375 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேதநகர், நாகர்கோவில்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்.

இடம் : வேதநகர், நாகர்கோவில்.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி E. ஜோசப்

குடும்பங்கள் : 505
அன்பியங்கள் : 12

திருவழிபாட்டு நேரங்கள் :

திங்கள், செவ்வாய், வியாழன், சனி காலை திருப்பலி : காலை 06.00 மணிக்கு

புதன், வெள்ளி திருப்பலி : இரவு 07.00 மணிக்கு

ஞாயிறு முதல் திருப்பலி காலை 05.30 மணிக்கு, இரண்டாவது திருப்பலி காலை 07.00 மணிக்கு.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நற்கருணை ஆராதனை நடைபெறும்.

மாதத்தில் முதல் சனிக்கிழமை மாதா நவநாள் திருப்பலி நடைபெறும்.

திருவிழாக்கள் :

செப்டம்பர் 29 ம் தேதி புனித மிக்கேல் அதிதூதர் நாளை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

கீழக்கோவில் : ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களில்.

புனித அந்தோணியார் குருசடி : ஜூன் மாதத்தில் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள்

தூய மிக்கேல் அதிதூதர் கெபி : ஜனவரி 1 ம் தேதி நிறைவு பெறும் வகையில் மூன்று நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணியாளர்கள்:
1. Fr M. ஜான்சன்
2. Fr M. சார்லஸ்
3. Fr V. மைக்கேல் பிரான்சிஸ்
4. Fr W. சகாய ஜஸ்டஸ்
5. Fr J. அருள் ஆனந்த்
6. Fr கபிரியேல் ராஜா.

அருட்சகோதரிகள்:
1. Sr M. ஜெஸி பிறகாஷ்
2. Sr M. மார்கிரட் பிறகாஷ்
3. Sr M. ஜாக்குலின் பிறகாஷ்
4. Sr T. வெனான்சியா மேரி
5. Sr P. மேரி தேவதிலகா


வழித்தடம் : நாகர்கோவிலில் இருந்து மணகுடி செல்லும் வழி.

இறங்கும் இடம் : அப்துல்காதர் மருத்துவமனை.

பேருந்து எண் 37 மணகுடி, 37V மணகுடி,36A பள்ளம், 2E கன்னியாகுமரி, 2L கன்னியாகுமரி.

மினிபஸ் : பறக்கை, தெங்கம்புதூர், அம்பலபதி, வேதநகர்.

வரலாறு :

வேதநகர் ஆரம்பம் :

இயற்கை எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் தெற்கே இரண்டு கல் தொலைவில், நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட அழகிய ஊர் வேதநகர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் பச்சை பட்டுடுத்தியிருக்கும் வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது புனித பனிமய மாதா சிற்றாலயம்.

கீழக்கோயில் என்று இவ்வூர் மக்களால் அன்புடன் இவ்வாலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் சுமார் 10 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டதாகும். மிக அழகிய வளைவுக்கூரை கொண்டு கும்மாய சாந்து (பழைய காலத்தில் இந்தக் கலவையில் தான் பெரும்பாலான ஆலயங்கள் கட்டப்பட்டன) கலவையில் கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள ஐந்தரை அங்குலம் உயரமுள்ள புனித பனிமய மாதா சுரூபமானது, மதுரை மிஷனின் மையங்களான தூத்துக்குடி, காமநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் பணியாற்றிய அருட்பணியாளர்களால் கொண்டு வரப் பட்டதாக கூறப்படுகிறது.

ஆலயத்தின் தொடக்க காலத்திலிருந்தே விளக்கேற்றி வைக்கும் பழக்கம் இங்கு இருந்து வருகிறது. சுரூபத்தின் முன்பு நின்று வேத மந்திரங்கள் சொல்லி செபிப்பதும், அமர்ந்து செபமாலை சொல்வதும், முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்வதும் வழக்கமான வழிபாடுகளாகும்.

சிற்றாலயத்தின் இடதுபுறம் புதுமைக் கிணறு உள்ளது. புதுமைகள் நிறைந்த இந்த கிணற்று நீரை பருகி அநேக மக்கள் நலம் பெற்று வருகின்றனர். ஒருமுறை மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இந்த கிணற்றில் குதித்த போது, அற்புதமாக காயமேதுமின்றி பிழைத்துக் கொண்டார். அவரை ஓர் அம்மா தாங்கிப் பிடித்ததாக சான்று பகர்ந்தார். அன்னையின் அருளால் நடந்த அருஞ்செயலாக இது பார்க்கப்படுகிறது.

