915 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், இராமநாதபுரம்

            

புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: இராமநாதபுரம் 

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: இராமநாதபுரம்

நிலை: பங்குதளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித முடியப்பர் ஆலயம், ஆற்றாங்கரை

2. புனித சூசையப்பர் ஆலயம், திம்மாபட்டி

3. புனித பேதுரு ஆலயம், சித்தார்கோட்டை

4. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கே. வலசை

5. புனித அருளானந்தர் ஆலயம், முதலூர்

6. புனித சவேரியார் ஆலயம், தேவிபட்டிணம்

7. தூய ஆரோக்கிய மாதா சிற்றாலயம், சம்பை

8. குழந்தை இயேசு சிற்றாலயம், கழனிக்குடி

9. கிளியூர்

10. வீரவனூர்

குடும்பங்கள்: 482 (கிளைப்பங்குகள் சேர்த்து 882)

அன்பியங்கள்: 15

பங்குப்பணியாளர் & மறைவட்ட முதல்வர்: அருள்பணி. A. சிங்கராயர் 

தொடர்புக்கு: +91 94430 95222

உதவிப் பங்குப்பணியாளர்: அருள்பணி. F. ரீகன் 

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:15 மணி

செவ்வாய் மாலை 06:15 மணி புனித பதுவை அந்தோனியார் நவநாள் திருப்பலி

புதன் மாலை 06:15 மணி புனித அருளானந்தர் நவநாள் திருப்பலி 

சனி மாலை 06:15 மணி புனித சகாய மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:15 மணி சிறப்புத் திருப்பலி, நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் சனி மாலை 06:15 மணி புனித ஜெபமாலை அன்னையின் தேர்பவனி, திருப்பலி 

திருவிழா: அக்டோபர் மாதம் 07-ம் தேதியை அடுத்து வருகிற சனி ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. டயஸ் (late)

2.அருட்பணி. ஜோசப், SVD

3. அருட்பணி. சார்த்தோ, கொல்கத்தா மறைமாவட்டம்

4. அருட்பணி. சார்லஸ், SVD

5. அருட்பணி. ஜோசப் கஸ்பார், திருச்சிலுவை சபை

6. அருட்பணி. ராஜா, CSsR

7. அருட்பணி. டென்னிஸ், உதகை மறைமாவட்டம்

8. அருட்பணி.‌ பிரிட்டோ, SJ

மற்றும் 36 அருட்சகோதரிகள்.

வழித்தடம்: மதுரை இராமேஸ்வரம் வழித்தடத்தில், பரமக்குடியை அடுத்து இவ்வாலயம் அமைந்துள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து மதுரை நோக்கிய 4கி.மீட்டரில் இவ்வாலயம் அமைந்துள்ளது

Location Map: Our Lady of The Holy Rosary Church

https://maps.app.goo.gl/7cZEixYAS1NZALP66

முகவை (இராமநாதபுரம்) கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரப்பயணம்:

இராமநாதபுரம் கத்தோலிக்க திருச்சபை தான் நடந்து வந்த பாதையைப் பெருமையோடு நோக்குகிறது. அதன் வரலாறு பல வண்ணக் கோலங்களைக் கையில் ஏந்தும் காவியச் சிறப்புப் பெற்றிருக்கிறது.

1543ம் ஆண்டு புனித சவேரியாரின் காலடி இந்தப் பங்கில் பதிந்து பரிணமிக்கிறது. புனிதர் கீழக்கரையிலும், தேவிபட்டினத்திலும் ஏராளமானவர்களை மனம் திருப்பினார். புனித சவேரியார் 1545ம் ஆண்டு தேவிபட்டினத்தில் திருப்பலி நிறைவேற்றியிருக்கிறார். அதுதான் இந்தப் பகுதியில் கிறிஸ்தவத்தின் ஆரம்பமாக இருக்கிறது.

புனித சவேரியார் விதைத்த விசுவாச விதைக்கு தன்னுடைய குருதியை உரமாக்கியவர், வணக்கத்திற்குரிய அந்தோனி கிரிமினாலி. 1584ம் ஆண்டு பொறுப்பேற்ற இந்த புனிதர் சில ஆண்டுகளில் வேதாளையில் வேதசாட்சியாகித் தங்கிவிட்டார். அவருக்குப் பின் பல ஆண்டுகள் இங்கு மறைபோதகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரசின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் எங்கோ ஒரு மூலையில் விசுவாச தீபங்கள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

புனித அருளானந்தரின் மலரடிகள்:

மற்றவர்கள் எல்லாம் அஞ்சி ஒதுங்கிய கால கட்டத்தில், மங்காத வீரத்தோடு மறவ நாட்டிற்கு மறைபரப்ப வருகிறார் புனித அருளானந்தர். 1693ம் ஆண்டு அவரைக் கைதியாகத் தான் இராமநாதபுரம் சந்தித்தது. அரண்மனையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஓரியூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு மறைசாட்சியாகிறார்.

அப்போது இராமநாதபுரத்தில் கிறிஸ்துவம் இல்லை. ஆனால் அதன் கிளைத் தலங்களில் கிறிஸ்தவர்கள் இருந்திருக்கிறார்கள். 1600ம் ஆண்டு கடிதங்களில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, பாம்பன் போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. 1715ம் ஆண்டு மிஷனரி குறிப்பேட்டில் தொண்டி, தேவிபட்டினம், காரங்காடு, கீழக்கரை, பாம்பன் ஆகிய ஊர்களில் உள்ள கிறிஸ்தவக் கோயில்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

அரண்மனையில் ஒரு ராஜரிஷி:

1730ம் ஆண்டு குறிப்பேடு ஒரு சுவையான நிகழ்ச்சியைக் காட்டுகிறது. காதா தேவன் என்ற இராமநாதபுர அரசன், பாவணாசங்கு என்ற படைத்தலைவனுக்கு பயந்து திருச்சியில் தங்கியிருந்த மதுரை அரசரிடம் சரணடைகிறான். அந்த நேரத்தில் அவ்வூரிலிருந்து வந்த அருள்தந்தை பெர்டோல்டி (Bertoldi), காதா தேவனுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறார். காதா தேவன் சிறிது காலத்தில் ஆட்சியைப் பிடித்து விடுகிறான். நன்றி உணர்வோடு தன் பல்லக்கை அனுப்பி அருள்தந்தை பெர்டோல்டியை வரவழைக்கின்றான். அரண்மனையில் விருந்தினராக 15 நாட்கள் உபசரித்து தன்னுடைய அரசில் மிஷினரிமார்களுக்கு இருந்த தடையை நீக்கி விடுகிறான் அரசன். அரண்மனையிலேயே திருப்பலியை நிறைவேற்றியிருக்கிறார் தந்தை பெர்டோல்டி.

படைத்தலைவன் கார்னல் மார்டின்:

இராமநாதபுரம் திருச்சபையை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் கார்னல் மார்டின். ஆங்கிலேயர் இராமநாதபுரத்தை 1792ம் ஆண்டு கைப்பற்றினர். தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட கார்னல் மார்டின் என்ற படைத் தலைவனை அனுப்பி வைத்தனர். நல்ல கத்தோலிக்கரான கார்னல் மார்டின் 1802ம் ஆண்டு முதன் முதலாக இராமநாதபுரத்தில் ஒரு கோயில் கட்டினார். அந்தக் கோயில் அடைக்கல மாதா கோயில் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் கடற்கரை பகுதியில் வாழும் மக்கள் எல்லாம் இன்றும் அடைக்கல கோயில் என்றே அழைக்கிறார்கள். மாதா கோவிலில் இருந்த மணியில் அருளானந்தம்மாள், அடைக்கல மாதா கோயில் என்று எழுதப்பட்டிருந்தது.

 பாண்டிச்சேரி வேத போதகர்கள்:

1830ம் ஆண்டு கல்லடிதிடலை மையமாகக் கொண்டு, பாண்டிச்சேரி வேதபோதகர்கள் செயல்படத் துவங்குகின்றனர். சவேரியார் சாமி என்று அழைக்கப்பட்ட தந்தை ஜேம்ஸ் அடிகளார் இராமநாதபுரத்தைக் கண்காணித்து வந்திருக்கிறார். அவருக்குப் பின் 1835ம் ஆண்டு தைரியநாதர் சாமி என அழைக்கப்பட்ட தந்தை மேஏ (Mahay) இராமநாதபுரம் அருள்தந்தையாக பொறுப்பேற்கிறார். இவர் 1835ம் ஆண்டு அரண்மனைக்குப் பக்கத்தில் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தைக் கட்டினார். காலப்போக்கில் அது மறைந்து விட்டது.

இயேசு சபை:

திருத்தந்தையின் அனுமதியின் பேரில் இயேசு சபை மீண்டும் செயல்படத் துவங்கியது. மறவ நாட்டில் 1837ம் ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதல் குருக்களான தந்தை டீ(ம்) பூர்னே (De Bournet S.J), தந்தை கோம் (H) (Combes S.J) ஆகியோர் கல்லடிதிடலிலிருந்து இராமநாதபுரத்தைக் கண்காணித்து வந்தனர். அந்தக் கால கட்டத்தில் 20 குடும்பங்கள் தான் இராமநாதபுரத்தில் இருந்திருக்கின்றன. 20 குடும்பங்கள் அரசர்களின் கொடுமை தாங்காமல் தஞ்சாவூருக்குப் போய்விட்டதாகவும், வேறு சில குடும்பங்கள் அரசன் பிறசமய திருவிழாவில் கலந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியதால் காணாமல் எங்கோ போய்விட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. 

