புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: பேச்சிப்பாறை
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: புத்தன்கடை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. கிறிஸ்து அரசர் ஆலயம், கோதையாறு
2. புனித வின்சென்ட் பல்லோட்டியார் ஆலயம், வலியஏலா
3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், ஆலம்பாறை
பங்குத்தந்தை: அருட்பணி. லூர்துராஜ், SAC
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ் செல்வன், SAC
குடும்பங்கள்: 313
அன்பியங்கள்: 10
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
திங்கள் காலை 06:30 மணி திருப்பலி (அருட்சகோதரிகள் இல்லம்)
செவ்வாய், வியாழன், சனி திருப்பலி காலை 06:30 மணி
புதன், வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி.
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி நற்செய்தி கொண்டாட்டம், இறைஇரக்க ஆராதனை, நவநாள் திருப்பலி, தொடர்ந்து நேர்ச்சை கஞ்சி.
திருவிழா: மே மாதம் 1-ம் தேதி நிறைவடைகிற வகையில் எட்டு நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்:
Sr. N. பிரஷீபா, புனித தெரசாவின் கார்மல் சபை
வழித்தடம்: மார்த்தாண்டம் -குலசேகரம் -பேச்சிப்பாறை
பேருந்துகள்:
313: நாகர்கோவில் -பேச்சிப்பாறை,
349: கன்னியாகுமரி -பேச்சிப்பாறை,
332: குறும்பனை -பேச்சிப்பாறை,
332: குளச்சல் -பேச்சிப்பாறை,
89M: மார்த்தாண்டம் -கிழவியாறு,
89J: குலசேகரம் -குற்றியார்
89J: குலசேகரம் -கோதையார்,
89D: மார்த்தாண்டம் -பேச்சிப்பாறை,
திருநெல்வேலி -பேச்சிப்பாறை,
457: திருவனந்தபுரம் -பேச்சிப்பாறை
Location map: https://g.co/kgs/mW7M3q
வரலாறு:
சுற்றிலும் மலைமுகடுகளையும் நீர்த்தேக்கங்களையும் பசும் மரச்சோலைகளையும் கொண்டு, குளிர்ந்த தென்றல் காற்று வீசுகின்ற அழகிய ஊராகிய சுற்றுலாத் தலமாக விளங்கும் பேச்சிப்பாறை ஊரில் அமைந்துள்ள, புனித சூசையப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம்....
பெயர்க் காரணம்:
நமது இந்தியா, குறிப்பாக அன்றைய தமிழ்நாடு அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிற்றரசுகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த வேளையில், கி.பி 1520-1515 காலகட்டத்தில் போர்ச்சுக்கீசிய இரண்டாவது ஆளுநரான அல்போன்ஸ் டி அல்புகர்கு ஆளுமையின் போது, ஓய்வுக்காக தங்களது படைவீரர்களை தங்க வைக்க அடர்ந்த காடுகளும், நான்கு பக்கங்களிலும் இருந்து துள்ளி ஓடிவரும் தெளிந்த நீரோடைகள் இணையும் ஆறான கோதையாறு தனை தேர்வு செய்தனர். இங்கு பாறைக்கூட்டங்களில் உள்ள பெரிய பாறை ஒன்றை தேர்வு செய்து தங்கினர். முத்துக்குழி மலைமுகட்டில் இருந்து உருவான கோதையாறில், மலைவாழ் மக்களின் ஒத்துழைப்புடன் மூங்கில் கம்புகளால் கட்டப்பட்டு, யானைகளின் உணவான ஈத்தல் ஓலைகளால் வேயப்பட்ட குடில்களில் தங்கி ஓய்வெடுத்தனர்.
வாணிபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட போர்ச்சுக்கீசியர் பின்னர் நிரந்தரமாக இங்கேயே குடும்பமாக தங்க ஆரம்பித்தனர். மலைவாழ் மக்களிடம் உதவி பெறுவதும், அவர்களுக்கு இவர்கள் உதவி செய்தும் வாழ்ந்து வந்தனர்.
நாளடைவில் பெயரே இல்லாத பாறைக்கூட்டங்களில் போர்ச்சுக்கீசியர்கள் தங்கியதால், இவ்விடம் "போர்ச்சுப்பாறை" எனப் பெயர் பெற்றது. பின்னர் போர்ச்சுப்பாறை என்ற பெயர் மருவி "பேச்சிப்பாறை" என ஆனது.
மலைவாழ் மக்கள் பேச்சிப்பாறைக்கு மற்றுமொரு பெயர்க்காரணம் கூறுகின்றனர். அதாவது குகை பாறைகளுக்குள் சென்று மலைதெய்வமாக கருதும் காற்றை வணங்குவது இம்மக்களின் வாடிக்கை. வணங்கும் போதும், சத்தமாக வழிபடும் போதும், பாறையிலிருந்து வரும் எதிரொலியை வைத்து 'பேசும்பாறை' எனப்பெயர் பெற்று, நாளடைவில் பேச்சிப்பாறை என்று ஆனதாகவும் கூறுவர்.
பேச்சிப்பாறையும் மூன்று புனிதர்களும்:
1. நமது மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையர், கி.பி 52 ஆம் ஆண்டில் இந்தியா வந்த போது, கேரளா கரையோரம் இறங்கி நெடுமங்காடு வழியாக பேச்சிப்பாறை வந்ததோடு மட்டுமல்லாமல், திருநந்திக்கரையில் இருக்கும் உயரமான நந்திப்பாறையில் தங்கி குளச்சல், முட்டம் கடற்கரை ஓரமாக நடந்து இறைபணி செய்து, மக்களை கிறிஸ்துவுக்குள் வாழ வழிகாட்டி சென்னை பரங்கிமலை சென்றார்.
2. புனித தோமையாரைத் தொடர்ந்து, மறைப்பரப்பு நாடுகளின் பாதுகாவலர் என போற்றப்படும் இயேசு சபை துறவியான புனித பிரான்சிஸ் சவேரியார் 1544 ஆம் ஆண்டில் உண்ணிகேரளவர்மா மன்னர் ஆட்சிக்காலத்தில், அன்னை மாமரிக்கு கோட்டாறு ஊரில் ஆலயம் கட்ட வண்ணக்கற்கள் மற்றும் தரமான மரங்கள் போன்றவைகள் எடுத்துச் செல்ல, திருவிதாங்கோட்டில் வசித்த வலிமை வாய்ந்த ஆண்களை அழைத்துக் கொண்டு, போர்ச்சுக்கீசியர் தங்கிய பாறைப் பகுதிகளில், மலைவாழ் மக்களின் துணையோடு மரங்கள் மற்றும் கற்களை எடுத்துச் சென்று ஆலயப்பணியை செய்தனர்.
3. திரு. நீலகண்ட பிள்ளை என்ற புனித தேவசகாயம் பிள்ளை அவர்கள் 1740 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கணக்கராக பணிபுரிந்து, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் (அணை கட்ட முன்வரைவு திட்டத்திற்கு)
கோதையாருக்கு வருகிற சிறிய ஆறுகளைக் குறித்த கணக்கெடுப்பு பணிக்காக இப்போது உள்ள சர்பிளஸ் மேட்டுப் பகுதியில், மன்னரின் படைக் காவலர்கள் தங்கும் முகாமிற்கு வந்து ஆய்வு செய்தார். 14.05.1745 இல் திருமுழுக்கு பெற்ற பின்னர், தனது ஆதரவு படைவீரர்களிடம் இயேசு கிறிஸ்துவை பற்றி எடுத்துச் சொல்ல 06.06.1746 அன்று மீண்டும் சர்பிளஸ் மேட்டிற்கு வந்தார்.
அன்றைய காலகட்டத்தில் இப்பகுதியில் ஆலயம் இல்லாமற் போனாலும், மூன்று புனிதர்களின் கால்தடம் பட்ட புண்ணிய பூமியாக பேச்சிப்பாறை விளங்குகிறது.
ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்:
திருவனந்தபுரம் சமஸ்தானத்தை பகுதி வாரியாக பிரித்தபோது, உருவான திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1894 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னராக இருந்த திருமூலம் திருநாள் அவர்களின் ஆணைக்கிணங்க, கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறையில் நீர்த்தேக்கம் கட்ட, பொறியாளர் ஹம்பிரி மிஞ்சன் அலெக்சாண்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், 1894 இல் அணை கட்ட முயற்சிகள் நடந்து வந்தன. பொறியாளருடன் வந்தவர்கள் உரப்பாறை (தற்போது காவல்நிலையம் எதிரில் உள்ள பகுதி) எனும் பகுதியில் உள்ள பெரிய அகன்ற பாறையை தேர்வு செய்து தங்கினர்.
இந்த பாறைக்கு தனிச் சிறப்பு உண்டு. வருடத்துக்கு ஒரு முறை 18 மலைக்கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் உரப்பாறை -யில் ஒன்றுகூடி, தங்கி, உண்டு மகிழ்ந்து மலைக்கடவுளுக்கு விழா எடுத்து கொண்டாடுவது வழக்கம்.
முதல் ஆலயம்:
பொறியாளர் ஹம்பிரி மிஞ்சன் அலெக்சாண்டர் அவர்கள், தம்முடன் வந்த குழுவினருடன் தங்கியிருந்த பகுதியில் 12.12.1894 இல் மூங்கில் கம்புகள் கொண்டு கட்டப்பட்டு, ஈத்தல் ஓலைகளால் வேயப்பட்ட குடில் அமைத்து அதில் இறைவழிபாடு செய்து வந்தனர். இதுவே பேச்சிப்பாறை ஊரின் முதல் ஆலயமாகும்.
1895 முதல் பேச்சிப்பாறை அணை கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் கொல்லம் மறைமாவட்டத்தின் கீழ் மையப்பகுதியாக முளகுமூடு பகுதியில் சிற்றாலயம் செயல்பட்டு வந்தது. அணை கட்டுவதற்கு தேவையான ஆட்களை 1862 ஆம் ஆண்டு முதல் முளகுமூட்டில் பணியாற்றி வந்த அருட்பணி. ஆண்டனி விக்டர், OCD அவர்களிடம் அலெக்சாண்டர் கேட்க, முளகுமூட்டிலிருந்து ஏராளமான தொழிலாளர்களை பேச்சிப்பாறைக்கு குதிரை வண்டியில் அருட்பணி. விக்டர் அனுப்பி வைத்தார். இந்த தொழிலாளர்கள் தற்போதைய புத்தன்கடை பகுதியிலும், காக்கச்சல் மலைதேவதை கோவில் வளாகத்திலும், உரப்பாறை எனும் மலைப்பாறையிலும் தங்கவைக்கப் பட்டனர்.
கட்டட தொழிலாளர்களுக்கு மேலும் வசதியாக அதே 1895 ஆம் ஆண்டில் அருட்பணி. ஆண்டனி விட்டர் OCD அவர்களால், கோட்டூர்கோணத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, தங்குவதற்காக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. (பத்திரம் எண் : 4937/ மலையாள வருடம் 1070). இதற்குப் பின், 1896 ஆம் ஆண்டு அணை கட்டுமானப் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இரண்டாவது ஆலயம்:
டிசம்பர் மாத இறுதியில் உரப்பாறையில் மீண்டும் மலைவாழ் மக்களின் வருடாந்திர திருவிழாவிற்கு, ஏராளமான மக்கள் வந்து கொண்டிருந்ததை கண்ணுற்ற பொறியாளர் அலெக்சாண்டர் அவர்கள், அணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிற இடத்தின் மேட்டுப்பகுதியில் 1897 ஆம் ஆண்டு கற்களால் தற்காலிக கட்டிடம் கட்டி தங்கினர். முளகுமூட்டிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்களில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் ஆனதால், முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணி. ஆண்டனி விக்டர், OCD அவர்களிடம் திருப்பலி நிறைவேற்றித் தருமாறு அலெக்சாண்டர் அவர்கள் கோரிக்கை விடுத்தார். அதன்படி அருட்பணி. ஆண்டனி விக்டர், OCD மற்றும் அவரது தம்பியான அருட்பணி. யூஜின், OCD ஆகியோர் 1898 முதல் 1904 ஆம் ஆண்டு வரை, அணையின் உட்பகுதியில் கற்களால் கட்டப்பட்ட கட்டிடத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.
பாதுகாவலர் தேர்வு:
1899 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில், ஆரம்ப மூன்று மீட்டர் உயரத்தில் கட்டப் பட்ட அணைக்கட்டு உடைந்து போனது. தொழிலாளர்கள் கொடிய நோய்க்கு உட்பட்டு, பலர் இறந்தனர். இந்த பேரழிவிலிருந்து கால்நடைகள், வனவிலங்குகள், மரங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டு, பாதுகாக்கப்படவும், அணை கட்டும் வேலை தொடர்ந்து நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தான் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை பாதுகாவலராக வைத்துக் கொண்டால் அழிவிலிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணம் அனைவரிடமும் தோன்றவே, மிஞ்சன் அலெக்சாண்டர் அவர்கள், இதனை அருட்பணி. ஆண்டனி விக்டர், OCD அவர்களிடம் தெரிவிக்க, பேச்சிப்பாறையின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என 01.08.1899 அன்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.
தேர் உருவான விதம் :
கொடிய நோய், இயற்கை பேரிடர் மீண்டும் வராமலிருக்க மூங்கிலில் சப்பரம் செய்து, புனித சூசையப்பரை பவனியாக சுமந்து கால்நடையாக கொண்டு சென்றனர். இதனால் அணைகட்ட இருந்த தடை நீங்கியதுடன், நோய் நொடிகள் இல்லாமல் போனது.
இந்த காலகட்டத்தில் முளகுமூடு பகுதியில் இருந்து நேரடியாக பேச்சிப்பாறை வந்து திருப்பலி நிறைவேற்ற சிரமமாக இருந்ததால், புத்தன்கடை -யில் சிற்றாலயம் கட்டப்பட்டது. அங்கு தங்கி பணியாற்றி வந்த போது மலைப்பகுதியில் ஆழமாக இறைப்பணியாற்றிட திருநந்திக்கரை பகுதியில் 50 ஏக்கர் நிலம் வாங்கி அங்கேயே தங்கி, பள்ளிக்கூடம் மற்றும் ஆலயம் கட்ட அருட்பணி. ஆண்டனி விக்டர் அவர்கள் முயற்சி மேற்கொண்ட போது கோட்டூர்கோணம் ஊரில் மேட்டுப்பகுதியில் அருள்தந்தை தங்குவதற்காக, மேலும் அறை ஒன்று கட்டி, தொழிலாளர்களை தங்க வைத்தார் .
மூன்றாவது ஆலயம்:
1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அணைக்கட்டுமான அதிகாரிகளுக்கான குடியிருப்பு கேம்பு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டது. அங்கு 2 வது எண் கொண்ட குடியிருப்பு வீட்டில் வைத்து அருட்பணி. டொனிஷியன் அவர்களின் ஒப்புதலுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
தொடர்ந்து 1905 ஆம் ஆண்டு அருட்பணி. டென்னிஸ் அவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை திருப்பலி நிறைவேற்றி வந்தார். 1906 ஆம் ஆண்டு பேச்சிப்பாறை அணை திறப்பு விழா நடத்தப்பட்டது. தமது இறுதி வாழ்க்கையை இந்தியாவிலேயே நிறைவு செய்ய விரும்பிய பொறியாளர் ஹம்பிரி மிஞ்சன் அலெக்சாண்டர் அவர்கள், அவரது சொந்த நாட்டில் உள்ள அவருக்குரிய நிலங்களை விற்று, கிடைத்த தொகையை பேச்சிப்பாறை அணை கட்டும் பணிகள் நிறைவு பெற செலவிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது. அணை வேலை முடிந்த பின்னர் முளகுமூடு, பூவன்கோடு, புத்தன்கடை போன்ற ஊர்களில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். சிலர் பேச்சிப்பாறையில் தங்கினர்.
பேச்சிப்பாறையில் இறைப்பணியாற்றிய அருட்பணியாளர்கள்:
அருட்பணி. பவுலின் (1905-1908)
அருட்பணி. லூயிஸ், அருட்பணி. கொனேரியஸ்,
அருட்பணி. வின்சென்ட் (1908-1912)
அருட்பணி. அம்புரோஸ்,
அருட்பணி. இக்னேஷியஸ் மரியா (1912-1916)
அருட்பணி. கோர்ஸ்குட் மற்றும் பெல்ஜியம் நாட்டின் அருட்சகோதரிகள். மரிய அல்போன்ஸ், மரிய டெல்பின் ஆகியோர் அணை கட்டிய தொழிலாளர்களை சந்தித்தும், மலைவாழ் மக்களை சந்தித்தும் 1916 முதல் 1917 வரை இறைப்பணியாற்றி வந்தனர்.
1917-1919 வரை அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் அவர்களும் கூனித்தாய் என்று அழைக்கப்படும் அருட்சகோதரி. எமின் அவர்களும், பேச்சிப்பாறையில் தங்கி கோதையார் சென்று இறைப்பணி செய்தனர்.
1919 முதல் 1933 வரை அருட்பணி. தாமஸ் பெரைரா அவர்கள் இறைப்பணி செய்து வந்தார். இவரது பணிக் காலகட்டத்தில், 26.05.1930 அன்று கொல்லம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து கோட்டார் மறைமாவட்டம் உதயமானது. இந்த காலகட்டத்தில் புத்தன்கடை சிற்றாலயம் தனிப்பங்காக உயர்வு பெற்றது. குலசேகரம், பேச்சிப்பாறை, கோட்டூர்கோணம், நாகக்கோடு, கடையல் ஆகியன புத்தன்கடை பங்கின் கிளைப்பங்காக ஆயின. கிளைப்பங்கானதை தொடர்ந்து பேச்சிப்பாறையில் தொடர் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வந்தது.
1933-1949 வரை அருட்பணி. தனிஸ்லாஸ் மீண்டும் பொறுப்பேற்று திருப்பலி நிறைவேற்றி வந்தார்.
1949-1960 வரை அருட்பணி. வின்சென்ட் ஜெயவர்தன் அவர்கள் வீடுகள் சந்தித்து இறைப்பணி செய்து வந்தார். 1951 ஆம் ஆண்டில் அருட்பணி. அந்தோணி முத்து அவர்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது ஆலயம்:
அணை கட்ட வந்த தொழிலாளர்கள் அதிகாரிகள் பலரும் தங்கள்சொந்த ஊர் சென்றனர். சில குடும்பங்கள் இங்கேயே வசித்து வந்தனர்.
1960-1972 வரை அருட்பணி. சார்லஸ் பெரோமியா அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். 1960 ஆம் ஆண்டு பங்குத்தந்தை யின் வழிகாட்டலில் மக்கள் எல்லாரும் இணைந்து பள்ளிமுக்கு பகுதியில் (தற்போதைய இடம்) 10 சென்ட் நிலம் வாங்கி ஓலை குடிசை கட்டி அதில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
1962 ஆம் ஆண்டு கற்களால் கட்டப்பட்டு, ஓடு வேய்ந்த ஆலயம் எழுப்பப்பட்டது. மேலும் புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டது.
குலசேகரம் தூய அகுஸ்தினார் ஆலயம் 1963 ஆம் ஆண்டு தனிப்பங்காக உயர்த்தப் பட்ட போது, பேச்சிப்பாறை அதன் கிளைப்பங்காக ஆனது. ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் பேச்சிப்பாறையை மையமாகக் கொண்டு கோதையாறு, வலியஏலா, குற்றியார் சிலோன் காலனி, கல்லார், சிற்றார் சிலோன் காலனி, ஆலம்பாறை, மணலோடை ஆகிய இடங்களில் கால்நடையாக நடந்து சென்றும், படகில் சென்றும் மக்களை சந்தித்தும், ஜெபம் செய்தும் இறைப்பணியாற்றப் பட்டது. நாளடைவில் மக்களின் இடப்பெயர்ச்சி காரணமாக கல்லார், குற்றியார், சிற்றார், மணலோடை ஆகிய ஊர்களில் தற்போது ஆலயம் இல்லை.
இவ்வாறு 1963 முதல் 1998 வரை குலசேகரம் பங்கின் கிளைப் பங்காக பேச்சிப்பாறை சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இடைப்பட்ட காலங்களில் சிறப்பு செயல்பாடுகள்:
1. கோட்டார் மறைமாவட்ட அளவில் துவக்கப்பட்ட தவக்கால இளைஞர் இயக்க கூட்டம் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் பேச்சிப்பாறையும் ஒன்று.
2. கோட்டார் மறைமாவட்ட அளவில் துவக்கப்பட்ட மரியாயின் சேனை மாதிரி உருவாக்க முதல் கூட்டம் நடத்திய வகையில் பேச்சிப்பாறை பங்கும் ஒன்று.
3. கோட்டார் மறைமாவட்ட அளவில் கோடிமுனை பங்கில் முதல் முறையாக அன்பியம் ஆரம்பிக்கப்பட்ட போது பேச்சிப்பாறை பங்கிலும் மாதிரியாக துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. 1978 ஆம் ஆண்டு இறையழைத்தலுக்காக பலோட்டையின் சபை குருமடம் தொடங்கிய போது, 27.07.1978 முதல் பலோட்டையன் சபை குருக்கள் பேச்சிப்பாறை பகுதியில் தங்கி, இறைப்பணியாற்றி வந்தனர். அதன் பிறகு கோட்டார் மறைமாவட்ட ஆயரை தொடர்பு கொண்டு பணித்தளம் கேட்டனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு குலசேகரம் பங்கினை 1983 ஆம் ஆண்டு பலோட்டைன் சபையினருக்கு கொடுத்தனர்.
குலசேகரம் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் பேச்சிப்பாறை:
1. இந்த காலகட்டத்தில் அருட்பணி. சூசையன், SAC அவர்கள் செய்த முக்கிய பணிகளில் ஒன்று பங்குத்தந்தை தங்குவதற்கு இல்லம் கட்டப்பட்டது. கிளைப் பங்கான வலியஏலாவில் ஆலயம் கட்டப்பட்டது.
2. அருட்பணி. சில்வர்ஸ்டர் ஜான், SAC அவர்களால் சக்கரிஸ்ட் கட்டப்பட்டது.
3. அருட்பணி. லூர்து ராஜ், SAC அவர்களால் கல்லறை தோட்டத்திற்கு பத்து சென்று நிலம் வாங்கப்பட்டது.
4. 1995 ஆம் ஆண்டு அருட்பணி. தாமஸ் குருசப்பன், SAC அவர்களால் ஆலயத்தின் ஓட்டுக்கூரை மாற்றப்பட்டு கான்கிரீட் போடப்பட்டது.
தனிப்பங்கு:
18.11.1998 அன்று குலசேகரம் பங்கிலிருந்து பிரிந்து பேச்சிப்பாறை தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.
1. கிறிஸ்து அரசர் ஆலயம்,
கோதையாறு
2. புனித வின்சென்ட் பல்லோடி ஆலயம், வலிய ஏலா
3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், ஆலம்பாறை (மலைவாழ் மக்கள் மட்டும்) ஆகியன பேச்சிப்பாறை -யின் கிளைப்பங்குகளாயின.
பேச்சிப்பாறையின் பங்குத்தந்தையர்களும் சிறப்பு செயல்பாடுகளும்:
1. முதல் பங்குத்தந்தை அருட்பணி. சத்தியநேசன், SAC. அடித்தள முழுவளர்ச்சி சங்கம் ஆரம்பித்து, வைப்புத் தொகை வைக்க உதவி செய்தார். அருட்சகோதரிகள் தங்குவதற்காக, மறைமாவட்டத்தின் உதவியுடன் நிலம் வாங்கி கொடுக்கப்பட்டது. தற்காலிக பாலர் பள்ளி நடத்துவதற்காக சிறிய அளவிலான கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
2. அருட்பணி. ஜான்பால், SAC. குருசடி சீர் அமைத்து, ஜூபிலி அரங்கம் அமைத்து, ஆலயத்தின் பீடப்பகுதியில் ஓவியம் வரைந்து, மறைமாவட்ட உதவியுடன் கிளைப்பங்குகளில் பணிசெய்ய பங்குக்கென தனி வாகனம் வாங்க உதவினார். கிளைப் பங்கான ஆலம்பாறையில் ஆலயம் கட்டினார்.
3. அருட்பணி. ஜாண் கிறிஸ்டோபர், SAC அவர்கள் 9 அன்பியங்களாக உயர்த்தினார். ஜெனரேட்டர் மற்றும் கீபோர்டு வாங்கப்பட்டது.
4. அருட்பணி. மோசஸ் சவரிமுத்து, SAC. மாலைநேர வகுப்பு துவங்கியது. கல்லறைத் தோட்டத்தின் பக்கச்சுவர் கட்டியது. பங்கின் தேவைக்காக நிலம் வாங்கியது. இலவச தையல் பயிற்சிக்கூடம் கட்டியது.
5. அருட்பணி. பாக்கியராஜ், SAC. பங்குக்கென்ற பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கியது.
6. அருட்பணி. ஞானசிகாமணி, SAC. புதிய ஆலயம் கட்ட திட்டமிட்டது. குடிநீருக்கு என்று ஒரு கிணறு வெட்டப்பட்டது. தேர் அன்பளிப்பாக வாங்க ஏற்பாடு செய்தார்.
7. அருட்பணி. தாமஸ் குருசப்பன், SAC. புதிய சிற்றாலயம் கட்டியது. ஆலயத்தின் பின்புறம் அன்னை தெரசா கட்டிடத்தில் மேல்மாடி கட்டியது. சூசையப்பர் ஹால் கட்டியது. சமையலறை கட்டியது.
8. அருட்பணி. லூர்து ராஜ், SAC. புதிய நிலத்தில் கலையரங்கம் கட்டியது.
1917 முதல் பேச்சிப்பாறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இறைப்பணி செய்த அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. மரிய அல்போன்சின்
2. அருட்சகோதரி. பிலோமின்
3. அருட்சகோதரி. சிசில்பால்
4. அருட்சகோதரி. வியான்னி
5. அருட்சகோதரி. மரியறோஸ்
6. அருட்சகோதரி. திரேசா ரெபேக்கா
7. அருட்சகோதரி. விர்ஜினியா
8. அருட்சகோதரி. திரேசம்மா
9. அருட்சகோதரி. எலிசபெத்
10. அருட்சகோதரி. கே. எஸ். திரேஸ்
11. அருட்சகோதரி. மிக்கேலம்மா (இவர் முழுமையாக வாரத்திற்கு மூன்று முறை குலசேகரத்திலிருந்து வந்து பேச்சிப்பாறை பங்கிலும், கோதையார், வலிய ஏலா, குற்றியார், சிற்றார், சிலோன் காலனி, கல்லார் போன்ற பகுதிகளில் அருட்சகோதரி. எமின் தாய் அவர்களுக்குப் பிறகு அதிகமாக பணி செய்தவர் ஆவார். மறைக்கல்வி யையும் பொறுப்பேற்று சிறப்புற நடத்தினார்).
1997 முதல் பேச்சிப்பாறையில் பிறரன்பு சபையை சார்ந்த அருட்சகோதரிகள் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றனர்.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:
1. மரியாயின் சேனை (ஆண்கள், பெண்கள் பிரஸிடியம்)
2. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
3. புனித. வின்சன்ட் பல்லோட்டி இளையோர் இயக்கம்,
4. மறைக்கல்வி மன்றம்
5. புனித வின்சென்ட் தே பவுல் சபை,
6. கைகள் இயக்கம்,
7. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்,
8. கத்தோலிக்க சங்கம்,
9. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்,
10. பாலர் சபை,
11. பீடச் சிறார்கள்,
12. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்,
13. கோல்பிங்,
14. திருவழிபாட்டுக் குழு,
15. பொதுநிலையினர் பணிக்குழு
16. பாடகற்குழு
17. பங்கு அருட்பணிப் பேரவை
18. நிதிக்குழு
19. அன்பிய ஒருங்கிணையம்
புதுமைகள்:
புனித சூசையப்பரின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்து வருகின்றன.
மலைவாழ் மக்கள் அதிகாலையில் ஆலயம் வந்து எண்ணெய் மற்றும் மிளகு ஆகியவற்றை ஆலயத்தின் முன்புறம் வைத்து விட்டு, மாலையில் வந்து அவற்றை விசுவாசத்துடன் எடுத்துச் சென்று மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்றின் முதல் அலையின் போது (2020 ஆம் ஆண்டு) கடுமையான ஊரடங்கு காலத்தில், காவல்துறையின் வழிகாட்டலில் கூட்டமாக கூடாமல், புனித சூசையப்பரின் சுரூபத்தை இருச்சக்கர வாகனத்தில் வைத்து பேச்சிப்பாறை வீதி வழியாக சுற்றி வந்தனர். இவ்வேளையில் பேச்சிப்பாறை பகுதியில் இருந்து எந்த ஒருவரையும் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கவில்லை என்பதை சுகாதாரத்துறையினரே அதிசயித்து போயினர். இவ்வாறு புனித சூசையப்பர் பேச்சிப்பாறை பகுதி மக்களை பாதுகாத்து வழிநடத்துகிறார்.
தங்கள் குழந்தைகளின் நோய் தீர புனிதரிடம் வேண்டுதல் வைத்து, நோய் தீர்ந்த பின் ஆலயம் வந்து தலையை மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
திருவிழா மற்றும் தவக்கால சிலுவைப் பாதை நிகழ்வுகளில் பிற சமய ஆலய மக்கள் உபசரிப்பதும் பங்கேற்பதும் அதுபோல பிறசமய விழாக்களில் பேச்சிப்பாறை இறைமக்கள் கலந்து கொண்டு பணிகள் செய்து ஒற்றுமையாக செயல்படுவதும் தனிச்சிறப்பு.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: 01.08.2020 அன்று பங்குத்தந்தை அருட்பணி. லூர்து ராஜ் மற்றும் பங்கு அருட்பணிப் பேரவை துணைத் தலைவர் திரு. ஜஸ்டின் ராஜ் ஆகியோர் திரட்டிக் கொடுத்து உதவினர்.