புனித அந்தோணியார் ஆலயம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டாறு
மறைவட்டம் : குளச்சல்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித லூசியாள் ஆலயம், புதூர், மண்டைக்காடு
பங்குத்தந்தை : அருட்பணி. சாம் மாத்யூ
குடும்பங்கள் : 70
அன்பியங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : காலை 08.45 மணிக்கு
செவ்வாய் மாலை 05.30 மணிக்கு நவநாள், திருப்பலி.
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 05.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, நவநாள், திருப்பலி.
திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.
மண்ணின் மைந்தர்:
அருட்சகோதரர். செல்வின் ஆன்றனி.
வழித்தடம் : நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல் செல்லும் பேருந்துகள். இறங்குமிடம் மண்டைக்காடு நடுவூர்கரை.
நாகர்கோவில் -குளச்சல் பேருந்துகள் : 5B, 5C, 5D, 5E.
வரலாறு :
முக்கடலும், முத்தமிழும், முக்கனியும், மும்மதமும் தன்னகத்தே கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், பருத்திவிளை அந்தோணியார்புரம் என்னும் ஊரில் அமைந்துள்ள, அருள் வரங்களை அள்ளித் தருகின்ற புனித அந்தோணியார் ஆலய வரலாற்றைக் காண்போம்.
குமரி மாவட்டத்தில் மேற்குக் கடற்கரையோரப் பகுதியில் அரபிக்கடலை அடுத்து அமைந்திருக்கும் ஊர் மண்டைக்காடு. இவ்வூரில் வாழும் மக்கள் சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் புகழ் வாய்ந்த ஆலயங்கள் பல உள்ளன.
அவற்றுள் குளச்சல் -நாகர்கோவில் நெடுஞ்சாலை ஓரமாய் அமைந்திருக்கிறது புதூர் புனித லூசியாள் ஆலயம். இவ்வாலயத்தை நாடி, தேடி வரும் இறைமக்கள் ஏராளம்.
புதூர் பங்கை ஆலமரமாகக் கொண்டு பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கிடையே ஒரு சிறு ஆலம் விழுதாக துளிர்விட்டது தான் பருத்திவிளை புனித அந்தோணியார் ஆலயம்.
இறைவனின் ஆற்றலை இந்த மக்கள் பெற, குறிப்பாக இளைஞர்கள் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் ஆன்மீக வழியில் நடத்திட, 07.05.1978 ல் 15 உறுப்பினர்களைக் கொண்டு, புதூர் பங்குத்தந்தை அருட்பணி. அ. பீட்டர் ஜாண் அவர்கள் தலைமையில் இளைஞர் இயக்கம் தொடங்கப் பட்டது. இந்த 15 உறுப்பினர்களும் வாரத்திற்கு ஒருமுறை கூடி இறைவனிடம் ஜெபித்து வந்தனர்.
ஜெபித்து வந்த, இந்த இளம் உள்ளங்களுக்கு மறை அறிவைக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டு, ஓலைக்குடிசை அமைத்து மறைக்கல்வி வகுப்புகள் நடத்தப் பட்டன. சுமார் 60 பிள்ளைகள் மறைக்கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். 'ஜெபமே ஜெயம்' என்ற நம்பிக்கையில், இங்கு ஒரு ஆலயம் அமைய ஜெபம் நடந்து கொண்டிருந்தது.....
இவர்களின் ஜெபம் கேட்கப்படும் நாளும் வந்தது...
இந்நாட்களில் புதூர் பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின் பெர்னாண்டோ அவர்களின் ஆலோசனையின்படி 10.05.1981 அன்று புனித அந்தோணியார் மறைக்கல்வி மன்றம் தொடங்கப் பட்டது. இந்த வேளையில் ஆலயம் கட்ட திரு. ஜோசப் அவர்கள் 5 சென்ட் நிலம் கொடுத்தார்கள். 22.08.1981 அன்று கூட்டுத் திருப்பலியுடன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.
ஆலய கட்டுமானப் பணிகள் பாதியளவு முடிந்த நிலையில், கூரை வேயப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
22.12.1982 செவ்வாய் மாலையில் அருட்பணி. செபாஸ்டின் அவர்கள் புனித அந்தோணியார் நவநாள் செபத்தை தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து பங்குத்தந்தையாக அருட்பணி. ஹென்றி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறியது.. சில காரணங்களால் வழிபாடுகளும் தடைபட்டன. பல்வேறு நெருக்கடியான சூழலிலும் மாலை வேளையில் ஜெபமும், ஞாயிறு மறைக்கல்வியும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
1986 ல் அருட்பணி. யூஜின் அவர்கள் புதூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தாய்ப்பங்கை கவனித்துக் கொண்டே, சேய்ப் பங்கிலும் சிறப்பு கவனம் செலுத்தி தடைபட்டிருந்த ஆன்மீகக் காரியங்களை மெதுவாக செயல்படுத்தினார்கள். 1983 மே மாதம் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகு, 28.03.1987 அன்று திருப்பலி நிறைவேற்றினார். வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வந்தது.
கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் புதுமையால் பல்வேறு கடினமாக சூழல்கள் மாறின. ஆலயத்திற்கு வர நேர்பாதை (வழி) உருவாக்கப்பட்டது. 06.07.1983 ல் மாற்றி வைக்கப்பட்ட புனித அந்தோணியார் சுரூபம், 29.07.1988 ல் அருட்பணி. யூஜின் அவர்களால் மீண்டும் ஆலயத்திலே கொண்டு வரப்பட்டது. மக்களின் மகிழ்ச்சியும், புனிதரின் புதுமைகளும் தொடர்ந்தது... தொடர்ந்தது... நிற்காமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது...
கிறிஸ்து பிறப்பு செய்தியை மக்களிடையே தெரிவிக்க 1988 ஆம் ஆண்டில் அருட்பணி. டோமினிக் கடாட்சதாஸ் அவர்களின் தலைமையில் பஜனை தொடங்கப் பட்டது.
1989 இல் பங்குத்தந்தை இல்லம் அமைக்க 6 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
1990 ல் ஆலயத்திற்கு மின் இணைப்பு கிடைக்கப் பெற்று எங்கும் ஒளி வீசியது. இவ்வாறாக அருட்பணி. யூஜின் அவர்கள் மக்களோடு இணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்தார்கள். 1990 ஆம் ஆண்டில் புனித வின்சென்ட் தே பவுல் சபை துவக்கப் பட்டது.
அருட்பணி. தீஸ்மாஸ் அவர்கள் 1991 -இல் பங்குத்தந்தை ஆனார். 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு, 1992 பிப்ரவரியில் திருவிழாவை சிறப்பாக நடத்தினார். பணிகள் நிறைவு பெறாத ஆலயம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, 07.05.1995 அன்று ஆயர் பதிலாள் பேரருட்பணி. பால் லியோன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
1995 ல் அருட்பணி. ஜான் கென்னடி அவர்கள் பங்குத்தந்தையானதைத் தொடர்ந்து VBS வகுப்புகள் நடத்தப் பட்டன. ஆலயத்திற்கு ஒலி வசதிகள் செய்யப்பட்டது. 1995 அருட்பணியாளர் இல்லப் பணிகள் துவக்கப் பட்டு, 12.06.1996 ல் திறந்து வைக்கப்பட்டது.
1997 ல் பொறுப்பேற்ற அருட்பணி. ராபின்சன் அவர்கள் பலிபீடத்தை கட்டி முடித்தார்.
1998 ல் பொறுப்பேற்ற அருட்பணி. நார்பர்ட் அலெக்சாண்டர் அவர்கள் பணிக்காலத்தில், 21.02.1999 ல் பீடச் சுவரில் அழகுற வண்ணம் தீட்டி, நற்கருணை ஸ்தாபகம் செய்யப்பட்டது.
2000 -ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற அருட்பணி. ஆன்றனிதாஸ் ஸ்டாலின் பணிக்காலத்தில், சபைகள் இயக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டு, வளரச் செய்தார்கள். 23 சென்ட் நிலம் ஆலயத்திற்கு வாங்கப்பட்டது.
2002 ல் பொறுப்பேற்ற அருட்பணி. அருள்ராஜ் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு பெயர் பலகை வைக்கப் பட்டது. ஆழ்குழாய் கிணறு அமைக்கப் பட்டது.
2007 ல் பொறுப்பேற்ற அருட்பணி. பஸ்காலிஸ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலயத்தின் தென்மேற்குப் பக்கம் மதிற்சுவர் கட்டப்பட்டது. ஜெனரேட்டர் வாங்கப் பட்டது.
2013 இல் பொறுப்பேற்ற அருட்பணி. மைக்கேல்ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கப்பட்டது. கழிப்பறை வசதிகள் மற்றும் பங்குத்தந்தை இல்லத்திற்கு ஒரு அறை ஆகியவற்றை அமைத்தார்.
தொடர்ந்து 07.05.2018 அன்று பொறுப்பேற்ற தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. சாம் மாத்யூ அவர்கள் ஆலய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்திற்கு 25 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
இவ்வாறு பல்வேறு சோதனைகளையும், போராட்டங்களையும், இன்னல்களையும், இடையூறுகளையும் தாண்டி....! கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் அருளால் இன்று நானிலம் போற்ற வளர்ந்து வருகிறது பருத்திவிளை அந்தோணியார்புரம் இறைசமூகம்.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப் பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. மரியாயின் சேனை
4. இளைஞர் இயக்கம்
5. பாலர்சபை
6. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
7. மறைக்கல்வி
8. வழிபாட்டுக்குழு
9. பெண்கள் பணிக்குழு.
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சாம் மாத்யூ அவர்கள் மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் ஆலய உறுப்பினர்.
ஆலய வரலாறு : ஆலய புனித வின்சென்ட் தே பவுல் சபையின் வெள்ளிவிழா மலர்.