முதல் பங்குத்தந்தை:

1846ம் ஆண்டு முதன் முதலாக மிக்கேல்நாதர் சாமி என்று அழைக்கப்பட்ட தந்தை லாரோஷ் சே.ச (Laroche S.J), இராமநாதபுரத்தில் தங்கி தனது பணியை துவக்குகிறார். இப்போது சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தை வாங்கிக் குடியேறினார் தந்தை லாரோஷ். புராட்டஸ்டாண்டு சகோதரர்களின் ஆதிக்கத்தினால் அந்த இடம் பறிபோனது. பின் 1850ம் ஆண்டு மன்னார் பிள்ளை என்பவரிடமிருந்து தற்போது ஆலயம் உள்ள இடத்தை விலைக்கு வாங்கினார். அரண்மனை அகழி இருந்த இடமாதலால் இன்றும் அகழ் கிடங்கு என்று அழைக்கப்படுகிறது. அங்கு மண்ணால் ஆன ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டினார். புனித ஜெபமாலை அன்னை ஆலயமாக அது அர்ச்சிக்கப்பட்டது. அரண்மனைக்கு அருகில் இருந்த அந்தோனியார் ஆலயம் கைவிடப்பட்டது. இந்த நேரத்தில் இராமநாதபுரம் பங்கு பாம்பன், கீழக்கரை, கமுதி, சூராணம், காரங்காடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

குருமடம்:

இராமநாதபுரத்தில் ஒரு சிறிய குருமடம் இருந்திருக்கிறது. தந்தை லாரோஷ் அவர்கள் கிராமங்களிலிருந்து சிறுவர்களை அழைத்து வந்து தனது இல்லத்தில் வைத்து பயிற்சி கொடுத்திருக்கிறார். தமிழ்-மறைக்கல்வி போன்றவற்றைச் சொல்லித் தந்திருக்கிறார். கிராமங்களுக்குச் செல்லும் போது இவர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஒரே ஆண்டில் மூன்று மரணங்கள்:

இராமநாதபுரம் ஆலயத்தின் வடக்குப் புறத்தில் மூன்று குருக்களின் கல்லறைகளைக் காணலாம். மூவரும் ஒரே ஆண்டு மரணமடைந்திருக்கின்றனர். உதவிப் பங்குத் தந்தையாக இராமநாதபுரத்திற்கு வந்த தந்தை கால்தயர் (Galtier), சம்மனசூரிலிருந்து விருந்தாளியாக வந்த தந்தை ஹுக்லா (Huzla), தந்தை லாரோஷைப் பார்க்க வந்த தந்தை கோம் (H) ஆகியோர் மரணமடைந்திருக்கிறார். அனைவரும் காலராவில் 1854 ஆம் ஆண்டு இறந்துள்ளனர். 1854ம் ஆண்டு தந்தை லாரோஷ் இராமநாதபுரத்தை விட்டுச் சென்று விடுகிறார். அதற்குப் பின் அவர் தொடங்கிய வேலைகள் கைவிடப்படுகின்றன. 

மற்றுமொரு கோயில்:

1855ம் ஆண்டிலிருந்து பல்வேறு குருக்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மண்ணால் கட்டப்பட்ட ஜெபமாலை அன்னை கோயிலுக்குப் பதிலாக, சுண்ணாம்பு செங்கல் ஆகியவற்றால் ஒரு சிறிய தேவாலாயத்தை தந்தை தெல்சோல் சே.ச (Delsol S.J) 1871ம் ஆண்டு கட்டினார். 1873ம் ஆண்டு தேவிபட்டினத்தில் புதியதோர் ஆலயம் கட்டப்படுகிறது. தந்தை லாப்போர்ட் அந்த ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார். தந்தை லாப்போர்ட் (Laborte) தானிருந்த ஆறு ஆண்டுகளில் (1873-79) பல்வேறு இந்துக்களை மனந்திருப்பியிருக்கிறார். 

நடந்தது ஒரு பெருவிழா:

இராமநாதபுரத்தில் கிறிஸ்தவ முத்திரையைப் பதித்த ஒப்பற்ற விழா ஒன்று 1880ம் ஆண்டு நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த அழகிய புனித அருளானந்தர் சுரூபம் அலங்கரிக்கப்பட்டு, நகர வீதிகளில் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. பக்கத்து கிராமங்களிலிருந்து அத்தனை கிறிஸ்தவர்களும் அங்கு வந்திருந்தனர். நகரத்தையே நடுநடுங்கச் செய்யும் அளவிற்கு ஆடம்பரங்கள், கொடி கட்டிப்பறந்தன. அந்தப் பவனியில் இராமநாதபுரம் ராஜா தன் சகோதரரோடு கலந்து கொண்டிருக்கிறார். தந்தை ஃவாபர் சே.ச (Fabore S.J) அரசரோடு பல்லக்கில் அமர்ந்து பவனி சென்ற காட்சி கிறிஸ்தவர்களுக்கே தனி கெளரவத்தைத் தந்த நிகழ்ச்சியாக அமைந்தது.

தந்தை ஃவாபர் காலத்தில் (1879-91) பல முக்கிய நிகழ்ச்சிகள் பங்கில் நடைபெறுகின்றன. 1882ம் ஆண்டு விடுதியுடன் கூடிய ஒரு பள்ளி துவங்கப்பட்டது. பிரிவினைச் சகோதரர்களுக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் பெரிய மோதல் ஏற்பட்ட காலம் இது. பல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பிரிவினைச் சபையில் சேர்ந்தனர். 1886ம் ஆண்டு 9 கிராமங்களில் உள்ள பிரிவினைச் சபையைச் சேர்ந்தவர்களை கத்தோலிக்கராக்கினார் தந்தை ஃவாபர். அதில் கழனிக்குடியும் ஒன்று. 1890ம் ஆண்டு இந்து நடுநிலைப்பள்ளி ஒன்று தந்தைக்கு கொடுக்கப்பட்டது. அது நீண்டநாள் நீடிக்கவில்லை.

ஆலயத் திறப்பு விழா:

1891ம் ஆண்டு தந்தை தார்யூத்தோர் (Darueutor) இரண்டாம் முறையாக இராமநாதபுரம் பங்கிற்கு வருகிறார். ஏற்கனவே ஒரு முறை (1868-1870) பங்குத் தந்தையாக இருந்தவர். புதிய ஆலயம் கட்ட மேலிடத்தில் உத்தரவு பெற்றார். 1892ம் ஆண்டு ஆலயம் ஒன்று கோதிக் பாணியில் கட்டத் துவங்குகிறார்.

1894ம் ஆண்டு நவம்பர் 13ம் நாள் இப்போது இருக்கின்ற குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. பள்ளியை நடத்த முடியாத அளவிற்கு அரசின் சட்டங்கள் இருந்ததால் பள்ளியை நிறுத்தி விட்டார். அந்த நிகழ்ச்சி பிரிவினை சகோதரர்கள் தாங்கள் பள்ளியை வளப்படுத்திக் கொள்ளச் சாதகமாக அமைந்தது.

பங்கு பிரிக்கப்பட்டது:

1900ம் ஆண்டு இராமநாதபுரம் பங்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, காரங்காடு என்ற புதிய பங்கு உருவாகியது. அங்கு தந்தை லூயி சே.ச. பங்குத் தந்தையாகச் சென்றார். தந்தை மாஸரான் (Masaran SJ) இராமநாதபுரம் பங்குத் தந்தையானார். அவருக்குப் பின் 1909ம் ஆண்டு த்யுர்லான் அடிகளார் பங்கு பொறுப்பேற்றார். 1910ம் ஆண்டு காலராவினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரத்திலே இறந்து விட்டார். 1910ம் ஆண்டு பதவி ஏற்கும் தந்தை ப்லான்ஷார் பல சிற்றாலயங்களை கிராமங்களில் கட்டித் தந்த பெருமைக்கு உரியவர், ஒரு புதிய பள்ளியையும் ஏற்படுத்துகிறார். மட்டியரேந்தலில் உள்ள ஆலயம் இவரால் கட்டப்பட்டது ஆகும்.

அரசர்களின் நண்பர்:

1931ம் ஆண்டு இராமநாதபுரத்திற்கு வந்த தந்தை சூசை மாணிக்கம், அரச மாளிகையில் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார். ராஜா. M. தினகரின் நெருங்கிய நண்பர். தினகர் பள்ளியின் வளர்ச்சிக்கு காரணமானவர். ஒரு சமயம் தேவிபட்டினத்திற்கு ஆயரை அழைத்துச் சென்றார். எல்லா மக்களும் ஆயரை ஆர்வமுடன் வரவேற்றனர். முஸ்லீம், இந்து சகோதரர்களின் நண்பராக இருந்து அவர்களிடம் ஒற்றுமை ஒருமைப்பாட்டை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் அருள்தந்தை சூசை மாணிக்கம் அடிகளார்.

1935ம் ஆண்டு தந்தை ஆ. பிரான்சீஸ் S.J வருகிறார். சிறந்த பக்திமான் என்று பெயரெடுத்தவர். 1938ம் ஆண்டு தந்தை பாஸு (Bazou) பங்குப் பொறுப்பேற்கிறார். மதுரை மறைமாநிலம் உருவாகிய காலம் அது. 1940ம் ஆண்டு பொறுப்பேற்ற தந்தை D. சந்தியாகு பல மரங்களை வைத்து உருவாக்கி கோயில் வளாகத்தை அழகுபடுத்துகின்றார். அவருக்குப் பின் சில காலம் தந்தை சல்தானா பங்கில் பணிபுரிகின்றார்.

லெவேல் என்னும் இறைத்தொண்டர்:

1943ம் ஆண்டு இராமநாதபுரம் புதுமையான இறைத் தொண்டர் ஒருவரை வரவேற்கும் பாக்கியம் பெற்றது. அவர் தான் தந்தை லூயி லெவேல். எளிமை, இனிமை, புனிதம் ஆகிய பண்புகளால் மக்களையெலாம் கவர்ந்திருந்த அந்த புனிதப் பாதங்கள்

இராமநாதபுரத்தை அலங்கரித்தன. பட்டி தொட்டிகளெல்லாம் கால் நடையாகச் சென்று ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அண்ணல் அவர். 1943ம் ஆண்டு கிறிஸ்து பள்ளி என்று தொடங்கப்பட்ட பள்ளி தினகர் ராஜாவின் பள்ளி, 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தந்தை லூயி லெவேலிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதன் முறையாக அமலவைக் கன்னியர்களை அழைத்து அந்தப் பள்ளியை அவர்களிடம் ஒப்படைத்தார் தந்தை

1945ம் ஆண்டு கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. 1949ம் ஆண்டு திரு இருதய சகோதரர்களை அழைத்து அவர்களின் பணியை இராமநாதபுரத்தில் துவக்கி வைக்கிறார் தந்தை லெவே. அருட்சகோதரர் V. அருளானந்தம் தலைமையில் கிராமப்புற ஆன்மீக மறுமலர்ச்சிக்கு திருஇருதய சகோதரர்கள் பெரிதும் உதவினர். கழனிக்குடி, லாந்தை போன்ற ஊர்களில் கிறிஸ்துவத்தைப் பொலிவு பெறச் செய்தவர் தந்தை லெவேல். இராமநாதபுரம் புனித சவேரியார் தெருவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு காரணமானவர் லெவே அடிகாளார்தான். இவர் காலத்தில் கீழக்கரையிலிருந்து பல கிறிஸ்தவர்கள் இராமநாதபுரத்தில் குடியேறத் துவங்கினர். கிறிஸ்தவர்களின் ஒருங்கிணைப்பில் அதிக ஆர்வம் காட்டினார். தந்தை லெவேல் காலத்தில் பல கத்தோலிக்க சங்க மாநாடுகள் இராமநாதபுரத்தில் நடைபெற்றன. 1956 வரை ஏறக்குறைய 13 ஆண்டுகள் இங்கு பணியாற்றினார் தந்தை லெவே. அவருடைய புனிதத்தன்மை இன்றும் மக்களுக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கின்றது. மழை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தால் மழை வந்து விடுமாம். புயல் வந்த போதிலும், பஞ்சம் வந்த போதிலும் மக்களுக்காக மக்களோடு இருந்தே பாணியாற்றிய நல்ல மேய்ப்பர். ஒரு சமயம் தேவிபட்டினத்தில் புயல் கரையைக் கடந்த நேரத்திலும் அந்த மக்களோடு இருந்து, அவர்களின் துன்பங்களில் பங்கெடுத்திருக்கிறார். எல்லா மதத்தினராலும் புனிதராகக் கருதி மரியாதை செய்யப்படுகின்ற உத்தமர் தந்தை லெவேல்.

அருள்தந்தை அரங்கோ:

தந்தை லெவேல் காலத்தில் உதவிப் பங்குத் தந்தையாக பணியாற்றியவர்களில் முக்கியமானவர் தந்தை அரங்கோ. ஏழைகளில் இறைவனைக் காணும் எளிய உள்ளம் படைத்தவர். புனித சவேரியார் கோயில் மக்களைக் கண்ணின் இமையாக காத்தவர். பணியாற்றிய ஒரு ஆண்டிலே இதயங்களில் இடம் பெற்று விட்ட இவர் பெயரால் தான் அரங்கோ படிப்பகம் இருந்தது. 

அருள்தந்தை லெவேல் அவர்களுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் தந்தை வேவி (Veavy) அவர்கள் பணிபுரிந்தார். மட்டியரேந்தலில் உள்ள பள்ளி உருவாகுவதற்குக் காரணமானவர்கள் அவர்கள்.

அண்மை காலத்து மேய்ப்பர்கள்:

அருள்தந்தை. V. மைக்கேல் அடிகளால் 1959 ம் ஆண்டிலிருந்து பங்குப் பொறுப்பேற்றார். கிளியூரில் அவர் கட்டிய கோயில் அவரது குறிப்பிடத்தக்க பணி. பல கிராமங்களில் கோயில்களை மராமத்து செய்திருக்கிறார். பல்வேறு பக்த சபைகளை ஊக்குவித்தவர் தந்தை மைக்கேல். கீழக்கரையில் உள்ள மாதா சபை இவர் காலத்தில் பொன் விழா கொண்டாடியது. 1964ம் ஆண்டு அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார் அருள்தந்தை R. அந்தோணி இவர் காலம் பங்கு பல்வேறு விழாக்களைக் கண்டது. நற்கருணைப் பவனி தினகர் பள்ளியிலிருந்து ஆரம்பித்து, ஆலயத்தை அடைந்தது இவர் காலத்தில் தான். பிரிவினை சகோதரர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தந்தை அந்தோணி பல்வேறு விழாக்களை அவர்களோடு இணைந்து நடத்தியிருக்கிறார். கர்தினால் நாக்ஸ் அவர்களுக்கு பிரமாண்டமான வகையில் வரவேற்புக் கொடுக்கப்பட்டது. பேராயர் திரவியம் அவர்களின் அபிஷேக விழாவிற்கு பெருங்கூட்டமாக மக்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

1968ம் ஆண்டு பங்குபொறுப்பேற்ற அருள்தந்தை சக்ரியாஸ் தன்னுடைய தீவிர பணிகளால் மக்கள் மனதில் பெரிதும் இடம் பெற்றிருக்கிறார். முதல் முதலாக பேராயர் ஜஸ்டின் திரவியம் ஆண்டகையை அழைத்து வந்து மரியராயபுரம் ஆலயத்தை அர்ச்சிக்கச் செய்திருக்கிறார். ஜஸ்டின் காலனி உருவாகக் காரணமானவரும் இவரே.  சித்தார்கோட்டையில் ஆலயம் கட்டி இறை மக்களை ஒன்று சேர்த்திருந்தார். பங்கு வருமானத்தைப் பெருக்க பல்வேறு கடைகள் கட்டி திட்டமிட்டிருக்கிறார். இவர்காலத்தில் தான் இராமநாதபுரம், வட்டார தலைமையாகமாக மாறியது. வட்டார முதல் அதிபராக அவர் பொறுப்பேற்று,

இராமநாதபுரம்இந்து, முஸ்லீம்

சகோதரர்களின் நெருங்கிய நண்பராக திகழ்ந்திருக்கிறார் தந்தை சக்கரியாஸ்.

அவருக்குப் பின் அருள்தந்தை மணலா நான்கு ஆண்டுகள் (1972-76) சிறப்புற

பணிபுரிந்திருக்கிறார். 

அவருக்குப் பின் அருள்தந்தை பிரான்சிஸ் பிரிட்டோ 1976ம் ஆண்டு பதவியேற்றார். தேவிபட்டினத்து மீனவர்களுக்கு வலைகள் வாங்குவதில் பெரிதும் உதவியிருக்கிறார்.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருள்தந்தை T.A. மிக்கேல் அவர்களின் பணி இரண்டு ஆண்டுகளில் முடிவு பெறுகிறது. மரணம் அவரை பிரித்து விடுகிறது. அவருக்குப் பின் அருள்தந்தை அருள் ராயன் பங்குப் பொறுப்பு ஏற்கிறார். வேதாளையில் வணக்கத்திற்குரிய அந்தோணி கிரிமினாலிக்கு புதிய திருத்தலம் அமைத்த பெருமை அவரையே சாரும்.

இந்த காலகட்டத்தில் பங்கிற்காக உழைத்த போது பல்வேறு உதவிப் பங்குத்தந்தையர்களையும் நாம் நினைத்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

1984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அருள்தந்தை S.M. செல்வராஜ் பொறுப்பேற்று, கழனிக்குடியில் அழிந்து கொண்டிருந்த கிறிஸ்தவ வாழ்வுக்குப் புத்துயிர் அளித்தார். புதிய ஆலயம் ஒன்று 1986 ஜூலை 1ம் தேதி திறக்கப்பட்டது.

இராமநாதபுரம் பங்கு இறைமக்களின் தேவைக்காக ஆலயத்தை விரிவுபடுத்தும் நீண்ட நாள் கனவு, பெருமதிப்பிற்குரிய பேராயர்  ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்களின் பெரு முயற்சியாலும், பொருளுதவியாலும் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் விரிவாக்கப்படும் பணி 1985ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் நாள் ஆரம்பிக்கப்படுகிறது. பழைய ஆலயத்தின் கலைத்திறன் அழிக்கப்படாமலும், புதிய கட்டிடக்கலை வளத்தோடும் ஆலயம் பெரிதாக்கப்படும் பணி துவங்கியது. ஏறக்குறைய 400 மக்கள் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அளவிற்கு பெரிதாக்கப்பட்டது.

பார்ப்பவர்கள் பாராட்டும் அளவிற்கு பழைமையும், புதுமையும் இணைந்த பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் ஆலயம், 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் நாள் மதுரையின் முன்னாள் பேராயர் ஜஸ்டின் திரவியம் ஆண்டகையாலும், அப்போதைய பேராயர் கசிமீர் ஆண்டகையாலும் அர்ச்சிக்கப்பட்டது.

பின்னர் 1987ல் சிவகங்கை மறை மாவட்டம் உதயமான பின் இராமநாதபுரம் பங்கானது அருள் தந்தையர்: அல்போன்ஸ் நாதன், S.R. இக்னேசியஸ், அருள் ஜீவா, P.S. அருள் SJ, ஜோசப் லூர்து ராஜா, அம்புரோஸ், சாமு இதயன் ஆகியோரால் சிறப்பாக வழி நடத்தப்பட்டு வந்திருக்கிறது. 

அருள் தந்தை அம்புரோஸ் அவர்கள் காலத்தில் ஆலய சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு, சிமெண்ட் தரை மொசைக் தரையாக மாற்றி அமைக்கப்பட்டது. 

2002ல் அருள்தந்தை. சாமுஇதயன் அவர்கள் பங்குத்தந்தையாகவும், மறைமாவட்ட அதிபராகவும் பணிபுரிந்த காலத்தில் ஆலய வளாகத்தில் அன்னை அரங்கினையும், ஆலய முகப்பில் காண்போரை ஈர்க்கும் வகையில் அன்னையின் அழகிய சுரூபத்தையும் நிறுவி, ஆலயத்திற்கு அழகு சேர்த்தார்.

2006ல் முகவை நகரில் வேளை மாநகர் திருத்தலம் உதித்ததோ! என அனைவரும் வியக்கும் வகையில், ஆலயத்தின் சுவர்கள் முழுவதுமாக பழுது பார்த்து சீரமைக்கப்பட்டு, பீடப்பகுதி முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பெருந்தகை மேதகு. டாக்டர். செ. சூசைமாணிக்கம் அவர்களால் 27.08.2006 அன்று மாலை 05:30 மணிக்கு அர்ச்சிக்கப்பட்டது.

2007 மே முதல் பங்குத் தந்தையாகவும், வட்டார அதிபராகவும் அருள்தந்தை இருதயராஜ் R.S. அவர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். 2012 பிப்ரவரி 12 ஆம் நாளன்று மேதகு சூசைமாணிக்கம் அவர்களால் நற்கருணை ஆலயம் புதிதாக கட்டப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அருள்பணி. அருள் ஆனந்த் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கொடிமரம் வைக்கப்பட்டது. 

🌸தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. சிங்கராயர் வழிகாட்டலில் சம்பை ஊரில் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் கட்டப்பட்டு 20.09.2023 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

நற்கருணை பெருவிழா:

இராமநாதபுரத்தில் பிரிவினை சபையினரின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், மக்களின் விசுவாசத்தை வளர்க்கும் வகையில் பத்தாம் திருவிழாவின் போது நற்கருணை பவனி ஆரம்பிக்கப்பட்டது. இதில் அருகாமையில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் இந்த நற்கருணை பவனியில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். இன்றுவரை இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பங்கின் கெபி & ஆலயம்:

1. தூய லூர்து மாதா கெபி: இறை ஊழியர் லூர்து லெவே அவர்களால் கட்டப்பட்டது.

2. புனித சவேரியார் ஆலயம்: ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி மாலை 06:15 மணி திருப்பலி நடைபெறும்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை

2. மரியாயின் சேனை

3. இயேசுவின் கண்மணிகள்

4. பாடகர் குழு

5. சிறைப்பணிக்குழு

6. அன்பியங்கள்

7. மறைக்கல்வி மன்றம்

8. பீடச் சிறுவர்கள்

9. நற்செய்தி பணியாளர்கள்

பங்கின் பள்ளிக்கூடங்கள்:

1. புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி

2. புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி

3. இராஜா தினகர் ஆர்.சி தொடக்கப்பள்ளி

4. இராஜா தினகர் ஆர்.சி உயர்நிலைப் பள்ளி

முகவை நகரில் இராஜாதினகர் R.C.நடுநிலைப்பள்ளி, புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி மற்றும் மட்டியரேந்தலில் புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி ஒன்றும் என மறை மாவட்டத்திற்கு சொந்தமான மூன்று பள்ளிகள் இருந்தன. முகவை நகர் மக்களுக்கு கல்விச் சேவையை விரிவு படுத்தும் நோக்கில் 2001ல் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது இராஜாதினகர் R.C. தொடக்கப்பள்ளி, இராஜா தினகர் R.C. உயர்நிலைப்பள்ளி என பிரிக்கப்பட்டு, திருஇருதய சகோதரர்களை தலைமையாசிரியர்களாகக் கொண்டும். புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி, புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி என பிரிக்கப்பட்டு அமலவைக் கன்னியரை தலைமையாசிரியர்களாகக் கொண்டு என 4 பள்ளிகளாக சிறப்பான கல்விப் பணியை ஆற்றி வருகின்றன. மேலும் அமலவைக் கன்னியர் லூயிலெவெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியையும், திரு இருதய சபை சகோதரர்கள் இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியையும், ஆஞ்சலோ மாற்றுத் திறனுடையோர் இல்லம் ஒன்றையும் ஏற்படுத்தி சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றனர். 

பங்கில் பணிபுரியும் துறவற சபையினர்:

1. அமலவை அருட்சகோதரிகள் (CIC Sisters)

2. திருஇருதய சகோதரர்கள்

பங்கில் பணியாற்றிய பங்குபணியாளர்கள்:

1. அருள்பணி லூயிஸ் லெவேல் (1943-1956)

2. அருள்பணி. அரங்கோ (இணைப்பணியாளர்)

3. அருள்பணி. வேவி (Veavy) (1956-1959)

4. அருள்பணி. V. மைக்கேல் (1959-1964)

5. அருள்பணி. R. அந்தோணி (1964-1968)

6. அருள்பணி. சக்கரியாஸ்

7. அருள்பணி. மணலா

8. அருள்பணி. பிரான்சிஸ் பிரிட்டோ

9. அருள்பணி. T.A. மிக்கேல்

10. அருள்பணி. அருள் ராயன்

11. அருள்பணி. S.M. செல்வராஜ் (1984-1986)

12. அருள்பணி. அல்போன்ஸ்நாதன் (1986-1990)

13. அருள்பணி. S.R. இக்னேஷியஸ் (1990-1991)

14. அருள்பணி. அருள் ஜீவா (1991-1994)

15. அருள்பணி. P.S. அருள், S.J (1994-1995)

16. அருட்பணி. ஜோசப் லூர்து ராஜா (1995-1996)

17. அருள்பணி. I. அம்புரோஸ் (1996-2002)

18. அருள்பணி. சாமு இதயன் (2002-2007)

19. அருள்பணி. R.S. இருதயராஜ் (2007-2012)

20. அருள்பணி. A. இராஜமாணிக்கம் (2012-2017)

21. அருள்பணி. N. அருள் ஆனந்த் (2017-2023)

22. அருள்பணி. A. சிங்கராயர் (2023 ஜூன் முதல்...)

பங்கினைக் குறித்த பங்குப்பணியாளரின் பகிர்வு:

பங்குப் பணியாளரின் ஆலோசனையுடன் அனைத்துப் பணிகளையும் இணைந்து ஒற்றுமையாக செய்து வருவது, மக்கள் மையப்பட்ட திருச்சபையாக விளங்குவதை குறிக்கிறது. இராமநாதபுரம் மாவட்ட மையமாகக் விளங்குவதால், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி போன்றவை இவ்வாலயத்தின் அருகிலேயே உள்ளதால்,  பல பகுதியில் இருந்தும் மருத்துவம் பெற இங்கே வருகிற மக்கள், இந்த மருத்துவமனையில் பணிபுரிகிறவர்கள் என ஏராளமான மக்கள் தூய ஜெபமாலை அன்னை ஆலயம் வந்து நாள்தோறும் ஜெபித்து செல்கின்றனர். 

மேலும் பிறசபையைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் ஜெபமாலை மாதாவைத் தேடி வருகின்றனர். நாங்கள் பிறசபையில் இருந்தாலும் எங்கள் குலசாமி இந்த ஜெபமாலை மாதா தான் என்று உவகையுடன் கூறுகின்றனர். இவ்வாறு பல்வேறு தனித்துவமிக்க, புதுமைகள் நிறைந்த, தூய ஜெபமாலை அன்னை ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப் பணியாளர் மற்றும் வட்டார அதிபர் அருள்பணி. சிங்கராயர் அவர்கள்.

கூடுதல் புகைப்படங்கள்: திரு. Antony Raj, Madha TV