இடம் : கல்குறிச்சி
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : பங்குத்தளம்
கிளை : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்.
பங்குத்தந்தை : அருட்பணி பெரிங்டன்
இணை பங்குத்தந்தையர்கள் :
அருட்பணி கமிலஸ்
அருட்பணி அருள்ராஜ்
குடும்பங்கள் : 858
அன்பியங்கள் : 15
ஞாயிறு திருப்பலி : காலை 07.15 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி : காலை 06.10 மணிக்கு
புதன் மாலை 07.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள், திருப்பலி
மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணிக்கு தூய சகாய மாதா நவநாள், திருப்பலி.
திருவிழா : ஏப்ரல் மாதக் கடைசியில் ஆரம்பித்து மே மாதம் முதல் வாரத்தில் நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள் நடைபெறும்.
வழித்தடம் : நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் தக்கலை- யில் இறங்கி, அங்கிருந்து இரணியல் சாலையில் சுமார் ஒரு கி.மீ தொலைவில் கல்குறிச்சியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
பேருந்துகள் : தக்கலை-மணவாளக்குறிச்சி. 47A, 47B, 45, PJJ mini bus.
மண்ணின் மைந்தர்கள் :
அருட்தந்தையர்கள்:
1. Fr வின்சென்ட் ராஜ்
2. Fr ஜான் ஜோசப்
3. Fr அலெக்ஸாண்டர்
4. Fr டோமினிக் போஸ்கோ
5. Fr பெஞ்சமின் போஸ்கோ
6. Fr சென் ஜார்ஜ்
7. Fr கில்டஸ்
8. Fr வில்சன்
9. Fr ஷாஜி ஜோசப்
அருட்சகோதரிகள்:
1. Sister ரோஸ்மேரி
2. Sister மார்க்கரீத்தம்மாள்
3. Sister எலிசபெத்
4. Sister மேரி செசரியா
5. Sister மேரி புஷ்பம்
6. Sister அல்போன்சா
அருட்சகோதரர் K. அஜின்.
வரலாறு :
கல்குறிச்சி ஊரானது கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும் செழுமையும் தவழும் நெல்வயல்களும், தென்னந்தோப்புகளும் இவ்வூரை சூழ்ந்து நிற்கின்றன.
வடக்கே தக்கலையையும், கிழக்கே கொல்லன்விளை மற்றும் பருத்தியறைத்தோட்டத்தையும், தெற்கே இரணியலையும், மேற்கே வட்டம் ஊரையும் எல்கையாக கொண்டு ஊரின் நடுப்பகுதியில் மங்கா அருளுடன் வானுயர கோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது புனித சூசையப்பர் ஆலயம்.
பெயர்க்காரணம்:
குமரி மாவட்டத்தில் எல்லா வளங்களும் இருப்பதால், அனைத்து வகையான தொழில்களையும் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். என்றாலும் 'கல்' வேலை செய்கிறவர்கள் மைலாடி-யிலும், கல்குறிச்சி-யிலும் மட்டுமே பெரும்பாலும் உள்ளனர். கல்குறிச்சி கல்லிலே கலைவண்ணம் காணும் ஊர். இவ்வூரின் பெரும்பாலான மக்களும் கல் வேலை செய்கிறார்கள். கல்லில் கொடிமரம், சிற்பங்கள், பலிபீடங்கள் போன்றவற்றை கலைநயத்துடன் செய்வதில் கைதேர்ந்தவர்கள். கல்லை உடைத்து கலைநயம் காண்பதால் இவ்வூர் கல்குறிச்சி என அழைக்கப்படுகிறது.
பங்கின் வரலாறு:
கல்குறிச்சி மண்ணில் நற்செய்தி ஊன்றப்பட்டு பல தலைமுறைகளை கடந்து விட்டது. பனைத்தொழில் நடந்து வந்த அந்த காலகட்டத்தில் கல்குறிச்சி, தக்கலை பகுதிகளில் இருந்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று உழைத்தனர். அவ்வாறு சென்ற ஊர்களில் முக்கியமானது கள்ளிகுளம் மற்றும் வடக்கன்குளம் ஆகும்.
