576 இயேசுவின் திருஇருதய ஆலயம், பண்டாரக்குளம்

          

இயேசுவின் திருஇருதய ஆலயம் 

இடம் : பண்டாரக்குளம், தீர்த்தாரப்பபுரம் அஞ்சல்

மாவட்டம் : தென்காசி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : தென்காசி 

பங்குத்தந்தை : அருள்பணி. I. மிக்கேல்

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், கட்டளையூர் 

2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், கோவிலூற்று

3. சகாயமாதா ஆலயம், மாதா பட்டணம் 

ஆலயம் இல்லாத கிளை கிராமங்கள்:

1. ஐந்தாம் கட்டளை

2. லட்சுமிபுரம் 

3. வடமலைப்பட்டி 

4. வள்ளியம்மாள்புரம்

5. இராமச்சந்திராபுரம்

6. தெற்கு மடத்தூர் 

7. மடத்துப்பட்டி 

8. அழகம்மாள்புரம்

9. சிவநாடானூர் 

10. சொக்கநாதர்பட்டி 

குடும்பங்கள் : 200

அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு 

திங்கள், செவ்வாய், புதன், சனி திருப்பலி காலை 05.45 மணிக்கு. 

வெள்ளி மாலை 07.00 மணிக்கு திருஇருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி. 

சிறப்பு வழிபாடுகள் :

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு செபமாலை, 07.00 மணிக்கு நவநாள் மற்றும் நற்கருணை ஆசீர். 07.30 மணிக்கு திருப்பலி. 

மாதத்தின் முதல் ஞாயிறு மாலை 05.00 மணிக்கு சங்கடம் தீர்க்கும் சன்னியாசியார் கல்லறையில்  திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு. 

மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை 07.00 மணிக்கு லூர்து அன்னை கெபியில் திருப்பலி திவ்ய நற்கருணை ஆசீர். 

மாதத்தின் கடைசி செவ்வாய் கட்டளையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி, நற்கருணை ஆசீர். 

திருவிழா : ஆகஸ்ட் மாதம் இறுதி சனி ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. S. அருள்ராயன் (late) 

2. அருள்பணி. G. பிரான்சிஸ் பிரிட்டோ (late) 

3. அருள்பணி. S. அல்போன்ஸ் 

4. அருள்பணி. I. அருள்ஜோசப் 

5. அருள்பணி. L. அலோசியஸ் துரைராஜ் 

6. அருள்பணி. A. மாசிலாமணி, SJ 

7. அருள்பணி. P. மரிய பிரான்சிஸ் 

8. அருள்பணி. A. இம்மானுவேல் ஜெகன் ராஜா 

9. அருள்பணி. T. மாசிலாமணி, SJ 

10. அருள்பணி. அருள் மரிய நாதன் 

11. Bro. மரிய பிரகாசம் (late) 

12. Bro. லாரன்ஸ்

மற்றும் 16 அருள்சகோதரிகள். 

வழித்தடம் : 

தென்காசி -பாவூர்சத்திரம் -அடைக்கலப்பட்டணம் -பண்டாரக்குளம்.

திருநெல்வேலி -ஆலங்குளம் -ராம்நகர் -பண்டாரக்குளம். 

தென்காசி -கடையம் -பண்டாரக்குளம். 

ஆலங்குளம் -ஆண்டிப்பட்டி -பண்டாரக்குளம்.

Location map : https://g.co/kgs/UaQfdt

வரலாறு :

பாளை மறைமாவட்டத்தில் உள்ள பண்டாரக்குளம் இயேசுவின் திருஇருதய ஆலய வரலாற்றைக் காண்போம்.. 

பொதிகை மலைச் சூழலில், குறிஞ்சி சார்ந்த பரம்பு நிலமுடைய கிராமம் பண்டாரக்குளம். இங்கு வாழும் மக்களின் முன்னோர்கள், அருகிலுள்ள சிவநாடானூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள் ஐயா வழியை பின்பற்றிய மக்களாவர்.

இவர்களில் மத்தளம்பாறையைச் சேர்ந்த முத்தாச்சி அவர்களை சிவநாடானூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவருக்கு மணமுடித்தனர். முத்தாச்சி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போது, ஆதிநாராயணன் மரணமடைந்தார். தாங்கொண துயரமடைந்த முத்தாச்சி தாய்வீடான மத்தளம்பாறைக்கு சென்று உறவினர்கள் பராமரிப்பில் இருந்தார். பத்தாம் மாதம் பிறந்த குழந்தைக்கு நாராயணன் என்ற பெயர் சூட்டி, கண்ணும் கருத்துமாக வளர்த்தார். 

நாராயணனுக்கு 18 வயதாகும் போது, தமது முன்னோர் வரலாற்றை அறிந்து, தாயுடன் சிவநாடானூர் வந்து சில காலம் தங்கியிருந்தார். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அங்கிருந்து புறப்பட்டு தம் இன மக்கள் வாழ்ந்து வந்த பண்டாரக்குளம் வந்து குடியேறினார். அங்குள்ள சூழலும், மக்களின் அன்பும் தாய், மகனைக் கவர்ந்தது. ஆகவே ஒரு சிறு இந்து கோவிலை கட்டி அனைவரும் வழிபட்டு வந்தனர். 

தற்போது உள்ள இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்கு அருகே இருந்தது நாராயணசாமி கோயில் மடம். அது இன்றும் காணப்படுகிறது. இந்த கோயிலுக்கு குருவாக இருந்து வழிபாடு நடத்தியவர் தான் நாராயண சந்நியாசி. 

ஆண்டுக்கு ஒருமுறை ஆழக்குழி தோண்டி, அதிலே கட்டில் போட்டு 40 நாட்கள் கடுமையான உபவாசம் இருந்து  தவம் புரிந்து,  41 வது நாள் எழுந்து வந்து அனைவருக்கும் அருள்வாக்கு அருள்வார். இப்படி வாழ்ந்தவர் இயேசுவின் வல்லமையால் கத்தோலிக்கர் ஆனார். 

காட்சியும் சாட்சியும் :

1899 ஆம் ஆண்டு உபவாசம் முடிந்து பொதிகை மலை நோக்கி தம் சீடர் சுந்தரத்தேவருடன் பயணமானார். பொதிகை மலையில் தவம்புரிந்த போது காட்சி கண்டார். மெய்ஞானம் பெற்றார்.  

"ஆண்டவரே நீர் ஒளிமிக்கவர்; உமது மாட்சி என்றுமுள்ள மலைகளினும் உயர்ந்தது" -திருப்பாடல்கள் 76:4

பொதிகை மலையில் தவம் முடித்து திரும்பிய போது மக்களெல்லாம் கூடி நின்று வரவேற்றனர். யாவருக்கும் திருநீறு பூசி "இன்று பூசுவது கடைசி திருநீறு. இனிநாம் பெறப்போவது மெய்ஞான தீர்த்தம்" என்றார். மக்கள் புரியாது திகைத்து நின்றனர். அப்போது சந்நியாசி மக்களிடம் "சனிக்கிழமை மாலையில் மயிலைக்காளை பூட்டிய வில்வண்டியில் வெள்ளை அங்கி அணிந்து இடுப்பில் சிவப்பு கச்சை கட்டி கையில் தங்க நிறப்புத்தகத்துடன் ஒரு துறவி வருவார். அந்த தங்க நிறப் புத்தகத்தை என்னிடம் தருவார். அதுவே மெய்ஞானவழி" என்றார்.

