617 புனித செபஸ்தியார் ஆலயம், வெள்ளாளங்கோட்டை

      

புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : வெள்ளாளங்கோட்டை, கயத்தாறு தாலுகா

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : கோவில்பட்டி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், கயத்தாறு 

பங்குத்தந்தை: அருட்பணி. வின்சென்ட் 

குடும்பங்கள் : 40,  ,    

அன்பியங்கள் : 2

Church Contact No : 8940269116

மாதத்தின் முதல் ஞாயிறு காலை 11.00 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், தொடர்ந்து கருத்தாங்கிய மாதாவின் முன்னிலையில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வளைகாப்பு, அசனவிருந்து (அன்புவிருந்து) 

மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி. 

திருவிழா : ஜனவரி 20 ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். (தை மாதம் முதல் தேதியில் கொடியேற்றம்) 

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. டயானா, அமலோற்பவ மாதா சபை 

வழித்தடம் : கோவில்பட்டி -வெள்ளாளங்கோட்டை பேருந்து எண் : 15

கயத்தாறு -வெள்ளாளங்கோட்டை, SSRPS & Auto

Location map : https://g.co/kgs/J7VZvf

வரலாறு :

"மனிதருக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவதே மேல்" 

-புனித செபஸ்தியார் 

முற்காலத்தில் வெள்ளையானைகோட்டை என்று அழைக்கப்பட்ட ஊரானது, தீயில் அழிந்து போன பிறகு வெள்ளாளங்கோட்டை என்று பெயர் பெற்றது. இந்த ஊரில் அமைந்துள்ள பல அதிசயங்களையும் அற்புதங்களையும் அள்ளி வழங்கும் புனித செபஸ்தியார் ஆலய வரலாற்றைக் காண்போம்... 

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளாத்திகுளம் வி. ராயப்பன், தென்காசி சவரிமுத்து (தம்மக்காரன்), கோட்டார் சவரிமுத்து ஆகிய குடும்பங்கள் வெள்ளாளங்கோட்டையில் குடியேறி விவசாயம் மற்றும் பனையேற்றம் போன்ற தொழில்களை செய்து வாழ்ந்து வந்தனர். 

இங்கு வாழ்ந்த மக்கள் தங்களது ஆன்மீகத் தேவைக்காக இடம் வாங்கி வட்ட வடிவில் ஒரு கூரை ஆலயத்தை 03.06.1811 இல் கட்டி, அதில் சிறு சுரூபங்களை வைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். அதன் பின்னர் காமநாயக்கன்பட்டி, விளாத்திகுளம், சொட்டம்பட்டி, தென்காசி, வண்டானம், கருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்தும் சில குடும்பங்கள் வந்து தங்கினார்கள். 

அவ்வேளையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது சோளத்தட்டை படப்பில் எரிந்து கொண்டிருந்த தீயானது காற்றில் பறந்து வந்து, குடிசை ஆலயத்தில் பட்டு கூரை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததைக் கண்ட மக்கள், ஆலயத்தில் இருந்த சுரூபங்களை தீர்த்த கிணற்றில் போட்டனர். 

