224 புனித இராயப்பர் ஆலயம், இராயப்பபுரம்


புனித இராயப்பர் ஆலயம்

இடம் : இராயப்பபுரம், சூரன்குடி (PO)

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய தோமையார் ஆலயம், தென்மயிலை நகர், வேம்பார்

பங்குத்தந்தை : அருட்தந்தை C. ஜார்ஜ் ஆலிபன்

குடும்பங்கள் : 100

ஞாயிறு மாலை 06.30 மணிக்கு செபமாலை இரவு 07.00 மணிக்கு திருப்பலி

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள்.

இராயப்பபுரம் ஒரு கண்ணோட்டம் :

இராயப்பபுரமானது வேம்பார் தூய தோமையார் ஆலயத்தின் இணைப் பங்காகும். செம்மண் குன்றுகளாலும், பனை மரங்களாலும், உடை மரங்களாலும், தென்னந்தோப்புகளாலும் சூழ்ந்துள்ள இவ்வூர், புனித இராயப்பர் ஆலயத்தை நடுநாயமாகக் கொண்டு எழிலுற அமைந்துள்ளது.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் இராயப்பபுரம் என்று அழைக்கப்படும் ஊரானது காடுகள், நெருஞ்சி முட்புதர்கள், பனை மரங்களையும் கொண்டு ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியாக இருந்தது.

மலபார் பகுதியிலிருந்து திரு அ இராயப்ப நாடார் என்பவர் 35- ம் வயதில் தமது ஐந்து குழந்தைகளுடன் 1880 -ம் ஆண்டளவில் தமது பிழைப்பிற்காக இப்பகுதிக்கு வந்துள்ளார்.

இராயப்ப நாடார் ஒரு ஆன்மீக வல்லமை படைத்தவராக விளங்கினார். அவர் பகல் பொழுதில் வேலைக்கு தங்கம்மாள் புரத்திற்கு செல்லும் போது குழந்தைகள் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு வட்ட வடிவ கோட்டை வரைந்து அதில் அவர்களை விட்டுச் செல்வாராம்..இக்கோட்டை தாண்டி எந்தவொரு இடையூறுகளும் விஷப்பூச்சிகளும் வருவதில்லையாம்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின் நான்கு பெண்மக்களை அருகிலுள்ள ஊர்களில் திருமணம் செய்து கொடுத்தார். மகன் மாதவடியான் நாடார் தமது உழைப்பால் பெரும் நிலக் கிழார் ஆனார். இவ்வாறு இராயப்பபுரம் ஊர் இராயப்ப நாடார் வழித் தோன்றல்களால் சிறப்படைந்தது.

தனிச் சிறப்பு :

தொழில் ஏதும் இல்லையா..? இராயப்பபுரம் செல் களை எடுத்தாகிலும் கஞ்சி குடிக்கலாம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் உள்ள ஒரு வாக்கியம். (அதாவது பயிர்களின் ஊடே வளர்ந்து வரும் களைகளை எடுத்து, அதற்கு கூலி பெறுவது)

காரணம் பனை மரங்கள் அடுக்கடுக்காக அடர்ந்திருந்ததாலும், 🌾விவசாயம் செழித்திருந்ததாலும், தொழில் வளம் சிறந்திருந்ததாலும் இராயப்பபுரம் வந்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள். அவ்வளவு செழிப்பான ஊராக இருந்தது இவ்வூர்.

தற்போது இம்மக்கள் 6 மாதங்களுக்கு பனைத் தொழிலும் 6 மாதங்களுக்கு விவசாயமும் செய்பவர்களாக உள்ளனர். தமிழர் திருநாளான தை மாதம் 01- ம் தேதி பனையேற்று தொழிலுக்கான கருவிகளை ஆலயத்திற்கு கொண்டு வந்து திருப்பலி நிறைவேற்றி செபித்து, மந்திரித்து அதன்பின் அன்றே பனைத் தொழில் துவங்கும் வழக்கம் அன்று தொட்டு இன்றுவரை உள்ளது.

மேலும் சுத்தமான பதனீர், கருப்புக்கட்டி வாங்க மக்கள் இராயப்பபுரம் வருவது தனிச் சிறப்பு.

புனித இராயப்பர் ஆலயம் :

மலபார் பகுதியிலிருந்து வந்த திரு இராயப்பன் நாடார் இறை பக்தியிலும், ஜெப வழிபாடுகளிலும் சிறந்து விளங்கினார். எனவே தம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் புனித இராயப்பருக்கு 1890 -ம் ஆண்டு ஓலைக் கோயில் எழுப்பி இறைவனை வழிபட ஆரம்பித்தார்.

இந்த ஓலைக்கோயில் அவரது மகன் திரு மாதவடியான் நாடார் பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கிய போது மண் கோயிலாக உயர்த்தினார்.

17-03-1982 ல் அருட்பணி குரூஸ் மரியான் சுவாமிகள் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது கற்கோவில் எழுப்பப்பட்டு மேதகு அமலநாதர் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இவ்வாலயம் சிதிலமடைந்து பிளவுகள் ஏற்பட்டதால் மேதகு ஆயர் அவர்களின் அனுமதியுடன் 2004 -ம் ஆண்டு இடிக்கப்பட்டது.

16-04-2005 அன்று தற்போதைய புதிய ஆலயத்திற்கு பங்குத்தந்தை அருட்பணி ஜான் போஸ்கோ அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உடல் உழைப்பு மற்றும் நன்கொடைகளுடன் மேதகு ஆயர் யுவான் அம்புறோஸ் அவர்களின் நிதியுதவி, பங்குத்தந்தையின் சிறப்பான வழிநடத்துதல் ஆகியவற்றால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 02-02-2009 அன்று ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

புனித இராயப்பர் தொடக்கப்பள்ளி:

இராயப்ப நாடாரை மூலைக்கல்லாகக் கொண்டு எழுந்த இராயப்பபுரம் மக்களுக்கு கல்வி ஒரு அவசியத்தேவை என்பதை உணர்ந்த மாதவடியான் நாடார் அவர்கள் 05-01-1948 ல் புனித இராயப்பர் தொடக்கப் பள்ளியை நிறுவினார். அரசு அதிகாரிகள் பார்வையிட்டு 18-03-1948 ல் நிரந்தர அங்கீகாரம் கிடைத்து.

இராயப்பர் குருசடி ஒன்றும், பொதுக் கல்லறைத் தோட்டமும் உள்ளது.

ஊர் மக்களை நிர்வகிக்க, இம் மக்களில் ஒருவரை கிராமத் தலைவராக தேர்ந்தெடுத்து, அவருக்கு துணை புரிய ஏழு பேர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இவ்வாறு இராயப்பபுரம் புனித இராயப்பர் ஆலய இறை சமூகமானது மேன்மேலும் சிறப்புற்று வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.