767 புனித ரீத்தம்மாள் ஆலயம், ரீத்தாபுரம்

          

புனித ரீத்தம்மாள் ஆலயம்

இடம்: ரீத்தாபுரம்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: குளச்சல்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், பத்தறை 

பங்குத்தந்தை: அருட்பணி. M. ஜேசுதாசன்

குடும்பங்கள்: 900

அன்பியங்கள்: 25

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிற்றுக்கிழமை 07:00 மணிக்கு ஜெபமாலை 07:30 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி- கிழமைகளில் காலை 06:30 மணிக்கு திருப்பலி.

புதன்கிழமை மாலை 06:30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வியாழன் 04:30 மணிக்கு ஜெபமாலை 05:00 மணிக்கு நவநாள் நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் மூன்றாவது வியாழன் காலை 11:00 மணிக்கு ஜெபமாலை 11:30 மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் மற்ற வியாழக்கிழமைகளில் மாலை 04:30 மணிக்கு ஜெபமாலை 5 மணிக்கு நவநாள் திருப்பலி

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை 03:00 மணிக்கு இறை இரக்க ஜெபம் தொடர்ந்து நற்கருணை ஆராதனை.

திருவிழா: திருவிழா மே மாதம் இரண்டாம் வார வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள். குறிப்பாக மே 22-ம் தேதி ரோஜாமலர் திருவிழா.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. பேரருட்பணி. வ. மரியதாசன்

2. ஆயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் (புதுவை -கடலூர் உயர்  மறைமாவட்ட பேராயர்)

3. அருட்பணி. வென்சஸ்லாஸ்

4. அருட்பணி. இக்னேஸ்ஷியஸ் மரியா

5. அருட்பணி. பெஞ்சமின் லடிஸ்லாஸ்

6. அருட்பணி. பங்கிராஸ் கலிஸ்ட்

7. அருட்பணி. நித்திய சகாயம்

8. அருட்பணி. கென்னடி

9. அருட்பணி. மரிய செல்வன்

10. அருட்பணி. மேரி ஜார்ஜ் கிளாரட்

11. அருட்பணி. கிராஸ்லின் நிமில்

12. அருட்பணி. பெஞ்சமின்

13. அருட்சகோதரி. பார்பரா

14. அருட்சகோதரி. ஜோஸ்பின்

15. அருட்சகோதரி. மரியா டெய்சி

16. அருட்சகோதரி. மரிய செல்வம்

17. அருட்சகோதரி. ஹெலன்

18. அருட்சகோதரி. ஆன்றோ விமலா ராணி

19. அருட்சகோதரி. பெர்மிளா

வழித்தடம்: கருங்கல்-ரீத்தாபுரம்

நாகர்கோவில் -ரீத்தாபுரம்

Location map: St. Rita's Church

04651 226 110

https://maps.google.com/?cid=2716703428465286402&entry=gps

வரலாறு:

ஏறத்தாழ 97 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்சகர் இயேசுவின் இறைவார்த்தைகளை உலகெங்கும் பரப்புவதற்காக, பெல்ஜியம் நாட்டிலிருந்து புறப்பட்ட அகுஸ்தீனார் சபை (I.C.M) அருட்சகோதரிகளில் ஒருசிலர் இந்தபகுதிக்கு (ரீத்தாபுரம்) வந்தனர்.

மறைப்பணிக்காக இங்கு வந்த அருட்சகோதரிகள் 1925 ஆம் ஆண்டில் ஒரு கன்னியர் மடத்தை இங்கு நிறுவினார்கள். ஏழ்மையால் ஏற்பட்ட இயலாமையாலும், சாதிய ஆளுமையாலும், கல்வியின் மதிப்பறியாது பின்தங்கிக் கிடந்த இம்மக்களுக்கு, கல்வியின் கட்டாயத்தை உணர்ந்து பிராவிடன்ஸ் ஆரம்பப் பள்ளி என்ற பெயரில் கல்விக் கூடம் ஒன்றை நிறுவினார்கள். 

இந்த பள்ளிக்கூடம் பின்னர் உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்து, இன்று மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்து நிற்கிறது. இம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய மருத்துவமனை, தொழில் வாய்ப்பை பெருக்க தையலகம் போன்றவற்றை ஏற்படுத்தி மக்களின் நல்வாழ்வுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அருட்சகோதரிகள் வழிகாட்டினார்கள். அவர்களது தன்னலமற்ற சேவைகளாலும், மாசற்ற அன்பாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் இருளில் இருந்து விலகி வெளிச்சத்திற்கு வந்தார்கள். பலரும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

மிகக் குறுகிய காலத்திலேயே கிறிஸ்துவ மறையை ஏற்றுக் கொண்ட மக்கள், கூடி செபிப்பதற்கும், இறைவனை ஆராதிக்கவும் ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டனர்.

முதல் ஆலயம்:

மாத்திரவிளை பங்கின் கிளைப் பங்காக இருந்த இவ்வூரில் ஆலயம் எழுப்ப கன்னியர் மடத்தின் தலைமை அருட்சகோதரி அல்போன்சாவும், கத்தோலிக்க சேவா சங்கத்தினரும், ஊர்ப் பெரியவர்களும் குளச்சல் பங்குத்தந்தை அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்களோடு கலந்து செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார்கள். 

அன்றைய காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டமானது, திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆகவே ஆலயம் கட்டுவதற்கான அனுமதி வேண்டி அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியதோடு, ஒரு சாராரின் வலுவான எதிர்ப்பையும் சட்ட ரீதியாக முறியடித்து, ஆலயம் கட்டுவதற்கான அனுமதியையும் பெற்றார் அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்கள்.

ஆலயம் அமைக்க திரு. மரிய மெய்யல் என்பவர் தமது நிலத்தை காணிக்கையாக கொடுத்தார். இந்த நிலத்தில் ஐந்தாயிரம் செங்கற்களால் சுவர் எழுப்பப்பட்டு, ஆயிரம் தென்னங்கீற்றுகளால் கூரை வேடப்பட்டு மூன்றே வாரங்களில் ஆலயப் பணிகள் நிறைவு செய்யப்பட்டது.  ஆயரின் அனுமதியுடன், குளச்சல் மறைவட்ட முதல்வர் அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்கள் ஆலயப் பணிகளை திறம்பட நடத்தி வந்தார். ஆலயப் பணிகள் நடந்து வருகிற வேளையில் எந்தப் புனிதரை இவ்வூரில் பாதுகாவலராக அர்ப்பணிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்தது. ஆலயத்திற்கு புனிதரை தேர்வு செய்யும் வேளையில் அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்கள், நமது இந்தியாவில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களில் இல்லாத ஒரு புனிதரை நான் தேர்வு செய்யப் போகிறேன் என்று கூறி, அருட்சகோதரி புனித ரீத்தம்மாளின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துரைத்தார். அதையே பங்கு மக்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டார்கள். இத்தாலி நாட்டின் காசா நகரில் புனித ரீத்தம்மாள் பசிலிக்கா பேராலயம் முதலாவதாக எழுப்பப்பட்டது ஆகும்.

அதன் பிறகு புனித ரீத்தம்மாளின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் இரண்டாவது ஆலயம் இதுவேயாகும். அன்றைய கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் 02.08.1945 அன்று ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

மேலும் புதிய ஆலயம் அமைப்பதற்காக அடிக்கல்லையும் மேதகு ஆயர் நட்டு வைத்தார். 

இரண்டாம் ஆலயம்:

ஆலயம் எழுப்பப்பட்டது முதல் புனித ரீத்தம்மாளை தரிசிக்கவும், ஜெபிக்கவும் வருகிற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. புனிதையிடம் வேண்டி பலர் அற்புத சுகம் பெற்றனர். மிகக் குறுகிய காலத்திலேயே புனிதையின் புகழ் கிறிஸ்தவ மக்களை மட்டுமல்லாது, பிற மதத்தவரின் நெஞ்சங்களையும் தொட்டது. ஆகவே சற்று பெரிய ஆலயத் தேவை உணரப்பட்டது.

புதிய ஆலயம் கட்டுவது என முடிவெடுக்கப்பட்டு, நபர் ஒருவருக்கு ரூபாய் நாற்பது வரியும் விதிக்கப்பட்டது. அருட்பணியாளர், தலைமை அருட்சகோதரி அல்போன்சா, ஊர்ப் பெரியவர்களும் ஊர் ஊராகச் சென்று சாதி சமய இன வேறுபாடின்றி மக்களிடமிருந்து நிதியை பொருளாகவும் பணமாகவும் பெற்றனர்.

இவ்வாறு பெற்ற நிதிகளைக் கொண்டு 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆலயமானது, மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்றது. 

20.01.1949 அன்று அருட்பணி. இக்னேஷியஸ் மரியா அவர்கள் இறைவனின் பாதம் சென்றார். ரீத்தாபுரம் இறைசமூகம் அருட்தந்தையின் தியாகத்தை நன்றியுடன் என்றும் நினைவு கூர்கின்றது.

பங்கின் வளர்ச்சி:

1948 ஆம் ஆண்டு மாத்திரவிளை பங்கிலிருந்து பிரிந்து, ரீத்தாபுரம் தனிப் பங்கானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. வின்சென்ட் ரொட்ரிகோ அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

அருட்பணி. வல்லேரியன் மெலார்டு (பெல்ஜியம்) பணிக்காலத்தில் நூலகம், ஆலயத்திற்கென கல்லறைத் தோட்டம், ஊர் மக்களின் தேவைக்காக அஞ்சலகம் ஆகியன அமைக்கப் பட்டது.

அருட்பணி. ஞானப்பிரகாசம் பணிக்காலத்தில் லூர்து மாதா கெபி, ஆலயத்தின் முன்புறம் குருசடி ஆகியவை அமைக்கப்பட்டது.

அருட்பணி. மேரி ஜார்ஜ் அவர்கள் ரீத்தாபுரம் பங்கில் 17 ஆண்டுகள் பணியாற்றி பங்கின் வளர்ச்சிக்கு துணை நின்றார். 

அருட்பணி.‌ ஜான் பிரகாஷ் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம், கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டன.

அருட்பணி. பெலிக்ஸ் ஜோசப் பணிக்காலத்தில் ஆலயப் பொன்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. 

அருட்பணி. அருளப்பன் பணிக்காலத்தில் பங்கு மக்களின் உழைப்பால் பொன்விழா நினைவு கலையரங்கம் கட்டப்பட்டது.

மூன்றாம் ஆலயம்:

அருட்பணி. அருளப்பன் பணிக்காலத்தில் தற்போது உள்ள எழில்மிகு ஆலயத்திற்கு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 03.02.2002 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் அவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டலில், பங்கு மக்களின் தன்னலமற்ற உழைப்பு மற்றும் நிதியுதவியுடனும், மண்ணின் மைந்தர் பேரருட்பணி. வ. மரியதாசன் அவர்களின் பெல்ஜியம் நாட்டு நண்பர்களின் நிதி பங்களிப்பு ஆகியவற்றாலும் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 02.08.2005 அன்று மேதகு ஆயர் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய அர்ச்சிப்பு விழாவுடன்,  ஆலய வைரவிழாவும் (1945-2005) மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

ரோஜா மலர் திருவிழா:

புனித ரீத்தாள் தன் மகன்கள் விண்ணகம் சென்றார்களா என்றறிய, ஆசித்து இறைவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்டு மன்றாடினார். இத்தாலி நாட்டில் ரோஜா மலராத காலத்திலும் தன் மகன்களின் கல்லறை அருகில் ரோஜா மலர்ந்திருக்க வேண்டினார். அவருடைய உறவுக்காரர் ஒருவரை அனுப்பி தன் மகன்களின் கல்லறை அருகில் மலர்ந்திருக்கும் ரோஜாவை பறித்துவரக் கேட்டார். அவ்வாறே அவர்கள் ரோஜாவை பறித்துவந்து கொடுத்தார்கள். இந்த செயல் மூலம் அருட்சகோதிரி, ரீத்தாள் புகழ் நாடெங்கும் பரவியது.

