792 புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயம், ஹரிஹர்

         

புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயம் (பசிலிக்கா) (ஹரிஹர் மாதா) ಹರಿಹರ ಆರೋಗ್ಯಮಾತೆ ಬಸಿಲಿಕ

இடம்: ஹரிஹர், ಹರಿಹರ

மாநிலம்: கர்நாடகா

மாவட்டம்: தாவணிஹரே

மறைமாவட்டம்: ஷிமோகா

மறைவட்டம்: ஹரிஹர்

நிலை: பசிலிக்கா

Address:

Shrine of Our Lady of Health

P.B.No: 19, Church Road

Harihar - 577 601

Davanagere District

Karnataka

Phone: 08192 - 242269

E-mail: hariharshrine@gmail.com

பேராலய அதிபர் & பங்குத்தந்தை: அருட்பணி. Dr. அந்தோனி பீட்டர்

உதவிப் பங்குத்தந்தையர் 

அருட்பணி. ஜார்ஜ்

அருட்பணி. டேவிட் பெலாரியோ

ஆன்மீகத்தந்தை: அருட்பணி. ஆன்றனி டிசோசா

குடும்பங்கள்: 162

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 08:00 மணி ஜெபமாலை, 08:15 மணி திருப்பலி, 12:00 மணி திருப்பலி மற்றும் மாலை 05:30 மணி திருப்பலி

திங்கள், செவ்வாய், வியாழன், சனி காலை 07:00 மணி மற்றும் நண்பகல் 12:00 மணிக்கும் திருப்பலி

புதன்கிழமை திருப்பலி அருட்சகோதரிகள் இல்லம்

சனிக்கிழமை நண்பகல் 12:00 மணி, மாலை 05:45 மணி ஜெபமாலை, நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர், குணமளிக்கும் வழிபாடு

முதல் சனிக்கிழமை காலை 10:00 மணி ஜெபமாலை, தேர்பவனி

காலை 11:00 மணி ஆரோக்கிய அன்னையிடம் வேண்டுதல் வழிபாடு, மாலை 05:45 மணி ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மெழுகுதிரி பவனி, ஜெபம். இரவு 09:00 மணி அமைதி ஆராதனை 

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 08-ஆம் தேதி திருவிழா. 

வழித்தடம்: 

பெங்களூர் -புனே தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து 5மணிநேர பயணம் (250கி.மீ) செய்தால் ஹரிஹர் வந்து சேரலாம்.

இரயில் பயணம்:

வேளாங்கண்ணி -ஹரிஹர்

மதுரை 

திருநெல்வேலி -ஹரிஹர்

கோவா -ஹரிஹர்

சென்னை -ஹரிஹர்

இறங்குமிடம்: ஹரிஹர்

Location map:

Basilica of Our Lady of Health 

https://maps.app.goo.gl/86FLwgWhauNnmud97

ஹரிஹர் திருத்தலப் பேராலய வரலாறு:

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஹரிஹர் ஒரு சிறிய ஊராக இருந்தபோது, அங்கு ஒரு ஏழை பிராமணர், தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தீராத காசநோயால் பாதிக்கப்பட்டனர். நாட்கள் உருண்டோடியது. ஒரு நாள் அதிகாலையில் அந்த பிராமணர், புனித நீராடுவதற்காக துங்கபத்ரா நதியில் இறங்கினார். அப்போது அவர் தனது கட்டுப்பாட்டை இழந்து நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் ஒரு சுழலில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து வெளியேவர, எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இருந்தும் போராட்டம் தொடர்ந்தது.  அப்போது அவர் மனதுக்குள், “நான் இறந்தால் என் மனைவி மற்றும் குழந்தைகளின் கதி என்ன? நான் மரணத்தின் விளிம்பில் இருக்கிறேன்.  என்னை யாரேனும் காப்பாற்ற மாட்டார்களா?" என்று நினைத்தபடியே அழுதார். உதவிக்காக உரத்த கூக்குரலை எழுப்பினார். ஆனால், அது யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ச்சியான கூச்சல்களுக்குப் பிறகு, அவர் மிகவும் சோர்வாகிவிட்டார், தனது முடிவு நெருங்கிவிட்டது என்று நினைத்தார், உயிர்வாழும் நம்பிக்கையையும் இழந்தார். 