சந்நியாசியின் தீர்க்கதரிசனம் நிதர்சனம்:

ஒரு சனிக்கிழமை இயேசு சபை குருவான அருள்பணி. இஞ்ஞாசி சுவாமியார், ஆண்டிப்பட்டி அன்னையின் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிட மாட்டு வண்டியில் வந்தார். வண்டி ஓட்டியின் கட்டுப்பாட்டை மீறி காளைகள் தறிகெட்டு ஓடியது. அதன் போக்கில் விட்டுவிட குருவானவர் கூறினார். காளைகள் பண்டாரக்குளம் மேல்புற ஓடைக்குள் வந்து நின்றன. குருவானவர் தாம் கொண்டு வந்த ஜீவ புத்தகத்தை (விவிலியம்) சந்நியாசியிடம் கொடுத்தார். மக்கள் சந்நியாசியின் தீர்க்கத் தரிசனம் அதாவது "மயிலைக் காளைகள் -வெள்ளை அங்கி அணிந்த மனிதர் -சிவப்பு கச்சை -தங்க நிற புத்தகம் (விவிலியம்)" மெய்யானதைக் கண்டு அதிசயித்து நின்றனர். 

திருமுழுக்கு:

சந்நியாசியின் வழிகாட்டுதலில் பண்டாரக்குளம் மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினராக விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு திருமறை உண்மைகளை போதிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. 11.09.1899 அன்று 133 பேர்களுக்கு அருள்பணி. இஞ்ஞாசி சுவாமிகள் திருமுழுக்கு வழங்கினார். நாராயண சந்நியாசி - ஆரோக்கியநாத சந்நியாசி ஆனார். புதிய ஆலயம் 1889 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு "கிறிஸ்து ராஜா ஆலயம்" எனப் பெயர் சூட்டப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. குருவானவர் வராத நாட்களில் சந்நியாசி அவர்களே ஆராதனை நடத்தி வந்தார். புதிய ஞானவாழ்வு பெற்ற மக்கள் பேரானந்தம் கொண்டனர். 

ஆரோக்கியநாத சந்நியாசி மனித புனிதராய் வாழ்ந்து தமது 35 வது வயதில் இறையடி சேர்ந்தார். "மரித்தும் பேசுகிறான்" என்பது இவரே தமது கல்லறைக்கு எழுதி வைத்த வாசகம். 

ஆரோக்கியநாத சந்நியாசியின் கல்லறையில் அளவில்லாத புதுமைகள் நாள்தோறும் நடந்து வருகின்றன. ஆகவே ஏராளமான மக்கள் பல பகுதிகளிலும் இருந்தும் நாள்தோறும் வந்து ஜெபித்து நலம் பெற்று செல்கின்றனர். மாதத்தின் முதல் ஞாயிறு இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

தொடக்கத்தில் சேர்ந்தமரம் பங்கின் கிளைப் பங்காகவும், தொடர்ந்து கருத்தப்பிள்ளையூர் மற்றும் ஆவுடையானூர் பங்குகளின் கிளைப் பங்காகவும் பண்டாரக்குளம் செயல்பட்டு வந்தது. 

அருள்பணி. சார்லஸ் அவர்கள் ஆவுடையானூர் பங்குத்தந்தையாக இருந்த போது, 1987 ஆம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 

07.06.2013 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால், ஆவுடையானூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, மறைமாவட்டத்தின் 49 வது தனிப்பங்காக பண்டாரக்குளம் உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. M. சார்லஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று  ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார். 

11.09.2000 அன்று ஆலய நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டு நூற்றாண்டு விழா மலர் வெளியிடப் பட்டது. 

பங்கில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் இல்லம்:

RC தொடக்கப்பள்ளி

தூய வளனார் பிரான்சிஸ்கு சபை அருள்சகோதரிகள் இல்லம். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. அன்பியங்கள் 

2. பங்கு அருட் பணிப் பேரவை 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. மரியாயின் சேனை 

5. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கம் 

6. மாதா இளம் பெண்கள் சபை

7. செசிலி பாடகற்குழு 

8. பாலர் சபை 

9. மறைக்கல்வி மன்றம். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. M. சார்லஸ் (2013-2014)

2. அருள்பணி. S. A. அண்ணாசாமி (2014 மூன்று மாதங்கள்) 

3. அருள்பணி. P. போஸ்கோ குணசீலன் (2014-2020)

4. அருள்பணி. I. மிக்கேல் (2020 ஆகஸ்ட் முதல்...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை. அருள்பணி. I. மிக்கேல் அவர்கள்.