338 புனித அருளானந்தர் திருத்தலம், ஓரியூர்

          

புனித அருளானந்தர் திருத்தலம்.

இடம் : ஓரியூர்

ஆலயம் அறிவோம் வரிசையில் 338 -வது ஆலயமாகிய ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல சிறப்புகள் :

1. புனித அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைத்ததின் நினைவாக கட்டப்பட்ட திருத்தலம் 

2. புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் 

3. புனித அருளானந்தர் கல்லறை அமைந்துள்ள திருத்தலம் 

4. மெழுகுவர்த்தி ஆலயம் 

5. புனித அருளானந்தரின் கல்லறை 

6. புனித அருளானந்தர் தடியத்தேவரை குணமாக்க பயன்படுத்திய திருச்சிலுவை

7. புனித அருளானந்தரின் திருவுடலைத் தாங்கிய கழுமரத்தின் சிறு பகுதி. 

8. புனித அருளானந்தர் சொரூபம். 

9. புனித அருளானந்தரின் நிகழ்வுகள் கண்ணாடிச் சித்திரங்களாக

10. புனிதரின் திருவுடல் கழுமரத்தில் தொங்கிய நிகழ்வு..

மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
மறை வட்டம் : தேவகோட்டை

நிலை : திருத்தலம்
கிளைகள் : 13

பங்குத்தந்தை : அருட்பணி ஆல்பர்ட் முத்துமாலை

இணை பங்குத்தந்தை : அருட்பணி ஸ்டீபன் இராபர்ட்

குடும்பங்கள் : 416
அன்பியங்கள் : 24

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 08.30 மணி மற்றும் மதியம் 11.30 மணி

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணி, மதியம் 11.30 மணி மற்றும் மாலை 07.00 மணிக்கும்.

திருவிழா : வருடத்திற்கு மூன்று திருவிழாக்கள்.

ஜூன் 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை. (22-06-1947 புனித அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைத்த நாள்.

வேளாங்கண்ணி மாதா திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 08-ஆம் தேதி வரை.

பெப்ரவரி 04 -ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள் (பெப்ரவரி 04-புனித அருளானந்தர் கொல்லப்பட்ட நாள்)

வழித்தடம் :

மதுரையிலிந்து 118 கி.மீ., ராமநாதபுரத்திலிருந்து 73 கி.மீ., சிவகங்கையிலிருந்து 70 கி.மீ.,, திருவாடானையில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் ஓரியூர் உள்ளது. திருவாடானையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

வாழ்க்கை வரலாறு:

அருளானந்தர் என அன்போடு அழைக்கப்படும் ஜான் தே பிரிட்டோ 1647 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் பிறந்தார். இவருடைய குடும்பம் போர்ச்சுகல் நாட்டு மன்னர் இரண்டாம் பெட்ரோ என்பவருக்கு மிக நெருக்கமான குடும்பம். இம்மன்னரும் ஜான் தே பிரிட்டோவும் மிக நெருக்கமான நண்பர்கள்.

ஜான் தே பிரிட்டோ சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கொண்டே இருந்தார். இதனால் இவருடைய அன்னை இவரை தூய சவேரியாரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார். "சவேரியாரே! என்னுடைய மகன் உயிர் பிழைத்தால், உம்மைப் போன்று என்னுடைய மகனையும் அருட்பணிக்காக அனுப்பி வைப்பேன்" என்றார். அவர் ஜெபித்தது போன்று ஜான் தே பிரிட்டோ உயிர் பிழைத்தார். அதனால் அவருடைய அன்னை ஜான் தே பிரிட்டோவை இறைப்பணிக்காக அர்பணித்தார்.

கி.பி. 1663 ஆம் ஆண்டு, ஜான் தே பிரிட்டோ சேசு சபையில் சேர்ந்து 1673 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். படிக்கின்றபோதே அறிவோடும் ஞானத்தோடும் இருந்ததால் குருமடத்தில் இவரை பேராசிரியராக பொறுப்பில் அமர்த்த நினைத்தார்கள். ஆனால், இவரோ, "நான் தூய சவேரியாரைப் போன்று இந்தியாவிற்குச் சென்று மறைபோதகப் பணியாற்றவேண்டும்" என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். இது அவருடைய தாய்க்குப் பிடிக்கவே இல்லை. அவர், தன்னுடைய மகன் அருகே இருந்து இறைப்பணி ஆற்றினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். ஆனால் தன் மகன் இப்படி தொலைதூர நாட்டிற்குச் சென்று இறைப்பணி ஆற்றப்போவதாகச் சொல்கிறானே என்று சொல்லி, மேலிடத்திற்கு எல்லாம் சென்று, அவனைத் தடுக்கப் பார்த்தார். அதற்கு ஜான் தே பிரிட்டோ, "இந்தியாவிற்குச் சென்று திருமறையைப் போதிப்பதுதான் தன்னுடைய இலட்சியம்" என மிக உறுதியாக இருந்தார். அதனால் அவருடைய தாயார் மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி வைத்தார்.

1678 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கோவாவில் வந்திறங்கிய ஜான் தே பிரிட்டோ இங்கே இருந்த சூழ்நிலைகளைப் பார்த்துவிட்டு, ஓர் இந்து சந்நியாசியை போன்று உடை தரித்து, தமிழ்மொழியைக் கற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஜான் தே பிரிட்டோ என்ற தன்னுடைய பெயரை அருளானந்தர் என மாற்றிக்கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்தார். அப்போது மதுரையை தலைமைப்பீடமாகக் கொண்டு மதுரை மிஷன் செயல்பட்டுக்கொண்டிருந்தது. சில காலத்திலேயே அதன் தலைமைப் பெறுப்பை ஏற்றுக்கொண்டு ஜான் தே பிரிட்டோ என்ற அருளானந்தர் தொடக்கத்தில் தட்டுவாச்சேரி என்ற பகுதியில் மறைபோதகப் பணியைச் செய்தார். இப்போது அவ்வூர் தஞ்சாவூருக்கு அருகே உள்ளது.

அருளானந்தர், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதைக் கேட்ட மக்களில் நிறையப்பேர் மனமாற்றினார்கள், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டார். அப்போது அங்கே இருந்த குறுநில மன்னர் அருளானந்தரையும் அவரைச் சேர்ந்த மக்கள் சிலரையும் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். இதற்கிடையில் அந்த குறுநில மன்னனின் அரண்மனையில் இருந்த குதிரைகள், யானைகள் அனைத்தும் நோய்வாய்ப்பட்டு கீழே விழுந்தன. இதனால் பயந்துபோன அந்த குறுநில மன்னன், அருளானந்தர் சாதாரண மனிதர் கிடையாது, அவர் இறைமனிதர். அதனால்தான் அவரைத் துன்புறுத்த, அரண்மனையில் இருக்கும் உயிரினங்கள் நோயில் விழுகின்றன என்பதை உணர்ந்து, அவரையும் அவரோடு இருந்தவரையும் விடுதலை செய்து அனுப்பி வைத்தான். அத்தோடு அப்பகுதியில் நற்செய்தியை அறிவிக்கவேண்டாம் என்று சொல்லி எச்சரித்து அனுப்பி வைத்தான்.

அதன்பிறகு அருளானந்தர் தஞ்சாவூர் பகுதியிலிருந்து இராமநாதபுரம் பகுதிக்குச் சென்று நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியில் இருந்த சாதாரண மக்கள் அருளானந்தர் போதித்த நற்செய்தியைக் கேட்டு மனம்மாறினார்கள், கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இந்த நேரத்தில்தான் அருளானந்தருக்கு அவருடைய சொந்த மண்ணிலிருந்த, அவருடைய நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ என்பவரிடமிருந்து அழைப்பு வந்தது. அதனால் 1687 ஆம் ஆண்டு அவர் போர்ச்சுகல் நாட்டிற்குச் சென்றார். அங்கே மன்னன் இரண்டாம் பெட்ரோ அருளானந்தரை தன்னுடைய அரசபையில் ஆலோசகராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அருளானந்தரோ, இந்தியாவில் மறைபோதகப் பணியைச் செய்து, அங்கே தன்னுடைய உயிரைத் துறப்பது தனது கனவு, இலட்சியம்" என்று சொல்லி மறுத்துவிட்டார். சில நாட்கள் போர்ச்சுகலில் இருந்த அருளானந்தர் மீண்டுமாக 1690 ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஆவூர், காமநாயக்கன்பட்டி, மதுரை ஆகிய ஊர்கள் வழியாக வந்த அருளானந்தர் மீண்டுமாக இராமநாதபுரம் பகுதியில் தன்னுடைய மறைபோதகப் பணியை இன்னும் சிறப்பாக செய்யத் தொடங்கினார்.

அப்போது தடியத் தேவா என்னும் குறுநில மன்னன் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு எத்தனையோ வைத்தியர்கள் வந்து சிகிச்சை அளித்தும் அவனுடைய நோய் நீங்கவில்லை. இந்த நேரத்தில் அவன் அருளானந்தரைக் குறித்தும் அவரால் நடக்கும் புதுமைகளைக் குறித்தும் கேள்விப்பட்டான். எனவே, அவன் அருளானந்தரை தன்னுடைய அரண்மனைக்கு வரவழைத்து ஜெபிக்கக் சொன்னான். அருளானந்தர் அவனுக்காக இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார். அற்புதமாக அவனிடமிருந்த நோய் அவனைவிட்டு விலகியது. இதனால் அவன் அருளானந்தரிடமிருந்து திருமுழுக்குப் பெற்றான், அவன் திருமுழுக்குப் பெற்றபிறகு கிறிஸ்துவின் போதனைகளைக் குறித்து இன்னும் அறியத் தொடங்கினான். அவன் ஐந்து மனைவிகளோடு வாழ்ந்து கொண்டிருந்தான். இயேசுவின் போதனைகளைக் கேட்டபிறகு, அவன் தன்னுடைய முதல் மனைவியை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, மற்ற நான்கு பேரையும் அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தான். தடியத் தேவாவால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட நான்கு மனைவியருள் ஒருவர் மன்னர் சேதுபதியின் சகோதரி. இச்செய்திக் கேட்டு மன்னன் சேதுபதி சீற்றம் கொண்டான். அவன் கூலியாட்களை வைத்து இப்பிரச்சனைக்குக் காரணமாகிய அருளானந்தரை கொலைசெய்யத் திட்டம் தீட்டினான்.

1693 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மன்னன் சேதுபதி அருளானந்தரைக் கைது செய்து பலவாறாக சித்ரவதை செய்தான். பாழுங்கிணற்றில் தலைகீழாக இறக்கினான், பாறையில் உருட்டிவிட்டான். இப்படியாக அருளானந்தரை பல்வேறு விதங்களில் சித்ரவதை செய்தான். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அருளானந்தரை ஒரியூருக்கு இழுத்துச் சென்றவன், அங்கே ஒரு கழுமரத்தில் ஏற்றி, தலையை துண்டித்து உடலை கழுமரத்திலேற்றினான். இதனால் அருளானந்தர் ஓரியூர் மண்ணிலே ஆண்டவர் இயேசுவுக்காக மறைசாட்சியாக உயிர் துறந்தார்.

அருளானந்தர் இறந்தபிறகு ஏழு நாட்கள் தொடர்ந்து அவ்வூரில் மழை பெய்தது. இத்தனைக்கும் அது கோடைகாலம். அந்த இடம் (ஓரியூர் திடல்) செந்நிறமானது.

அருளானந்தர் மறைசாட்சியாக உயிர்நீத்த செய்தியைக் கேள்விப்பட்ட போர்ச்சுகலில் இருந்த அவருடைய அன்னை மிகவும் வருந்தி, துக்கம் கொண்டாவோருக்கான ஆடையை உடுத்தினார். ஆனால் அருளானந்தரின் நெருங்கிய நண்பரான இரண்டாம் பெட்ரோ, "இது துக்கப்பட வேண்டிய காரியம் கிடையாது, மகிழ்ந்திருக்கவேண்டிய காரியம்" என்று சொல்லி அந்த அன்னைக்கு அரசிக்கு உரிய ஆடை அணிவித்து, அவரை சிறப்பு செய்தான்.

