901 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கெலமங்கலம்

    

திருஇருதய ஆண்டவர் ஆலயம் 

இடம்: கெலமங்கலம், சுல்தான்பேட்டை, 635113

மாவட்டம் : கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம் : தேன்கனிக்கோட்டை

நிலை: மறைப்பணித்தளம் (Mission Parish)

பங்குத்தந்தை அருட்பணி. G. பாக்கியநாதன்

குடும்பங்கள்: 16

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

நாள்தோறும் திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: ஜூன் மாதம் 7-ம் தேதி

வழித்தடம்: கெலமங்கலம் -சூளகிரி சாலையில், சுல்தான்பேட்டையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

map : https://goo.gl/maps/p8RYBVL9DFnaQVw18

வரலாறு:

மைசூர் மறைப்பணிதளத்தின் பணிகளின் ஆரம்ப காலங்களிலேயே கெலமங்கலம் பகுதியில் நற்செய்தி விதைகள் விதைக்கப்பட்டன. கி.பி. 1668-1674 ஆண்டுகளின் கணக்குப்படி 420 கிறிஸ்தவர்கள் கெலமங்கலம் பகுதியில் இருந்ததாகத் தெரிகிறது. பல தடைகளையும், அச்சுறுத்தல்களையும் தாண்டி, இறையரசு இப்பகுதியில் வளர ஆரம்பித்தது. குறிப்பாக கெலமங்கலம் மறைப்பணியாளர்களின் தங்குமிடமாக விளங்கியது. 

1674-ஆம் ஆண்டு மைசூர் மிஷனில் தமிழ் மக்களை கொண்டிருந்த பங்குகள் கோளனூர், தருமபுரி கப்பினாகத்தி முதலியனவாம். (மைசூர் மிஷன்ஸ் - பக்கம் 27)

1673-1674 ஆம் ஆண்டு இயேசு சபையாரின் கடிதங்கள், கெலமங்கலம் திருச்சபை சந்தித்த இடையூறுகளை விளக்குகிறது. மக்கள் மறைக்கல்வி பயில்வதை பலர் தடைசெய்ய முயற்சித்தனர். பங்கவம்மா என்ற கைம்பெண் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்து, பொறுமை காக்க அறிவுறுத்தி உதவியதாக இம்மடல்கள் கூறுகின்றன.

ஓசூர் அரசப் பிரதிநிதி கெலமங்கலத்தில் தங்கியிருந்த அருள்தந்தை மனுவேல் கொரேயாவை அழைத்து, அவர் செய்கிற பிறரன்புப் பணிகளை பாராட்டினார் (மார்ச் 1674). 30 கிராமங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை தருவதாகவும் அரசப் பிரதிநிதி கூறினார். ஆனால் அருள்தந்தை அவர்கள், நான் மக்களை ஆள்வதற்காக வரவில்லை. மாறாக உதவி செய்து, நல்வழிப்படுத்தவே வந்தேன் என்று ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்தார். ஆளுநருக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. மாதமிருமுறை தம்மை சந்திக்குமாறு அழைப்புக் கொடுத்தார். உயிர்ப்பு பெருவிழாவின்போது கிறிஸ்தவ ஆலயத்தின் முன் இசைக்கருவிகள் இசைக்க ஆளுநர் ஆணையிட்டார்.

பிற மதத்தினரின் பில்லிசூனிய, மந்திர சக்திகள் கிறிஸ்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. தேன்கனிகோட்டையில் இருந்த ஒருவர் கிறிஸ்தவரானார். உறவினர் தடுத்தனர். எனவே கிறிஸ்தவரானவர் மீது மந்திர சக்தியை ஏவினர். கிறிஸ்தவருக்கு பாதிப்பில்லை. எதிர்த்த உறவினரே மனந்திரும்பி, பலரை விசுவாச ஒளிக்கு அழைத்து வந்தனர்.

குருக்களின் உறைவிடம் கெலமங்கலம் என்று சில இடங்களிலும், கப்பினாகத்தி என்று சில இடங்களிலும் குறிக்கப்படுகிறது. கப்பினகத்தி, கெலமங்கலத்துக்கு வடக்கே 3/4 மைலில் இருந்தது. தற்போது அவ்வூர் அழிந்துவிட்டது. அங்கிருந்த ஆலயம் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. 1682 இல் மராத்தியர் படையெடுப்பில் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது. சில காலம் குருக்கள் ஆனேக்கல்லில் தங்கினர்.

1708-இல் கப்பினாகத்தியிலிருந்து கொண்டு அருள்திரு மனுவேல் டி குன்ஹா பணியாற்றினார். இவர்களது பணி கங்குந்தி வரை பரவியிருந்தது. கங்குந்தி ஜமீன் என்பது, கிருஷ்ணகிரி மகாராஜா குப்பம் வரை உள்ள பகுதி. கங்குந்தி என்ற சிற்றூர் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற ஊருக்கு வடகிழக்கே பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இயேசு சபையாரின் புலப்படமும் கங்குந்தி என்ற ஊரை சுட்டுகிறது. கங்குந்தி என்ற ஊரில் ஆலயம் கட்டிய அருள்தந்தை மனுவேல் டி குன்ஹா தாக்கப்பட்டு காயங்களோடு மூன்று நாள் பயணம் செய்து கப்பினாகத்தி அடைந்த அவர், 1-6-1711 அன்று இறைவனடி சேர்ந்தார். தருமபுரி மறைமாவட்டத்தின் முதல் வேதசாட்சி இவர். இவரது கல்லறை எங்குள்ளது என்பது இன்னும் ஆய்வுக்குரியது. ஆனேக்கல் பக்கம் கெம்பட்டி அருகில் சிலுவை அடையாளக் கல்லோடு இருந்த கல்லறையா? அல்லது கெலமங்கலம் -தேன்கனிகோட்டை சாலையில் சின்னட்டி அருகில் எடப்பள்ளியில் சாலையோரத்தில் சிலுவை அடையாளத்துடன் உள்ள கல்லறையா? என்பது ஆய்வுக்குரியது.

கப்பினாகத்தியில் 1720-இல் அருள்திரு ரெனய்ரோ, அருள்திரு. வியேரா ஆகியோர் பணியாற்றினர். 50-ஆண்டு பட்டியலில் பெங்களூரு, கப்பினாகத்தி, ஹளே மத்திகிரி, எடப்பள்ளி (சின்னப்பட்டி) தேன்கனிகோட்டை ஆகிய ஊர்களில் கிறிஸ்தவர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1784ஆம் ஆண்டு திப்பு சுல்தானின் படையெடுப்பால் எடப்பள்ளி கோவில் பாதிக்கப்பட்டது. 1861-ஆம் ஆண்டளவில் எடப்பள்ளி மேட்டில் செபக்கூடம் இருந்தது. குருவானவர் மட்டும் தனிமையில் இருந்தார் என்று அருள்தந்தை M.S. ஜோசப் குறிப்பிடுகிறார் (பக். 133). இதன் பின்னர் கெலமங்கலம், கப்பினாகத்தி போன்ற ஊர்களில் கிறிஸ்தவர்கள் இருந்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை.

நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1960-களில் சில கிறிஸ்தவ குடும்பங்கள் கெலமங்கலத்தில் குடியேறினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர். ஆமோஸ் மற்றும் திரு. பெரிய நாயகம் குடும்பத்தினார். தாசரப்பள்ளி பங்குதந்தை, அவர்களுடைய இல்லங்களில் திருப்பலி நிறைவேற்றினார். அன்றைய தாசரப்பள்ளி பங்குதந்தை அருள்திரு. இக்னேஷியஸ் களத்தில் அவர்கள் முயற்சியால் கோவிலுக்காக ஒரு ஏக்கர் நிலம் 25-1-1965 அன்று வாங்கப்பட்டது.

வாங்கப்பட்ட நிலத்தில் ஆலயம் கட்டப்பட்டு, 5.2.1968 அன்று அன்றைய சேலம் ஆயர் மேதகு. V. S. செல்வநாதர் அவர்கள் புனிதப்படுத்தி திறந்து வைத்தார். கெலமங்கலம் ஆலயமானது, அடைக்கலாபுரம் பங்கின் கிளைப்பங்காக வின்சென்சிய குருக்களின் கண்காணிப்பில் இருந்தது. 

ஆலயம் பழுதுபட்டிருந்ததால் அருள்தந்தை ஹென்றி போனால், MEP அவர்களின் முயற்சியால் இன்றைய ஆலயம் கட்டப்பட்டது. புதிய ஆலயம் 23.02.2003 அன்று தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 

2004-ஆம் ஆண்டு முதல் கெலமங்கலம் புதிய பங்காக (மறைப்பரப்பு தளமாக) தோற்றம் பெற்றது.

இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கெலமங்கலம் மறைபரப்புதளமானது மென்மேலும் வளர்ந்து தருமபுரி மறைமாவட்டத்தின் தலைசிறந்த பங்குகளில் ஒன்றாகத் திகழ வாழ்த்துவோம்..

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ G. பாக்கியநாதன் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பு மற்றும் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி.