592 தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் ஆலயம், பெரியூர்

    

தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் ஆலயம் 

(புனித மார்த்தினார் ஆலயம்) 

இடம்: பெரியூர், பெரும்பாறை அஞ்சல். 

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: மதுரை உயர்மறைமாவட்டம்

மறைவட்டம்: கொடைக்கானல்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், மங்களம்கொம்பு, கொடைக்கானல்

பங்குத்தந்தை: அருட்பணி. S V. ஆரோக்கிய ராஜ், SDM

குடும்பங்கள்: 20

திருப்பலி நேரங்கள்:

புதன்கிழமை மாலை 05.30 மணி

வியாழக்கிழமை ‌காலை 06.30 மணி

ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி

திருவிழா: நவம்பர் 11 ஆம் தேதியை மையமாக வைத்து 3 நாட்கள்.

வழித்தடம்: வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு: 

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைத்தொடரின்  குளுமைப்பிரதேசம்  என்று அழைக்கப்படும் பாச்சலூர் வருவாய் கோட்டத்தில் உள்ள ஊர் பெரியூர் கிராமம். 

அளவுக்கு அதிகமான நறுமண காபி, ஏலக்காய், கோக்கோ, மிளகு, அவக்கடா  தோட்டங்கள் நிறைந்த ஊர். மக்கள் தொகையை விட தோட்டங்கள் அதிகம் உள்ளது. பல மக்கள் இந்த தோட்டங்களில் தங்கி வேலை செய்கிறார்கள். 

காட்டு மாடு, யானை, சிறுத்தை, மிளகு, மான், வரையாடுகள் அதிகமாக இருக்கும் இடம்.‌ காட்டு மாடுகள், யானையின் மூலமாக விவசாயம் பாதிக்காமல் இருக்க எல்லா தோட்டங்களிலும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் பராமரிப்பு ‌செய்து வாழ்ந்து வருகின்றனர். உடனடி தேவைகளுக்கும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு இங்கு வசிப்பவர்கள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு போன்ற ஊர்களுக்கு தான் செல்ல வேண்டும்.  

"ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்" 

 ஆமோஸ் 5: 6

இந்த பெரியூர் கிராமத்தில் தங்கி காபி தோட்டத்தில் வேலை செய்ய பல ஊர்களில் இருந்து வந்து தங்கிய கத்தோலிக்க கிறித்தவர்களின் ஆன்மீகத் தேவைகளை இயேசு சபையினர் ஏற்றுக்கொண்டு, கொடைக்கானல் செண்பகனூர் திருஇருதய கல்லூரியிலிருந்து குருக்கள் வந்து பணி செய்து வந்தார்கள். சில குருக்கள் புனித சிறுமலர் தெரசாள் காபி தோட்டத்தில் தங்கி இப்பகுதியில் பணிசெய்து வந்தார்கள். தோட்டத்தில் இருக்கும் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களுக்காக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

பின்பு இந்தப் பகுதியில் ஆன்மீகப் பணியை மேற்கொள்ள மதுரை உயர் மறைமாவட்டத்தின் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெருமாள்மலை பங்கு தளத்துடன் இணைக்கப்பட்ட பின் அருட்பணி. சூசை மைக்கேல் ராஜ் மற்றும் அருட்பணி. அந்தோணிசாமி ஆகியோர் பெருமாள் மலை பங்குத்தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில், மங்களம்கொம்பு, பெரியூர் கிராமங்களில் திருப்பலி நிறைவேற்றினார்கள். 

பெரியூர் கிராமத்தில் தங்கி மக்களின் ஆன்மீகத் தேவைகளையும், மருத்துவம் மற்றும் கல்வி உதவிசெய்ய புனித சூசையப்பரின் குளூனி அருட்சகோதரிகள் 1995 -ஆம் ஆண்டு இடம் வாங்கி, தங்கள் இல்லம் கட்டி பணி செய்து வந்தனர். மறைமாவட்ட குருக்களுடன் இணைந்து ஆன்மீகப் பணியையும் சிறப்பாக செய்து வந்தனர். இச்சபையின் சிற்றாலயத்தில் திருப்பலி நடைபெற்று வந்தது.

அருட்சகோதரிகள்  இப்பகுதியில் உள்ள மக்களை சந்திப்பது, மறைக்கல்வி கற்றுத்தருவது மற்றும் மருத்துவம் பார்ப்பது என பல்வேறு பணிகளை திறம்படச் செய்து வந்தார்கள்.

பெருமாள் மலை பங்குத்தளத்திலிருந்து இந்த பகுதிக்கு வந்து செல்வது கடினமானதாகவும், மக்கள் பங்குத்தந்தையை சந்திக்க நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிலை, பேருந்து வசதிகள் அதிகமாக இல்லாத சூழ்நிலையை அறிந்து 2004 -ஆம் ஆண்டு மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆண்டகை மங்களம்கொம்பை தனிப்பங்காக அறிவித்து, இந்த பங்குத்தளத்தில்  பெரியூர், ஆசாரிபட்டி, குப்பம்மாள்பட்டி கிராமங்களை இணைந்தார். 

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ் அவர்கள் 2004 -ஆம் ஆண்டு பொறுப்பேற்றதுடன், பெரியூர் கத்தோலிக்க கிறித்தவ மக்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய,  அருட்சகோதரிகளின் தோட்டத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி 07/05/2006

ஆம் ஆண்டு சிற்றாலயம் கட்டி முடிக்கப்பட்டு அருட்பணி. அருள் லூர்து அவர்களால் புனிதப் படுத்தப்பட்டு, ஆலயமானது தூர்ஸ் நகர் புனித மார்ட்டினாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

பாதுகாவலர் :

இந்த ஆலயம் கட்ட ஜெர்மனியில் இயங்கி வரும் புனித மார்ட்டின் சபையினர் உதவி செய்தார்கள். மேலும் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் விவசாய பொருட்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லவும், கொண்டுவரவும் குதிரைகளை பயன்படுத்துகிறார்கள். குதிரைகள் இந்த மக்களின் குடும்ப உறுப்பினர் போல கருதப்படுகிறது. புனித மார்ட்டின் குதிரை, குதிரை வீரர்கள், புலம்பெயர்ந்த மக்களின் பாதுகாவலராக இருப்பதால், அவரையே இந்த ஆலயத்தின் பாதுகாவலராக அர்ப்பணித்தார்கள்.

இந்த ஆலயம், இறைமக்களின் தேவைகளை குளூனி அருட்சகோதரிகள் ஏற்றுக்கொண்டு, மிக அருமையான முறையில் ஆன்மீகம், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை இப்பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் செய்து வருகின்றார்கள். இன்றுவரை இப்பகுதியில்  மின்சாரம், பேருந்து, தொலைதொடர்புகளில்   மிகவும் பின்தங்கியிருந்தாலும், இடைவிடாமல் மலர்ந்த முகத்துடன் மக்களுக்காக பல்வேறு பணிகளை

இந்த கிளைப் பங்குத்தளத்தில் உள்ள இந்த துறவற சபை செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு" 

பிலிப்பியர் 4:13

பங்கு ஆலயத்திலிருந்து இந்த கிளைப்பங்கானது சுமார் 28கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை.  தொலைத்தொடர்புகளில் மிகவும் பின்தங்கியிருந்தாலும் இடைவிடாமல், வாரத்திற்கு மூன்று திருப்பலிகள் நிறைவேற்றி, இந்த மக்களின் ஆன்மீக வாழ்விற்கு துணை நிற்கும் குருக்களின் பணி போற்றுதலுக்குரியது. 

புனித சூசையப்பரின் குளூனி சபை

நிறுவனம்: 

1. சிறிய முதலுதவி மையம்

2. மாலை நேர படிப்பகம்.

மண்ணின் இறையழைத்தல்: 

1. அருட்சகோதரி.‌ மரியா (குளூனி சபை)

4 பிள்ளைகள் செய்யூர் என்ற இடத்தில் குளூனி அருட்சகோதரி நடத்தும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.‌

இந்த கிளைப் பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:

1. அருட்பணி. சூசை மைக்கேல் ராஜ் (1989-1997)

2. அருட்பணி. அந்தோணி சாமி (1997-2004)

3. அருட்பணி. பிரிட்டோ ராஜா சுரேஷ் (2004-2009)

4. அருட்பணி.‌ ஜெரோம் எரோணிமுஸ் (2009-2010)

5. அருட்பணி.‌ அருள்சேவியர், SDM (2010-2013)

6. அருட்பணி. S V ஆரோக்கிய ராஜ், SDM (2013 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: 

பங்குத்தந்தை அருட்பணி. S V ஆரோக்கிய ராஜ், SDM.