மேலும் ஆலயத்தின் முன்புள்ள வேப்பமரத்தின் இலையை அரைத்து உடலில் பூசி குளிப்பவர்கள் மற்றும் சிறு உருண்டைகளாக உண்பவர்கள் நலம் பெற்றுள்ளனர்.

சிற்றாலயத்தின் இடப்புறத்தில் குடும்பங்கள் தங்குவதற்கு வசதியாக சாவடிகள் (சத்திரம்) உள்ளன. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இங்கு தங்கி நலம் பெற்று செல்கின்றனர். இச்சிற்றாலயத்தின் முன்னால் சிறு குருசடி ஒன்றும் உள்ளது.

ஆலயத்தோற்றமும், ஊரின் வளர்ச்சியும்:

வேதநகர் பனிமய மாதா சிற்றாலயப் பகுதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் முட்புதர்களும், பனை மரங்கள், கரையான் புற்றுகள், விஷ பூச்சிகள் நிறைந்த பகுதியாக இருந்தது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சில நிலமற்ற மக்கள் இங்கு தங்கி வாழ்ந்தனர். இவர்கள் இங்கு தங்குவதற்கு முன்பே திருமுழுக்குப் பெற்றவர்களாக கருதப் படுகிறது. இங்கு வருவதற்கு முன்னர் இவர்கள் வசித்த பகுதி வையாலிவிளை ஆகும்.

இம்மக்கள் மற்ற பிறசமய மக்கள் வாழ்கின்ற பகுதிக்கு செல்லாமல் வையாலிவிளையிலிருந்து தெற்கு மேற்காக நகர்ந்து, ஆலயம் கட்டி கீழக்கோவில் பகுதியில் கிறிஸ்தவர்களாகவே குடியேறி உள்ளனர். அந்த நேரத்தில் மதுரை மிஷன் அருட்பணியாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களாக விளங்கினார்கள். தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவ சமயத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் உடையவர்களாக திகழ்ந்தார்கள். எனவே இவ்வூரார் 'வேதக்காரர்கள்' (குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்களை வேதக்காரர்கள் என்றழைப்பது வழக்கம்) என்று சுற்றுப்புற மக்களால் அழைக்கப்பட்டார்கள்.

அடித்தட்டு நிலையில் இருந்த இம்மக்களின் வாழ்க்கையில் கிறிஸ்தவம் நம்பிக்கை ஒளியேற்றி வழிகாட்டி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

மேலக்கோவில்:

1910 -களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வர, ஊருக்கு மேற்குப் பகுதியில் கால்வாய் வெட்டப் பட்டது. இதனால் ஆற்றுத் தண்ணீரும் ஊற்றுத் தண்ணீரும் ஊருக்குள் வரவே, அப்பகுதி வாழ வசதியற்று போனது. எனவே ஆற்றின் மேல் பகுதியில் நிலம் வாங்கி குடியேறினார்கள். ஏழைகளாக இருந்ததால் அதிக நிலம் வாங்க இயலவில்லை. வீடுகளுக்கு அருகில் ஆலயம் தேவைப்பட்டதால் சிலுவை வடிவில் மேலக்கோவிலைக் கட்டினர். இக்காலத்தில் காலரா, அம்மை போன்ற நோய்களால் இம்மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். இந்நேரத்தில் ஊரைக் காக்கின்ற மிக்கேல் சம்மனசு இவர்களின் பாதுகாவலராக மாறினார்.

குருசடி புனித அந்தோணியார் பங்கு ஆலய பங்குத்தந்தையர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றினார்கள். பின்னர் இவ்வாலயம் இடிக்கப்பட்டு ரோட்டு வேலை மேஸ்திரி கல்லறை குருசடி இருந்தப் பகுதியில் மேலக்கோவில் புதிதாய் கட்டப் பட்டது.

பின்னர் புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டு 20-05-2007 அன்று கோட்டார் மறை மாவட்ட பரிபாலகர் பேரருட்பணி V. மரியதாசன் அவர்கள் முன்னிலையில், பாளை மறை மாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

வேதநகரின் தனித்தன்மைகள் :

புதுமைகள் நிறைந்த தூய பனிமய அன்னை சிற்றாலயம் :

ஒருமுறை சிறுகுழந்தையை பாம்பு கடித்து உடல் முழுவதும் விஷம் பரவி மயக்கமுற்று, இறந்து போனதாக அஞ்சப்பட்ட குழந்தையை அன்னையின் காலடியில் வைத்து, புதுமைத் தண்ணீர் கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை விஷத்தை கக்கி உயிர் பிழைத்தது.

