு வர்ணம் தீட்டி தங்கமுலாம் பூசினார். 1835 இல் பெரிய பீடத்திற்கு மேல், 50 அடி உயரமுள்ள ஒரு கெம்பீரமான தோம்பு (வில் மண்டபத்தை) எழுப்பினார். சுருங்கச் சொல்லின் இந்த நல்ல குருதான் இத்தேவாலயத்தை அலங்கரித்தவர். வெள்ளி, தங்கப் பாத்திரங்களையும், விலைஉயர்ந்த பட்டு, சரிகை ஆயத்தங்களையும், உடுப்புகளையும் சேகரித்து வைத்தார்.

ஆவூர் குடிகளுக்கு உதவும்படியாக ஒரு பெரும் ஊருணியை ரூ. 200க்கு மேல் செலவு செய்து வெட்டினார். இந்த ஊருணியானது தற்போது சுவாமியார் ஊருணி என்ற பெயரால் வழங்குகிறது. சிலர் இதை தர்ம ஊருணி என்றும் அழைப்பது வழக்கம். நோய்வாய்ப்பட்ட இவர் 1844ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி அதிகாலையில் மூன்று மணிக்கு ஆண்டவருக்குள் நித்திரையடைத்தார் அன்று மாலை கோவில் நந்தவனத்தில் இவரை நல்லடக்கம் செய்தார்கள்

XIV. Fr. John Cardoz

ஜான் கர்டோஸ் என்னும் அருளானந்தர் 1846 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதியில் கோவாலிலிருந்து வந்து ஆவூர் பங்குதந்தை ஆனார். இவர் அதே வருடம் சூலை மாதம் 29-ம் தேதி மலம்பட்டிக் கிராமத்தில் விஷபேதி கண்ட ஒரு கிறிஸ்தவளுக்கு அவஸ்தை கொடுத்துவிட்டு, ஆவூருக்குத் திரும்பினார். அன்றிரவில் அந்த நல்ல மேய்ப்பனுக்கும் விஷபேதி கண்டு, அடுத்த நாள் (சூலை 30)  விடியற்காலை இறந்தார். இவர் "பிறர் சினேகத்தின் வேதசாட்சியாக மரித்தார்" என்றால் மிகையாகாது. 

XV. Fr. M.J. Norbert

அருள்தந்தை. நார்பர்ட், சிங்கள சுதேச குரு (Singlese). முதலில் வைப்பாறு, சிப்பிக்குளம், புன்னைக்காயல் முதலிய பங்குகளில் உழைத்தார். பிறகு மதுரை, மலையடிப்பட்டி ஆவூர், வேங்கிடகுளம் முதலிய பங்குகளில் அயராது உழைத்தபின் 1911 ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதியில் தேவனிடத்தில் இளைப்பாறினார். 

இவ்வாறு ஆவூரில் நற்செய்திப்பணியாற்றி இறைவனில் இளைப்பாறும் அருட்தந்தையர்களை, என்றென்றும் நினைவில் கொள்வோம்.

அருட்தந்தை. குழந்தை சாமி (2003-2008) பணிக்காலத்தில் ஆவூர் திருத்தலமானது அழகுற புதுப்பிக்கப்பட்டது.

ஆவூர் பாஸ்கா:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பிறப்பு உயிர்ப்பை எட்டுத்திக்கும் பறைசாற்றும் விதமாக, 1691 ஆம் ஆண்டு முதல் பெரிய சஞ்சீவிநாதர் என்று அழைக்கப்பட்ட Fr. Venantius Bouchet, SJ அவர்களால் பாஸ்கா ஆரம்பிக்கப்பட்டு, மேடை நாடகம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற கலைகளை எடுத்துரைக்கும் வகையில் பாஸ்கா திருவிழா தொடர்ந்து நடந்து வருகிறது. பாஸ்கா விழாவைக் காண வருகிற மக்களுக்காக ஆவூர் மக்கள் பல்வேறு இடங்களிலும் உணவுகள் கொடுத்து உபசரித்து வருவது தனிச்சிறப்பு. பல்வேறு இடங்களிலும் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவைக் காண வருகை தருகின்றனர். சாதி மத வேறுபாடின்றி அனைவரும் இணைந்து, இந்த விழாவைக் கொண்டாடுவது தனிச் சிறப்பு.

ஐந்து குருமார்கள் கல்லறை:

பழைய ஆவூரில் உள்ள ஐந்து குருமார்கள் கல்லறையில், செப்டம்பர் மாதத்தில் விழா கொண்டாடப்பட்டு, அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

திருத்தல பங்கேற்பு அமைப்புகள்:

1. புனித அன்னை தெரசா பெண்கள் பணிக்குழு

2. வீரமாமுனிவர் இளையோர் இயக்கம்

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. திருஇருதய சபை

5. வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்கள் குழு

நினைவுச் சின்னங்கள்:

ஐந்து குருமார்கள் கல்லறை

பத்து குருமார்கள் கல்லறை

வீரமாமுனிவர் சிலை

பாஸ்கா மேடை

துறவற இல்லம்:

புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள்.

கல்வி நிறுவனம்:

ஆர்.சி. தொடக்கப்பள்ளி

ஆவூர் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

A. Jesuits of the old Madurai mission under Bishops of Mylapore

1.Rt Rev. Dom Gospor Alfonso Alvares. SJ (1691-1705)

2.Fr. Joh Venantius Bouchet. SJ (1696-1702)

3.Fr. Charles Maria Bertholdi, S.J (1703-1740)

4.Rt. Rev. Dom Francisco Laynes, SJ (1708-1715)

5.Rt. Dom Manuel Sanches Gola Secular(1709)

6.Rt. Rev Dom Jose Pinheiro, SJ (1726-1744)

7.Rt. Fr. John Baptist Buttari, S.J (1740)

8.Fr. Francis Homen, SJ (1740)

9.Fr. Francis Clement Thomassini, SJ (1746-1751)

10.Rt. Rev Dom Antonio Da Incamacao, Aug(1750-1752)

11.Rt. Fr. John Baptist Buttari, S.J (1751-1757)

12.Rt. Rev Dom Theodoro de Sancta Maria, (1756)

13.Fr. Peter Machado, SJ (1757-1774)

14.Rt. Rev. Dom Ft. Bernardo De S. Caetano, Aug (1760-1780)

15.Suppression of the Society of Jesus (1774)

16.Fr. Peter Machado, Ex.Jesuit (1774-1790)

17.RL Rev. Dom Antonio Da Assuncao Aug (1782)

18.Rt. Rev. Dom Manuel De Jesus Maria Jose, Aug (1787-1800)

B. Priests from Pondicherry (Propaganda)

1. Fr. Xavier de Andrea Ex-Jesuit, D. (1793)

2. Fr. Mottet of the M.E. Pondicherry (1794)

3. Msgr. Champenois ME Pondicherry (1705)

C. Padroado Priests (Oleis of Avoor)

1. Fr. Peria Rayappa (1798-1818)

2. Rt. Rev. Dom Jesguim de Menezes E Athaide, Aug (1804-1820)

3. Restoration of the Society of Jesus (1804)

4. Fr. Antoniar (1819-1822)

5. Fr. Sayappananda Swami (1823)

6. Fr. Soosai Sebastian Rodrigues (1824)

7. Rt. Rev. Dom Estevam De Jesus Maria, Franc (1826)

D. Jesuits of the New Madurai Mission under Vic. Ap. of Pondicherry.

(Note: Here-after Avoor will have a padroado and a propaganada church. This double Jurisidiction will last till)

1. Fr. Louis Gamier, S.J (1838)

2. Fr. Victor Charaignon, S.J (1839-1842)

3. Fr. James Wilmet, S.J (1842)

4. Fr. Peter Perrin, S.J (1843-1845)

5. Rt. Rev. Alexis Ganoz, S.J (1846-1887)

6. Fr. Vincent Hugla, S.J (1846-1847)

7. Fr. Andrew Bruni, S.J (1848-1849)

8. Fr. Jerome Mazza, S.J (1850)

9. Fr. Ferdinand Cortes, S.J (1854)

10. Fr. Ferdinand Cravau, S.J (1855 July)

11. Fr. Eamest Rigot, S.J (1857 July 22th)

12. Fr. Ferdinand Cravau, S.J (1858 Sep)

13. Fr. Hercules De Rochely (1858 Sep-Nov)

14. Fr. Frederic Cabos (1860 May-Aug)

15. Fr. Jerome Mazaa (1859Sep -1862)

16. Fr. Auguste Poulence (1863 June12)

17. Fr. Victor Besset (1865 June25)

18. Fr. Cajetan Rodrigues (1867 July6)

19. Fr. Henry Elorsa (1871 Oct23)

20. Fr. Auguste Pouleno (1871 -Sep26)

21. Fr. Regis Beme (1873 April12)

22. Fr. Constant Dayriam (1875 Jan1)

23. Fr. Thomas Giuge (1875-1880)

24. Fr. Casmir cros (1880 Aug10)

25. Fr. John Magets (1880 Dec25)

26. Fr. Louis Lassus (1881 Aug15)

27. Fr. Francis Andre (1882 Feb25)

28. Fr. Regos Galien (1884 June8)

29. Fr. Francis Andre (1884 Oct10)

30. Rt. Rev Alexis Ganox, S.J. Bishop of Tiruchy (1887-1888)

31. Rt. Rev Dom Henrique Jose Red Da Silva, Sec. (1887-1897)

32. Fr. Francis Saveriar (1887 Sep18)

33. Fr. Innocent Massilamani (1887 Dec30)

34. Rt. Joh Mary Barthe, S.J. Bp of Tiruchy (1890-1913)

35. Rt. Dom Antonio Jose De Souza Barroso, Secu (1888-1889)

36. Dom Theotonio Manuel Ribeiro Vieira De castor. Secu (1899-1929)

37. Fr. Paul Sinnappar (Sec.) (1900Jul -1919)

38. Rt. Augustin Faisandier, S.J Bp, of Tiruchy (1914-1935)

39. Fr. Gabriel Xavier, Secular priest (1920-1921)

40. Fr. Revila Vadastus, S.J (1922-1929)

41. Rt. Dom Antonio Maria Texeira, Secular (1929-1933)

42. Fr. M.J. Chinnappan (Secular priest) (1930-1931)

43. Fr. K. Jeganather (Secutar priest) (1932-1935)

44. Fr. Thomas D Almedia, S.J (1934-1935)

45. Rt. Dom Charles De Sa Fragoso, Secular (1934-1937)

46. Rt. Joh Peter Leonard, S.J. BP of Tiruchy (1936-1938)

47. Fr. BA Marianayagam Secular priest (1936-1938)

48. Rt. Rev. Dom Emmanuel De Madeiros Guerreiro, Sec (1937-1953)

49. Rt James Mendonca, Bishop of Tiruchy (1938)

50. Fr. P. Ignatius, Sec. Priest (1939-1950)

51. Rt. Dr. Louis Mathias, S.D.B, Archbishop of Madras (1952 Nov)

52. Fr. T.J Adaikalam Sec. Priest (1956)

53. Fr. A.M Amaladas (1959-1965)

54. Fr. Kulandairaj (1965-1971)

55. Fr. R. Maria soosai (1971-1975)

56. Fr. A Marianandam (1975May -1978

57. Fr. G F Arockiasamy (1978-1988)

58. Fr. Maria Packiam (1984-1988)

59. Fr. Joseph Anul Rajan (1988-1989)

60. Fr. Mana Francis (1989-2006)

61. Fr. A. Alphonse (1996-2003)

62. Fr. S. Kulandaisamy (2003-2008)

63. Fr. Gradicam (2008-2011)

64. Fr. Thomas Arputha Raj (2011-2014)

65. Fr. Arul Sahaya Raj (2014)

66. Fr. Jerome Gnana Prabhu (2014-2016)

67. Fr. Bastin (2016-2017)

68. Fr. David Raj (2017-2022)

69. Fr. A. Soosai Raj (2022---)

பழம் பெருமையும், எண்ணிலடங்கா அதிசயங்களும் நிறைந்த ஆவூர் திருத்தலம் வாருங்கள்… புனித பெரியநாயகி மாதாவின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்….

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. A. சூசை ராஜ் அவர்கள்.