பனைத்தொழிலுக்கு சென்ற இம்மக்கள் தூய பனிமய அன்னையாலும், தூய அமலோற்பவ அன்னையாலும் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவர்களாயினர். இவ்வாறு கல்குறிச்சி மண்ணில் இறை மகனின் வேதம் முளை விட்டது.
நாட்கள் செல்லச் செல்ல பனைத்தொழிலை விடவும் கல்வேலையையே அதிகமாக கல்குறிச்சி மக்கள் செய்ய ஆரம்பித்தார்கள். தொழிலுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை நிறுத்தி கடின வேலையான கல்வேலையை முழு மனதுடன் செய்தனர்.
கடின உழைப்பிலும் இவர்கள் கடவுளை மறக்கவில்லை. உழைப்பாளியும், தொழிலாளியுமான புனித சூசையப்பரிடம் தங்கள் குடும்பங்களுக்காக செபிக்கும் பழக்கம் இவர்களுக்கு அதிகமாக இருந்தது. அத்தோடு தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஓலைக்குடிசை ஆலயம் அமைத்து, அதில் புனித சூசையப்பர் சொரூபம் வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.
1854 -ம் ஆண்டு கல்குறிச்சி மற்றும் கீழாற்றங்கரை பகுதி மக்கள் இணைந்து புனித சூசையப்பருக்கு கல்லிலான சிற்றாலயம் கட்டும் பணியில் ஈடுபட்டு, 1856 ல் நிறைவு பெற்றது. அவ்வாண்டு முதல் மக்கள் இச்சிற்றாலயத்தில் இறைவேண்டல் செய்து வந்தனர். எனினும் திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களுக்காக இம்மக்கள் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தையே சார்ந்திருந்தனர்.
அருட்தந்தை பீட்டர் பெர்னான்டோ :
1890 -ம் ஆண்டுவாக்கில் இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து அருட்பணி பீட்டர் பெர்னான்டோ அவர்கள் தக்கலைப் பகுதிக்கு வந்தார்கள். கல்குறிச்சியில் கிறிஸ்தவ மக்கள் வசிப்பதையறிந்து, இவ்வூருக்கு அருட்தந்தையவர்கள் வருகை தந்த போது, மக்கள் திருப்பலி காண முளகுமூடு செல்வதைக் கண்டு, அப்போதைய கொல்லம் மறை மாவட்ட ஆயர் மேதகு பெர்டினான்ட் மரிய ஓசி அவர்களின் அனுமதியுடன், கல்குறிச்சியில் தங்கி இந்த சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். அத்தோடு திருமுழுக்கு, முதல் திருவிருந்து, திருமணம் போன்ற அருட்சாதனங்களும் அருட்தந்தை அவர்களால் நிறைவேற்றப் பட்டன.
முதன் முதலாக தங்கள் ஊரில் திருவழிபாடுகள் நடந்ததை எண்ணி மக்கள் ஆனந்தமடைந்தனர். இறை மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே சிற்றாலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. சிற்றாலயத்தை இடிக்காமலே புதிய ஆலயம் கட்ட தீர்மானித்தனர்.
புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவங்கியிருந்த நேரத்தில் அருட்தந்தை பீட்டர் பெர்னான்டோ அவர்கள் மரணமடைந்தார். மக்கள் ஆறாத்துயர் கொண்டு கண்ணீர் விட்டு கதறினர்.
தங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற அருட்தந்தையின் உடலை சிற்றாலயத்தின் தலைவாயிலுக்கருகில் அடக்கம் செய்தனர். தற்போது இக்கல்லறை புதிய ஆலயத்தின் திருவருட்சாதன பாதுகாப்பு அறையில் உள்ளது.
புதிய ஆலயப்பணிகள் தொடக்கம் :
அருட்தந்தை பீட்டர் பெர்னான்டோ அவர்களை இழந்திருந்தாலும், புதிய ஆலய கட்டுமானப் பணிகள் 1906 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கினர். இம்மக்களின் எளிய வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை பராமரிக்கவே போதுமானதாக இல்லாத போதும், தங்களது வறுமையிலும் இறைவனின் ஆலயப் பணிக்கு பெரும் பொருளுதவி செய்தனர்.
அந்நாட்களில் உயர்சாதியினராக கருதப்பட்ட கேரளத்தவரின் ஆதிக்கம் காரணமாக இவர்கள் இன்னும் அதிகமாக நசுக்கப்பட்டனர். தீண்டத்தகாதவர்களாக கருதப் பட்டனர். தாழ்நிலையில் இருந்த இம்மக்களுக்கு கிறிஸ்துவை வழிபடும் உரிமை, இவர்கள் மேலானவர்கள் என்ற உண்மையை உணர்த்தியதால் சமுதாய மறுமலர்ச்சியும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றனர்.
கல்குறிச்சி திரு மரியேந்திரன் என்ற முடுதம், கல்வேலைக்கும் கட்டிட வேலைக்கும் பெயர் பெற்றவர். சபரிமலை ஐயப்பன் கோயில் கட்டிட வேலையையும் படிக்கட்டு வேலையையும் செய்யும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. சபரிமலை கோயில் கட்டுமானப் பணிக்கு கிடைத்த ஊதியம் முழுவதையும் திரு மரியேந்திரன் அவர்கள் கல்குறிச்சி புனித சூசையப்பர் ஆலயம் அமைக்க செலவிட்டார். இவரது தியாகப்பணியை கல்குறிச்சி மக்கள் என்றும் நினைவில் கொண்டுள்ளனர்.
பங்குத்தந்தை இல்லம் ஒன்றையும் ஆலயத்தின் தெற்கே கட்டினர். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தின் பீடப்பகுதியும் இரண்டு பக்கங்களும் கட்டி முடிக்கப்பட்டது.
அருட்பணி பீட்டர் பெர்னான்டோ இறந்த பின்னர் இங்கு திருப்பலி நிறைவேற்ற புதிய அருட்தந்தையை அனுப்ப கொல்லம் மறை மாவட்ட ஆயருக்கு இம்மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் போதிய அருட்பணியாளர்கள் இல்லாததால் இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக (24-10-1910) ஆயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு கல்குறிச்சி மக்கள் முளகுமூடு பங்கின் உறுப்பினர்கள், அவர்கள் முளகுமூட்டிற்கே வரி செலுத்த வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இவ்வேளையில் ஆலயத்தின் நடுப்பகுதி வேலைகள் திரு மரியேந்திரன் மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் விரைவாக நடந்து வந்தது.
22-03-1912 அன்று கொல்லம் ஆயரின் உத்தரவுப்படி சுமார் 300-க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்த கல்குறிச்சியும், அத்துடன் 13 குடும்பங்களைக் கொண்ட ஆற்றங்கரைப் பகுதியையும் இணைத்து முளகுமூட்டின் கிளைப் பங்காக உருவாக்கப்பட்டது.
ஆயரின் உத்தரவையடுத்து 01-05-1912 புதன்கிழமையன்று தொழிலாளர்கள் தினத்தில் முதன்முதலாக திருவிழா கொண்டாடப்பட்டது.
23-12-1954 அன்று முளகுமூட்டிலிருந்து பிரிந்து கல்குறிச்சி புனித சூசையப்பர் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அந்நாட்களில் திருவிதாங்கோடு, மைலோடு ஆகியவை இதன் கிளைப்பங்காக இருந்தன.
அருட்பணி சூசை அவர்களின் பணிக்காலத்தில் புனித ஆரோக்கிய நாதர் சிற்றாலயம் கட்டப்பட்டது.
2000 -ம் ஆண்டில் புனித சூசையப்பர் குருசடி கட்டப்பட்டது.
புதிய ஆலயம் :
பங்கின் நூற்றாண்டு விழா 2006-ல் கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை K. ததேயுஸ் அவர்கள் பணிக்காலத்தில் நூற்றாண்டு விழா நினைவாக புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, 04-06-2008 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.
2009 -ல் அருட்தந்தை ரால்ஃப் கிரான்ட் மதன் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தினார்.
பங்குத்தந்தை ரால்ஃப் கிரான்ட் மதன் அவர்கள் புதிய ஆலய கட்டுமானத்திற்கு நிதி திரட்ட பல வழிகளை தேர்ந்தெடுத்தார். தூண் திருவிழா என்று ஒரு விழாவை நடத்தி ஆலயத்தின் தூண்கள் அமைப்பதற்கான மொத்த நிதியும் சேகரிக்கப் பட்டது. பல இடங்களுக்கும் சென்று அருட்தந்தை அவர்கள் நிதி திரட்டினார். பல சிறப்பு திருப்பலிகள் மூலமாக அதிகமதிகமாக நிதி திரட்டப்பட்டது .
