தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம்: மிக்கேல் பாளையம், வடக்கன்குளம்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: சிற்றாலயம்
பங்கு: பரிசுத்த புதுமை பரலோக மாதா திருத்தலம், வடக்கன்குளம்
பங்குத்தந்தை பேரருள்தந்தை. மார்ட்டின் மனுவேல்
உதவி பங்குத்தந்தை அருள்தந்தை. G. பிரதாப்
சகோ. ஜெர்மான்ஸ் (களப்பணியாளர்)
நாள்தோறும் நண்பகல் 12:00 மணிக்கும், மாலை 05:30 மணிக்கும் ஜெபமாலை நடைபெறும்.
திருப்பலி: புதன்கிழமை மாலை 05:30 மணி
திருவிழா: செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்
வழித்தடம்: திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம்
Location map:
St. Michael The Archangel's Church
https://maps.app.goo.gl/PstkyT9WHiEcdoiD9
வரலாறு:
அதிதூதர்கள் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்களாகவும், நன்மையும் நம்பிக்கையும் கொடுக்கும் கடவுளின் கருவிகளாகவும் இருக்கிறார்கள்.
1713ஆம் ஆண்டு அன்றைய வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. பெர்னாடிசா அடிகள் அவர்கள் காலத்தில், அருட்தந்தையின் அறிவுரையைக் கேட்டு, மக்கள் மனம் மாறி, திருமுழுக்குப் பெற்று, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
1912ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த மறைதிரு. அதரியான் கௌசானல் அடிகள், அம்மக்கள் வாழும் தெருவின் வடபகுதியில், மிகச்சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டி, அர்ச்சித்தார். சூழ்ச்சிக் கொண்ட அலகைதனை வீழ்த்தியே, வெற்றிக்கொடி நாட்டிட தூய மிக்கேல் அதிதூதர் சுரூபத்தை வைத்து மக்கள் நாளும் கூடி ஜெபித்தனர்.
1929-ம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் மண்ணால் கட்டப்பட்ட மிக்கேல் அதிதூதர் ஆலயம் இடிந்து விழுந்தது. ஆனால் ஆலயத்தினுள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கோ எத்தகைய பாதிப்பும் இல்லை. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட மக்கள், மிக்கேல் அதிதூதரின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டனர். இவ்வாறு பக்தியோடு இறைவேண்டல் செய்யும் மக்களுக்காக, எப்படியாவது ஒரு ஆலயம் எழுப்ப வேண்டுமென்று எண்ணிய வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. இஞ்ஞாசியார் அடிகள், இப்போது ஆலயம் இருக்குமிடத்திற்கருகில் மிகச்சிறிய ஓலையால் வேயப்பட்ட ஒரு ஆலயத்தைக் கட்டிக் கொடுத்தார். அதோடு நின்று விடாமல் இப்போது அமைந்திருக்கும் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
பங்குத்தந்தையின் விடாமுயற்சியும், மக்களின் ஒத்துழைப்பும் ஒருங்கே சேர ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. ஆலயப்பணி நிறைவுற்றதும் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. மரியதாஸ் அடிகளாரின் முயற்சியால், தூத்துக்குடி மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு. திபூர்சியூஸ் ரோச் ஆண்டகை அவர்கள் 15.08.1939 அன்று ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.
அன்று ஆலயத்தைத் திருநிலைப்படுத்திய மேதகு ஆயர் அவர்கள் 'இந்த இடத்தில் இன்று முதல் மிக்கேல் அதிதூதரின் பாதுகாவல் இடைவிடாமல் எப்பொழுதும் இருக்கும்'. இங்கு வாழும் மக்களை, மிக்கேல் அதிதூதர் 'பாளையம்' அமைத்துக் காப்பார். எனவே இனி இங்கு துன்பமில்லை, கவலையில்லை. ஏனெனில் இது மிக்கேல் அதிதூதரின் பாளையம். அவருடைய பாதுகாப்பில் உள்ள பகுதி. எனவே, இன்று முதல் இது 'மிக்கேல் பாளையம் என அழைக்கப்படும்" என அறிவித்தார்கள். எனவே அன்று முதல் இன்று வரை இப்பகுதி மிக்கேல் பாளையம் என்றே அழைக்கப்படுகிறது.
1970க்குப் பிறகு வடக்கன்குளத்தின் பிற பகுதிகளிலிருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் மிக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு விசுவாசிகள் வரத்தொடங்கினர். எண்ணற்ற மனநோயாளிகள், உடல் நோயாளிகள் வந்து வழிபட்டு, நலம் பெற்றுச் செல்கின்றனர்.
70 ஆண்டுகளைத் தொட்ட நிலையில் ஆலயத்தின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. மேலும் விசுவாசிகள் வருகை அதிகரித்ததாலும், இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. எனவே, புதிய விரிவாக்கப்பட்ட ஆலயம் தேவை என்பதை உணர்ந்து, புதிய ஆலயம் கட்டப்பட்டு, 27.09.2010 அன்று மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் 8ம் திருவிழாவன்று, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. இவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
20.09.2014 அன்று மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் பவளவிழா (75-வது ஆண்டு) பங்குதந்தை பேரருட்பணி. ததேயுஸ் ராஜன் வழிகாட்டலில், உதவி பங்குதந்தை அருட்பணி. அற்புத சேவியர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறாக இன்றுவரை அதிதூதரான தூய மிக்கேலின் பாதுகாவலில் சிறப்பு பெற்று விளங்குகிறது மிக்கேல் பாளையம் இறைசமூகம்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: வடவை கத்தோலிக்க கூட்டமைப்பு, வடக்கன்குளம்.




