763 புனித அடைக்கல அன்னை திருத்தலம், ஏலாக்குறிச்சி

              

புனித அடைக்கல அன்னை திருத்தலம்

இடம்: திருக்காவலூர் -ஏலாக்குறிச்சி, திருமானூர் வழி, 621715

தொடர்புக்கு: 04329 246222,

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: புள்ளம்பாடி

நிலை: திருத்தலம் 

கிளைப்பங்குகள்:

1. புனித சவேரியார் ஆலயம், புனித ரெமிஜியூஸ் ஆலயம், சுள்ளங்குடி

2. புனித ஜெபமாலை மாதா ஆலயம், வடுகர்பாளையம்

3. புனித அந்தோனியார் ஆலயம், வரப்பன்குறிச்சி

பங்குத்தந்தை & அதிபர்: அருள்திரு. A. சுவக்கின்

தொடர்புக்கு: +91 99426 27683

உதவிப் பங்குத்தந்தை: அருள்திரு. இன்பென்ட் ராஜ், M.Ss.Cc

குடும்பங்கள்: 13 (கிளைப்பங்குகள் சேர்த்து 264)

அன்பியங்கள்: 6 (கிளைப்பங்குகள் சேர்த்து)

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி மற்றும் 11:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி மற்றும் 11:30 மணி

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு சிறு தேர்பவனி, திருப்பலி

மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை அருங்கொடை செபவழிபாடு மற்றும் திருப்பலி, அன்னதானம்

திருவிழா: உயிர்ப்பு பெருவிழாவிற்கு பின்வரும் இரண்டாம் சனிக்கிழமை கொடியேற்றம். உயிர்ப்பு பெருவிழாவிற்கு பின்வரும் 3-ம் சனி, ஞாயிறு பெருவிழா.

வழித்தடம்: தஞ்சாவூர் -கண்டியூர். இங்கிருந்து திருமானூர் வழியாக ஏலாக்குறிச்சி வந்தடையலாம்

வேளாங்கண்ணி -தஞ்சை பழைய பேருந்து நிலையம் -ஏலாக்குறிச்சி.

தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியாக அரியலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் திருமானூரில் நின்று செல்கின்றன.

Location Map: Elakurichi Adaikala Madha Shrine 085240 42442

https://maps.google.com/?cid=12837879025384738069&entry=gps

வரலாறு:

அருள்நிறை அடைக்கல அன்னையின் அரவணைப்பிலே... குடந்தை மறைமாவட்டத்தில், வற்றாது வளம் சுரக்கும் கொள்ளிட வடகரையில், நல்லிடம் கண்டு குடுபுகுந்தார் வீரமாமுனிவர்.

"உருவிலான் உருவாகி உலகில், ஒரு மகன் உதிப்ப கருவில்லா கருத்தாங்கி, கன்னித்தாய் ஆகினையே..."

-என நெஞ்சார மனங்குளிர்ந்து பாடி தேவமாதாவை தமது சொத்தாக கொண்டு வந்தார். தேவதாயை இனம் காட்டி இதுதான் உங்கள் தாய் என மனமுருக கலம்பகம் பாடினார். அன்னையை அண்டி வந்தோர்க்கு அடைக்கலத்தாய் என்றார். தஞ்சம்! தஞ்சம்!! என்று தஞ்சையிலிருந்து தவித்து வந்த மக்களுக்கு இத்தாய் தஞ்சமளித்தாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்காவலூர் -ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னையின் திருத்தல வரலாற்றைக் காண்போம்....

"சகோதர சகோதரிகளே! உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்."

1 தெசலோனிக்கர் 5:12

அமைவிடம்:

"கனைபூத்த சோணாட்டுக் காவிரியின் வடகரைமேற்

சினைபூத்த நிழற்பொழில்வாய்ச் சிங்கநெடுங் கொடிநிழற்றுந்

திருக்காவ லூரகத்துத் திகழொளிவாய் மணிக்கோயி

லருட்காவ லியற்றிநமை யளிப்பதுநின் றமையாமோ."

