புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.
🦋இடம் : புனித ஆரோக்கிய மாதா தெரு, திண்டுக்கல், 624003.
🍀மாவட்டம் : திண்டுக்கல்
🍀மறை மாவட்டம் : திண்டுக்கல்
🍀மறை வட்டம் : திண்டுக்கல்
💎நிலை : கிளைப்பங்கு
💎பங்கு : புனித சூசையப்பர் கதீட்ரல் பேராலயம், திண்டுக்கல்.
💐பங்குத்தந்தை : அருட்பணி T. சகாயராஜ்
💐இணை பங்குத்தந்தை : அருட்பணி S. அருள்ரூபேஸ்
🌳குடும்பங்கள் : 2590
🌿அன்பியங்கள் : 13
🔥ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணிக்கு
🔥மாதத்தின் முதல் வெள்ளி திருப்பலி : காலை 06.15 மணிக்கு
🎉திருவிழா : செப்டம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 14 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
வரலாறு :
**********
🌸கி.பி 1606 நவம்பர் 15 ல் இராபர்ட் டி நொபிலி காவியுடுத்து, பல மொழிகளைக் கற்றறிந்து, மதுரையை தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் அடியெடுத்து வைத்த போது, அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த முத்து வீரப்ப நாயக்கரின் அன்பைப் பெற்று, கிறிஸ்துவ மறைப்பரப்புப் பணியில் ஈடுபட்டு, பலருக்கு திருமுழுக்கு கொடுத்து, நற்செய்தி பணி செய்து கொண்டிருந்த நேரத்தில், கி.பி 1616 ல் முத்து வீரப்ப நாயக்கர் மன்னர் மதுரையிலிருந்து தலைநகரை திருச்சிக்கு மாற்றி ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
🍇இராபர்ட் டி நொபிலி கால்நடையாகவே திருச்சிக்கு வந்தடைந்து தமது பெரும் பணியான மறைப்பரப்பு பணியில் வெகுவாக ஈடுபட்டு, கி.பி 1626 ல் திருச்சியில் ஆதிதிராவிடர் ஒருவரை தேர்ந்தெடுத்து முத்துடையான் திலாரி என்று பெயரிட்டு முதன்முதலில் தேர்ந்தெடுத்து, கிறிஸ்தவ கோட்பாடுகளை கற்பித்தும், மதத் தலைமை சீடராக நியமித்தும், பல சீடர்களை உருவாக்கியும், திருச்சி தஞ்சை மாவட்டங்களில் பல குக்கிராமங்கள் தோறும் மறைப்பணியாற்றி அடிமை வாழ்வில் துவண்டு தத்தளித்துக் கொண்டிருந்த எளிய பல ஆதி திராவிட மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தனர்.
🌳இதனை அறிந்த ஆதிக்க சாதியினரும் பிற சமயத்தவர்களும் கிறிஸ்தவம் தழுவிய மக்களுக்கு பலவித இடையூறுகளைச் செய்தும், கிறிஸ்தவ ஆலயங்களை இடித்தும் பலவித கொடுமைகளை செய்து வந்ததால், அடிமை வாழ்விலிருந்து விடுதலை வேண்டி அந்த குக்கிராமங்களை விட்டு ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்கள் சிதறி வெளியேறத் தொடங்கி, காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
🌳இது போன்ற சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த திருச்சி மாவட்ட காவேரி ஆற்றிற்கிடையே கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை கரையோரத்தில், தோவூர் கிராமத்தை விட்டு வெளியேறி, ஆதிதிராவிட மக்கள் கல்லையும், முட்புதர் காடுகளையும் கால்நடையாகக் கடந்து வந்தனர். இதில் திண்டுக்கல் வட்டார முட்புதர் காடுகளுக்கிடையே தோவூர் ஆனந்தன் தலைமையிலான ஒரு பிரிவினர் குடியேறினர்.
🌹திண்டுக்கல்லுக்கு அருகாமையிலுள்ள தாடிக்கொம்பு அகரம் ஆற்றங்கரையில் இவர்கள் குடிபுகுந்து வாழ ஆரம்பித்ததால், இவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை தொடரும் வண்ணம் ஒரு சிறு மாதா ஆலயம் கட்டினர். இதனைக் கண்ட அந்தணர்கள் அங்கிருந்து இவர்களை விரட்டியடித்து ஆலயத்தையும் இடித்தனர்.
🥀கி.பி 1733 ம் ஆண்டு ஆற்காடு படைத்தளபதியாக இருந்த சந்தா சாகிப் திருச்சியைக் கைப்பற்ற வந்த நேரத்தில், இராபர்ட் டி நொபிலி நவாப்பின் உற்ற நண்பராகி கிறிஸ்தவ ஆலயங்களை காக்க பாதுகாப்பு கொடுத்த பின்னரும், திண்டுக்கல் வட்டாரப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தரைமட்டமாக்கப் பட்டன.
🌹தாடிக்கொம்பில் இருந்து விரட்டப்பட்ட தோவூர் ஆனந்தன் தலைமையில் தற்போதைய திண்டுக்கல் தலைமை மருத்துவமனையை ஒட்டிய வடபுரத்தில் காடுகளை அழித்து சமன்படுத்தி வாழத் தொடங்கினர்.
