367 புனித வளனார் ஆலயம், வளனூர்


புனித வளனார் (சூசையப்பர்) ஆலயம்.

இடம் : வளனூர், சாத்தங்கோடு (PO)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : வேங்கோடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ்

குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

புதன் மாலை 05.30 மணிக்கு புனித வளனார் நவநாள், திருப்பலி

வெள்ளி மாலை 05.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.

வழித்தடம் : மார்த்தாண்டம் - களியக்காவிளை - நடைக்காவு - வளனூர்.
பேருந்துகள் : மார்த்தாண்டத்திலிருந்து 82A, 82B, 82K, 82M.

வரலாறு :

குமரி மாவட்டத்தின் எல்லையில் போராங்காடு கிராமமானது பனை, புளி, புன்னை, மா, முந்திரி(கொல்லாமரம்) போன்ற மரங்கள் அடர்ந்த காடாக காணப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மக்கள் கல்வி அறிவின்றி காணப்பட்டார்கள். ஆகவே இப்பகுதி மக்கள் கல்வியறிவு பெறவும் கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் ஒரு ஆலயம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற உயரிய நோக்குடன் திரு. சு. கிறிஸ்துதாஸ் அவர்கள், 1962 ல் திரித்துவபுரம் சென்று சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்பட்ட அருட்தந்தை மார் எப்ரேம் அவர்களிடம் கோரிக்கை வைத்து, மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களின் ஆசியுடன் அப்போதைய சிலுவைபுரம் பங்குத்தந்தை அருட்பணி J. G கிறிஸ்துதாஸ் அவர்களால், திரு R. கிறிஸ்துதாஸ் என்பவரது நிலத்தில் மண்சுவர் ஓலைக்கூரை வேய்ந்த சிறு ஆலயம் கட்டப்பட்டு, ஆப்போதைய உபதேசியார் மற்றும் அருட்சகோதரிகளின் கடின முயற்சியால் 30 குடும்பங்கள் இணைந்து சிலுவைபுரம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

தொடர்ந்து ஆங்கிலோ இந்தியன் அருட்தந்தை V. லூசியன் மெலாட் அவர்களது முயற்சியால் திரு. தங்கையன் என்பவரிடம் 50 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அதில் ஆலயம் கட்டப்பட்டது. அப்போது குடும்பங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தையர்கள் மேரி ஜார்ஜ், இயேசு தாசன், தாமஸ் மற்றும் உதவி பங்குத்தந்தையர்களாக இருந்த அருட்தந்தையர்கள் லியோன் A. தர்மராஜ், ஹெர்மன்ஜுல்டு, மெல்க்கியாஸ், பெஞ்சமின், இராபர்ட் ஆகியோரின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்தது.

12-06-1972 ல் சிலுவைபுரம் பங்கிலிருந்து காஞ்சாம்புறம் பங்கின் கிளையாக வளனூர் மாற்றப்பட்டது. அப்போது காஞ்சாம்புறம் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை அமிர்தராஜ் அவர்கள் பங்கின் எல்லா இல்லங்களையும் சந்தித்த போது இம்மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய இருந்ததை புரிந்து கொண்டார்.

ஆகவே ஆலய வளாகத்தில் தென்னை மரங்களை நட்டு வைத்து வளமிட்டார். மக்களுக்கு விவிலிய கருத்தரங்குகள் பயிற்சிகள் கொடுத்து, ஆலய ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தார்.

1975 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை M. X இராஜமணி அவர்கள், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கு ஒலிப்பெருக்கி வசதி செய்தார். வேதாகம வெளிக்கூட்டங்கள் பங்கின் இல்லங்களில் நடத்தப்பட்டது. சபைகள் இயக்கங்கள் வலுப்படுத்தப் பட்டன. ஆலயம் அமைந்துள்ள இடம் வளனூர் என மாற்றப்பட்டது.

1980 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை பால்மார்க் அவர்கள் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தினார்.

1981 ல் அருட்தந்தை G. ஜஸ்டஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்குப் பேரவை ஏற்படுத்தினார்.

1985 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை மத்தியாஸ் அவர்கள் ஆரம்பப் பள்ளியாக இருந்ததை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார்.

1988 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை அகஸ்டின் அவர்கள் கலைக்குழு ஒன்றை அமைத்தார். சபைகள் இயக்கங்கள் வலுப்படுத்தப் பட்டன. பங்கின் குடும்பங்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது.

1992 ல் அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் அவர்கள் பொறுப்பேற்று கிராம முன்னேற்ற சங்கம், அன்பியங்கள் துவக்கப் பட்டன. புதிய ஆலயம் கட்ட வெளிநாட்டு உதவியால் ஆயரிடமிருந்து பெறப்பட்ட 2,45,782 ரூபாயில் தற்போது காணப்படும் அழகிய பீடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடமும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி ஜான் அகஸ்டஸ் அவர்கள் முன்னாள் பங்குத்தந்தை செய்த பீடம் அமைந்த கட்டிடத்தை முழுமையாக கட்டிமுடித்து 30-05-1997 ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1998 ல் பங்கின் ஜூபிலியை முன்னிட்டு ஒரு ஏழை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

2000 ம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி டேவிட் தே. வில்சன் அவர்கள் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார்.

2002 ல் போறுப்பேற்ற அருட்பணி ஆன்றனி அவர்கள் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு ஓடு போட்ட மேற்கூரையை மாற்றி ஷீட் போட்டு, பழைய கோபுரத்தை மாற்றி மணிக்கூண்டும் கட்டி இன்று காண்கிற அழகிய ஆலயத்தை கட்டி முடித்து 18-12-2002 மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

2004 ல் போறுப்பேற்ற அருட்பணி டென்சிங் அவர்கள் பங்கை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தினார்.

2005 ல் அருட்தந்தை காட்வின் சுந்தர்ராஜ் அவர்கள் பொறுப்பேற்று பரிசுத்த புனித வாரச் சடங்குகள் இங்கு நடத்த ஆயரிடம் அனுமதி பெறப்பட்டது. பள்ளிக்கூடத்தின் பின்புறம் ஆலயத்திற்கு நிலம் வாங்கப்பட்து. குருசடி கட்ட அடிக்கல் போடப்பட்டது.

2009 ல் அருட்தந்தை மரிய சூசை அவர்கள் பொறுப்பேற்று குருசடி வேலைகள் நிறைவு பெற்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

2013 ல் அருட்தந்தை D. பெஞ்சமின் அவர்கள் பொறுப்பேற்று தனிப்பங்காக உயர்த்தும் எண்ணத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டினார். மேலும் ஆலயத்திற்கு வண்ணம் பூசப்பட்டு தரை மெருகூட்டப் பட்டது.

2015 ல் அருட்தந்தை அமலதாஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்குத்தந்தை இல்லம் மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் மற்றும் வட்டார முதன்மைப் பணியாளர் வின்சென்ட் ராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

25-09-2017 அன்று வளனூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்தந்தை ஜோஸ் ஸ்டாலின் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

2019 முதல் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்கு மக்களை சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.