இத்தாலி நாட்டில் வாகனங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க மே மாதத்தில் ரோஜா மலர் கொடுத்து ஆசீர்வதிப்பது வழக்கம். அதுபோல ரீத்தாபுரத்திலும் விபத்து ஏற்படாமல் இருக்கவும், மக்களின் வாழ்வு சிறப்பாக அமையவும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின் போது மே 22 ஆம் தேதி 15,000 ரோஜா மலர்கள் பெங்களூரில் இருந்து வரவழைக்கப் படுகின்றன. ஆலய பீடம் மற்றும் ஆலயம் முழுவதும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஜெபித்து ரோஜா மலர் கொடுத்து ஆசீர்வதிப்பது தனிச் சிறப்பு. இதன் பிறகு இங்கு விபத்து என்பதே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கம் ஒவ்வொரு வருடமும் திருவிழாவில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

பங்கின் சிற்றாலயங்கள்:

1. புனித மிக்கேல் அதிதூதர் சிற்றாலயம், செம்மாங்கால்

2. புனித சவேரியார் சிற்றாலயம், தட்டாரவிளை  

3. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம், கண்ணன் கோட்டை  

4. புனித அந்தோனியார் சிற்றாலயம், கடம்பறவிளை   

குருசடிகள்:

1. புனித ஜார்ஜியார் குருசடி, ஒற்றப்பனைவிளை   

2. புனித ரீத்தம்மாள் குருசடி, ஆலய வளாகம்

கெபி: தூய லூர்து மாதா கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை

2. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

3. இளைஞர் இயக்கம்

4. கத்தோலிக்க சங்கம்

5. கத்தோலிக்க சேவா சங்கம்

6. கிராம முன்னேற்ற சங்கம்

7. சிறுவழி இயக்கம்

8. பாலர் சபை

9. புனித வின்சென்ட் தே-பவுல் சங்கம்

10. பெண்கள் இயக்கம்

11. மறைக்கல்வி மன்றம்

12. பங்கு அருட்பணிப் பேரவை

13. நிதிக்குழு 

14. கல்விக்குழு

15. திருவழிபாட்டுக் குழு

16. பாடகற்குழு

17. பீடச் சிறார்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. வின்சென்ட் ரோட்ரிகோ (1948-1954)

2. அருட்பணி. வலேரியன் மெலார்டு (1954-1960)

3. அருட்பணி. ஞானப்பிரகாசம் (19601964)

4. அருட்பணி. அத்தனேசியஸ் E. ரெத்தினசாமி (1964-1971)

5. அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ (1971-1973)

6. அருட்பணி. V.M. ஜார்ஜ் (1973-1990)

7. அருட்பணி. ஜாண் பிரகாஷ் (1990-1994)

8. அருட்பணி. பெல்லார்மின் ஜியோ(1994-1995)

9. அருட்பணி. பெலிக்ஸ் ஜோசப் (1995-1996)

10. அருட்பணி. எட்வின் 

11. அருட்பணி. மரியதாசன் (1996-1999)

12. அருட்பணி. அருளப்பன் (1999-2004)

13. அருட்பணி. பிரான்சிஸ் டி சேல்ஸ் (2004-2010)

14. அருட்பணி. பென்சிகர் (2010-2014)

15. அருட்பணி. ஜாண் அகஸ்டஸ் (2014-2017)

16. அருட்பணி. அம்புரோஸ் (2017-2021)

17. அருட்பணி. M. ஜேசுதாசன் (2021 முதல்...)

புனித ரீத்தாவின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்து வருவதால், எப்போதும் ஆலயத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைக் காணலாம். புதுமைகள் நிறைந்த ரீத்தாபுரம் என்னும் புண்ணிய பூமிக்கு வாருங்கள் இறைமக்களே...!!!

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜேசுதாசன் அவர்கள் மற்றும் பங்கின் உறுப்பினர்கள் 

வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர்