புனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (St. George Syro-Malabar Catholic Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள அங்கமாலி என்னும் இடத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீரோ-மலபார் கத்தோலிக்க பெருங்கோவில் ஆகும். 24000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் கேரளத்தின் மிகப் பெரிய கத்தோலிக்க கோவில்களுள் ஒன்று ஆகும்.
வரலாறு
அங்கமாலி என்னும் இடம் இந்தியாவில் கிறித்தவம் பரவிய தொடக்க காலத்தில் ஒரு வரலாற்று மையமாக இருந்தது. அங்கே மூன்று கிறித்தவ கோவில்கள் இருந்தன. அவற்றுள் முதல் கோவில் கி.பி. 450இல் புனித ஜோர்ஜியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்ததாகவும் அக்கோவிலை 1750ஆம் ஆண்டுவரை கத்தோலிக்க கிறித்தவர்களும் யாக்கோபிய (Jacobites) கிறித்தவர்களும் இணக்கமாகப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது கோவில் புனித ஓர்மிஸ்தாஸ் (St. Hormisdas) என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கோவில் புனித அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
போர்த்துகீசியர்கள் வருகைக்குப் பிறகு ஏற்கனவே இந்தியாவில் வேரூன்றியிருந்த சிரிய திருச்சபை இலத்தீன் வழிபாட்டு முறையின் தாக்கத்திற்கு உட்பட்டது. சிரிய திருச்சபையினர் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கு ஆளானர்கள். இதனால் அத்திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவை முடிவுக்குக் கொணர்ந்து ஒற்றுமை கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அங்கமாலி பெற்ற முதன்மை
1896இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ எற்ணாகுளம் மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் கீழ் அங்கமாலியைக் கொணர்ந்தார். 1923இல். திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் எற்ணாகுளத்தை உயர்மறைமாவட்டமாக ஏற்படுத்தினார். சீரோ-மலபார் திருச்சபையின் ஆட்சி மையமாக எற்ணாகுளம் செயல்பட்டது.
1992இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சீரோ-மலபார் திருச்சபையை தலைமை உயர்மறைமாவட்ட திருச்சபையாக உயர்த்தினார்.
அதைத் தொடர்ந்து எற்ணாகுளம் உயர்மறைமாவட்டத்தின் பெயர் “எற்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டம்” என்று மாற்றப்பட்டது. இவ்வாறு “அங்கமாலி” என்ற பெயரையும் இணைத்தது வரலாற்றுப் போக்கைத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளமாக மாறியது.
புதிய கோவிலின் வரலாறு
புனித ஜோர்ஜியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில் கட்டும் பணி 1997இல் தொடங்கியது. கர்தினால் வர்க்கி விதயத்தில் புதுக் கோவிலுக்கு 1997, நவம்பர் 16ஆம் நாள் அடித்தளம் இட்டார். கோவில் கட்டடம் 2006, திசம்பர் 31ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.
இக்கோவிலில் 8000 பேர் ஒரே நேரத்தில் வழிபாட்டில் பங்கேற்க போதிய இடம் உண்டு. இயேசுவைத் தாங்கும் 24 அடி உயரம் கொண்ட சிலுவை இக்கோவிலின் மையப் பீடத்தின் உயரே அமைந்துள்ளது. இக்கோவிலின் குவிமாடம் கோவில் தரையிலிருந்து 185 அடி உயரத்தில் உள்ளது. அக்குவிமாடத்தின் உச்சியில் 750 கிலோ எடையுள்ள ஒரு கோளம் அமைந்துள்ளது. குவிமாடத்தைச் சுற்றியுள்ள சாளரங்களில் கண்ணாடிப் பதிகை ஓவியங்கள் உள்ளன. அவற்றில் திருத்தூதர்கள், புனிதர்கள் மற்றும் விவிலியக் காட்சிகள் சித்திரமாகப் பதிக்கப்பட்டுள்ளர்.
2009, சூன் 24ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இக்கோவிலை இணைப் பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தி அறிக்கை வெளியிட்டார். எற்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் உயர்தலைவருமான கர்தினால் வர்க்கி விதயத்தில் 2009, ஆகத்து 27ஆம் நாள் நடந்த கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கி, பெருங்கோவில் நிலைக்கு உயர்த்தப்பட்ட கோவிலைச் சிறப்பித்தார்.