ஆலய மேற்கூரை அமைக்கும் பணியின் போது மூன்றாம் நாளில் எவரும் எதிர்பாராதவிதமாக மேற்கூரை முழுவதும் சரிந்து விழுந்தது. இவ்வேளையில் இவ்வூரைச் சேர்ந்தவர்கள், வேலையாட்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். ஆனால் புனித சூசையப்பரின் அருளால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஆலயத்தின் பெரும்பாலான வேலைகளை பங்குமக்களே இணைந்து செய்தனர். குறிப்பாக ஆலய கோபுரம் அமைக்க தேவையான பொருட்களை பங்குத்தந்தை, இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறார்கள் என அனைவரும் சேர்ந்து மேலே ஏற்றி வைத்து உதவிகள் செய்தது என்றும் நினைவு கூறத்தக்கது.
மேலும் பலிபீடம் வேலைக்காக, பீடத்திருவிழா நடத்தி பீட வேலைகள் துவக்கப்பட்டது. இவ்வாறாக ஆலயப் பணிகள் நிறைவு பெறும் நேரத்தில் அருட்தந்தை ரால்ஃப் கிரான்ட் மதன் அவர்கள் பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
அருட்தந்தை அவர்கள் செய்த அரும் பணிகளை கல்குறிச்சி இறை சமூகத்தினர் என்றும் தங்கள் இதயத்தில் பதித்து வைத்து நன்றி கூறுகின்றனர்.
தொடர்ந்து 2014 மே மாதத்தில் அருட்பணி ஜெயபிரகாஷ் அவர்கள் பொறுப்பேற்று, வேலைகளை சிறப்பாக திட்டமிட்டு விரைவுபடுத்தி 1-5-2015 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தனிச்சிறப்பு :
கல்குறிச்சி கல் தொழிலாளர்களின் கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஆலயத்தின் முன்னால் உள்ள ஒரே கல்லினால் 1952 -ம் ஆண்டு வைக்கப்பட்ட கொடிமரம் என்பது தனிச்சிறப்பு.
சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சனாவிளை அருகே உள்ள கல்குவாரியிலிருந்து வெட்டியெடுக்கப் பட்ட ஒரே கல்லில் (சுமார் 35 அடி) கொடிமரம் செதுக்கப்பட்டுள்ளது.
இதனை வாகனப் போக்குவரத்து இல்லாத அந்நாட்களில் கல்குறிச்சி பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவ, இந்து சமய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரேநாளில் அரை கி.மீ தொலைவிலிருந்து விளைநிலங்கள் வழியாக இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து நாட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.
1913 ஆண்டுவாக்கில் முழுகுமூடு பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் உதவியுடன் ரோமாபுரியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆலயமணி இங்கு உள்ளது.
கல்குறிச்சி 1954 முதல் தனிப்பங்கான பின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr லூயிஸ் வறுவேல்
2. Fr தாமஸ் மத்தியாஸ்
3. Fr ஞானப்பிரகாசம்
4. Fr அத்னாசியுஸ் ரத்தினசாமி
5. Fr M. சூசை
6. Fr ஹென்றி
7. Fr அமல்ராஜ் நேவிஸ்
8. Fr பர்னபாஸ் நேவிஸ்
9. Fr வெனான்சியூஸ்
10. Fr M. S அருள்
11. Fr ஜான் போஸ்கோ
12. Fr ஆன்றனி அல்காந்தர்
13. Fr ஜோசப் பிதலிஸ்
14. Fr ஜான் பெர்க்மான்ஸ்
15. Fr பால் செல்லையன்
16. Fr ததேயுஸ்
17. Fr ரால்ஃப் கிரான்ட் மதன்
18. Fr S. ஜெயபிரகாஷ்
19. Fr ஸ்டீபன்
20. Fr ஜான் போஸ்கோ
21. Fr ஜான் சாமுவேல்
22. Fr பெரிங்டன்