535 புனித அந்தோனியார் ஆலயம், சின்னவிளை, மணவாளக்குறிச்சி


புனித அந்தோனியார் ஆலயம் 

இடம் : சின்னவிளை, மணவாளக்குறிச்சி (PO)


மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : குளச்சல் 


நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ


குடும்பங்கள் : 448

அன்பியங்கள் : 12


வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணி. 

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி. 

செவ்வாய் மாலை 05.30 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி. 

(முதல் செவ்வாய் நற்கருணை ஆராதனை) 

புதன் : காலை 06.15 மணிக்கு சகாய அன்னையின் நவநாள். 

திருவிழா : ஜூன் 13 ஆம் தேதி. 

குருசடிகள் :

1. புனித தோமையார் குருசடி 

2. புனித சகாய அன்னை குருசடி 

3. புனித செபஸ்தியார் குருசடி. 

வழித்தடம் : நாகர்கோவிலிலிருந்து ஆசாரிபள்ளம் அல்லது கோணம் வழி குளச்சல் செல்லும் சாலையில் சின்னவிளை (17கி.மீ) உள்ளது. குளச்சலில் இருந்து நாகர்கோவில் செல்லும் கடற்கரை சாலையில் 7கி.மீ தொலைவில் சின்னவிளை உள்ளது. 

Location map : https://maps.app.goo.gl/tScKJ8iZ6UnBpzKdA

பங்கின் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. அல்போன்ஸ் 

2. அருட்பணி. தேவதாஸ்

3. அருட்பணி. மத்தியாஸ் 

4. அருட்பணி. ஆன்றனி பென்சிகர் 

5. அருட்பணி. வெனான்சியூஸ்

6. அருட்பணி பிரான்சிஸ் M. வின்சென்ட் 

7. அருட்பணி. மரியதாமஸ் ஆஸ்டின் 

8. அருட்பணி. பெஞ்சமின் போஸ்கோ 

9. அருட்பணி. ஆன்றனி கிளாரட் 

10. அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ. 


வரலாறு :

கோடி அற்புதர் பதுவை புனித அந்தோனியாரை பாதுகாவலராகக் கொண்ட சின்னவிளை பங்கு, மணவாளக்குறிச்சியிலிருந்து, தெற்கே அமைந்துள்ள கடற்கரைப்பகுதி ஆகும். மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கருகே அமைந்துள்ள அழகிய புனித அந்தோணியார் ஆலயம் நம்பி வருபவர்களுக்கு நலம் அளிப்பதாகவே உள்ளது. 

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பகுதியில் சில கிறிஸ்தவக் குடும்பங்கள் தனியாக குடியேறிய போது, திருப்பலி மற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க அருகிலுள்ள கடியபட்டணம் ஊருக்கு வள்ளியாற்றைக் கடந்து செல்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் தங்கள் அருகாமையில் இறையனுபவம் பெறுவதற்காக சின்னவிளை கடற்கரையிலேயே ஓலைக்குடிசையில் புனித அந்தோனியார் குருசடி ஒன்றை எழுப்பி வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இந்த குருசடி இருந்த இடம் கடலலை அடிக்கும் பகுதிக்குள் சென்று விட்டது. 

1950 ஆம் ஆண்டு புதூர் பங்கு உருவான போது, சின்னவிளை பங்கு, புதூர் பங்குடன் இணைக்கப்பட்டது. 

பின்னர் 1975 -ஆம் ஆண்டு புதூர் கிளைப்பங்காக ஆனது. 

மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து தற்போதைய ஆலயமானது அருட்பணி. நற்சீசன் அவர்களால் கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டு, அருட்பணி. A. பீட்டர் ஜான் அவர்களால் அழகிய கோபுரம், ஓட்டுக்கூரையுடன் கட்டப்பட்டு 30.09.1979 அன்று அப்போதைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

1994 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

பின்னர் அதே ஆலயம் தற்போது நாம் காணக்கூடிய புதிய ஆலயமாக்கும் விரிவாக்கப் பணிகள் 12.03.2006 அன்று அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் M. வின்சென்ட் அவர்களால் தொடங்கப்பட்டு, அருட்பணி. மரியதாமஸ் ஆஸ்டின் அவர்களால் நிறைவு செய்யப்பட்டு, அன்றைய ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால், 18.04.2009 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

இந்த ஆலயத்தின் விரிவாக்கத்தின் போது ஓடுகள் மாற்றப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டது. ஆலய பீடமும் புதிதாக உருவாக்கப்பட்டது. உலக மீட்பர் சுரூபத்தை உச்சியில் தாங்கிய கொடிமரமும் வைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இவ்வாலயத்தில் மக்கள் இன்றுவரை இறையனுபவம் பெற்று வருகின்றனர். 

01.05.2019 ல் மின்னல் தாக்கி ஆலயகோபுர உச்சியில் சிலுவையை தாங்கியிருந்த பகுதி சேதமடைந்தது. பின்பு பொறுப்பேற்ற தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ அவர்களின் முயற்சியாலும், பங்கு மக்களின் நன்கொடையாலும் சேதமுற்ற கோபுர உச்சிப்பகுதி சரிசெய்யப்பட்டு, கோபுர உச்சியில் 200 கி.கி எடை கொண்ட கருங்கல்லால் ஆகிய சிலுவை நிறுவப்பட்டது.

இத்துடன் 08.10.2019 அன்று ஆலய பாதுகாவலராகிய புனித அந்தோனியாருக்கு அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மரப்பீடமானது ஆலயத்தின் இடப்புறம் பங்குத்தந்தையால் அமைக்கப்பட்டு, ஆலயத்திற்கு வருபவர்கள் பாதுகாவலரின் பரிந்துரையை அடையாளப் படுத்தும் கருவியாக அமைந்துள்ளது. 

இவ்வாறு சின்னவிளை பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் சிறப்பான வழிகாட்டுதலாலும், மக்களின் கடின உழைப்பு மற்றும் நன்கொடைகளாலும் கட்டப்பட்ட கோடி அற்புதர் ஆலயம் சிறந்து விளங்குகிறது. 

வள்ளியாறு அரபிக்கடலோரம் கலக்கும் பொழிமுகமாகிய சின்னவிளை கடற்கரை, இயற்கையிலேயை அழகு நிறைந்தது. கடற்கரையை கண்டுகளிக்க வரும் மக்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் கடற்கரை சாலையிலேயே இவ்வாலயம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. 

வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் புனித அந்தோனியாரின் நவநாள் திருப்பலியில் பங்கேற்று, புனிதரின் பரிந்துரையால் அருள்வரங்களைப் பெற்றுச் செல்லும் இறைமக்கள் ஏராளம். ஆலயச் சூழலை அமைதியில் கட்டிக் காக்கும் பங்கு மக்களுக்கு நன்றிகள். இவ்வாறு சின்னவிளை பங்கு மக்களுக்கு பாதுகாவல் வழங்கும் புனித அந்தோணியாரின் பரிந்துரையில் இறையனுபவம் பெற இனிதே உங்களை அழைக்கும்... அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆன்றனி ரொசாரியோ அவர்கள்.