வேதநகர் அன்னையிடம் வேண்டினால் சுகப்பிரசவம் கிடைக்கும் என்பது சுற்றுவட்டார பகுதி மக்களின் உறுதியான நம்பிக்கை. ஆகவே பலரும் பேறுகாலங்களில் இங்கு வந்து தங்கி சுகப்பிரசவம் பெற்று நலமுடன் செல்வார்கள். இவ்வூரில் உள்ள மக்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இங்கு பிறந்தவர்கள் தான் என கூறப்படுகிறது.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து ஜெபித்து நலம் பெற்று செல்வார்கள்.

இவ்வாறு பல நோய்களில் இருந்தும் நலம் பெறுவோர் நேர்ச்சைக் கடனாக கருப்புகட்டி கலந்த பச்சை மாவைக் (வறுக்கப்படாத மாவு) கொடுப்பார்கள். மேலும் வாழைக் குலைகள் காணிக்கையாக கொடுப்பதும், சாப்பாடு கொடுப்பதும், அசனம் (அன்பு விருந்து) கொடுத்தும் நேர்ச்சை கடன் செலுத்துகின்றனர்.

வேதநகரின் முகப்பு என அழைக்கப்படும் பாலம் சந்திப்பில் இளைஞர் மன்றத்தினரின் முயற்சி மற்றும் அயராத உழைப்பால் புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டு 01-01-1995 அன்று பங்குத்தந்தை அருட்பணி மைக்கேல் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இளைஞர் மன்றத்தினரின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் கலையரங்கம் கட்டப்பட்டு 15-05-1997 அன்று பங்குத்தந்தை அருட்பணி மரிய சூசை வின்சென்ட் அவர்களால் திறக்கப்பட்டது.

தூய மிக்கேல் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு 02-10-1998 அன்று பங்குத்தந்தை அருட்தந்தை சாலமன் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

கல்லறைத் தோட்டத்து தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காக்கும் பொருட்டு இளைஞர் மன்றத்தினரின் முயற்சியால் 1999 ல் ஆழ்குழாய் கிணறு அமைக்கப் பட்டது.

பழைய தேர்க்கூடம் பழுது பட்டதால் இளைஞர் மன்றத்தினர் கடும் முயற்சிகள் மேற்கொண்டு பிரமாண்டமான அழகிய தேர்க்கூடத்தை கட்டி முடித்து 03-10-2002 அன்று பங்குத்தந்தை அருட்பணி பெர்பெச்சுவல் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேதநகர் மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்ட இளைஞர் மன்றத்தினர் தூய மிக்கேல் அதிதூதர் வங்கிக் கட்டிடத்தை கட்டினர்.

இவ்வாறாக வேதநகர் பங்கின் அனைத்து நிலைகளிலும் தாங்கியவர்கள் தூய மிக்கேல் அதிதூதர் இளைஞர் மன்றத்தினர் என்பது மறக்க இயலாத காரியம். இம் மன்றமானது 1974 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருசடி பங்குத்தந்தை அருட்பணி கபிரியேல் அவர்களால் துவக்கப்பட்டது. இம் மன்றத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்று தற்போது பாளை மறை மாவட்டத்தில் அருட்பணியாளராக பணியாற்றும் அருட்பணி M. சார்லஸ் அவர்கள் சிறப்பாக பணி செய்ய, இந்த மன்றத்திலிருந்து மூன்று அருட்பணியாளர்கள் உருவானது குறிப்பிடத் தக்கது.

"இருளை பழிப்பதை விட ஒளியேற்றி இருளை அகற்றுவதே சிறப்பானது" என்ற புனித டோமினிக் சாவியோ -வின் பொன்மொழிக்கேற்ப, வேதநகர் திருச்சபையின் ஒற்றுமைக்காகவும், ஊரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும் தியாக உணர்வுடன் நற்பணிகளை செய்து வரும் புனித மிக்கேல் இளைஞர் மன்றத்தினரை வேதநகரின் நல் முத்துக்கள் எனலாம்.

வேதநகர் 1983 வரை குருசடி புனித அந்தோனியார் ஆலயத்தின் கிளைப்பங்காகவும், 2005 -ம் ஆண்டு வரை மறவன்குடியிருப்பு பங்கின் கிளைப்பங்காகவும் இருந்தது. 14-06-2005 அன்று ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் கோட்டார் மறை மாவட்டத்தின் 135 வது பங்கு ஆலயமாக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி தேவதாஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

புதிய ஆலயம் :

பழைய ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு 02-10-2005 அன்று அடிக்கல் போடப்பட்டது. பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற ஒத்துழைப்புடன் பங்குத்தந்தை அருட்பணி தேவதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் பணிகள் ஆரம்பித்து 574 நாட்களில் புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டு 20-05-2007 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

ஆலயத்தின் முன்புறம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இதில் மூன்றடுக்கு கொண்ட நடுக்கோபுரம் 127 அடி உயரம் கொண்டது. இருபக்கஙாகளில் உள்ள கோபுரங்களும் 80 அடி உயரம் கொண்டவை. கோபுரங்களின் உள்ளே உச்சி வரை செல்ல சுழற் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் பின்புறமாக அமைந்துள்ள படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால், மேல் தளத்தில் 24 மணிநேரமும் நற்கருணை நாதரிடம் செபிக்கும் விதத்தில் தியான அறை அமைக்கப் பட்டுள்ளது. நற்கருணை ஆண்டில் ஆலயப்பணி துவக்கப்பட்டதன் நினைவாக, ஆலயத்தின் மேற்பகுதி சுற்றுசுவர்களின் சந்திப்புகளில் நற்கருணையும், கிண்ணமும் செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி:

1909 ம் ஆண்டு குருசடி பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அவர்களால் இம்மணாணில் ஒரு கல்விக்கூடம் தேவை என்ற உயரிய நோக்கோடு பள்ளி உருவானது. 1931 ல் தொடக்கப்பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது.

01-06-1965 அன்று பள்ளியின் பொறுப்பு தூய இதய மரியன்னை சபை அருட்சகோதரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது.

கன்னியர் இல்லம் கட்டப்பட்டு 24-12-1975 ல் ஆயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் திறக்கப்பட்டது.

15-06-1978 ல் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது.

03-06-1991 -ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது.

குருசடி பங்கின் கிளையாக வேதநகர் இருந்த போது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr. ரிச்சர்ட் ரொசாரியோ
2. Fr. அம்புறோஸ் பெர்னாண்டஸ்
3. Fr. D. C ஆன்றனி
4. Fr. J. R அலெக்சாண்டர்
5. Fr. R அந்தோணிமுத்து
6. Fr. சூசை மரியான்
7. Fr. டயோனிசியுஸ்
8. Fr. கபிரியேல்
9. Fr. S. M மரியதாசன்.

மறவன்குடியிருப்பு பங்கின் கிளையாக இருந்த போது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Fr. M. D சகாயம்
2. Fr. ஆல்பர்ட் ராஜ்
3. Fr. M பீட்டர்
4. Fr. தாமஸ் பெர்னாண்டோ
5. Fr. P அகஸ்டின்
6. Fr. மரிய சூசை வின்சென்ட்
7. Fr. சாலமோன்
8. Fr. பெர்பெச்சுவல் ஆன்றனி
9. Fr. பஸ்காலிஸ்

தனிப்பங்காக உயர்ந்த பின்னர் பணியாற்றிய பங்குத் தந்தையர்கள் :

1. Fr. தேவதாஸ்
2. Fr. அருள்
3. Fr. சேவியர் ராஜா
4. Fr. ஜாண் குழந்தை
(இணை பங்குதந்தையர்கள் : Fr. கிளாசின், Fr. இளங்கோ)
5. Fr. பெலிக்ஸ்
6. Fr. E ஜோசப் ( தற்போது...)

தகவல்கள் : ஆலய அர்ச்சிப்பு விழா மலரில் இருந்து எடுக்கப்பட்டது.

இவ்வாறு சிறந்த வரலாற்றையும், கடின உழைப்பால் உயர்ந்த மக்களையும், இறைவனின் மறைப்பரப்பு பணிக்காக அர்ப்பணித்த பல மண்ணின் மைந்தர்களாக இயேசுவின் சீடர்களாக பல்வேறு இடங்களில் சிறப்பாக பணி புரிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு நிலைகளிலும் இப்பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல பங்குத்தந்தையர்களையும், அருட்சகோதரிகளையும் கொடுத்து, இறைவனின் மேலான ஆசியுடன் வேதநகர் இறைசமூகம் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறது.