பரிசுத்த திருக்குடும்ப தேவாலயம், பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம்
இடம் : வடக்கன்குளம்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
பங்குத்தந்தை : பேரருட்திரு ம. ஜான் பிரிட்டோ (வடக்கன்குளம் வட்டார முதன்மை குரு)
இணை பங்குத்தந்தை : அருட்பணி A. சேவியர் கிங்ஸ்டன்
கிளைகள் :
1. புனித சவேரியார் ஆலயம், #ஆவரைக்குளம்
2. புனித ஜார்ஜியார் ஆலயம், #புதியம்புத்தூர்
சிற்றாலயங்கள்:
1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
2. புனித அந்தோணியார் ஆலயம்
3. புனித செபஸ்தியார் ஆலயம்
4. புனித ஜார்ஜியார் ஆலயம்
5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
குடும்பங்கள் : 2000
அன்பியங்கள் : 47
திருவழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 05.00, காலை 07.00, காலை 09.30 மணிக்கும்
மாலை 05.30 மணிக்கு செபமாலை திவ்ய நற்கருணை ஆசீர்.
வார நாட்களில் : காலை 05.00 மணி, காலை 06.10 மணி, மாலை 05.30 மணிக்கு சிற்றாலயங்களில் திருப்பலி
வெள்ளிக்கிழமை : மாலை 03.00 மணிக்கு இறை இரக்க வழிபாடு
சனிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள், திவ்ய நற்கருணை ஆசீர்
மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை பரிசுத்த பாத்திமா அன்னை பரிகார பக்தி முயற்சி, மாலை 06.30 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் நவநாள் பக்தி முயற்சி, திவ்ய நற்கருணை ஆசீர்
மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு அருளாளர் தேவசகாயம் பிள்ளை திருவுருவ பவனி, நவநாள் திவ்ய நற்கருணை ஆசீர்
திருவிழா : பேராலய பெருவிழா ஆகஸ்ட் 06 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்
பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் காட்சிப் பெருவிழா : அக்டோபர் 23 ம் தேதி.
அருளாளர் தேவசகாயம் பிள்ளை திருமுழுக்கு விழா : மே மாதத்தில் 14 ம் தேதி.
திருக்குடும்ப ஆலய வரலாறு :
கி.பி. 1850 – 1852 ல் பிரான்சு நாட்டு அரசகுடும்பத்தைச் சேர்ந்தவரும், செல்வந்தருமான திரு. ஹென்டிரிக் என்பவர் தமது துணைவியுடன் உலக சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தின் போது மதுரைமாநகரம் வந்து சேர்ந்தனர்.
வடக்கன்குளத்தில் மாதா காட்சி கொடுத்துள்ள விபரங்களை மதுரை மிஷனரியின் அறிக்கைகளின் வாயிலாக அறிந்தனர்.
எனவே காட்சி கொடுத்துள்ள மாதாவை நேரில் தரிசனம் செய்து வரவேண்டும் என்று விரும்பினர். வடக்கன்குளம் வந்து சேர்ந்தனர். மாதாவை தரிசனம் செய்து கண்ணீர் வடித்தனர்.
அவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாகியும் குழந்தைகளில்லை. பொருட்செல்வம் முதல் அனைத்துச் செல்வங்களிருந்தும் குழந்தைச் செல்வம் இல்லாமலிருப்பது அவர்களுக்கு பெருங் குறையாகவே இருந்தது.
தூய கன்னிமரியாள் காட்சி கொடுத்த தாய் எப்படியும் நம் மன்றாட்டை கேட்டு அருள்புரிவாள். தோன்றி மறைந்தவளல்ல நிரந்தரமாகவே உயிரோவியத்துடனிருந்த காட்சி அளிக்கும் தாய் நம்மைக் கைவிட மாட்டாள் என்று பூரண நம்பிக்கை கொண்டவர். “நமது மன்றாட்டு கேட்கப்பட்டது” என்று மனப்பூர்வமாகவே விசுவாசித்தனர். தங்களது சுற்றுப்பயணத்தை தொடர்ந்தனர்.
ஹென்டிரிக் குடும்பத்தினர் ஓராண்டுக்குள் ஓர் அழகிய ஆண்குழந்தையைப் பெற்று அகமகிழ்ந்தனர். 27 ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் பட்ட கவலை அற்புதமாகவே நீக்கப்பட்டது. உள்ளம் பூரிப்படைந்தனர். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவர்களது வாழ்வையே மலரச் செய்துள்ள பரலோக இராக்கினிக்கு என்ன செய்வதென்று அறியாது திணறினர். திகைத்து சிந்தனையிலாழ்ந்தனர்.
மதுரை சேசு சபை வேத போதகர்களுடன் தொடர்பு கொண்டனர். சேசு சபை வேத போதகர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு மாதாவுக்கு நவீனமானதொரு ஆலயம் கட்டுவதென முடிவு செய்துள்ளனர்.
எனவே கி.பி. 1855ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி பங்குத்தந்தை சங். ஜோஸப் வெடியா கிரகோரி சுவாமிகளும் சேசுசபை குருக்கள் மற்றும் பெர்கண்டல் என்ற சந்நியாசியும் ஊர் பொதுமக்களும் புடை சூழ்ந்து நிற்க, திருச்சி மறை மாவட்ட ஆண்டகை வணக்கத்துக்குரிய கோனோஸ் அலக்சியூஸ் ளு.து. ஆயர் அவர்கள் முதல்கல்லை ஆசீர்வதித்து மூலைக்கல்லாக நாட்டினார்கள்.
சேசுசபை மதப்போதகர்களின் மேற்பார்வையில் பங்குத்தந்தைகளும், ஊர் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். இம்மாபெரும் ஆலயம் நவீன வேலைப்பாடுகளுடன் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயில் கட்டிமுடிப்பதற்கு 17 ஆண்டுகளாயின. 1872ஆம் ஆண்டு சங். பௌகட் அடிகளார் காலத்தில் கலைப் பொலிவுடன் தலைநிமிர்ந்து நிற்கும் இவ்வாலயம் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆலய அமைப்பு:
இவ்வாலயம் முக்கோண வடிவம் ஓவல் வடிவமாகவும் தோன்றும், பீடத்தில் நின்று பார்க்கும்போது யு வடிவமாகத் தோன்றும். சிலர் நினைப்பது போல இரட்டைக் கோயிலாகவும் தெரியும். இந்த அமைப்பு கற்பணைக்கும் எட்டாத நவீனமானது.
உள்ளே நுழைவதற்கு மூன்று திசைகளிலும் ஐந்து வாசல்களுண்டு. தலை வாயில் வழியாக ஆலயத்தினுள்ளே நுழையும் போது பரிசுத்த திருக்குடும்பம்: அன்பு மக்களே, உங்களது இதயத்தை எமக்குத் தந்திட உள்ளே வாருங்கள் என்று எழில் முகத்துடன் அழைக்கின்றது! அன்பு உணர்வூட்டும் காட்சியால் உள்ளே நுழைந்து பார்க்கும்போது பிரமிப்படைகின்றோம்.
நுட்பகரமான வேலைப்பாடு ஆலய திருப்பீடம் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேர்முகமாகவே தெரியும். எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் பரலோக அன்னை உயிரோவியத்துடன் புன்சிரிப்புடன் நம்மையே நோக்குவது விசித்திரமானது.
அந்தக்காலம் பதனீர், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை போன்றவைகளை இணைத்து அரைத்துதான் பெரிய பெரிய கட்டிடங்களை எழுப்புவது இயற்கை. என்றாலும் இந்த அமைப்பில் கட்டுவது சாதாரண காரியமல்ல.
வியக்கத்தக்க வானளாவிய வளைவுகள். (டூம்கள்) இவைகளைத் தாங்குவதற்கு உத்திரங்களோ, கட்டைகளோ அல்லது இரும்புகளோ இல்லை. இவைகள் இல்லாமல் இவ்வாறு கட்டப்பட்டிருப்பது ஆச்சரியம்!
பீடத்தின் நடுவில் ஒரு பெரிய சிலுவையில் தொங்கும் தேவகுமாரன், “வாருங்கள் என்னருகில், தொட்டுப்பாருங்கள் என்னை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்று எம்பெருமான் உயிரோடு பேசுவது போல் காட்சியளிக்கிறார்.
‘வருத்தத்தினால் பாரம் சுமக்கவில்லை, உங்களது பாவங்களையே பாரமாகச் சுமக்கிறேன்’ என்று சொல்லுவது தத்ரூபமாகவே உணர வைக்கிறது.
💥பீடத்தில் நின்றடையும் படிகள் செங்குறுதி செம்மல் இயேசுகிறிஸ்துவின் 14 ஸ்தலங்ளை நினைவூட்டுகின்றன.
பீடத்தின் நற்கருணை பேழையின் இருபக்கங்களிலும் இயேசு பெருமானின் பன்னிரு சீடர்களை நினைவுபடுத்தியுள்ளனர் (இப்போது சீடர்களின் சுரூபங்கள் பிளைவுட் பலகையால் மறைக்கப்பட்டிருக்கின்றன) பீடத்தின் மேல் வரிசையில் அமைந்திருக்கும் ஐந்து வளைவுகளும் மனுமகனாகப் பிறந்து சிலுவையில் அறையுண்ட யேசுபிரானின் ஐந்து காயங்களை நினைவு படுத்தியுள்ளனர். இதோடு இணைந்துள்ள கோபுரம் போன்ற ஒன்பது பூங்கொத்து சிலைகளும் ஒன்பது கூட்டம் சம்மனசுகளை நினைவுறுத்தியுள்ளனர்.
பீடத்தின் அடிவரிசையில் நான்கு வளைவுகளை அமைத்து நான்கு நற்செய்தி தூதுவர்களையும் நினைவுச்சின்னமாகவே அமைந்துள்ளனர் சுருங்கச்சொன்னால் ஒவ்வொரு பாகமும் வேதாகம் வரலாற்று உண்மையின் அடிப்படையில்தான் அழியாச் செல்வங்களாக நின்று அருள் ஒளி அளிப்பதற்கு வழி செய்துள்ளனர் என்பது மறைக்க முடியாத உண்மை.
பெல்ஜியம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மணியின் ஓசை இனிய நாதம் போன்று இருக்கும். அன்று ஒலிக்கத் தொடங்கி இன்று வரை மக்களின் உள்ளங்களில் இறை உணர்வைப் பெருக்கிய வண்ணமாகவே விளங்குகின்றது.
மாதாவின் புதுமைக் காட்சி
மரத்தால் செதுக்கப்பட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து வந்த இந்த அற்புதமான சுரூபம்…! இதோ ஆலயத்திலே கொலு கொண்டு இருக்கிறாள்.
நெஞ்சில் கரம் குவித்து, முகம் மலர்ந்து ஜனங்களுக்கு எதிர் நோக்கின பார்வையுடன் இருக்கும் இந்த பரலோக அன்னை, உலக பாவ இருளைக் கண்டு, கிறிஸ்தவர்களுக்கு சாத்தானால் ஏற்படும் இன்னல்களை நினைத்தும் மனம் உருகினாள்.
*1803 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 -ம் நாள் (சரியான தமிழ் ஆண்டு 979 -ம் வருடம் ஜப்பசி மாதம் 7-ம் நாள் முற்பகல் 11.20 மணியளவில் காட்சி கொடுத்தாள்*.
