932 அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னை திருத்தலம் லூர்துபுரம்

       

அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னை திருத்தலம்

இடம்: லூர்துபுரம், M. V. பாளையம் அஞ்சல், அவிநாசி தாலுகா, திருப்பூர், 641655

மாவட்டம்: திருப்பூர்

மறைமாவட்டம்: கோயம்புத்தூர்

மறைவட்டம்: கருமத்தம்பட்டி

நிலை: பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்: 

1. குழந்தை இயேசு ஆலயம், சேவூர்

2. புனித சூசையப்பர் ஆலயம், மங்கரச வளைய பாளையம்

3. புனித அந்தோனியார் ஆலயம், ஆலத்தூர்

4. கானூர்

பங்குத்தந்தை அருட்பணி. விக்டர் சந்தியாகு

குடும்பங்கள்: 160

அன்பியங்கள்: 12

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி மற்றும் 11:30 மணி 

திங்கள் -வெள்ளி திருப்பலி மாலை 06:15 மணி

சனிக்கிழமை காலை 11:30 மணி ஜெபமாலை, திருப்பலி, நவநாள் நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 08:15 மணி காலை 11:30 மணி ஜெபமாலை திருப்பலி நவநாள் நற்கருணை ஆசீர் வேண்டுதல் தேர், மதிய உணவு

திருவிழா: பிப்ரவரி மாதம் முதல் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, இரண்டாவது சனி, ஞாயிறு திருவிழா

மண்ணின் இறையழைத்தல்:

1. அருட்பணி. S. அந்தோனி ராஜ், அமெரிக்கா 

வழித்தடம்:

திருப்பூர் -சத்தியமங்கலம் வழித்தடத்தில், அவிநாசி, சேவூர் தாண்டி, திருப்பூரிலிருந்து 24கி.மீ தொலைவில் லூர்துபுரம் அமைந்துள்ளது.

Location Map: Lourdhu Madha Church, Lourdhupuram

https://maps.app.goo.gl/rCUuCBmsAiMVkhWR9

வரலாறு:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி ஆகிய இருபெரும் ஊர்களுக்கு மத்தியில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது லூர்துபுரம் என்ற சிறிய ஊர்.

அற்புத நீரூற்று:

1948-ம் அண்டு அவிநாசி பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. சூசை அடிகளார் முயற்சியினால், நமது கத்தோலிக்க தாய் திருச்சபையோடு இணைந்த சுமார் 50 குடும்பங்களுக்கு ஒரு ஆலயம் அமைக்க கரடு முரடான, வறட்சியான, மேட்டாங் காட்டு பகுதியை விலைக்கு வாங்கப்பட்டது.

14.03.1949 அன்று ஆலயம் கட்ட அஸ்திவார குழி தோண்டிய பொழுது, சுமார் 3.5 அடி ஆழத்தில் அற்புத சுவையான நீர் ஊற்று பொங்கியது. இதைக் கேள்விப்பட்ட சுற்றுபுற மக்கள் ஜாதி, மதம், இனம் பேதமின்றி வந்து இந்த அதிசய ஊற்றைப் பார்த்து அற்புதம் அதிசயம், புதுமை என்றார்கள். காரணம் இந்த இடம் நீரில்லாத வறண்ட மேட்டுப்பூமி, பாறைநிலம். பலர் பக்தியோடும், நம்பிக்கையோடும் தீர்த்தமாக, புனித நீராக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். பலர் நோய்கள் நீங்கி குணம் பெற்றார்கள்.

முதல் புதுமையாக :

மங்கரசவளைய பாளையத்தைச் சார்ந்த திரு. குப்பண்ணன், திருமதி. வள்ளியம்மாள் இவர்கள் 10 வயது மகள் காளியம்மாள் கைகால் வலிப்பு (FITS) நோயால் அவதிப்பட்டார். 03.05.1949 அன்று இந்த அற்புத அருமருந்தான புனிதநீரை குடித்தார். நலம் பெற்றார். இப்புதுமை எங்கும் பரவவே, அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான புதுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

புனித லூர்து அன்னை கெபியும், ஆலயமும்:

ஆலயம் கட்ட இருந்த இடத்தில், அழகான பாரீஸ் நகர் புனித லூர்து அன்னை கெபி போல, இங்கும் புனித லூர்து அன்னைக்கு கெபி கட்டப்பட்டு, 29.05.1949 அன்று புனிதப்படுத்தப்பட்டது.

அருட்பணி. இராயப்பர் அடிகளார் தலைமையில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 08.02.1953 அன்று மேதகு ஆயர் M. சவரிமுத்து அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 1956 -ம் ஆண்டிலிருந்து தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜான் சேவியர் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். முதல் சனிக்கிழமை பக்தி முயற்சியும், சிறப்பு நவநாள் பக்தி முயற்சியும் தொடங்கப்பட்டது. அருகிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும், நீலகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்தும் பக்தர்கள் அதிகமாக வந்து பங்கெடுத்து பயன்பெற்றார்கள். இன்றும் பயன் அடைந்து பல நன்மைகளை பெற்று வருகிறார்கள்.

புனித லூர்து அன்னையின் பெயரால் கட்டப்பட்ட கெபி மற்றும் ஆலயத்தின் பெயரால் இந்த சிறிய ஊர் "லூர்துபுரம்" என்று அழைக்கப்பட்டு பேருந்து நிறுத்தமும் உண்டானது.

பல பங்குதந்தையர்கள் இந்த திருத்தல வளர்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் அயராது அரும்பாடுபட்டு உழைத்தார்கள்.

அருட்பணி. M.S. மைக்கேல் அடிகளார், தென்னை மரங்களும், மா மரங்களும் வைத்து அமைதி தவழும் அழகிய சோலையாக்கினார். பல்நோக்கு சமூக மையம் உதவியுடன் மக்களுக்கு 35 வீடுகள் அமைத்துக் கொடுத்தார்.

அருட்பணி. M. குருசாமி அடிகளார் முயற்சியால், ஆலயத்தின் வெள்ளிவிழா நினைவாக ஆலயமுகப்பு மண்டபம் கட்டப்பட்டு, 09.02.1975 அன்று மேதகு ஆயர் சி.மா. விசுவாசம் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. 

பங்கு மக்கள் நலனுக்காக 20 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து மேதகு ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. அந்தோணி சாமி அவர்களின் பணிக்காலத்தில் 15 தொகுப்பு வீடுகள் அமைத்துக் கொடுத்தார். 

அருட்பணி.‌ அந்தோணி இருதயம் அவர்கள், திருவிழாக்காலங்களில் பயன்படும் வகையில் அலங்கார மேடை அமைத்தார்.

பொன்விழா கொண்டாட்டமும் அற்புத நீரூற்றுகளும்:

2006-ம் ஆண்டு அருட்பணி. ஜோசப் பெலிக்ஸ் அவர்கள் தலைமையில், ஆலயத்தின் 50ஆண்டுகளின் பொன்விழா நினைவாக ஆலயத்தையும், கெபியையும் விரிவாக்கம் செய்ய தொடங்கியபோது மேலும் 6 நீரூற்றுகள் வந்தன. ஆக மொத்தம் 7 நீரூற்றுகள் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன. இவை 7 அருட்சாதனங்களையும், தூய ஆவியானவரின் 7 கொடைகளையும் நினைவுபடுத்தும் விதமாகவும், கடவுளின் அருளையும் அன்னையின் உடன் இருப்பையும் உணர்த்தும் விதமாய் உள்ளன. இதன் பிறகுதான் "அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னை திருத்தலம்" என்று அழைக்கப்படுகிறது.

11.02.2007 அன்று மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ்  புதுப்பிக்கப்பட்ட ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது.

மரிய பம்பீனா:

அன்னை மரியாவின் குழந்தை பருவ குழந்தை மாதா சுரூபம் இத்தாலியில் உள்ள மிலான் நகர பேராலயத்திலிருந்து (கத்தீட்ரல்) கொண்டுவரப்பட்டு, இந்த திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

அருட்பணி. A. வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் செபமாலை தோட்டமும், கல்வாரி சிலுவைப்பாதை நிலைகளும் கட்டி திருத்தலத்தை அழகுபடுத்தினார்.

அருட்பணி. A. லூர்து இருதயராஜ் அவர்கள் ஆலயம், பீடம், கெபி, அன்னையின் அரங்கம் ஆகியவைகளை பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவியினால் புதுப்பித்து அழகுபடுத்தினார். மேலும் செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை, நவநாள் போன்ற பக்தி முயற்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு பக்தர்கள், பக்தியாய் பங்கெடுத்து மனநிறைவோடு நிறைந்த ஆசிரோடு, செல்ல ஆவன செய்தார்கள்.

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் சனிக்கிழமை காலை கொடியேற்றமும் 2-ம் சனிக்கிழமை மாலை திருப்பலியும் அலங்கார தேர்பவனியும், ஞாயிறு காலை 5.30 மணியிலிருந்து திருப்பலிகளும் 8.30 மணிக்கு ஆயர் தலைமையில் கூட்டுபாடற்பலியும், மீண்டும் 11.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் செபமாலை மற்றும் திருப்பலிகளும் தேர் பவனியும் நடைபெறும்.

இவ்விழாவை சிறப்பிக்க டிசம்பர் மாதம் 2-ம் வாரத்திலிருந்து 9 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு நவநாள் திருப்பலி, செபமாலை ஆராதனையும் தேர்பவனியும் நடைபெறும்.

மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் காலை 8.15 மணிக்கும் II.30 மணிக்கும் செபமாலை, திருப்பலி நவநாள் செபங்கள், தேவ நற்கருணை ஆசீர் மற்றும் தேர்பவனியும் நடைபெறும். பக்தர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை ஆசீரை, நன்றி கடிதங்களாகவும், வாய்மொழி சாட்சிகளாகவும் எடுத்துரைக்கின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 11.30 மணிக்கும் செபமாலை திருப்பலி நவநாள் செபங்கள், நற்கருணை ஆசீரூம் நடைபெறுகின்றன.

எல்லாம் வல்ல இறைவனுக்கும், அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னையின் அருள் ஆசீருக்கு நன்றியாகவும் அன்னைக்குப் புகழ்சாற்றும் வகையிலும் பங்கு மக்கள், அன்பிய குடும்பங்கள் மற்றும் பக்தர்கள் நன்கொடையாளர்கள் உதவியினால் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் திருவிழா அன்றும், 9 சிறப்பு நவநாள் வாரங்களிலும் மற்றும் முதல் சனிக்கிழமைகளிலும் மதியம் அன்பின் விருந்தும் நடைபெறுகிறது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. ஜான் சேவியர் (1956-1960)

2. அருட்பணி. M. S. மைக்கிள் (1961-1968)

3. அருட்பணி. இலாசர் அற்புதம் (1968-1972)

4. அருட்பணி.‌ குருசாமி (1972-1977)

5. அருட்பணி.‌ தாமஸ் (1977-1980)

6. அருட்பணி.‌ லூர்து சாமி (1980-1984)

7. அருட்பணி. அந்தோணி சாமி (1984-1987)

8. அருட்பணி. S. மரியதாஸ் (1987 -5மாதங்கள்)

9. அருட்பணி. மரிய அந்தோனி (1988-1991)

10. அருட்பணி. பங்கிராஸ் ஜோசப் (1992-1995)

11. அருட்பணி.‌ அந்தோணி இருதயம் (1995-1999)

12. அருட்பணி. M. S. மைக்கிள் (2000-2003)

13. அருட்பணி. A. ததேயு பால்ராஜ் (2003-2004)

14. அருட்பணி. G. ஜோசப் பெலிக்ஸ் (2004-2007)

15. அருட்பணி.‌ ஆன்றனி செல்வராஜ் (2007-2008)

16. அருட்பணி. ஆரோக்கிய ததேயுஸ் (2008-2009 பொறுப்பு 10 மாதங்கள்)

17. அருட்பணி. ஆல்பர்ட் நெல்சன் (2009-2010)

18. அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ் (2010-2015)

19. அருட்பணி. லூர்து இருதயராஜ் (2015May -2021Jan)

20. அருட்பணி.‌ விக்டர் சந்தியாகு (2021Jan முதல்....)

அன்னையின் அன்பு விசுவாசிகளே..! அன்னையின் அருள் ஆசீர் பெற்று வளமோடும் நலமோடும், என்றும் மனமகிழ்வோடும் வாழ உங்களையும் அன்போடு அழைக்கிறோம்.

அற்புத நீரூற்றுகளின் புனித லூர்து அன்னை உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி.‌ விக்டர் சந்தியாகு மற்றும் ஆலய உபதேசியார் திரு. பர்த்தலோமியா, அருட்சகோதரர் சவரிமுத்து (சேவூர் மண்ணின் மைந்தர்) ஆகியோர்.

கூடுதல் தகவல்கள்: முன்னாள் பங்குத்தந்தையர் அருட்பணி. ஆல்பர்ட் நெல்சன் மற்றும் அருட்பணி. லூர்து இருதயராஜ் ஆகியோர்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் செயலாளர் மற்றும் கொமாரபாளையம் பங்குதந்தை அருட்பணி. சேவியர் கிளாடியஸ் ஆகியோர்.