178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை


விண்ணேற்பு அன்னை ஆலயம்

இடம் : புதுக்கடை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி ஜீஸ் ரெய்மண்ட்

குடும்பங்கள் : 174
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை06.30 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 06 முதல் 15 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

புதுக்கடையும் மீனவர் குடியேற்றமும்*:

தருமராஜா என்று போற்றப்பட்ட கார்த்திகைக் திருநாள் ராமவர்ம மகாராஜா (1759-1798) காலத்தில் குன்றத்தூர் ராஜா கேசவதாஸ் அவர்கள் திவானாக இருந்தார். அவர் விளவங்கோடு தாலுகாவின் தென்பகுதியில் ஒரு சந்தை கொண்டு வர விரும்பி அனந்தமங்கலத்தின் வடபகுதியில், முன்சிறையின் தென்கிழக்கில் மேடாகவும் காடாகவும் கிடந்த நிலத்திலுள்ள மரங்களை அகற்றி சமப்படுத்தி, வாணிபத்திற்கு மக்களை குடியமர்த்தினார்.

கிழக்கிலும் மேற்கிலும் ஏற்கனவே குடியமர்ந்திருந்த செக்காலர்களையும், மீன் விற்க குடியேறியிருந்த மீனவர்களையும் குடியமர்த்தி பெரிய சந்தை திடலை நடுவே உருவாக்கினார்.
இதனை சுற்றி பல சமூதாய மக்களையும் குடியமர்த்தினார்.

மரக்கலம் செய்து அதன் மூலம் வாணிபம் செய்யும் திறன் படைத்தோர் தொலைதூர நாடுகளுக்கு சென்றனர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரி மீனவர்கள் சுமேரியா -வில் (கத்தார், மஸ்கட், துபாய், பஹ்ரைன்) வாணிபம் செய்து வந்தனர்.

ஏழைகள் உள் நாட்டில் மீன் குட்டையை தலையில் சுமந்து, பல மைல் தூரம் நடந்து சென்று மீன் விற்று பிழைத்தனர். தேங்காய்பட்டணத்தில் பல இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களோடு பகைமை கொள்ளாது வாழவும் தொழில் செய்து பிழைக்கவும் #புதுக்கடை சிறு மீனவ வணிகர்களுக்கு பாதுகாப்பாக அமைந்தது.

16 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருவிதாங்கூர் -கொல்லம் - கொச்சி நாடுகள், நாயக்க மன்னர்களின் படையெடுப்பாலும், ஆதிக்கத்தாலும், அரேபிய வணிகர்களின் மாற்றங்களாலும், புயல் மழை மற்றும் போர்ச்சுகீசியர்களாலும் பாதிக்கப் பட்டு கொண்டிருந்தது.

இக் காலத்தில் தான் புனித பிரான்சிஸ் சவேரியார் தென்பாண்டிக்கும், திருவிதாங்கூர்-க்கும் வந்து கடற்கரையோரமாக கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்.

1483-1546 காலகட்டத்தில் பூவார் முதல் பள்ளம் வரையுள்ள பெரும்பாலான மீனவர்களை கிறிஸ்தவர்களாக்கினார். இவர்களை கொச்சியிலிருந்த கத்தோலிக்க மறை மாவட்டம் தன்கீழ் சேர்த்துக் கொண்டது.

1616 ல் கத்தோலிக்க மீனவர்கள் தேங்காய்பட்டணம்-ல் 800 பேரும், இனையம்-ல் 500 பேரும், மிடாலம்-ல் 313 பேரும், சின்ன மிடாலத்தில் 314 பேரும், குறும்பனை யில் 270 பேரும், வாணியக்குடியில் 115 பேரும், குளச்சல் ல் 437 பேரும், புதூர் ல் 207 பேரும், முட்டம் - 244 பேரும், பிள்ளைத்தோப்பு- 340 பேரும், இராஜாக்கமண்டலம்- 640 பேரும், பெரியகாடு - 460 பேரும், பள்ளம் -370 பேரும், மணக்குடி 660 பேரும், கோவளம் 513 பேரும், கன்னியாகுமரி -364 பேரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்தனர். புத்தன்துறை, ராமன்துறை, கோடிமுனை, அழிக்கால் பகுதி கிறிஸ்தவர்கள் பக்கத்து ஊர்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுக்கடை யில் குடியேறி வாழ்ந்த மீனவர்கள் 1765 லேயே ஒரு சிறு மாதா கோயில் கட்டி வழிபாடு தொடங்கினார்கள்.

காலப்போக்கில் புதுக்கடை மீனவர்கள் விளாத்துறை, புல்லங்குழி, ஐரேனிபுரம், இரவிபுதூர்கடை முதலிய பல ஊர்களிலும் சென்று குடியேறினர்.

ஆலய வரலாறு :

17 ம் நூற்றாண்டின் இறுதியில் வேணாட்டின் இறுதி மன்னராக இரவிவர்மா பட்டத்துக்கு வந்தார். புனித சவேரியாரால் கிறிஸ்தவர்களாக்கப் பட்ட மீனவரில் மீன் வாங்கி விற்கும் சிலர் புதுக்கடை முழு வடிவம் பெறும் முன்பே 1765 ல் மாதா கோயில் ஒன்றை கட்டி அதை சுற்றி வாழ்ந்து வந்தனர்.

19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேதகு பெர்னாடின் பாச்சி நெல்லி செயின்ட் ஆப் திரேசா ஆண்டகையின் பணிக் காலத்தில், மேலத்தெருவில் (RC தெரு) வாழ்ந்து வந்த மீனவ மக்கள் ஆராதனை வழிபாடு செய்து வருவதற்காக மண்சுவரால் பரலோக மாதா ஆலயம் 1845 ல் கட்டப் பட்டது.

பின்னர் தங்கள் சேமிப்பு தொகையால் அருட்பணியாளர் இல்லம், கல்லறைத்தோட்டம், புனித விசுவேந்தியப்பர் குருசடி, புனித சந்தியாகப்பர் குருசடி, கணபதியான்கடவுக்குச் செல்லும் திருப்பில் புனித அந்தோணியார் குருசடி ஆகியன எழுப்பினார்கள்.

மண்சுவர் ஆலயம் கட்டப்பட்டு 65 ஆண்டுகளுக்குப் பின் கருங்கல்லான புதிய ஆலயம் எழுப்பப் பட்டது.

ஆலயத்தின் உட்பகுதியில் இயேசு கிறிஸ்துவின் 12சீடர்களையும் நினைவு கூர 12 பெரிய கற்றூண்களும், இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கோபுர மணியும், பெல்ஜியம் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு பொருத்தப் பட்ட *மாதா திருவடிவ ஓவியமும்* கொண்டு பொலிவான ஆலயம் 29-03-1911 ல் அர்ச்சிக்கப்பட்டது.

1845 முதல் 1911 வரை மாதத்திற்கொரு தடவை திருவனந்தபுரம், வராப்புழா அருட்பணியாளர்களும் வந்து திருப்பலி களும் சமூக சேவைகளும் செய்து வந்தனர்.

1911 முதல் ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

18 ம் நூற்றாண்டில் உயர் சாதியாரின் ஆதிக்கத்திலிருந்து மீள விரும்பிய நாடார் மற்றும் பிற சாதியினரும் கிறிஸ்தவ மறையில் இணைந்தனர்.

வேங்கோடு, முள்ளங்கினாவிளை, புல்லங்குழி, விளாத்துறை, இலவுவிளை, விழுந்தயம்பலம், பாக்கியபுரம், பாகோடு, பள்ளியாடி, கருங்கல், மணியாரங்குன்று, வாவறை, காஞ்சாம்புறம், புத்தன்கடை முதலான ஊர்களில் சிறுசிறு ஆலயங்கள் எழுந்தன.

மேதகு ஆயர் டாக்டர் அலோசியஸ் பென்சிகர் ஆண்டகையால் இவ்வூர்களை ஒருங்கிணைத்து புதுக்கடையை மறை வட்டமாக தரம் உயர்த்தினார்.

இவ்வூர்களில் #முள்ளங்கினாவிளை (1760), #புத்தன்கடை (1786), #வேங்கோடு (1810), #வாவறை(1867), #பாக்கியபுரம்(1896) ஆகியவை இங்கே குறிப்பிடப் பட்டுள்ள ஆண்டுகளில் தனிப்பங்காயின.

புதுக்கடையின் கிளைப்பங்காக #முன்சிறை தென்னாட்டு விளையில் இருந்த ஆலயமும் செபஸ்தியார் புரத்தில் உள்ள ஆலயமும் இருந்தன. மற்ற கிளைப் பங்குகள் பக்கத்தில் உருவான பங்குகளுடன் இணைக்கப் பட்டன.

அருட்தந்தை கார்மல் அடிகளின் பணிக்காலத்தில் முன்சிறை தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, செபஸ்தியார் புரம் அதன் கிளைப்பங்காக இணைக்கப் பட்டது.

1911 ல் கட்டப்பட்ட ஆலயம் பழுது பட்டதால் 2006 ம் ஆண்டு அருட்பணி ஐசக் ராஜ் அவர்கள் பணிக் காலத்தில் புதுப்பிக்கப் பட்டது. இத்துடன் அருட்பணியாளர் இல்லமும் புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டு சுற்றுச் சுவரும் கட்டப் பட்டது.

செயின்ட் மேரி நடுநிலைப் பள்ளி

பண்டிதர் திரு. பிச்சை இன்னாசி காரியதரிசி யாக இருந்த போது ஓராசிரியர் பள்ளி ஒன்றை துவங்கி, அவரே ஆசிரியராக அமர்ந்து மலையாள மொழியில் கற்பித்து வந்தார்.

அவரது மறைவுக்கு பின்னரும் நல்லுள்ளம் கொண்ட காரியதரிசி களால் தொடர்ச்சியாக பள்ளி நடைபெற்று வந்தது.

அருட்தந்தை C. M ஹிலரி அவர்கள் மீனவர்களின் ஒப்புதலுடன் திருச்சி அன்னாள் சபை அருட்சகோதரிகள் தலைமையேற்று நடத்திவர வழிவகை செய்தார்.

அருட்சகோதரி ஐவன்மேரி அவர்கள் 1968 ல் தலைமையாசிரியையாக இருந்த போது அவரது நற்குணங்களாலும் சேவையாலும் புதுக்கடை பங்கின் நன்கொடை மற்றும் பிற சமூகத்திடமும் நன்கொடை பெற்று எட்டாம் வகுப்பு வரை நடைபெறச் செய்தார்கள்.

பள்ளியின் பெயர் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி, புதுக்கடை என மாற்றப் பட்டது.

அருட்தந்தை C.M ஹிலரி அவர்கள் பணிக்காலத்தில் புதுக்கடை சங்கரநாராயணபிள்ளை அவர்களின் நன்கொடையால் கட்டி முடிக்கப்பட்ட லூர்து மாதா கெபி, மாண்புமிகு காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களால் 11-02-1959 ல் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் அருட்தந்தை அவர்கள் மாண்புமிகு முதல்வரிடம் வெட்டுவெந்நி(வெட்டுமணி)- தேங்காய்ப்பட்டணம் சாலையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, மின் இணைப்பும் கழிவுநீர் ஓடையும் வரச் செய்தார்கள்.

1911 ம் ஆண்டில் பஜனை பாடி கிடைத்த காணிக்கையில் ஆலயத்தின் முன்புறம் சாலையின் ஓரத்தில் மண்சுவராலான 8 கடைகள் கட்டப்பட்டன. இவை பழுதடைந்த காரணத்தால் அருட்பணி கார்மல் அடிகளாரின் பணிக்காலத்தில் கான்கிரீட் கட்டிடமாக கட்டி Our lady of Assumption complex என பெயர் சூட்டி 03-07-1998 ல் திறப்பு விழா நடத்தப்பட்டது.

03-07-1988 ல் அன்னைத் தெரசாள் திருமண மண்டபம் திறப்பு விழா.

1845 ல் கட்டப்பட்ட புனித அந்தோணியார் குருசடி பழமையானதால் அதனை அகற்றி புதிதாக கட்டப்பட்டு 12-01-1933 ல் அர்ச்சிக்கப்பட்டது.

உயர்சாதியினரால் சாதி துவேஷம் அதிகமாக இருந்த காலத்தில் புதுக்கடை பங்கின் திரு.கொச்சு வைத்தியர் (புல்லங்குழியில் சில காலம் வாழ்ந்ததால் புல்லங்குழி வைத்தியர் என்றும் அழைக்கப் படுவார்) அவர்கள் மருத்துவத்தில் தேர்ந்தவராயிருந்தார், 20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கொள்ளை நோய் பரவியிருந்த போது, திருவிதாங்கூர் அரண்மனையில் வாழ்ந்தோரையும் தாக்கியது. புல்லங்குழி வைத்தியர் அழைக்கப்பட்டார், அரண்மனை வாயிலில் நின்று " நான் முக்குவன் உள்ளே வரலாமா " என்று கேட்டார்.

அரசர் " சாதி வெளியே நிற்கட்டும்வைத்தியர் உள்ளே வரலாம் " என்று கூற, வைத்தியர் அரண்மனைக்குள்ளே சென்று அரசவை பெண்களுக்கு மருந்தளித்து குணப்படுத்தினார்.
இந் நிகழ்வை குமரி மாவட்ட மக்கள் இப்போதும் சில நேரங்களில் பேச்சு வழக்கில் நினைவு கூர்வது இம் மக்களின் புகழுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

பணிபுரிந்த அருட்பணியாளர்கள் :1911-2018வரை(1911 க்கு முன்னர் பணிபுரிந்த அருட்பணியாளர்கள் விபரம் கிடைக்கவில்லை)

1.Fr வர்க்கீஸ் பெர்னாண்டஸ் அடிகளார்
2. Fr ரப்பேல் அடிகளார்
3. Fr வர்க்கீஸ் அடிகளார்
4. Fr லூயிஸ் அடிகளார்
5. Fr. S. T மத்தியாஸ் அடிகளார்
6. Fr. P. L கிறிஸ்டியான் அடிகளார்
7. Fr பால் ஜெபாஸ்டின் பெர்னாண்டஸ் அடிகளார்
8. Fr. டைய்ஸ் அடிகளார்
9. Fr. C. F வென்சஸ்லாஸ் அடிகளார்
10. Fr தனிஸ்லாஸ் கோஸ்கோ அடிகளார்
11. Fr அல்போன்ஸ் அடிகளார்
12. Fr. A. E ரத்தின சுவாமி அடிகளார்
13. Fr. C. M ஹிலரி அடிகளார்
14. Fr அம்புறோஸ் பால்டான்ஸ் அடிகளார்
15. Fr. M சூசைய்யா அடிகளார்
16. Fr. E சேவியர் இராஜமணி
17. Fr சீசர்
18. Fr ஆசீர்வாதம்
19. Fr ஆல்பர்ட் ராஜ்
20. Fr பிரான்சீஸ்
21. Fr பீட்டர் அருள்ராஜ்
22. Fr. A. M ஹிலரி
23. Fr. I கார்மல்
24. Fr தனிஸ்லாஸ்
25. Fr ஐசக்ராஜ்
26. Fr. J இன்னசென்ட்
27. அந்தோணி பிச்சை
28. Fr ஆன்ட்ரூஸ்
29. Fr சுரேஷ் குமார்
30. Fr ஆரோக்கிய தாஸ் (இணை பங்குத்தந்தை)
31. Fr தானியேல் ஜெயசிங்
32. Fr ஜீஸ் ரெய்மண்ட் (தற்போது)...

1845 முதல் 1911 வரை கேரளாவில் உள்ள அப்போஸ்தலிக்க சபையின் கீழும்

1911 முதல் 1930 வரை கொல்லம் ரோமன் கத்தோலிக்க சபையின் கீழும்

1930 முதல் கோட்டார் மறை மாவட்டத்தின் கீழும்

தற்போது குழித்துறை மறை மாவட்டத்தின் கீழும் இருந்து புதுக்கடை விண்ணேற்பு அன்னை பங்குதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

2001 முதல் ஆயரால் அங்கீகரிக்கப்பட்ட பங்குப்பேரவை சிறப்பாக செயல்பட்டு நிர்வகித்து வருகிறது.

இவ்வாறு சிறந்த வரலாற்றுப் பின்னணியும், இறைவனின் அருள் வளங்களையும் பெற்று விளங்கும் விண்ணேற்பு அன்னை ஆலயம் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஜீஸ் ரெய்மணட் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்கிறது..