காடாக இருந்த அப்பகுதியானது இன்று அவரது பெயரில் எழில் மிகு ஆலயமாக காட்சியளிக்கிறது. அவருக்கு புனிதர் பட்டம் தரப்பட்டது. அருளானந்தர் கொல்லப்பட்டது புதன்கிழமை என்பதால், அன்றையதினம் ஏராளமானோர் ஆலயம் வந்து அந்தப் புனிதரை ஜெபித்து செல்கின்றனர். ஓரியூர் திடல் பகுதியில் ஒரு அடி ஆழத்தில் தோண்டி பார்த்தாலும் செந்நிறமாக காட்சியளிக்கும். இங்குள்ள ஆலயத்திலுள்ள ஒரு தொட்டியில் இம்மண் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அருளானந்தரை வழிபட வருவோர், இம் மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இப்படி செய்தால் தீராத வியாதிகள் தீர்வதாக நம்புகின்றனர்.

அருளானந்தர் பெயரில் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை செயல்படுகிறது.

ஆண்டுதோறும் மூன்று விழாக்கள் நடக்கிறது.

அருளானந்தருக்கு பிப்ரவரி 4ம் தேதி ஒரு விழாவும், புனிதர் பட்டம் கொடுத்த ஜூன் 22ல் மற்றொரு விழாவும், செப்டம்பர் எட்டாம் தேதி மாதா ஆலய விழாவும் நடக்கிறது. இங்கு வந்து பிள்ளை வரம் பெற்றவர் தென்னங்கன்றை காணிக்கையாக செலுத்துவர்.

புனித அருளானந்தர் நோயுற்ற தடியத்தேவனை குணமாக்க உபயோகித்த பரிசுத்த திருச்சிலுவையை, அவரை கைது செய்தற்கு முன்னர் திருச்சிலுவைக்கு பாதிப்பு வரலாம் எனக் கருதி, அதனை வேறு ஆலயத்தில் ஒப்படைத்தார், அங்கிருந்து அது பாண்டிச்சேரிக்கு கொண்டு செல்லப் பட்டது. பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த பரிசுத்த திருச்சிலுவை இருந்த இடங்களிலெல்லாம் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்தன. இத்திருச்சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்து மீண்டும் 1989 -இல் இந்தியாவிற்கு கொண்டு வரப் பட்டு தற்போது திருத்தலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருத்தலத்தின் ஆலயங்கள் :

1. முதல் திருத்தலமானது புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் ஆகும். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அப்போது அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைக்கப்பெறாததால் புனித ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

2. இரண்டாவது திருத்தலம் 08-04-1852- இல் புனித அருளானந்தருக்கு முக்திபேறு பட்டம் கிடைத்ததின் நினைவாக 1890 -ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ்விடத்தில் தான் புனித அருளானந்தரை கழுவிலேற்றினர். இவ்வாலயத்தில் புனித அருளானந்தரின் கல்லறை மற்றும் அவரது உடலை கழுவிலேற்றிய கழுமரத்தின் ஒரு துண்டு ஆகியவை காணப்படுகின்றது.

புனிதரின் தலையை கொய்து கொன்று, அவரது உடலை கழுமரத்திலேற்றிய இடத்தில் சில நாட்களுக்கு பொதுமக்களை அனுமதிக்கவில்லை. பின்னர் விலங்குகள் அவரது உடலை உண்ட மிச்ச பாகங்களையும், எலும்புகளையும் சேகரித்து கல்லறை எழுப்பப் பட்டது.

3. மூன்றாவது பெரிய திருத்தலமானது புனித ஆருளானந்தருக்கு 22-06-1947 அன்று புனிதர் பட்டம் கிடைத்ததின் நினைவாக கட்டப்பட்டது.

சுமார் 12 ஆண்டுகளாக இத்திருத்தல கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்று 20-06-1960 அன்று பேராயர் பீட்டர் ரெனால்ட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2006 -ஆம் ஆண்டில் இத்திருத்தலம் புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. 2011 -இல் பேராலய Basilica நிலையை அடைய முயற்சிக்கப்பட்டு சில காரணங்களால் நிறைவேறாமல் போனது.

4. நான்காவது ஆலயமானது மெழுகுவர்த்தி ஆலயம் :
இவ்வாலயத்தில் புனிதர் இரத்தம் சிந்திய செம்மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுளது. மேலும் இறைமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து தங்கள் வேண்டுல்களை புனிதரிடம் எடுத்துரைப்பதற்காக கட்டப்பட்டது ஆகும்.

நாள்தோறும் இறைமக்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து ஜெபித்து புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற அற்புதங்களை பெற்றுச் செல்கின்றனர்.