அதாவது, சவரிமுத்துப்பிள்ளை என்பவர் பீடத்தின் முன்னால் முழந்தாட்படியிட்டு செபித்துக்கொண்டிருந்தார். திடீரென்று மாதாவின் முகம் ஒருவித மேகத்தால் மங்கியது. பவளம் போன்ற கன்னங்களின் மேல் கண்ணீர் வடிந்தோடியது. நெஞ்சில் குவிந்திருந்த இரண்டு கரங்கள் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தன. இந்த அற்புதக்காட்சியைக் கண்ட சவரிமுத்துப்பிள்ளை திகிலடைந்தார். பங்குத் தந்தையிடம் ஓடோடிச் சென்று விபரத்தைக் கூறினார். அன்று இங்கு தங்கியிருந்த பெஸ்கி அடிகளார். (பெஸ்கி அடிகளார் என்ற வீராமாமுனிவரல்ல) சக்கரீஸ்து உபதேசியார் வியாகப்பபிள்ளை ஆகியோர் வந்து இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.
மேலும் ஊரில் தங்கியிருந்த ஜரோப்பிய மாது பில்பெக் என்ட்ரிக் அம்மாள் ஓடி வந்து காட்சியைக் கண்டாள். அவ்வம்மையார் அருகில் சென்று நுணுக்கமாகச் சோதித்துப்பார்த்து வியப்படைந்தார்.
பரிசுத்த தேவமாதா சுரூபத்தில் காணும் மூன்று விதத் தோற்றங்களும் உறுதி – உண்மையானவை. மற்ற புனிதர்களின் முகங்களும் துக்ககரமாகக் காண்பதும் மெய். இதனை உறுதிப்படக் கூறுகின்றேன் என்றார்.
இவை அனைத்தும் அற்புதமான புதுமை என்று பங்கு குரு ஜாண் லூயிஸ் கர்டோஸா அடிகள், பெஸ்கி அடிகள், பில்பக் என்ட்ரிக் அம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்தினார்கள்.
எனவே கோயில் மணி அடிக்கப்பட்டது. ஊர் மக்கள் வந்து கூடினார்கள். பரலோக மாதா சுரூபம் கரம் விரித்துக் கண்ணீர் ததும்பி ஓடி, பவளக் கன்னங்களின் வழியாக வருவதைக் கண்டு மக்கள் பிரமித்து, பயத்தாலும், அதிசயத்தாலும் பரவசமானார்கள். அந்த நேரத்தில் உபதேசியார் மதுரேந்திர அண்ணாவியார் பயபக்தியுடன் பீடத்தின் மேல் ஏறி மாதாவின் முகத்தின் கண்ணீரைத் துடைத்தார். கண்ணீர் நின்ற பாடு இல்லை. தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் பயந்தனர். இதய உருக்கம் எவ்வளவென்று சொல்ல முடியாது. பீடத்தில் உபதேசியார். மெழுகுதிரிகளை ஏற்றினார். எல்லோரும் முழந்தாட்படியிட்டு “ *என் பாவமே, என் பெரும் பாவமே* ” என்ற ஜெபத்தை நெஞ்சில் பிழை தட்டிக்கொண்டு சொன்னார்கள்.
பொறுத்தருளும் கர்த்தாவே உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும், என்றெக்கும் எங்கள்மேல் கோபமாக இராதேயும் என்ற ஜெபத்தை மும்முறை பக்தி உருக்கத்துடன் செபித்து முடிக்கவே, மக்களின் கண் பார்வையிலேயே இரண்டு கரங்களும் மெதுவாகச் சுருங்கின சுரூபத்தின் தோற்றங்களும் மறைந்து இயற்கைச் சாயலாக முன்பு இருந்தது போல் மாறியது…
அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்து, மாதாவுக்கு நன்றியறிந்த தோஸ்திரம் புரிந்து தத்தம் இல்லம் சென்றனர்.
சின்ன உரோமாபுரி என்று அழைக்கப்படும் திருத்தலத்தை தரிசிக்க வாருங்கள். இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்.
வழித்தடம் :
நாகர்கோவில் - காவல்கிணறு விளக்கு - வடக்கன்குளம்.
திருநெல்வேலி - காவல்கிணறு விளக்கு - வடக்கன்குளம்.