201 புனித சூசையப்பர் ஆலயம், கொங்கர்பாளையம்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : கொங்கர்பாளையம்

மாவட்டம் : ஈரோடு
மறைமாவட்டம் : உதகை
மறை வட்டம் : சத்தியமங்கலம்

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், துறையம் பாளையம்

2. புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கொண்டையம் பாளையம்

3. உயிர்த்த ஆண்டவர் ஆலயம், பங்களாப்புதூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை K ஆரோக்கிய ராஜ்

ஆன்மீகத் தந்தை : அருட்தந்தை P J மேத்யூ

குடும்பங்கள் : 75
அன்பியங்கள் : 3

1. புனித தோமினிக் சாவியோ அன்பியம்.
2. புனித சூசையப்பர் அன்பியம்.
3. புனித அந்தோணியார் அன்பியம்)

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு

வார நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி

ஆலயத் திருவிழா : மே மாதம் இரண்டாவது புதன்கிழமை

கொங்கர்பாளையம் புனித சூசையப்பர் ஆலய வரலாறு

நீர் வளமும், நில வளமும், மற்றும் மலை வளமும் கொண்டது தான் கொங்கர்பாளையம். இங்கு கி.பி 1800ம் ஆண்டிலிருந்து, இந்த கிராமத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

புனித #அருளானந்தர் 1674 ம் ஆண்டு ஜூன் மாதம் சத்தியமங்கலத்தில் ஏறத்தாழ 27 நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அந்தச் சூழலில் சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டு வரும் அவர் வாணிப்புத்தூர் வழியாக கொங்கர்பாளையம் வந்திருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. புனித அருளானந்தரின் பயணம் மீண்டும் ஜூலை மாதம் முதல் நாள் தொடங்கியது. கொங்கர்பாளையம் ஊரில் கிறிஸ்துவ மதம் காலூன்ற புனிதரின் வருகை முதல் கட்டமாக அமைந்தது எனலாம்.

அப்போது புனித அருளானந்தர் போதித்த போது ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள முத்துப் பாளையம் என்னும் மேட்டிலே ஒரு கோயில் கட்டப் பட்டிருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. [Short History of the Coimbatore Mission by Rev.L.Bechu பக்கம் 23].

1922 ம் ஆண்டு மறைத்திரு பெத்தி அவர்களால் முதல் ஆலயம் கட்டப்பட்டது. அதாவது 60சென்ட் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை கொடிவேரியிலிருந்து வந்த பிரெஞ்சுப் அருட்தந்தை பெத்தி (Petit) அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்டு 19.03.1924ல் தேவாலயப் பணிகள் மற்றும் சுற்றுப்புற மதில்கள் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.1924 ம் ஆண்டு கொங்கர்பாளையம் ஊரின் மத்தியில் சிலுவை வடிவில் ஆலயம் கட்டப்பட்டது. ஆனால் இந்த அடிகளாரை பிரெஞ்சுக் குடிமகன் என்று காரணம் காட்டி ஆங்கில அரசாங்கம் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து விட்டது. அதன்பின்னர் 26.04.1926ல் கோவை மறை மாவட்ட ஆயர் பெயரில் இந்த நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. 1955ம் ஆண்டு கோவை மறைமாவட்டம் பிரிக்கப் பட்ட போது, இந்த ஆலயம் உதகை மறைமாவட்டத்தின் ஓர் அங்கமாக இருந்து செயல்பட்டு வருகிறது.

கொங்கர்பாளையம் கிறிஸ்தவர்களுக்கு ஜூலை 3, 1968 ம் நாள் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். அன்று தான் கொங்கர்பாளையம் புனித சூசையப்பர் ஆலயம் தனிப் பங்கானது. அருட்தந்தை M T ஜோசப் அடிகளார் முதல் பங்குத் தந்தையாக பணியாற்றினார்.

1986ம் ஆண்டு இந்தப் பங்கில் பணியாற்றிய அருட்தந்தை மரிய பாஸ்கல் அடிகளார் அன்னை மரிக்கு ஒரு கெபியை ஆலயத்தின் முன் சாலை ஓரமாக நிறுவினார். இன்று வரை அனைத்துப் பாதசாரிகளும் அன்னை மரியிடம் வேண்டுவது சிறப்பு அம்சமாகும்

1996 ம் ஆண்டு கொங்கர்பாளையத்தின் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு அன்றைய பங்குத்தந்தை அருட்திரு S. மரிய லூயிஸ் அடிகளாரால் 04.12.1996 ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போதுள்ள அழகிய கோயில் மே 13, 1997 ல் கட்டி முடிக்கப் பட்டது. இப்போது கொங்கர்பாளையம், தோப்பூர், வாணிப்புத்தூர் மற்றும் கள்ளியங்காடு பகுதிகளில் 80 கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இந்த பங்கிலிருந்து இதுவரை மொத்தம் 6 அருட்தந்தையர்களும், ஒரு அருட்சகோதரரும் மற்றும் 4 கன்னியர்களும் உருவாகியுள்ளனர்

புனித சூசையப்பர் ஆலயம் அருகே ஆதரவற்றோரின் சகோதரிகள் சபை பெயரில் (Sisters of the Destitute) 1975 முதல் கன்னியர் இல்லமும், அதைச் சார்ந்த மருத்துமனையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

புனித சூசையப்பர் ஆலயம் கொங்கர்பாளையத்தில் உருவாகி நூறு ஆண்டுகள் ஆனதை நினைவு கொள்ளும் விதத்தில் 2016 ம் ஆண்டு அழகிய மணி கோபுரமும், தனிப்பங்காக உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் விதத்தில் 2018ம் ஆண்டு மே மாதத்தில் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி K ஜெயக்குமார் அடிகளார் அவர்களால் தேவாலயப் பலிபீடமானது உயரிய வடிவில் சீரமைக்கப்பட்டு பொலிவுடன் காட்சி தருகின்றது.

2018 ஜூன் முதல் அருட்தந்தை K. ஆரோக்கிய ராஜ் அடிகளார் பங்குத்தந்தையாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பதே இதன் தனிச்சிறப்பு.

அமைவிடம்:

கோயம்புத்தூர் - சத்தியமங்கலம்.... சத்தியமங்கலத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 40 கி.மீ கோபிசெட்டிப்பாளையம். கோபி செட்டிப் பாளையத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் குண்டேரிப் பள்ளம் அணை செல்லும் வழியில் கொங்கர் பாளையம் என்ற ஊரில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது.