177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை


புனித காணிக்கை மாதா ஆலயம்

இடம் : முத்துப்பேட்டை

மாவட்டம் : இராமநாதபுரம்
மறை மாவட்டம் : சிவகங்கை
மறை வட்டம் : இராமநாதபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி அந்தோணிராஜ்

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 375
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.00 மணி,
மாலை 04.00 மணி (English)

தினசரி திருப்பலி : காலை 05.30 மணிக்கு (செவ்வாய் தவிர)

சனி : மாலை 06.00 மணி நவநாள் & செபமாலை

திருவிழா : பிப்ரவரி 02 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

தூய காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை முகவுரை:

நானூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்.

சேசு சபையினரால் மறைபரப்பு செய்யப்பட்டது.

இராமநாதபுரம் கடலோர ஊர்களில் நிறுவப்பட்ட சபைகளுக்கு கிறிஸ்தவ 'பெரிய பட்டணம்' ஒரு மையமாக விளங்கியது.

கி.பி 1601 ல் மலபார் மறை மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில் கிறிஸ்தவ பெரிய பட்டணம் இறுதிப் பங்காக இருந்தது.

கொச்சி மேற்றாசனம் சேசு சபையினரின், மலபார் மறை மாநிலத்தில் மறைத்தளமாக கொச்சி முதல் இராமேஸ்வரம் வரை விளங்கியது.

1609 ல் சேசு சபையினர், கொச்சி ஆயரின் கெடுபிடிக்கு பயந்து தங்கள் பணித்தளங்களிலிருந்து வெளியேறினர். போர்ச்சுக்கல் அரசின் மேலீட்டால் மீண்டும் பணித்தளங்களுக்கு 1621 ல் திரும்பினர். ஆனால் பெரிய பட்டணத்திற்கு எவரும் அனுப்பப் படாததால், பெரிய பட்டணம் பங்குதளம் மதுரை மிஷன் குருக்களால் கவனிக்கப்பட்டு வந்தது.

1709 ல் டச்சுக்காரர்களின் தூண்டுதலால் ஆலயம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

1737 க்கு பின்னர் வந்த அருட்தந்தை மனுவேல் பிமென்டல் அவர்கள் பங்குதளத்தை முத்துப்பேட்டை க்கு மாற்றி, சிறு ஆலயம் கட்டி திருப்பலி ஆராதனைகள் நடந்து வந்தது.

1898 ல் கோவா மிஷன் குருக்கள் முத்துப்பேட்டை யில் ஒரு ஆரம்பப் பள்ளி நிறுவி மூன்று ஆசிரியர்களுடன் நான்கு வகுப்புகள் வரை நடத்தி வந்தனர்.

1948 ல் இப்பள்ளி உயர்தர ஆரம்பப் பள்ளியாகி, 1988 ல் உயர் நிலைப்பள்ளியாகவும், 1997 ல் மேல்நிலைப்பள்ளி யாகவும் உயர்த்தப்பட்டு இன்று '4000' மாணவ மாணவியர் கல்வி பயிலும் சிறந்த கலைக் கூடமாக விளங்குகின்றது.

முத்துப்பேட்டை ஆலய வரலாறு

1781 ல் முத்துராமலிங்க சேதுபதி, முத்துப்பேட்டை கிராமத்தையும் அதோடு 500 ஏக்கர் 77 சென்ட் நிலத்தையும் முத்துப்பேட்டை சர்வேசுரன் தேவாலயத்திற்கு தானமாக கொடுத்தார்.

ஆகவே முத்துப்பேட்டை பங்கு குருக்கள் 1781 முதல் 1956 வரை 175 ஆண்டுகளுக்கு முத்துப்பேட்டை கிராம ஜமீன்தாராக விளங்கி வந்தனர்.

முத்துப்பேட்டை குடிமக்கள் ஆண்டுதோறும் ஆலயத்திற்கு வரி செலுத்தி வந்தனர்.

1900 ஆண்டு தொடக்கத்தில் கிறிஸ்தவ மக்களில் சிலர் கோவா மிஷன் குருக்களுக்கு அடிபணியாது, வரி செலுத்தாது, இராமநாதபுரம் பங்கு குருவிடம் முறையிட, அப்போது அங்கு பங்குகுருவாக இருந்த அருட்பணி மாசரான் சே.ச 1908 ல் காரான் கிராமத்தை சார்ந்த சேதுநகருக்கருகில் சிறு நிலம் வாங்கி, சிறிய சவேரியார் ஆலயம் கட்டி அங்கு முத்துப்பேட்டை பிரிவினை மக்களுக்கு மறைப்பணியாற்றி வந்தார்.

இந்த ஏற்பாடு இருபிரிவினரிடையே அமைதியை ஏற்படுத்தியது.

முத்துப்பேட்டை கிறிஸ்தவர்கள் இரட்டை மறை பரிபாலனங்களுக்கு உள்ளாகி அவதியுற்றனர் (பாத்ருவாதோ, ப்ரோபகாந்தா).

ஒரு பகுதியினர் கோவா மிஷனின் பாத்ருவாதோ ஆட்சி முறைக்கும்(மைலாப்பூர் மிஷன்), மற்றொரு பகுதியினர் ரோமை ப்ரோபகாந்தா ஆட்சி முறைக்கும் (திருச்சி மிஷன்) உட்பட்டிருந்தனர்.

29-06-1929 ல் முத்துப்பேட்டை பங்கு ரோமை ஆணைப்படி திருச்சிராப்பள்ளி மறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, இங்கு நிலவி வந்த இரட்டை மறை ஆணைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1938 ல் மதுரை மறை மாவட்டம் உருவாகவே, அதன் எல்லைக்குட்பட்டது.

சேசு சபை குருக்களின் மறைப்பணி 1949 ல் முத்துப்பேட்டை யில் முடிவுற்றது.

1950 -களில் கிராம முன்னேற்ற சேவா சங்கம் அமைக்கப்பட்டு பொருளாதார உயர்வு மேம்பட உதவியது.

1992 ல் அடைக்கல அன்னை கன்னியர் ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை நிறுவினர்.

1941 ல் இவ்வூர் வாலிபர்கள் ஒரு சங்கம் அமைத்து, பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியில் நூலகம் அமைத்து, மக்கள் விழிப்புணர்வு பெற்று சமூக சேவைகளில் ஈடுபட உதவியது.

அந்நாட்களில் திருப்பலி லத்தீன் மொழியில் தான் நிறைவேற்றப் பட்டது. குருவானவர் பீடத்தை நோக்கித் தான் செபம் சொல்வார். தோபினுஸ் வோபிஸ்கும் (ஆண்டவர் உங்களோடு இருப்பாராக) என்று சொல்லும் போது மட்டும் மக்களை நோக்கித் திரும்புவார்.

8 மண்ணின் மைந்தர்கள் குருக்களாகியுள்ளனர். மேலும் 35 கன்னியர்களையும், 7 அருட் சகோதரர்களையும் இறைப் பணிக்கு தந்துள்ளது முத்துப்பேட்டை பங்குதளம்.

2001 ல் அருட்பணி சவரிமுத்து அடிகள் பழைய ஆலயத்தை இடித்து புதிய ஆலயம் கட்ட திட்டம் வகுத்தார்.

ஆண்டுதோறும் ஜனவரி 17 ம் தேதி புனித அந்தோணியார் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இது போலவே புனித செபஸ்தியார் திருவிழா, புனித சவேரியார் திருவிழா -வும் சிறப்பாக நடைபெறுகிறது.

1955 முதல் தூய சகாய மாதா பக்தி ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு முத்துப்பேட்டை யில் நானூறு ஆண்டுகளாய் போர்ச்சுகீசிய குருக்களால் உருவாக்கப்பட்டு, பிரெஞ்சு சேசு சபை குருக்களாலும், கோவா மிஷன் குருக்களாலும், திருச்சி, மதுரை, சிவகங்கை மேற்றிராசன குருக்களாலும் கவனிக்கப்பட்டு, இன்று திருச்சபையின் ஒரு ஆழமான வேராக வேரூன்றி இறையாட்சி மலர உழைத்த அனைத்து அருட்பணியாளர்களையும் முத்துப்பேட்டை புனித காணிக்கை மாதா இறை சமூகம் நன்றியோடு நினைவு கூறுகின்றது.

இராமேஸ்வரம் பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் முத்துப்பேட்டை யில் உள்ள புனித காணிக்கை மாதா ஆலயத்தை மறவாமல் சென்று பாருங்கள். இறைவனின் ஆசீர்வாதங்களை புனித காணிக்கை அன்னை வழியாக பெற்றுச் செல்லுங்கள்.

வழித்தடம் :

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் 18 கி.மீ

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் / இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து நகரப்பேருந்து 4,4A,4B,4C,4D,4E,4F

நிறுத்தம் : முத்துப்பேட்டை சர்ச்