புனித லூர்து அன்னை ஆலயம்
இடம்: மரியம்மாள்புரம், உடன்குடி, திருச்செந்தூர் தாலுகா
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: மணப்பாடு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், உடன்குடி
பங்குத்தந்தை அருட்பணி. பன்னீர்செல்வம்
குடும்பங்கள்: 140
ஞாயிறு திருப்பலி காலை 08:45 மணி
திருவிழா: செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்:
அருட்சகோதரி. லூர்து பிலோமின் மேரி, வியாகுல மாதா சபை
வழித்தடம்: தூத்துக்குடி -திருச்செந்தூர் -உடன்குடி
திருநெல்வேலி -உடன்குடி
நாகர்கோவில் -திசையன்விளை -உடன்குடி
குலசேகரன்பட்டினம் -உடன்குடி
Map location: St. Lourdes Church
https://maps.app.goo.gl/9f9pBxPEgyriThS8A
வரலாறு:
இந்தியாவின் தென்கோடியில், தமிழ்நாட்டை சார்ந்த தூத்துக்குடி மாவட்டம் (தூத்துக்குடி மறைமாவட்டம்) உடன்குடியில் உள்ள அழகிய சிற்றூர் மரியம்மாள்புரம்.
சுமார் 115 வருடங்களுக்கு முன் நிழல் தரும் நெஞ்சங்களான வேப்பமரங்களும். நாவிற்கு சுனை கொடுக்கப்பிறந்த பனை மரங்களும் நிறைந்த பசுஞ்சோலையான இவ்விடத்தை, பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த சேசு சபை குருவானவர் சுவாமி நிக்கோலஸ் அடிகளார் வாங்கி, திரு. சாமுவேல், திரு. மரிய சுவாமியடியான், திரு. பொன்னையா, இவர்களது சகோதரி மரியம்மாள் ஆகியோரை குடியமர்த்தினார்.
அக்காலத்தில் உடன்குடி, சாத்தான்குளம் பங்குடன் இணைந்திருந்தது. அதன்பின் அங்குமிங்குமாக இருந்து வந்து இவ்வூரில் மக்கள் குடியிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
குடியிருக்கும் ஊருக்கு பெயர் வைக்க எண்ணி அவரவர் எண்ணங்கள் வெளிப்பட, கடைசியில் தேரியூரில் இருந்து வந்து குடியமர்ந்த ஒரு பெண்மணி "மரியம்மாள்புரம்" என்று சொல்ல, அப்பெயர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றையிலிருந்து இவ்வூர் மரியம்மாள்புரம் என்றழைக்கப்பட்டு வருகிறது. பெயர் வைத்த பெண்மணியின் பெயர் பரிபூரணம் அம்மாள். இவரை அனைவரும் செல்லமாக "தேரியூரா கிழவி" என்றும் அழைப்பதுண்டாம்.
காலவெள்ளம் ஓடிக்கொண்டிருக்க இப்போது பவள விழா (75ஆண்டுகள்) கொண்டாடிய கோவிலின் இடதுபுறம் தற்சமயம் கெபி அமைந்துள்ள இடத்தில், உலக இரட்சகர் நினைவாக ஓலைக்கோவில் ஒன்று கட்டி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 32 வருடங்களுக்குப்பின், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், முதன் முதலாக குடியமர்ந்தவர்களின் பெரு முயற்சியால், பவளவிழா கொண்டாடியுள்ள தூய லூர்து அன்னையின் ஆலயம் கட்டப்பட்டு, 1929-ம் வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது.
இதற்கிடையே மேலும் சில குடும்பங்கள் இங்கு வந்து குடியேறின.
1929-ம் ஆண்டு சாத்தான்குளத்தில் இருந்து பிரிந்து உடன்குடி தனிப்பங்கானதும், மரியம்மாள்புரம் ஆலயமானது, உடன்குடியின் இணைப் பங்கானது. 1960-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி முதல் ஆலயத்தின் முன்புறம் இருந்த அனைத்து வேப்பமரங்களும் வெட்டப்பட்டன. அதன்பிறகு வந்த காலங்களில், ஊரில் உள்ள ஒரு சிலரது முயற்சியினால் இன்றும், மரியம்மாள்புரம் அதே மரங்களுடன் கூடிய பசுஞ்சோலையாக காட்சியளிக்கிறது.
1984, 1992-ம் வருடங்களில் மக்களின் குடியிருப்பு வசதிக்காக பனைமரங்களும் வெட்டப்பட்டன. எஞ்சிய சில மரங்கள் மட்டும் பழைய காலத்தை கண்முன் நிறுத்திகொண்டிருக்கின்றன.
1929-ம் வருடம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டாலும், உலக இரட்சகர் ஆலயம் (ஓலைக்கோவில்) அகற்றப்படாமல் அதே இடத்தில் இருந்து வந்திருக்கிறது. மாதா சுரூபத்தையும் இங்கு வைத்து கவனித்து வந்தனர். அதன்பிறகு சாத்தான்குளம் பங்கு இலங்கநாதபுரத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய திரு. மிக்கேல் சவரியப்பன் அவர்கள் மாதாவின் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பினாலும், பக்தியினாலும், ஓலைக்கோவில் இருந்த இடத்தில் லூர்து அன்னைக்கு கெபி கட்டினார். இந்த கெபிக்கு உடன்குடி பங்குத்தந்தை மறைதிரு. வெனான்சியூஸ் அவர்களால் 23.1.1967 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 29-7-1967 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. தாமஸ் D.D.C.L அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
25 வருடங்களாக திரு. மிக்கேல் சவரியப்பன் அவர்களாலும், அவருக்குப்பின் அவரது மைந்தர்களாலும் நிர்வகிக்கப்பட்ட கெபி 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதியிலிருந்து ஆலய நிர்வாகத்துடன் இணைந்தது.
1973-74 ஆண்டு காலகட்டத்தில் ஆலய உட்புறம் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய பீடமும், தரைத்தளமும், வெளிப்புறம் பூச்சு வேலையும் மறைதிரு. வெனான்சியுஸ் அவர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் 1986ம் ஆண்டு அக்டோபரில் மறைதிரு. ஸ்டீபன் கோமஸ் அவர்களின் தீவிர முயற்சியினால் ஊரின் தென்பகுதி கோட்டைசுவர் கட்டும்பணி துவக்கப்பட்டு, 1987-ம் ஆண்டு ஜனவரியில் முடிந்தது.
1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கெபியின் வெள்ளி விழா வெகு சிறப்பாக விழா மலருடன் கொண்டாடப்பட்டது. அதே வருடம் ஜனவரி மாதம் மரியம்மாள்புரம் மக்களின் நெடுநாள் ஆசை நிறைவேறும் வகையில், புனித மிக்கேல் அதிதூதர் கெபி ஊரின் தென் பகுதியில் ஊர்மக்களின் ஆதரவாலும், உதவியினாலும், திரு. ஜோசப் ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியாலும் கட்டி முடிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டில் ஆலயத்தின் முன் மண்டபம் அழகுற கட்டப்பட்டது.
2003-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ ஐக்கிய குருத்தோலை பவனியானது வில்லி குடியிருப்பு, பண்டாரஞ்செட்டி விளை, கிறிஸ்தியான் நகரம் வழியாக அனைத்து மக்களுடலும் இணைந்து வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2004-ம் ஆண்டு அக்டோபரில் மறைதிரு. அலெக்ஸாண்டர் சுவாமிகளால் பவளவிழா ஆலயத்தில், திவ்விய நற்கருனை ஸ்தாபகம் செய்யப்பட்டது. லூர்து அன்னையின் பவளவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆலய உட்புறம், பீடம், ஆலய முகப்பு அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது. மரியம்மாள்புரத்தை சேர்ந்த அனைவராலும் நன்கொடை திரட்டப்பட்டு, ஊரில் இருக்கும் மக்களின் நல்லாதரவுடனும், நிர்வாகிகளின் மேற்பார்வையிலும், இளைஞர்களின் சலிக்காத உழைப்பினாலும் ஆலயம் புதுப்பிக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பவளவிழா 23.09.2005 அன்று மேதகு ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்புற கொண்டாடப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஆலய பீடமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு மணவை மறைவட்ட முதன்மை குரு பேரருட்பணி. எஸ். எம் சகாயம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மீண்டும் 2024 இல் ஆலயம் மற்றும் ஆலயபீடத்திற்கு வர்ணம் பூசப்பட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
4 குடும்பங்களுடன் ஆரம்பித்த மரியம்மாள்புரம் இன்று 140 குடும்பங்களுடன், லூர்து அன்னையின் பெயரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
கெபிகள்:
தூய லூர்து மாதா கெபி
தூய மிக்கேல் அதிதூதர் கெபி
பங்கேற்பு அமைப்புகள்:
1.பாலர் சபை
2.நற்கருணை வீரர் சபை
3.அமலோற்பவ மாதா சபை
4.திருக்குடும்ப சபை
5.புனித டோமினிக் சாவியோ வாலிபர் சங்கம்
6.புனித சூசையப்பர் சங்கம்
7.பாடகர் குழு
மரியம்மாள்புரம் கிளைப் பங்கில் பணியாற்றிய உடன்குடி பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. Rev. Fr. Stansilaus Raja 1929-1936
2. Rev. Fr. J.V. Poobalarayar 1936-1939
3. Rev. Fr. Gasper Roche 1939-1940
4. Rev. Fr. T. Michaelnathar 1941-1950
5. Rev. Fr. F.M. Packia Nathar 1950-1953
6. Rev. Fr. Mathew Fdo 1953-1958
7. Rev. Fr. Joseph Fdo 1959-1962
8. Rev. Fr. M.R. Augustin 1962-1965
9. Rev. Fr. Venantius Fdo 1965-1974
10. Rev. Fr. Maria Manickam 1974-1977
11. Rev. Fr. F. Devasahayam 1977-1981
12. Rev. Fr. Alwin V. Rayar 1981-1983
13. Rev. Fr. Vladmir Rayen 1983-1986
14. Rev. Fr. Stephen Gomaz 1986-1987
15. Rev. Fr. G. Aswald 1987-1988
16. Rev. Fr. Karunakaran Gomaz 1988-1993
17. Rev. Fr. Jegadish 1993-1994
18. Rev. Fr. M. Irudaya Raja 1994-1999
19. Rev.Fr. I. Joseph Ladislaus 1999 -2004
20. Rev.Fr. Alexander 2004-2006
21. Rev.Fr. Charles 2006-2008
22. Rev.Fr. F. Irudayaraj Fdo 2008-2013
23. Rev.Fr. Jerosin A Kattar S. 2013-2015
24. Rev.Fr. Sahayam S.M 2015 - 2019
25. Rev.Fr. Promilton Lobo 2019 - 2021
26. Rev.Fr. Victor Lobo 2021 - 2023
27. Rev.Fr. John Britto 2023 - 2024
28. Rev.Fr. Paneerselvam N.A 2024
ஆலய வரலாறு: 2005-ம் ஆண்டு வெளிவந்த ஆலய பவளவிழா மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திரு. சித்திரை ராஜ், மரியம்மாள்புரம்.