அப்போது திடீரென ஒரு சிறிய மரத்துண்டு ஒன்று பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் மிதப்பதைக் கண்டு அதைப் பிடித்தார். உண்மையில் அது ஒரு திருவுருவம் (Statue) என்பது அவருக்குத் தெரியாது. அதை பிடித்துக் கொண்ட கணத்தில், ஒரு சக்தி அவரை சூழ்ந்து கொண்டது. மேலும் விவரிக்க அந்த சக்தி, அவர் போராடிக் கொண்டிருந்த சுழலில் இருந்து அவரை வெளியேவரச் செய்தது. ஆச்சரியமாக, அவர் கரையில் தூக்கி எறியப்பட்டார். அது அவருக்கு முற்றிலும் ஒரு மறுபிறப்பாக அமைந்தது.

அந்த மரத்துண்டோடு வீட்டிற்கு வந்த பிராமணர், தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம், தான் சுழலில் இருந்து அற்புதமாகக் காப்பாற்றப்பட்டதை விவரித்தார். ஆனால், அவர்கள் அதை நம்பவில்லை. அவரின் பிள்ளைகள் அந்த மரத்துண்டை, பொம்மை என்று நினைத்து, அதனுடன் கயிறு கட்டி விளையாடினர். தொடர்ந்து நடந்த விஷயங்கள் குழந்தைகளுக்கு நல்லதாக அமையவில்லை. அவர்களுக்கு உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது, வலியின் காரணமாக அவர்கள் பெரும் வேதனையை அனுபவித்தனர். மேலும் அந்த பிராமணரின் பார்வையும் பறிபோனது. ஒன்றும்‌ புரியாமல் கனத்த இதயத்துடன் உறங்கிப் போன அந்த பிராமணரின் கனவில், அன்னை மரியா விண்ணக அரசியாகத் தோன்றி, "உன்னை ஒரு திருவுருவ வடிவில் சுழலிலிருந்து நான் தான் காப்பாற்றினேன்" என்று கூறினார். அப்போது, அந்தத் திருவுருவத்துக்கு ஏற்பட்ட அவமானத்தால் தான் இந்தக் கஷ்டங்களுக்கு ஆளானதை அவர் உணர்ந்தார். மேலும் அன்னை மரியா அவரிடம், "ஹரிஹரில் என்னை வணங்குங்கள், நான் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பேன்" என்றும் கூறினார். அதிகாலையில் எழுந்த பிராமணர், செய்த தவறுக்காக தங்களை மன்னிக்கவும், அன்னையின் ஆசீர்வாதத்திற்காகவும் செபித்தார். இதனால் அவரது குழந்தைகளின் உடலில் உள்ள வீக்கங்கள் மறைந்ததோடு, அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை மரியாவின் திருவுருவத்தை பக்தியுடன் தொட்டு வணங்கி, அன்னைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

அந்த திருவுருவத்தை தனது வீட்டிற்கு வெளியே இருந்த ஒரு மரத்தின் துளை போன்ற இடத்தில் வைத்த அந்த பிராமணர், அன்னை மரியாவைப் பற்றியும், அவர் தங்கள் வாழ்வில் செய்த புதுமைகளைப் பற்றியும் அறிவிக்கத் தொடங்கினார். இதனால் ஆர்வத்துடன் அங்கு கூடிய மக்கள், அன்னையை "சத்தியம்மா", அதாவது "உண்மையின் தாய்" என்று என்று அழைக்க ஆரம்பித்தனர். அன்னை மரியாவின் புகழ் நாளுக்கு நாள் ஹரிஹர் முழுவதும் பரவியது. இவற்றை எல்லாம் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், ஒரு நாள் பிராமணர் வீட்டிற்கு வந்து, அந்த திருவுருவத்தை ஆய்வு செய்து, அது அன்னை மரியாவின் திருவுருவம் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே, அதை கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார். அதற்கு நன்றியுணர்வு கொண்ட அந்த பிராமணர், அந்தத் திருவுருவம் தன்னை மரணத்திலிருந்தும், தனது குழந்தைகளை நோயிலிருந்தும் அற்புதமாகக் காப்பாற்றியதைப் பற்றி தெளிவாக விவரித்ததோடு, அதை தன்னிடமிருந்து பிரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தவர்கள் என இருபாலரும் அன்னை மரியாவை வணங்குவதற்கு வழிவகை செய்வதாகவும், அதற்காக தனது வீட்டையும், தன்னிடம் உள்ள நிலத்தையும் தருவதாக வாக்களித்தார்.

அதன் பிறகு, அந்த பிராமணரின் குடும்பம், அன்னை மரியாவின் மேல் மிகுந்த அன்பு கொண்ட பக்தர்களாக வாழ்ந்து, அன்னையின் சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதி வரை அன்னையின் பக்தர்களாகவே வாழ்ந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த பிராமணர் மரணமடைந்த போது, அவருடைய விருப்பப்படி, அன்னை மரியாவின் திருவுருவம் வைக்கப்பட்டிருந்த மரத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் கூட, அவரது கல்லறை நினைவுச் சின்னமாக உள்ளது. இங்குள்ள ஹரிஹரின் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயமானது "தர்ஷனா தேகுலா (Apparition Chapel)" என்று அழைக்கப்படுகிறது. 

ஹரிஹரின் பிரதான சாலையில், புனித ஆரோக்கிய அன்னைக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு, 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி, அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும், சிற்றாலயத்தில் இருந்த புதுமையான அன்னையின் சுரூபமும் இங்கு நிறுவப்பட்டது. இந்த ஆலயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி, ஷிமோகா மறைமாவட்டத்தின் திருத்தலமாக அறிவிக்கப்பட்டதோடு, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி, இந்தியாவின் 25 வது திருத்தலப் பேராலயமாகவும் (Basilica) உயர்த்தப்பட்டது. 

பெருவிழா:

இங்கு ஆண்டு தோறும் அன்னை மரியாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள், ஜாதி, மத, மொழி வேறுபாடு இல்லாமல் திருவிழாவில் பங்கேற்று, ஹரிஹர் மாதாவின் பரிந்துரை வழியாக ஏராளமான அருள்வரங்களைப் பெற்றுச் செல்கிறார்கள். ஆகவே "கர்நாடகாவின் வேளாங்கண்ணி என ஹரிஹர் மாதா பசிலிக்கா அழைக்கப்படுகிறது".

வசதிகள்:

ஆராதனை ஆலயம் உள்ளது:

திருப்பயணிகள் தங்குவதற்காக 'மரிய சதன்' என்ற விடுதி உள்ளது. 

புனிதப் பொருட்கள் அங்காடி உள்ளது.

ஹரிஹார் ஆரோக்கிய மாதாவின் புதுமைகள்:

1. பிரவின் தேவராஜா -கங்காதா அவர்களுக்கு 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி இரண்டு முறை கருத்தரித்த போதும் குழந்தை இறந்து விட்டது. மூன்றாம் முறை கருத்தரித்த போது, ஹரிஹர் ஆரோக்கிய மாதாவிடம் வந்து ஜெபித்து, பங்குத்தந்தையிடம் ஆசீர் வாங்கிச் சென்றார். பின்னர் நல்ல ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறந்தது. பின்னர் ஆலயம் வந்து மாதாவிற்கு நன்றி செலுத்திச் சென்றனர்.‌

2. ஷில்பா என்னும் குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும் போது, சிறுநீரகம் முழுவதுமாக பழுதடைந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆகவே தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், குழந்தையின் தாய் ஹரிஹர் ஆலயம் வந்து ஆரோக்கிய மாதாவிடம் கண்ணீர் சிந்தி மகளுக்காக ஜெபித்துள்ளார். ஆரோக்கிய மாதா இந்தத் தாயின் ஜெபத்தைக் கேட்டு, குழந்தைக்கு பூரண சுகத்தை கொடுத்தார். 

3. மத்தியாஸ் என்பவரின் உடலில் அதிகமாக வெள்ளைத் தழும்புகள் மற்றும் அதிகமான உடல் வலியாலும் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைக்கு சென்றும் பல்வேறு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்ட பின்னரும் சரியாகவில்லை. ஹரிஹர் மாதாவிடம் வந்து ஜெபித்து, உடல்நலம் கிடைத்தால் மாதாவின் சந்நிதி வந்து நன்றி செலுத்துவேன் என்று வேண்டுதல் செய்தார். ஆச்சரியமாக வெகுசில நாட்களிலேயே வெள்ளைத் தழும்புகள் மறைந்து, உடல்வலி நீங்கி பூரண நலம் பெற்றார்.  

4. அக்ஷ்தா என்பவருக்கு உதட்டில் இரத்தம் வழிந்து கொண்டேயிருந்ததால், மூன்று முறை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இரத்தம் கசிவது நிற்கவேயில்லை.‌ என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்த வேளையில் ஹரிஹர் மாதாவைக் குறித்து கேள்விப்பட்டு, ஜெபங்களைச் சொல்லி விண்ணப்பம் ஏறெடுக்கவே, இரத்தம் வடிதல் நின்று விட்டது. மாதாவிற்கு நன்றி..

5. தாவணிஹரே பகுதியைச் சேர்ந்த நிகில் என்பவருக்கு பத்து வயதான போது, அவரது கண்களில் கார்னியாவில் பாதிப்பு ஏற்பட அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிகமாக வலியில் அவதிப்படவே, மாதாவிடம் ஜெபிக்க கண்களில் எந்த பிரச்சனையும் இன்றி நலமாக வாழ்கிறார்.

6. முத்தளகேரியைச் சேர்ந்த சுகுமாரா என்பவர் தகுந்த வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார்.‌ அந்த நிலையில் மாதாவிடம் ஜெபிக்க ஆசிரியராக தற்போது பணி செய்து வருகின்றார். ஹரிஹர் மாதாவே உமக்கு நன்றி..

ஹரிஹர் தூய ஆரோக்கிய மாதாவின் புதுமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றையெல்லாம் எழுதினால் பல பக்கங்களுக்கு எழுதிக் கொண்டேயிருக்கலாம். ஆகவே ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு எழுதியுள்ளோம்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. இளையோர்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. நிதிக்குழு

5. பங்குப் பேரவை

Convents and Institutions:

1. Maria Nivas Matriculation School, CIC sisters

2. Hospital, CIC sisters

3. Mother Theresa Convent

Carmelite sisters

4. St. Aloysius College, Jesuits

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:

1. Fr. Terence Franz

2. Fr. Rajakumar

3. Fr. Jesu R Nathan

4. Fr. S.R. Peter

5. Fr. Mark D'Silva

6. Fr. Felix Noronha

7. Fr. Stany D'Souza

8. Fr. Franklin D'souza

9. Fr. Anthony Peter

எண்ணிலடங்கா புதுமைகள் நிறைந்த, கர்நாடகாவின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் ஹரிஹர் தூய ஆரோக்கிய மாதாவின் பேராலயத்திற்கு வாருங்கள்.... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள்: பேராலய அதிபர் அருட்பணி. Dr. அந்தோனி பீட்டர் அவர்கள்.

புதுமைகள் தகவல்கள்: அருட்சகோதரி. மெரிலா பிரீத்தி, CIC அவர்கள்.

புகைப்படங்கள் மற்றும் மொழி மாற்றம் செய்த பேராலய வரலாற்றை திருத்தங்கள் செய்து மெருகூட்டியவர்: Mr. Antony Raj, Matha TV