848 புனித லூர்து அன்னை ஆலயம், துவர்குளம்

   

புனித லூர்து அன்னை ஆலயம்

இடம்: துவர்குளம், கலுங்குவிளை அஞ்சல், 628704

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

பங்குத்தந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள்: 29 வரிகள்

ஒவ்வொரு மாதத்திலும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி

திருவிழா: பிப்ரவரி மாதம் 02 முதல் 11 வரை

வரலாறு:

துவர்குளம் மக்கள் கிறிஸ்தவர்களாக இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. அவை..

1. துவர்குளம் ஊரில் திரு. தரும பெருமாள் என்பவர் தனது நான்கு மகன் மற்றும் ஒரு மகளுடன், இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாக வசித்து வந்தனர்.  திரு. தரும பெருமாள் அவர்களது மூத்த மகன், திரு. துரைசாமி அவர்கள் வள்ளியம்மாள் என்பவரை மணமுடித்து வாழ்ந்து வந்தார். 1916 ஆம் ஆண்டு திருமதி. வள்ளியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட, பெண் குழந்தை பிறந்தது. ஆனால் வள்ளியம்மாள் பிரசவத்தின் போது இறந்து போனார்.  இவ்விழப்பு இந்த குடும்பத்தினரை பெருமளவில் பாதித்தது. 

2. திரு. தரும பெருமாள் அவர்கள் ஆடு வியாபாரம் செய்து வந்ததால், சாத்தான்குளம் பங்குத்தந்தையிடம் வியாபாரத்தின் நிமித்தம் பழக்கமும் இருந்தது. இதனிடையில் ஊரில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால், துவர்குளம் மக்கள் இருபிரிவினராகப் பிரிந்து, ஒருபிரிவினர் திரு. தரும பெருமாள் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ஆகவே திரு. தரும பெருமாள் அவர்கள் காவல்நிலையத்தின் வெளியே விசாரணைக்கு காத்திருந்த வேளையில், அவ்வழியே சாத்தான்குளம் பங்குத்தந்தை அருட்பணி.‌ பிரான்சிஸ் சாபாத் அவர்கள் கூண்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். தரும பெருமாளைக் கண்டவுடன், அருட்தந்தை பிரான்சிஸ் சாபாத் அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வந்தார். இதனைக் கண்ட காவல்துறை அதிகாரி, அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்திய போது, இவர்களை எனக்குத் தெரியும் நல்லவர்கள், எவ்வித தவறும் செய்ய வாய்ப்பில்லை என்று அருட்தந்தை சிபாரிசு செய்த உடனே, எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் திரு. தரும பெருமாள் குடும்பத்தை காவல்துறை அதிகாரி அனுப்பி வைத்தார்.

இந்த இரு நிகழ்வுகளும் திரு. தரும பெருமாள் குடும்பத்தினர் மத்தியில் ஆழமாக பதிந்து, வெள்ளைக்கார சாமியின் வேதம் "சத்திய வேதம்" என்று தெரிந்து கொண்டு, கிறிஸ்தவம் தழுவ ஆவல் கொண்டனர். 

ஆகவே சோமநாதபேரி சென்று, 1919 ஆம் ஆண்டு முதலில் குழந்தை அன்ன மரியா-வும், தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவம் தழுவினர். 

இந்த மக்கள் கிறிஸ்தவம் தழுவிய அதே காலகட்டத்தில் மேட்டுக்குடியிருப்பு ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினரும் இங்கு வந்து குடியேறினர்.

முதல் ஆலயம்:

1919 ஆம் ஆண்டில் ஓலைக் கூரை வேய்ந்த சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு, எப்போதாவது திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க அனைவரும் சோமநாதபேரி ஆலயத்திற்கு கால்நடையாகச் சென்று வந்தனர். 

1924 ஆம் ஆண்டு சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, சோமநாதபேரி தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, துவர்குளம் அதன் கீழ் வந்தது.

பூசைத் திருவிழா:

அந்நாட்களில் பங்குத்தந்தை கூண்டு வண்டியில் வந்து, பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் நாட்களில் இங்கு வந்து தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்துச் செல்வார்கள். இதுவே "பூசைத் திருவிழா" எனப் பெயர் பெற்றது.

அருட்பணி. இஞ்ஞாசியார் பணிக்காலத்தில் 1964 ஆம் ஆண்டு ஓட்டுக்கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. 

1965 ஆம் ஆண்டில் திரு. சிலுவை முத்து அவர்களின் முயற்சியால் பள்ளிக்கூடமானது, ஆலயத்தில் வைத்து நடத்தப்பட்டது. அப்போது 'சிலுவை முத்து உபதேசியார் ஆரம்ப பாடசாலை' என்னும் பெயரில் விளங்கியது. பின்னர் இது புனித இஞ்ஞாசியார் தொடக்கப்பள்ளி என்றானது.

பங்குத்தந்தை அருட்பணி. மரியதாஸ் அவர்களால் மரக்கொடிமரம் நிறுவப்பட்டு, பத்து நாட்கள் திருவிழாவும் முதன் முதலாக கொண்டாடப் பட்டது. மரக்கொடிமரம் விரைவில் பழுதடைந்ததால் 1965 ஆம் ஆண்டு இரும்பு கொடிமரம் வைக்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டில் ஆலயத்திற்கு அருகிலேயே ஆர்.சி பள்ளிக்கூடம் என்னும் பெயரில் கட்டப்பட்டு, பேரருட்திரு. ஆர்தர் ஜேம்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு நெடுங்குளம் தனிப் பங்கான போது துவர்குளம் ஆலயமானது, நெடுங்குளத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

2003 ஆம் ஆண்டு நெடுங்குளம் பங்குத்தந்தை அருட்பணி.‌ அமல்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலயமானது சிலுவை வடிவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.‌

வழித்தடம்: சாத்தான்குளத்திலிருந்து 8 கி.மீ

பேய்க்குளத்திலிருந்து 8 கி.மீ

Location map: Our Lady of Lourdes Church - Thuvarkulam

https://maps.app.goo.gl/g34M5n2Asyik753j8

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திரு. செல்வராஜ் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன் ஆகியோர்.