குடிசை ஆலயம் எரிந்து போனதால் காரைக்கோவில் கட்ட மக்கள் முடிவு செய்தனர். அவ்வேளையில் திரு. செபஸ்தியான் கொத்தனார் கங்கைகொண்டானில் வேலை செய்து விட்டு, வெள்ளாளங்கோட்டை திரும்பி வரும் வழியில், வீரபாண்டியகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த கற்குவியலின் ஒரு கல்லில் இருந்து ஒளிவருவதைப் பார்த்து, அதனருகில் சென்று பார்த்த போது அந்தக் கல்லில் சிலுவை அடையாளம் இருப்பதைக் கண்டு, பயபக்தியுடன் ஊருக்கு எடுத்து வந்தார். சிலுவையுடன் கூடிய ஒளிவந்த கல்லை மக்கள் அதிசயமாகவும், இறைநம்பிக்கையுடன் கண்நோக்கினர். அந்த அதிசயக்கல்லை அடித்தளமாகக் கொண்டு, புதிய ஆலயத்தை 26.07.1849 அன்று கட்டினர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் உயர்ந்த கோபுரம் கட்டப்பட்டது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பெரிதான புதிய ஆலயம் கட்ட மக்கள் முடிவு செய்தனர். ஆலயம் கட்ட முடிவு செய்த அதே நாளில் திரு. செபஸ்தியான், திரு. கித்தேரியான் ஆகியோர் கனவில் இறைமகன் இயேசு தோன்றி, அவர்கள் இருவரையும் கூட்டிச்சென்று கலத்து மேட்டுக்கு கூட்டிச்சென்று மணல் தரையில் தனது கையில் வைத்திருந்த பிரம்பு குச்சியைக் கொண்டு ஆலயமாதிரியை வரைந்து காட்டினார். இந்த அதிசய கனவைக் கண்ட இருவரும், தங்களது கனவை பரஸ்பரம் பகிர, அதிசயித்து..! கனவில் இயேசு வரைந்து காட்டிய இடத்திற்கு இருவரும் செல்ல..! ஆச்சரியம்...! அதிசயம்..! கனவில் கண்ட இயேசு மணலில் வரைந்த ஆலய மாதிரி அப்படியே இருந்தது. உடனே திரு. கித்தேரியான் அவர்கள் ஒரு காகிதத்தில் வரைந்து எடுத்துக் கொண்டார். இந்த தகவல்கள் மக்களுக்கும் தெரிவிக்கப்பட... விரைவாக ஆலயம் கட்டப்பட்டு 23.08.1925 ல் புனிதப்படுத்தப் பட்டது. இயேசு வரைந்த, இந்த அற்புத சிலுவை ஆலயத்தைக் கட்ட ஐந்து வருடங்கள் ஆயின. 

அதன்பின் ஒரு காலத்தில் ஊரெங்கும் காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்கிய போது, வெள்ளாளங்கோட்டை மக்கள் புனித செபஸ்தியாரின் சுரூபத்தை சப்பரத்தில் வைத்து ஊரெங்கும் சுற்றி வந்து பாடல்கள் பாடினர். உடனே கொடிய நோய் நீங்கியது. 

இந்த காலகட்டத்தில் வெள்ளாளங்கோட்டை புனித செபஸ்தியார் ஆலயமானது, காமநாயக்கன்பட்டி பங்கிலிருந்து பிரிந்து பன்னீர்குளம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. இங்கிருந்து குருக்கள் வந்து வழிபாடுகள் நடத்தி வந்தார்கள். 

சிறிது காலத்திற்கு பிறகு பன்னீர்குளம் பங்கிலிருந்து, கயத்தாறு பங்கின் கிளைப் பங்காக வெள்ளாளங்கோட்டை மாற்றப்பட்டது. 

அருட்பணி. வலன்டின் டயாஸ் பணிக்காலத்தில் 07.03.1962 ல் அழகிய பலிபீடம் கட்டப் பட்டது. 

அருட்பணி. ம. அந்தோணி பணிக்காலத்தில் 25.10.1977 ல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 

அருட்பணி. வியான்னிராஜ் பணிக்காலத்தில் 26.01.1989 ல் மக்களின் நன்கொடையால் ஆலயமண்டபம் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

அருட்பணி. ம. சார்லஸ் பணிக்காலத்தில் கிரானைட் தளம் போடப் பட்டது. 

ஆலயத்தின் எதிர்ப்புறத்தில் 2008 ம் ஆண்டு புனித செபஸ்தியார் குருசடி கட்டப்பட்டது. 

இறைவனை கருத்தாங்கிய அன்னை:

ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிறு காலை 11:00 மணிக்கு திருப்பலி நற்கருணை ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து, இறைவனை கருத்தாங்கிய அன்னையின் சுரூபத்தின் முன்பு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, வளைகாப்பு நிகழ்வு நடத்தப் படுகிறது. பல இடங்களில் இருந்தும் குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்டு, உருக்கமுடன், முழு நம்பிக்கையுடன் செபித்து குழந்தைச் செல்வம் பெற்று அகமகிழ்கின்றனர். பலர் மீண்டும் வந்து சாட்சியம் பகிர்கின்றனர். சிலர் இங்கு தங்கி இருந்து செபித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கின்றனர். 

மேலும் வேலைவாய்ப்பு இல்லாமல் அல்லல் படுகிற பலரும் இவ்வாலயம் வந்து, செபித்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர். 

ஆலய உபதேசியார் தொடர்பு எண் : 8940269116

அதிசயம் நிறைந்த வெள்ளாளங்கோட்டை புனித செபஸ்தியார் ஆலயம் வாருங்கள்... 

புனிதரின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : ஆலய உபதேசியார்.