460 தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி


தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம்

இடம் : குரூஸ்புரம், தூத்துக்குடி

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறை வட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலம்
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், குரூஸ்புரம், தூத்துக்குடி.

பங்குத்தந்தை : அருட்பணி. உப்பர்டஸ்

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 05.00 மணிக்கு நவநாள் மன்றாட்டு மற்றும் திருப்பலி

திருவிழா : ஜூன் மாதம் கடைசி வாரம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திருவிழா என மூன்று நாட்கள்.

வழித்தடம் : தூத்தூக்குடி/திரேஸ்புரம், வடக்கு காவல் நிலையம் அருகில்.

Location map :
https://maps.google.com/…

வரலாறு:

முத்துநகர் தூத்துக்குடி அன்னை மரியாளின் பக்தி மணம் கமழும் அழகிய நந்தவனம். இந்நகரின் மக்கள் அன்னைக்குப் பல்வேறு ஆலயங்கள் எழுப்பி பல்லாண்டுகளாகப் பரிவோடும், பக்திப் பெருக்கோடும் இறைவனை வழிபட்டு வருகின்றனர். அன்னை மரியாளுக்கு முத்துநகரின் சொத்தான பனிமய அன்னை பேராலயம் கி.பி. 1582 இல் கட்டப் பட்டது. அதற்கு அடுத்தப்படியாக இங்கு தோன்றியது தான் பழைமைச் சிறப்புமிக்க சிந்தாத்திரை மாதா ஆலயம். “சிந்தாத்திரை” என்றாலே “வெற்றிப் பயணம்” என்றுதான் பொருள்.

பயணிகளின் ஆலயம்

ஆழ்கடலில் முத்தும், சங்கும் குளிக்கச் செல்லும் கடலோடி மக்கள், பயணத்தை ஆரம்பிக்குமுன், தங்களின் படகுகளைச் சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்திற்கு முன்னால் கடலில் நிறுத்தி, அன்னையிடம் வேண்டுதல் மற்றும் பொருத்தனைகள் செய்வது வழக்கம். அதுபோல வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் தோணித் தொழிலாளர்களும், தோணிகளில் சரக்குகளை ஏற்றிய பின், சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தில் கூடிவந்து, தங்களின் கடல் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டுதல் செய்வர். சாதாரண மீன்பிடித் தொழிலாளர்கள் முதலாய் இந்த அருமையான வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

இன்றுகூட தூத்துக்குடியில் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள், “வடக்கே செல்லுதல்” என்னும் சம்பிரதாயத்தை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடிக்கு வடக்கே அமைந்துள்ள சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தைத் தரிசித்து, தங்களின் இல்லற வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய அன்னையை மன்றாடி, விருந்துண்டு, மகிழ்ச்சியோடு இல்லம் திரும்புகின்றனர். முத்துநகர் மக்களின் இத்திருத்தலம் சிந்தாத்திரை மாதா ஆலயம் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. பழைமைச் சிறப்பு மிக்க சிந்தாத்திரை மாதா ஆலயத்தின் வரலாற்றை இங்கு காண்போம்.

அன்னையின் முதல் ஆலயம் :

பனிமய மாதா ஆலயம், முத்துக்குளித்துறையின் இயேசு சபை அதிபராக இருந்த சுவாமி தியோகு தி குணா என்பவரின் அரிய முயற்சியினால் 1582 -ம் ஆண்டில் உருவானது. அது போர்த்துக்கீசியர் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்திய காலம். ஆனால் வணிக நோக்குடன் இந்தியாவுக்கு வந்த உலாந்தர்கள் என்னும் டச்சுக்காரர்கள், 1658 -ம் ஆண்டில் போர்த்துக்கீசியரிடமிருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றினர். பின்னர் முத்துக்குளித்துறை முழுவதும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் போர்த்துக்கீசியரின் ஆதிக்கமும், அவர்களுக்கு பாப்பரசர் 6-ம் அலெக்ஸாண்டர் வழங்கியிருந்த ஞான அதிகாரச் சலுகையும் முத்துக்குளித் துறையில் வீழ்ச்சியுற்றன.

டச்சுக்காரர்கள் கத்தோலிக்க மறையின் எதிரிகள். ‘கால்வீனியம்’ என்னும் பதித மதத்தைப் பின்பற்றியவர்கள். கத்தோலிக்க மக்களின் நற்கருணை பக்தியையும், மாதா பக்தியையும் மிகத் தீவிரமாகக் கண்டனம் செய்தனர். கத்தோலிக்க ஆலயங்களை இடித்தனர் அல்லது தங்களின் வணிகக் கூடங்களாக மாற்றினர். தூத்துக்குடியிலிருந்த முதல் பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கே தங்களின் இனத்தவரை அடக்கம் செய்ய “கிரகோப்” என்னும் கல்லறைத் தோட்டத்தை அமைத்தனர்.

ஆனால் டச்சுக்காரர்களின் இந்த மதவெறி முத்து நகரில் வெகுகாலம் நீடிக்கவில்லை. தங்களின் இலாபகரமான கடல் வணிகத்திற்குக் கத்தோலிக்கக் கடலோடி மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை என்பதை உணர்ந்தனர். எனவே தங்களின் மதவெறியை விரைவில் மாற்றிக் கொண்டனர். மாதா பக்தியைப் பழித்துரைப்பதையும் நிறுத்திக் கொண்டனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு டச்சு ஆளுநரின் அனுமதி பெற்று அக்காலத்தில் தூத்துக்குடி புனித இராயப்பர் கோவில் பங்குக் குருவாக இருந்த யேசு சபையைச் சேர்ந்த சுவாமி விஜிலியுஸ் மான்சி என்பவர், கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு எதிரே பனிமய மாதாவுக்கு 1713-ம் ஆண்டில் புதியதோர் ஆலயத்தைக் கற்களால் எழுப்பினார்.

முதல் குடிசைக் கோவில்

பனிமய மாதாவுக்குப் புதிய ஆலயம் உருவான பின்னர், ஏறத்தாழ 1713 -ம் ஆண்டில், முத்துநகரில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள், அதிலும் குறிப்பாகக் கடலோடி மக்கள், தங்களின் கடற்பயணங்களில் அன்னையின் ஆதரவையும், ஆசியையும் வேண்டி மன்றாட, சிந்தாத்திரை மாதா பெயரால் ஓர் ஆலயத்தை உருவாக்க விரும்பினர். தூத்துக்குடிக்கு வடக்கே கடலோரத்திலிருந்த புறம்போக்கு நிலத்தில் களி மண்ணால் சுவரெழுப்பி, ஓலையால் கூரைவேய்ந்து சிந்தாத்திரை மாதாவின் முதல் ஆலயத்தைக் கடலோடி மக்களே கட்டியெழுப்பினர். அக்காலத்தில் பனிமய மாதா ஆலயத்தைத் தவிர வேறு ஆலயங்களைக் கற்களால் கட்டுவதற்கு டச்சு அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். நாளடைவில் இக்குடிசைக் கோவிலைச் சுற்றிச் சில மீனவ குடும்பங்களும் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். இவ்வகையில் சிந்தாத்திரை மாதா ஆலயம் ஆரம்ப முதல் முத்துநகர் மக்களுக்கெல்லாம் பொதுவான திருத்தலமாக விளங்கிற்று. இது டச்சுக்காரர்களின் காலத்தில் பனிமய மாதா பங்கினை நிர்வாகம் செய்து வந்த இயேசு சபைக் குருக்களின் கண்காணிப்பிலிருந்தது.

1759-ம் ஆண்டு முதல் முத்துக்குளித் துறையிலும், இங்குள்ள ஆலயங்கள் பற்றிய ஞான அதிகாரத்திலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றி, 1782-ம் ஆண்டில் முத்துக்குளித்துறை முழுவதும் டச்சுக்காரர்களின் பலத்தை முறியடித்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் கத்தோலிக்க மக்களின் மதவழிபாடுகளில் அவசியமின்றித் தலையிட விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் முத்துக்குளிப்பவர்களும், சங்கு பிடிப்பவர்களும், தங்களின் சொந்த முயற்சியால், சிந்தாத்திரை மாதாவின் பழைய குடிசைக் கோவிலை அகற்றிவிட்டு, கற்களால் சிறியதோர் ஆலயத்தை அமைத்தனர். இவ்வாலயம் கடலோடி மக்கள் தங்களின் சங்குகளைச் சேமித்து வைக்கும் பண்டக சாலைக்கு அருகிலேயே அமைந்திருந்தது.

காலப்போக்கில் சிந்தாத்திரை மாதாவின் சிற்றாலயம் புயலுக்கும், மழைக்கும் பலியாக சிதைவுற்றது. எனவே பழைய போர்த்துக்கீசிய மிஷனைச் சேர்ந்த தனவந்தரான திருவாளர் சேவியர் இஞ்ஞாசி குரூஸ் டிவோட்டா என்பவர் சிதைந்து போன சிந்தாத்திரை மாதா சிற்றாலயத்தை மீண்டும் கற்களால் கட்டியெழுப்பினார். அவரது மரணத்திற்குப் பின், அவரது புதல்வன் திரு. அந்தோனி டிவோட்டா ஆலயத்தின் இரண்டாவது பகுதியைக் கட்டினார். இவரது மகன் பிலிப்பு கயித்தான் டிவோட்டா ஆயத்தின் மூன்றாவது (முகப்புப்) பகுதியைக் கட்டி முடித்தார். அவரது காலத்திற்குப் பிறகு, திரு. சூசை டிவோட்டா என்பவர் அன்னையின் ஆலயத்தைப் பழுது பார்த்துப் புதுப்பித்தார்.

1900-ம் ஆண்டில் ஆலயத்தின் கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்துவிட்டது. அதனை ரூ. 500 செலவில் திரு. பவுல் இஞ்ஞாசி பெர்னாந்து 1903-ம் ஆண்டில் செப்பனிட்டு, மீண்டும் புதுப்பித்தார். இவ்வாறு ஆலயம் புதிதாக உருவான பின், சில ஆண்டுகளாக அன்னையின் ஆபரணங்களும், ஆலயத்திறவுகோலும், ஏனைய உடமைகளும் தூத்துக்குடி பரதர் குல சாதித் தலைவன் அவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆலயத்திற்கு முன்னால் பெரியதோர் குருசடியும் கட்டப்பட்டது. அதன் உச்சியிலுள்ள மரச் சிலுவையை இன்றைக்கும் மக்கள் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வருகின்றனர். அதன் முன்பகுதியில், ஒரு கடற் பயணத்தின் போது இறந்த சைய மத்தேசியாள் என்ற இளம் பெண்மனியின் எளிமையான கல்லறை உள்ளது.

பழைய சிந்தாத்திரை மாதா ஆலயம் படிப்படியாக மூன்று பகுதிகள் கொண்ட ஆலயமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது அநேகமாக 1773-ம் ஆண்டு முதல் 1903-ம் ஆண்டுவரையுள்ள காலத்தில் கட்டப்பட்டதாக வரையறுக்கலாம்.

சிந்தாத்திரை மாதா ஆலயம், பனிமய மாதா பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1893-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திரு இருதயங்களின் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டது.

குருஸ்புரம் பங்கின் இணை ஆலயம் :

1923-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாப்பரசர் 11-ம் பத்திநாதர், அதுவரை திருச்சி மறைமாவட்டத்தோடு இணைந்திருந்த முத்துக்குளித்துறையையும், அதன் உள்நாட்டுப் பகுதிகளையும் தனியே பிரித்து தூத்துக்குடி மறைமாவட்டத்தை ஏற்படுத்தினார். மேதகு திபூர்சியுஸ் ரோச் ஆண்டகை அதன் முதல் ஆயரானார்.

திரு இருதயங்களின் ஆலயத்தின் வட திசையில் அங்கும் இங்குமாக அமைந்திருந்த சில முக்கிய இணை ஆலயங்கள் நாளடைவில் தனிப் பங்குகளாக மாறின. அவ்வகையில் உருவானதுதான் குரூஸ்புரம் புனித சூசையப்பர் பங்கு ஆலயம். இப்பங்கு 1955-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி உதயமாயிற்று. அன்று முதல் இன்று வரை சிந்தாத்திரை மாதா ஆலயம் குரூஸ்புரம் பங்குத்தந்தையின் கண்காணிப்பில், முத்துக்குளித்துறை மக்களுக்கெல்லாம் அன்னை மரியாளின் அருட்கொடைகளை வாரி வழங்கும் திருத்தலமாக சிறப்புற்று விளங்குகிறது.

அன்னையின் புதிய ஆலயம் :

பழுதடைந்து வந்து சிந்தாத்திரை மாதா ஆலயத்தை 1984-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குக் குருவாக பொறுப்பேற்ற சுவாமி ஜோசப் பென்சிகர் பழுது பார்த்துப் புதுப்பித்தார். ஆலயத்தின் சுவர்களை உயர்த்தி, பழைய கூரையை அகற்றிவிட்டு அஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்தார். அவர் ஆரம்பித்த வேலையை 1988-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குத்தந்தையாக இருந்த சுவாமி. கபிரியேல் தொடர்ந்து முடித்தார். புதிய ஆலயத்தின் இருபுறமும் சூரிய தடுப்பு விதானம் அமைக்க திரு. லியோ மச்சாது என்பவர் பெரிதும் உதவினார். இவ்வாறு குரூஸ்புரம் பங்குக் குருக்களும், பொதுமக்களும் நல்கிய உழைப்பினாலும் பொருளுதவியாலும் புதுப்பொலிவுற்ற சிந்தாத்திரை மாதா ஆலயத்தை அன்றைய ஆயர் மேதகு அமல்நாதர் திருநிலைப்படுத்தித் திறந்து வைத்தார்.

அன்னையின் சிந்தாயாத்திரைகள்:

அழகே உருவாக ஆலயத்தின் உயர்ந்த அரியணையில் அமர்ந்திருக்கும் சிந்தாத்திரை அன்னை, தனது உலக வாழ்விலும் பல புயல்களுக்கும் மத்தியில் வெற்றிப் பயணங்களை அனுபவித்தவள். இதற்கு விவிலியத் திருநூலில் பல ஆதாரங்களைக் காணலாம்.

திருமகன் இயேசுவைத் தன் உதரத்தில் கருத்தாங்கியவளாய், தனது உறவினள் எலிசபெத்தம்மாளை வாழ்த்தி அவளுக்குப் பணிவிடைபுரிய யூதேயா மலைநாட்டுக்குக் கடினமான பயணத்தை மேற்கொண்டாள். அவளோடு மூன்று மாதங்கள் தங்கி, சுகப் பேறுகாலம் கண்டு, வெற்றியோடு இல்லம் திரும்பினாள். அது அன்னையின் முதல் வெற்றிப் பயணம்.

நிறைமாத கர்ப்பிணியான நிலையிலும், தனது அன்புக் கணவர் சூசைக்குத் துணையாக பெத்லகேம் ஊருக்குப் பயணமானாள். அங்கு உலக மீட்பராம் யேசுவைப் பெற்றெடுத்து, வெற்றியோடு திருக்குடும்பமாக நாசரேத் ஊரை அடைந்தாள். இதுவும் அன்னையின் சிறப்புமிக்க ஒரு சிந்தாத்திரை.

குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொலை செய்யத் தேடியபோது, அவரை எகிப்து நாடுவரை பத்திரமாக எடுத்துச் சென்று, அவரது உயிரைப் பாதுகாத்து வெற்றியோடு இல்லம் வந்து சேர்ந்தாள். அன்னை மரியாளின் மற்றொரு வெற்றிப்பயணம் இது.

பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குச் சிந்தாத்திரை சென்றபோது, காணாமல் போன தன் திருமகன் இயேசுவை, மூன்று நாட்களாகத் தேடி அங்கலாய்த்து, இறுதியில் ஆலயத்தில் அவனைக் கண்டுபிடித்து பரிவோடு அரவனைத்து, வெற்றியோடு வீடு வந்து சேர்ந்தாள். அன்னையின் வாழ்வில் இதுவும் ஒரு சிந்தாத்திரையல்லவா?

இறுதியாகத் தன் அன்பு மகனோடு கல்வாரி மலைக்கு சிலுவைப் பயணம் நடத்தி, அவனை சிலுவையில் பலியாக்கி, இறைவனின் திருவுளத்தை முற்றிலும் நிறைவேற்றி வீரத் தாயாக உயர்ந்தாள். அன்னையின் வாழ்வில் இதுவே மாபெரும் வெற்றிப் பயணம்.

இன்று வானக எருசலேம் நோக்கித் தனது உலகப் பிள்ளைகளை வெற்றியோடு வழிநடத்த அன்னை விண்ணிலிருந்து மீண்டும் மண்ணுக்குப் பயணம் வருகின்றாள்.

உலகின் பல பாகங்களிலும் காட்சிகள் தந்து தன் மக்களுக்குத் தாயன்பையும், ஆதரவையும், ஆண்டவர் யேசுவின் அருளையும் வாரி வழங்குகின்றாள். எனவே அன்னை மரியாளின் சிந்தாத்திரை இன்றைக்கும் நமது மத்தியிலே தொடரத்தான் செய்கிறது.

தஞ்சம் தரும் திருத்தலம்

அன்னை மரியாள் அருளும் வெற்றிப் பயணம் நமது கடலோடி மக்களுக்கும், ஆன்மீக நலம் நாடும் அனைத்து மக்களுக்கும் இன்று தொடர்கிறது என்பதின் அடையாளமாகத்தான் அழகுற விளங்குகிறது சிந்தாத்திரை மாதா திருத்தலம்.

தூய சிந்தாயாத்திரை மாதாவின் திருத்தலம் வாருங்கள்..! மாதாவின் வழியாக இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..!