254 கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்


கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம் : தச்சூர், அருவிக்கர

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்

பங்குத்தந்தை : அருட்பணி ஜேம்ஸ் அமல்ராஜ்

குடும்பங்கள் : 152
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

வெள்ளிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு வேளாங்கண்ணி மாதா நவநாள் திருப்பலி

திருவிழா : நவம்பர் 23 - ம் தேதியை உள்ளடக்கி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகின்ற வகையில் ஐந்து நாட்கள்.

அமைவிடம் :

குமரி மாவட்டத்தின் கல்குளம் தாலுக்காவிலுள்ள, மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை சாலையில் திருவட்டாரிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும், தச்சூர் ஆலயத்திற்கு சொந்தமாகிய வேளாங்கண்ணி மாதா குருசடியின் வலப்புறம் அமைந்துள்ள தச்சூர் சாலையில் சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொன்னப்ப நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்து அரசர் ஆலயம்.

வரலாறு :

2008 -ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரிடமிருந்து அருட்தந்தை ஜெரால்டு D. ஜஸ்டின் அவர்கள் முன்னிலையில் ஆலயத்திற்கு நிலம் வாங்கப்பட்டது. ஆன்மீக தாகத்திற்காக ஏங்கி நின்ற மக்களின் ஆற்றல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு 14-04-2008 அன்று அருட்பணி ஜெரால்டு D. ஜஸ்டின் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வெறும் 30 நாட்களுக்குள் இறையாற்றலும், மனித சக்தியாலும் மறைமாவட்டத்திலிருந்து பெறப்பட்ட நிதியும், மக்களின் தாராள மனமும், நன்கொடைகளாலும் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டு 14-05-2008 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

அருட்தந்தை லாரன்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் மறைக்கல்வி மற்றும் நற்கருணை பக்தி குறித்து ஆழ்ந்த வழிநடத்துதலால் மக்களின் ஆன்மீக வாழ்வு மேம்பட உதவியது.

மறைக்கல்வி, திருவழிபாட்டுக்குழு, முதல் அருட்பணிப்பேரவை ஆரம்பிக்கப்பட்டது. பங்குத்தந்தையின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம் சேசு சபையை சேர்ந்த அருட்சகோதரர் மைக்கேல் ஜான் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவரது சிறந்த பணியால் பங்கில் பல குடும்பங்கள் இணைக்கப்பட்டன. பாடகற்குழு, இளைஞர் இயக்கம், கிறிஸ்துமஸ் பஜனை துவக்கப்பட்டது. அருட்சகோதரர் அவர்களுக்கு குருபட்டம் கிடைத்த பின்னர் மாத்தூர், தச்சூர் கிளைகளின் பொறுப்பினை கவனித்துக் கொண்டதால் இவ்வாலயம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

09-09-2009 ல் ஆற்றூரின் கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது. அப்போது ஆற்றூரின் இணை பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள், அருட்தந்தை லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து ஆலயத்திற்கு நிலம் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

06-11-2009 ல் மாத்தூரின் கிளைப்பங்காக தச்சூர் மாற்றப்பட்டது.

முதல் பங்குத்தந்தையாக பணியாற்றியவர் அருட்தந்தை முனைவர் ஞானமுத்து. இவரது பணிக்காலத்தில் அனைத்து பக்தசபை இயக்கங்களும் துவக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.

முன்னரே விதைக்கப்பட்ட ஆலயத்திற்கு நிலம் வாங்கும் திட்டம் செயல் வடிவம் பெற்று பல சென்ட் நிலங்கள் வாங்கப்பட்டன. 25-07-2010 ல் வேளாங்கண்ணி மாதா குருசடி அருட்தந்தை முனைவர் ஞானமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இவ்வாறு துவங்கிய சில ஆண்டுகளிலேயே பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வரும் தச்சூர் பங்கானது தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அமல்ராஜ் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.