காவிரியின் கிளைநதியாம் கொள்ளிடத்திடத்தின் வடகரையில், அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி). தஞ்சை -அரியலூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமானூரில் இருந்து 9கி.மீ தொலைவில், வானுயர எழுந்து நிற்கிறது அருள்நிறை அடைக்கல அன்னையின் திருத்தலம்.

1630 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. 1677 ஆம் ஆண்டில் புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) ஏலாக்குறிச்சியில் கால்தடம் பதித்து பணிபுரிந்தார். 1605 ஆம் ஆண்டு முதல் 1777 வரை சேசு சபை குருக்கள் ஏலாக்குறிச்சியை வழிநடத்தி வந்தனர். 

கிறிஸ்தவர்கள் வருகை:

தஞ்சைத் தரணியை ஆண்ட ஷாஜி (1682-1711), கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சொல்லொணா அளவிற்கு கொடுமைப் படுத்தினான். அருட்பணி. ஜோசப் கர்வாலோ அடிகளாரை சிறைபடுத்திக் கொன்றான். அவனுடைய இளவல் சரபோஜி 1711-ம் ஆண்டு அரியணை ஏறினான். இவராவது கிறிஸ்தவர்களுக்கு கருணை காட்டுவார் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். 

கொடுமைகளின் கோரத்தை தாங்க இயலாத கிறிஸ்தவர்கள், தங்களது உயிரையும், கத்தோலிக்க நம்பிக்கையையும் காத்துக் கொள்ளும் பொருட்டு, கொள்ளிடம் தாண்டி தப்பித்து வந்து நடுக்காட்டில் குடியேறினர்.

முதன் முதலில் புளியங்குடியில் இருந்து சில கிறிஸ்தவர்கள் ஏலாக்குறிச்சியில் குடியேறி கூரை ஆலயம் ஒன்றை நிறுவினார்கள். முதல் மறைப்பணப்பு பணியாளராக வந்தவர் சைமன் கர்வாலோ அடிகளார். அவர் 1705 ஆம் ஆண்டு மதுரை மறைமாநிலத்தை விட்டு, திருவாங்கூர் சென்றதால், அருட்தந்தை. மானுவேல் மச்சாடோ அடிகளார் ஏலாக்குறிச்சியில் பணியாற்றினார்.

வீரமாமுனிவர்:

இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோனே என்னும் சிற்றூரில் பெஸ்கி குடும்பத்தில் பிறந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி இயேசு சபை குருவானவர் ஆவார். 1710 ஆம் ஆண்டு கோவா துறைமுகம் வந்து இறங்கிய இவர், 1716 ஆம் ஆண்டு ஏலாக்குறிச்சியில் மூன்றாவது பங்குத்தந்தையாக பணியாற்றினார். 1716-1736 வரை அடிகளார் பணிபுரிந்த காலம் ஏலாக்குறிச்சியின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.

தனது தன்னிகரில்லா தலைவனாம் இயேசுவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்புச் செய்தியை தமிழ் கூறும் நல்லுலகு அறிய வேண்டுமானால், இயேசுவின் மறை உண்மைகளை தமிழிலேயே கூற வேண்டும்...!!! தமிழனாகவே வாழ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து தமிழ் கற்று, தமிழ் மீது காதல் கொண்டு, தமிழ் இலக்கண, இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, கம்பனைப் போல, இளங்கோவைப் போல, "தேம்பாவணி" என்ற தேன் சொட்டும் காப்பியத்தைப் படைத்தார்.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய பகுதிகளை இலத்தீனில் மொழி பெயர்த்து, உலக பொதுமறையாம் திருக்குறளை உலகிற்கு வெளிப்படுத்தினார். 

தமிழ், இலத்தீன், போர்ச்சுக்கீசியம், ஸ்பானிஷ் ஆகிய நான்கு மொழிகளுக்கும், பொது அகராதி படைத்து தமிழ் செம்மொழியாக உதவியவர். "கல்லூரி" என்ற தமிழ் சொல்லுக்கும் சொந்தக்காரர். சொல்லில் வடிக்க இயலாத வண்ணம் வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் உள்ளன.

ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற இயற்பெயரை, முதன் முதலில் தைரியநாதர் என்று மொழி பெயர்த்தவர், இப்பெயரில் தைரியம் என்னும் வடசொல் உள்ளதை வீரம் (தைரியம்) என்று தமிழ்ப்படுத்தி "வீரமாமுனிவர்" என்ற தனித்தமிழ் புரட்சியை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே துவக்கி வைத்த பெருமை வீரமாமுனிவரையேச் சாரும்.

1719 ஆம் ஆண்டு முதல் தனது இறுதி காலமான 1747 ஆம் ஆண்டு வரை அடிகளார் இயற்றிய நூல்கள் 36 ஆகும்.

அக்காலத்தில் தமிழ் படிப்போருக்கு இருந்து வந்த நெடில் எழுத்துக்கள் தொடர்பான குழப்பங்களை அடிகளார் நீக்கி வைத்தார். "ஏ", "ர", "ே" என்ற எழுத்துகளில்; எ என்பனவற்றிற்கு அடிக்கோடிட்டும் "ெ" குறிலை "ே" என இரட்டைக் கொம்பாக்கி நெடிலாக்கியும் வழக்கத்திற்கு கொண்டு வந்தார். இப்புதிய முறைகளை அன்றிருந்த தமிழ் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். காகிதம் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில், ஓலைச்சுவடிகளே தாட்களாகப் பயன்பட்டு வந்தன. எனவே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையில் பாடல்களாலேயே செய்திகள் யாவும் சொல்லப்பட்டன.

வீரமாமுனிவர் படைத்த முப்பத்தியாறு நூல்கள்:

பாநடை நூல்கள் 8:

1. தேம்பாவணி

2. திருக்காவலூர் கலம்பகம்

3. கித்தேரியம்மாள் அம்மானை

4. அன்னை அழுங்கால் அந்தாதி

5. அடைக்கல மாலை

6. அடைக்கல நாயகி வெண்கலிப்பா

7. வண்ணக் கலைகள்

8. கருணாம்பர பதிகம்

உரைநடை நூல்கள் 10:

1. வேதியர் ஒழுக்கம்

2. வேத விளக்கம்

3. பேதக மறுத்தல்

4. உலூத்தரி தைத்தார் இயல்பு

5. வாமன் சரித்திரம்

6. பரமார்த்த குரு கதை

7. திருச்சபைக் கணிதம் (இலத்தீன்) 

8. ஞான உணர்த்துதல்

9. ஞான விளக்கம்

10. ஞானக் கண்ணாடி

இலக்கண நூல்கள் 4:

1. கொழுந்தமிழ் இலக்கணம், இலத்தீன்

2. செந்தமிழ் இலக்கணம், இலத்தீன்

3. கிளாவிஸ் என்னும் திறவுகோல், இலத்தீன்

4. தொன்னூல் விளக்கம், (ஐந்திலக்கண நூல்).

அகர முதலிகள் 5:

1. சதுரகாதி

2. தமிழ் இலத்தீன் பேச்சு மொழி (9000 சொற்கள்)

3. போர்த்துக்கீசிய -இலத்தீன் -தமிழ் அகரமுதலி (4353 சொற்கள்)

4. தமிழ் -பிரெஞ்சு அகரமுதலி

5. தமிழ் -ஆங்கில அகரமுதலி

மொழிபெயர்ப்பு நூல் ஒன்று:

1. திருக்குறள் (அறத்துப்பால், பொருட்பால் மட்டும் இலத்தீன் மொழியில்)

மடல் இலக்கியம் 2:

1. திருக்கடையூர் நாட்டுத் திருச்சபைக்கு எழுதியது

2. பொதுமடல்

தொகுப்பு நூல்கள் 2:

1. தமிழ்ச்செய்யுள் தொகை

2. திருவள்ளுவப் பயன்

மருத்துவ ஏடுகள் 3:

1. வைத்திய நச காண்டம்

2. இருண வாகடம்

3. அணுபோக வைத்திய சிகாமணி

வடமொழி நூல் ஒன்று:

1. வாக்கிய சித்தாந்தம்.

திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி):

ஏலாக்குறிச்சி என்ற பெயர் இயலாக் குறிச்சியில் இருந்து மருவி வந்ததாக வாய்மொழி வழக்கு. அதாவது தீமை செய்ய இயலாக் குறிச்சியாக இருந்த காரணத்தினால் தான் என்னவோ!! கொடுமைக்கு ஆளான கிறிஸ்தவர்கள் தஞ்சம் தேடி இந்த ஊருக்கு வந்ததாகவும் கொள்ளலாம்.

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நகரில் யானை கட்டிப் போரடிக்கும் சோழ வளநாடு என்று புகழ்பெற்ற தஞ்சை தரணியில், 1728 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் கொடிய பஞ்சம் நிலவியது. பெருநகரமாக விளங்கிய மகாதேவி பட்டணத்தில் ஏற்பட்ட பட்டினிச் சாவுகள் ஏராளம். பிணங்களை அடக்கம் செய்யக்கூட இயலாத நிலையில் வழியோரத்திலும், பொது இடங்களிலும் விரவிக் கிடந்தன. பெற்றப் பிள்ளைகளையே அற்பத் தொகைக்கு விற்றவர்கள் ஏராளம் ஏராளம். எனவே விற்பனை தடைச்சட்டம் கூட இயற்றப் பட்டதாம்!!

அரச கொடுமைகளால் தப்பித்து வந்து, ஏலாக்குறிச்சியில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள் கூட மாற்று சபையினரின் காசுக்காக மாற்றங் கண்டனர். தன்னோடு உடன் ஊழியம் செய்த உபதேசியார்களுக்கு ஒரு ரூபாய் ஊதியம் கூட தரமுடியாமல் தவித்தார் முனிவர். வாய்ப்பைப் பயன்படுத்திய சில பணக்கார சபையினர் உபதேசியார்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து, கத்தோலிக்க திருமறையில் இருந்து கவர்ந்து சென்றனர்.

உபதேசியார்களே ஓடிப் போனார்கள் என்றால், மற்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா!!! மனம் உடைந்த முனிவர், ஏலாக்குறிச்சியில் எஞ்சியிருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அன்னையின் அருட்காவலில் வைத்ததோடு மட்டுமல்லாமல், ஆலயம் அமைந்த பகுதியை திருக்காவலூர் (திரு+காவல்+ஊர்), அதாவது கடவுள் காவல் செய்யும் ஊர் எனப் பெயரிட்டு அழைத்தார். அன்னைக்கு அடைக்கல அன்னை என புதுப் பெயர் சூட்டினார். கித்தேரியம்மாள் கெபி அமைத்து, 'கித்தேரியம்மாள் அம்மானை' பாடி கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தினார்.

அடைக்கல அன்னை:

"மீனே தலையரும்ப வெண்மதியே தாளரும்பப் பானே யுடலரும்பப் பாங்குருவைத் -தானே ருடைத்தா டிருக்காவ லூரகத்து வைத்தா டுடைத்தாள் வினைத்துயரைத் தொக்கு". 

தான் வணங்கிய அடைக்கல அன்னையை அணு அணுவாகச் சுவைத்துச் சுவைத்துப் பாடல் புனைந்து பரவசப்பட்டார் முனிவர்.

அடைக்கல அன்னையின் திருவுறு, விண்மீன்கள் மணிமகுடமாய் மலர, வளர்கின்ற பிறைநிலவு அன்னையின் பாதம் வருட, உலகிற்கெல்லாம் ஒளி கொடுக்கும் ஆதவனே அன்னை தம் ஆடையாக மிளிர தன்னுடைய திருவடிகளை திருக்காவலூரில் பதித்தார்.

"பாடிப் புகழ்ந்து படர்காவ லூர்நங்கை நாடி வணங்கு நரர் (மனிதர்) எல்லாம் -கேடிலரே நலம் பெறுவர்" என்று சொல்லி, திருக்காவலூர் புண்ணியபூமியில் ஒரு புல்லாக பிறக்க மாட்டேனோ என்று நெகிழ்ந்து பாடினார். 

கற்கோயில்:

அன்னையை புன்னகையோடு, பொன்நகை அணிந்த தமிழ்ப் பெண்ணாக வடித்து, அந்த திருச்சுரூபத்தை மணிலாவில் இருந்து வரவழைத்து, தான் பொய்யா மறை திசையாம் வடதிசை நோக்கி எழுந்தருளச் செய்து, சொற்கோயிலோடு (நூல்கள்), கற்கோயிலும் 1716-1720 ஆண்டுகளில் கட்டி பெருமை சேர்த்தார்.

வீரமாமுனிவர் காலத்தில் அன்னையின் புதுமை:

ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராய நயினார், இராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் மரணத்தை எதிர்நோக்கி துன்பப்பட்டு வந்தார். மருத்துவ முறைகள் அனைத்தும் பயனற்றுப் போகவே, திருக்காவலூர் அடைக்கல அன்னையின் அருட்காவல் நாடி வந்தார் சிற்றரசர். வீரமாமுனிவர் அவர்கள் மன்னரின் வேதனையைக் கண்டு அன்னையை நோக்கி, அன்னையே!!! நீயல்லால் மன்னரின் நோயை யார் தீர்ப்பார், என வேண்டி பச்சிலை தேடிச் சென்றார்.

அப்போது சுட்டெரிக்கும் வெயில் காலம். புல்லெல்லாம் பொசுங்கிப்போன கடுங்கோடை. ஆனால் அதிசயமாக!!! வறண்டு போன பூமியில் இருந்து தண்ணீர் கொப்பளித்து வந்ததை (மாதா குளம்) கண்ட முனிவர், இது அன்னையின் புதுமை!! புதுமையோ புதுமை!!! எனப் பூரித்து போனார். 

புதுமை ஊற்றுதான் அன்னையின் அருமருந்து என்பதைக் கண்டுகொண்டார். சற்றும் தாமதியாமல் நீரோடு சேற்றை அள்ளி மன்னரின் இராசப்பிளவைக் கட்டியில் பூசினார். என்னவிந்தை!!!! அன்றே அரசர் குணமடைந்தார். 7 ஆண்டுகளாகத் தூங்காமல் தவித்த மன்னர், வலியின்றி தூங்கினார். குணமாக்க முடியாத நோயை அடைக்கல அன்னை பாதம்பட்ட மண்ணே குணமாக்கியது.‌

இதற்கு நன்றி காணிக்கையாக அரசன், 05.08.1735 அன்று அடைக்கல அன்னையின் ஆலயத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக கொடுத்தார். அரசர் அளித்த நில சாசனம் (கல்வெட்டு) இன்றும் ஏலாக்குறிச்சியில் மாதாவின் புதுமைக்கு சாட்சியாக திகழ்கிறது. தற்போது உள்ள நிலம் 42 ஏக்கர் 12 சென்ட் ஆகும்.

தனிப் பங்கு:

தொடக்கத்தில் மதுரை மிஷன் சேசுசபை குருக்கள் 1605-1777 வரை  ஏலாக்குறிச்சியை கவனித்து வந்தனர். 1777-1845 வரை கோவா உயர் மறைமாநில நேரடிப் பார்வையில் செயல்பட்டு வந்தது. பாண்டி உயர் மறைமாநில பாரீஸ் மறைபரப்பு (M.E.P) குருக்களின் கீழ் (1845-1899) செயல்பட்டு வந்த ஏலாக்குறிச்சி, 1899 இல் கும்பகோணம் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஆளுகையின் கீழ் செயல்பட்டு வந்தது.

1963 ஆம் ஆண்டு வரை

அய்யம்பேட்டை (பசுபதிகோயில்) பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த இத்திருத்தலத்தை, 13.01.1963 அன்று மேதகு ஆயர் பவுல் அருள்சாமி அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அந்தோணி சாமி அவர்கள் பொறுப்பேற்று, இன்றுள்ள 60 ஏக்கர் நிலம் திருத்தம் செய்து, ஏரிவெட்டி, குடிநீர் வசதி செய்யப்பட்டு, குருக்கள் இல்லமும் கட்டி வளர்ச்சிக்கு வழிவகுத்தார். 

புதிய ஆலயம்:

வீரமாமுனிவர் மூன்றாம் நூற்றாண்டு (300ஆண்டு)  நினைவாக, அடைக்கல அன்னைக்கு வீரமாமுனிவர் எழுப்பிய ஆலயத்தை விரிவாக்கம் செய்ய, குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பவுல் அருள்சாமி அவர்களால் அன்னையின் விழா நாளில் 09.05.1976 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

25.04.1980 அன்று தமிழக ஆயர்களின் கூட்டுத் திருப்பலியில், புதுவை கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு V. S. செல்வநாதர் அவர்களால் ஆலயம் மற்றும் பீடம் அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் இவ்வாலயம் குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் திருத்தலமாக உயர்த்தப் பட்டது.

அடைக்கல அன்னையின் புதுமைகள்:

"உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்."

தொடக்க நூல் 12:2

அன்னையை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அடைக்கலத்தாய் 21.07.2010 அன்று மன்னார்குடியைச் சேர்ந்த ரூபியா என்ற இளம்பெண்ணுக்கு புன்முறுவல் காட்டி, ஜெபமாலை மணிகளை தன் கட்டை விரல்களால் தொட்டு காட்சியளித்தார்.

01.08.2010 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களுக்கு அடைக்கல அன்னை தன் திருஉதடுகளை அசைத்து உலகுக்காக செபிக்கின்ற காட்சியை கொடுத்தார்.

21.10.2010 அன்று, வேளாங்கண்ணியில் பணிபுரியும் புனித அடைக்கல அன்னை சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள், சென்னையைச் சேர்ந்த குமார், ஏசு தம்பதியினரோடு அன்னையின் அருட்பாதம் அமர்ந்த போது, அடைக்கலத்தாய் தன் இதழ் விரித்து மூடிய விந்தையைக் கண்டு!! அம்மா என்று அலறி அழைத்து கண்ணீரோடு மன்றாடியது மறக்க முடியாத காட்சி.

உதகை மறைமாவட்டம் பிங்கர் போஸ்ட் பணித்தளத்தில் பணியாற்றும் அருட்பணியாளர்கள் J.M. அமல்ராஜ், V.V. அந்தோணி ஆகியோர் தங்களது ஆலய இறைமக்களோடு, 26.11.2010 அன்று அடைக்கல அன்னையை தரிசிக்க வந்தனர். அந்தநேரத்தில் அவ்வப்போது அன்னையின் உதடுகள் அசைவதையும், அவர் நமக்காக செபிப்பதையும் பார்த்து பரவசமடைந்தனர். மக்களோடு சேர்ந்து மாதாவை மண்டியிட்டு மன்றாடிய போது மாமரித்தாயின் உதடுகள் மலர்கின்றது. கையிலுள்ள செபமாலை மணிகள் கணநேரத்தில் சுழல்கின்றன.

திண்டுக்கல்லை சேர்ந்த சிறுவன் மூன்று வயதுவரை வாய்பேசாமல் இருந்தார். மாதாவிடம் வந்து ஜெபித்து தீர்த்தம் கொடுத்த போது பேசத் தொடங்கினார். 

1935-36 ஆம் ஆண்டுகளில் குடந்தை மறைமாவட்டத்தில் ஏற்பட்ட இடையூறுகள் விலக, குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பிரான்சிஸ் அவர்கள், அன்னையின் அருள்வேண்டி திருப்பயணம் மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். இந்த நிகழ்வு தவக்காலத்தின் ஐந்தாம் வெள்ளிக்கிழமை இன்றுவரை வருடந்தவறாமல் இங்கு நடந்து வருவதே இதற்கு சாட்சி.

குளித்தலையைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் 2001 ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பேச முடியாமலும், உணவு உண்ண முடியாமலும், பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையாமல் துன்புற்றிருந்தார். ஏலாக்குறிச்சி வந்து அன்னையிடம் செபிக்க நோய் விலகி, நன்கு பேசி, சாப்பிட்டு இயல்பாக வாழ்கிறார்.

கூவத்தூரை சேர்ந்த தம்பதியருக்கு திருமணமாகி ஆறு வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தனர். அன்னையிடம் வேண்டி செபித்து குழந்தை வரம் பெற்றனர்.

இன்னும் இன்னுமாக ஏராளமான புதுமைகள் மாதாவின் வழியாக நடந்து வருகின்றன. அவற்றையெல்லாம் எழுத இடம் போதாது.

மாதா குளம்:

அரியலூர் சிற்றரசன் அரங்கப்ப மழவராயரின் இராசப்பிளவை நோயில்,  தண்ணீரும் சேறும் கலந்து பூசி வீரமாமுனிவர் குணப்படுத்தினார் என்பதை வரலாற்றில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா.‌ இந்த புதுமையான இடம் தான் மாதாகுளம் ஆகும். 1933 ஆம் ஆண்டு இந்த குளத்தின் நடுவில் மாதாவின் சுரூபம் நிறுவப்பட்டது. 1976 ஆம் ஆண்டு மாதா குளம் புதுப்பிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு மாதா குளத்தின் நடுவில் இருந்த அன்னையின் சுரூபத்தை அகற்றி அவ்விடத்தை புதுப்பிக்க முயற்சித்து, அன்னையின் சுரூபத்தை பெயர்த்து வெளியே எடுக்க முயன்றபோது, பலபேர் சேர்ந்தும் சுரூபத்தை தூக்கி மாற்றம் செய்ய இயலவில்லை. எனவே மாதாவின் சுரூபத்தை அருகிலேயே வைத்து சணல் சாக்குகளால் மூடி வைத்தனர். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு திருத்தல வளாகம் முழுவதுமே நறுமணத்தால் நிரம்பி வழிந்தது. அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று எண்ணி பலரும் வியந்த போது!!! அது சாக்குகளால் மூடப்பட்டிருந்த மாதாவின் சுரூபத்தில் இருந்து வருகிறது என அறிந்தனர். அன்றுமுதல் மாதாவை 'சந்தனமாதா' என்று மக்கள் அழைத்து வருகின்றனர். இந்த சுரூபம் தற்போது ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ளது.

மாதா குளத்தின் சேறு கலந்த தண்ணீரை தங்களது உடம்பில் பூசி, தீராத நோய்கள் நீங்கப்பெற்றவர்கள் ஏராளம் ஏராளம். பல்வேறு புதுமைகள் இங்கு நடந்து வருவதால் இதனை 'பெதஸ்தா குளம்' என்று கூறலாம். இத்தகைய சிறப்பு மிக்க குளத்தில் 53 அடி உயரத்தில் அன்னையின் சுரூபம் பித்தளை (வெண்கலம்) உலோகத்தைக் கொண்டு அமைக்கும் பணியானது 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான பித்தளை உலோகங்களை மக்களே காணிக்கையாகக் கொடுத்து வந்தனர். தற்போது சுரூபப்பணிகள் நிறைவு பெற்று 30.04.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய சுரூபம் என்னும் சிறப்பையும் பெற்றுள்ளது. மாதாகுளத்தைச் சுற்றிலும் ஜெபமாலை மணிகள் அமைக்கப் பட்டு இறைமக்கள் ஜெபமாலை ஜெபிக்கவும், மாதாவிடம் வேண்டிக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

குழந்தை இயேசு சிற்றாலயம்:

திருத்தல வளாகத்தில் மாதாகுளத்தின் பின்புறம், அற்புத குழந்தை இயேசு சிற்றாலயம் மற்றும் ஆராதனை ஆலயமானது நன்கொடையாளர்களின் உதவியுடன் கட்டப்பட்டு, குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் 30.04.1993 அன்று அருட்பொழிவு செய்யப்பட்டது.

பின்னர் நன்கொடையாளர்களின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணிசாமி மற்றும் தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் ஆகியோரால் 08.11.2009 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

புனித கார்மேல் மாதா கெபி ஒன்று உள்ளது.

புனித லூர்து மாதா கெபி:

நன்கொடைகளின் உதவியுடன் லூர்து மாதா கெபி கட்டப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணிசாமி அவர்களால் 16.04.1988 அன்று அருட்பொழிவு செய்யப்பட்டது.

புனித கித்தேரியம்மாள் கெபி:

தஞ்சையில் இருந்து தப்பி வந்து ஏலாக்குறிச்சியில் கலக்கத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கையை வலுவடையச் செய்ய, வீரமாமுனிவர் அவர்கள் கித்தேரியம்மாள் அம்மானை எழுதினார். மேலும் அடைக்கல அன்னையின் ஆலயத்திற்கு அருகில் ஒரு சிறிய புனித கித்தேரியம்மாள் கெபி அமைத்துள்ளார். காலப்போக்கில் இந்த கெபியானது அழிந்து போனது, பின்னர் தற்போது காணப்படும் அழகிய கெபியானது கட்டப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்:

1733 ஆம் முதல் ஏலாக்குறிச்சியில் திருவிழா கொண்டாட உரோமில் இருந்து அனுமதி பெற்று, திருவிழா கொண்டாட வைத்துள்ளார்‌ வீரமாமுனிவர். ஒவ்வொரு வருடமும் உயிர்ப்பு பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இரண்டாவது சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மூன்றாவது சனி, ஞாயிறு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்க இலட்சக்கணக்கான மக்கள் மாநிலம் முழுவதும் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தருகின்றனர். ஏலாக்குறிச்சியை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து, கூடாரம் அமைத்துத் தங்கி பத்து நாட்களும் திருவிழாவை சிறப்பிக்கின்றனர்.

வீரமாமுனிவர் மாதாவை தமிழ்ப் பெண்ணாக உருவெடுத்து அடைக்கல அன்னை என பெயரிட்டு இறைவனை வழிபட்டு வந்ததன் நினைவாக, ஏலாக்குறிச்சியில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் தேதியில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பானைகளில் பொங்கல் வைக்கப் படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி மாலையில் குடந்தை மறைமாவட்ட ஆயர் தலைமையில் 'ஒளிவிழா' திருப்பலி நடைபெறுகிறது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குத்துவிளக்குகளில் ஒளியேற்றப்பட்டு மக்கள் ஜெபிக்கின்றனர்.

தவக்காலத்தின் 5-வது வெள்ளிக்கிழமை திருமானூர் ஆலயத்தில் இருந்து, மக்கள் நடந்து திருப்பயணமாக ஏலாக்குறிச்சி வந்து சிறப்பிக்கின்றனர்.

புகழ்பெற்று விளங்கும் இவ்வாலயத்தை தமிழக அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்து சிறப்பு செய்துள்ளது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. பேரருள்திரு. ஜோசப் காண்ஸ்டண்டைன் பெஸ்கி, SJ (வீரமாமுனிவர்) (1716-1736)

2. அருள்திரு. கபிரியேல் பிளேயுஸ்ட், M.E.P (1859-1899)

3. அருள்திரு. A  அந்தோணி ஜோசப் (V.G) (1933)

4. அருள்திரு. A. அந்தோணி ஜோசப் (முதல் பங்குத்தந்தை) (1963-1973)

5. அருள்திரு. A. சாந்தப்பர் (1973-1976)

6. அருள்திரு.‌ V. அந்தோணிசாமி (1976-1994)

7. அருள்திரு.‌ M. S. மரியதாஸ் (1994-1996)

8. அருள்திரு. R. K. பாப்புசாமி (1996-1998)

9. அருள்திரு. T. ஜோசப் (1998-2004)

10. அருள்திரு.‌ S. அகஸ்டின் (2004-2010)

11. அருள்திரு. S. லூர்து சாமி (2010-2016)

12. அருள்திரு. A. சுவக்கின் (2016 முதல்...)

பல்வேறு நூல்களை எழுதி தமிழுக்கு தொண்டு செய்து, மாதாவின் வழியாக மக்களை கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ வழிகாட்டிய வீரமாமுனிவர் அதிக காலம் பணிபுரிந்த, புதுமைகள் நிறைந்த வேண்டும் வரங்களை வாரி வழங்கி வருகிற, ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. சுவக்கின் அவர்கள்

வரலாறு: திருத்தல வரலாற்று புத்தகம்