🌺அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் திண்டுக்கல் நகரின் கிழக்குப் பகுதியில் கி.பி 1735 ல் எவரும் எளிதில் நெருங்க இயலாத முட்கள் நிறைந்த புதர் காட்டில் புகுந்து குடிசைகள் கட்டி ஆனந்தன் தலைமையில் வாழத் தொடங்கினர். அதுவே தற்போது ஆரோக்கிய மாதா தெரு என சிறப்பு பெற்று இம் மக்களை இன்றளவும் சிறப்பாக வாழ்வித்து வருகிறது.
🏵ஆரோக்கிய மாதா தெருவையொட்டிய தென்மேற்குப் பகுதியில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்லறைத் தோட்டம் அமைந்துள்ளது. 1914 முதல் உலகப் பேருக்கு பின்னர் இம்மூதாதையர் கல்லறைத் தோட்டத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யாமல், திருச்சி சாலையில் உள்ள சவரியப்பன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
💐ஆரோக்கிய அன்னை சுரூபம் :
தோவூர் ஆனந்தனின் குடும்பத்தினர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்ற வேளையில் கிடைத்த ஆரோக்கிய மாதா சுரூபமானது, முதலில் அவர்களது வீட்டிலேயே வைக்கப்பட்டு ஜெபித்து வந்தனர். பின்னர் தோவூர் ஆனந்தன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆரோக்கிய மாதா தெருவில் உள்ள குடிசைகள் கோவிலில் வைக்கப்பட்டு அனைத்து மக்களும் வந்து ஜெபித்து வந்தனர்.
🌷இவ்வேளையில் புதுக்குடியார், அடஞ்சுரார் குடும்பங்களும் தோவூரிலிருந்து ஆனந்தனால் மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப் பட்டனர். இவ்வாறு இத் தெருவில் மக்கள் பல்கிப் பெருகினர்.
🙏தமது தள்ளாத வயதிலும் இறைவனிடம் அன்பு கொண்டு, தம் தெரு மக்கள் மேல் அளவில்லாத அன்பு கொண்டாடி மகிழ்ந்தவரான ஆதிதிராவிட தோவூர் ஆனந்தன் இயற்கை எய்திய போது மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவரது இறப்பிற்கு பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆனந்தன் தெரு (பட்டி) எனப் பெயர் சூட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.
💎கோவா மிஷன் குருக்களின் வருகை:
🍇கோவா மிஷன் குருக்கள் நகரின் தென் மேற்குப் பகுதிக்கு வந்து, மேட்டுப்பட்டியில் கூண்டுக் கோவில் வடிவங் கொண்ட அழகான ஆலயத்தைக் கட்டி, புனித வியாகுல மாதா ஆலயம் எனப் பெயர் சூட்டியும், கிறிஸ்தவ மக்களிடையே இறை நம்பிக்கையை ஆழப்படுத்தி வாழச் செய்தனர். அத்தோடு நில்லாமல் திண்டுக்கல் வட்டாரங்களில் குகை போன்ற கூண்டுக் கோவில்களை கிராமங்கள் தோறும் கட்டினார்கள்.
🍇இவ்வேளையில் கோவா மிஷன் குருக்கள், இந்த தெருவில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் மீது அன்பு கொண்டு ஆனந்தனால் கட்டப்பட்ட ஓலைக்குடிசை மாதா ஆலயத்தை மாற்றி 1785 ல் அழகிய ஆலயத்தை திப்பு சுல்தானின் ஆட்சியின் போதே கட்டினர். காரன்வாலிஸ் பிரபு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த போது 1792 ல் திப்பு சுல்தானின் தலைநகரான சீரங்கபட்டினத்தை தாக்கி, திப்புவின் படைகளை தோல்வியடையச் செய்து, திண்டுக்கல் பகுதியை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இதனால் இத்தெரு கிறிஸ்தவர்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர்.
💎சேசு சபை குருக்கள் வருகை:
🌹கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) தென்னிந்தியப் பகுதிகளில் மறைப்பரப்பு பணி செய்த காலத்தில், முட்புதர் நிறைந்த காட்டின் நடுவே ஒரு ஆலயத்தை கட்டினார். அதுவே தற்போது சேசு சபை குருக்கள் மடமாக காட்சியளிக்கும் பெஸ்கி கல்லூரி. 1872 ல் இத்தெருவின் மேற்குப் பகுதியில் சேசு சபை குருக்கள் புனித சூசையப்பர் ஆலயத்தை கட்டி முடித்தனர்.
🌺1848 ல் அருட்தந்தை ரபேத்தல் சே. ச அவர்கள் குடிசைப் பள்ளியை துவங்கினார். நாளடைவில் இப்பள்ளி புனித சூசையப்பர் பள்ளியாக மாற்றம் பெற்று மிகச் சிறந்த கல்விச் சேவையை செய்து வருகிறது.
🦋மூதாதையர் குடியேறிய இத்தெருவில் மேலும் குடும்பங்கள் திருச்சி, தஞ்சை மாவட்டப் பகுதிகளிலிருந்து பலரும் குடியேற, அவர்களுக்கென்று ஒரு சிறு கூரை வேயப்பட்ட ஜெபக் கோவிலாக கட்டிக் கொண்டனர். இவர்கள் யாவரும் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு உட்பட்ட புதுப்பங்கு கிறிஸ்தவர்கள் எனக் கொண்டனர்.
🌸பூர்வீக கிறிஸ்தவர்கள் கோவா மிஷனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் இவர்கள் பழைய பங்கு கிறிஸ்தவர்கள் எனக் கொண்டனர். 1910 ல் அருட்தந்தை சவேரியார் சே. ச அவர்கள், அனைவரின் ஒத்துழைப்புடன் ஓலைக்கூரை ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்டினார்.
🌹கோவா மிஷன் ஆளுகைக்கு உட்பட்ட பழைய பங்கு கிறிஸ்தவர்கள் ஞான காரியங்களுக்கு மேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலயத்திற்கும், சேசு சபை குருக்களால் வழிநடத்தப்பட்ட புதுப் பங்கு கிறிஸ்தவர்கள் புனித சூசையப்பர் ஆலயத்திலும் ஞான காரியங்களுக்கு சென்று வந்தனர்.
💐இந்த சூழ்நிலையில் தெருவின் ஒற்றுமையைக் கருதி பழைய, புதிய பங்கு கிறிஸ்தவர்களை ஒரே இடத்தில் வைத்து கல்வி புகட்டி ஒற்றுமையை வளர்த்து, பங்கு குருக்களின் ஆலோசனைக்கிணங்க இந்த புதிய ஆலயத்திற்கு புனித ஆரோக்கிய மாதா ஆலயம் எனப் பெயர் வைத்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
🔥1929 ம் ஆண்டு அருட்தந்தை ஹோட்ரன் அடிகளார் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தையாக இருந்த போது, அடிகளாரின் பெரும் முயற்சியால் செப்டம்பர் முதல் ஞாயிறு அன்று நற்கருணை ஸ்தாபகம் செய்யப்பட்டு, ஆண்டுதோறும் நற்கருணை நாதரின் நல்லாசீரும் பெற்று வருகின்றனர்.
அப்போதைய புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி T. R ஆஞ்ஞிசாமி (பின்னாளில் கோட்டார் மறை மாவட்ட ஆயர்) அவர்கள் மக்களின் பக்தி முயற்சி மேம்படவும், கல்வாரி இரட்சணிய யாத்திரையை மக்கள் உணர்ந்து கொள்ளவும் 09-03-1933 ல் சிலுவைப்பாதை ஸ்தலங்கள் அமைத்தார்.
🌿மதபோதக சபையின், ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் ஒரே ஊரில் மறைப்பரப்புப் பணி செய்வதை விட வேறு ஊர்களுக்கு சென்று பணி செய்யலாம் என்ற கிழக்கிந்திய நிறுவன அதிபரின் ஆலோசனையின் படி, கோவா மிஷன் குருக்கள் இங்கிருந்து வட பகுதிக்கு சென்றனர்.
🌺கோவா மிஷன் குருக்களின் ஆளுகையில் இருந்த ஆலயங்கள், சொத்துக்கள், பள்ளிகள் சேசு சபையின் பொறுப்பில் வந்தது. அதனால் ஆரோக்கிய மாதா தெருவில் உள்ள கோவா மிஷனை சார்ந்த பழைய ஆலயமும், பழைய பங்கு கிறிஸ்தவர்களும் சேசு சபை பங்குடன் (புனித சூசையப்பர் ஆலயம்) இணையவே தெருவில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும், முக்கிய நிகழ்வுகள், தேர்த் திருவிழா என அனைத்தும் பங்குத்தந்தையின் ஆளுகைக்குட்பட்டு, நாட்டாண்மையின் நிர்வாகத்தில் ஒற்றுமையுடன் 284 (கி.பி 1735 - கி.பி 2019) ஆண்டுகளைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர்.
🤝கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு, மேற்கு ஆரோக்கிய மாதா தெரு, விஸ்தரிப்பு பகுதி, சுக்கான் மேடு ஆகிய நான்கு பகுதிகளும் இணைந்ததே புனித ஆரோக்கிய மாதா தெரு ஆகும்.
🎉ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்னையின் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். அதனை அடுத்த வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்பவனி, மற்ற நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அன்னையின் சிறப்பை எடுத்துக் கூறும் நிகழ்வுகள் என 14 நாட்கள் சிறப்பாக திருவிழா நடைபெறும்.
👉தகவல்கள் : 1987 -ம் ஆண்டு வெளியிடப் பட்ட சிறப்பு மலரிலிருந்து திரட்டப் பட்டது ஆகும். மேலும் இவ்வாலய வரலாற்றை நாம் தயார் செய்ததை, படித்து மேலும் உறுதியான தகவல்களை பங்குத்தந்தை அருட்பணி சகாயராஜ் அவர்களின் அனுமதியுடன், தந்து உதவிய இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் ரூபேஸ் அவர்களுக்கும் நன்றி.